ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஈராக்கின் ISIS தீவிரவாத அமைப்பின் தாக்குதல் பட்டியலில் இந்தியா!



உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த தீவிரவாத அமைப்பாக 1990 களில் கருதப்பட்டது ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புதான். ஆனால் இன்று அதைவிட பல மடங்கு அபாயமானதாக கருதப்படும் அமைப்பு ஒன்று ஈராக்கின் உள்நாட்டுப் போரில் பெரும் வெற்றியை பெற்று வருகிறது. ஈராக் மற்றும் கிழக்கு சிரியாவில் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. உலகின் எந்த தீவிரவாத அமைப்பும் இவ்வளவு பெரிய வெற்றிகளை தனது காலத்தில் அடைந்ததில்லை.  அந்த அமைப்பின் பெயர் Islamic State of Iraq and al-Sham. சுருக்கமாக ISIS என்று அழைக்கப்படுகிறது. Al-Sham என்ற அரபுச் சொல்லுக்கு கிழக்கு கடற்கரை பகுதி அல்லது சிரியா அல்லது டமாஸ்கஸ் என்ற சூழ்நிலைக்கேற்ப பொருள் கொள்ளப்படும்.  2010  முதல் அபு துவா என்று அழைக்கப்படும் அபு பக்கர் அல் பாக்தாதி Abu Bakr al-Baghdadi என்பவரின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பின் நோக்கம் முடிந்தவரை ஷியா முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் கொல்வதுதான். இந்த அமைப்பானது ஈராக் மற்றும் சிரியா பகுதிக்கு மட்டும் மிரட்டலாக இல்லாமல் சன்னி தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக உள்ள சவூதி அரேபியா, ஜோர்டான், துருக்கி போன்ற அண்டை நாடுகளுக்கும் அச்சுறத்தலாக உள்ளது.


இந்த மிகப் பயங்கர தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தற்போது மேலும் விரிவடைந்து பாகிஸ்தான் வரை நீண்டுள்ளதாக வெளிவந்துள்ள் செய்திகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை என்று சொல்ல முடியாவிட்டாலும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான டெஹ்ரிக் இ கிலாபத் (Tehreek-i-Khilafat) டான் பத்திரிக்கைக்கு அளித்த செய்தியில் தனக்கு ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உண்டு என்பதை முதன் முதலாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ISIS அமைப்பு தனது இலக்கை அரபு நாடுகளுடன் நிறுத்திக் கொள்ளாது என்பதும், அது உலகம் முழுவதும் தனது இலக்கை செயல்படுத்த அந்தந்த பகுதிகளில் செயல்படும்  தீவிரவாதிகளுடனும், தீவிரவாத அமைப்புகளுடன் கைகோர்க்க ஆரம்பித்துள்ளன என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 1990 களில் அல் கொய்தா அமைப்பு எப்படி தனது அமைப்பிற்கு தீவிரவாதிகளையும், பணத்தையும் சேர்த்ததோ அதே வழியைத்தான் ISIS அமைப்பும் பின்பற்றுகிறது.


ஈராக்கின் ISIS ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த அமைப்பில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெரும் பங்கு வகித்து வந்தனர். பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான Lashkar-e-Jhangv (Lej) மற்றும் பலுசிஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் பெரும் எண்ணிகையிலான தீவிரவாதிகள் இந்த அமைப்பில்  பெரும் பங்கு வகித்தனர்,  Lej அமைப்புதான் 2013ல் Gazi Abdul Rasheed பயிற்சி முகாமை ஈராக் நகரத்தில் தொடங்கியது. இம்முகாமில் பயிற்சி பெற்றவர்கள்தான் பின்னாளில் Gazi Force என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கினர். பாகிஸ்தானின் தீவிரவாத மற்றும் மதவாத அமைப்புகள் என்றுமே தனித்து இயங்கி வந்ததில்லை. அவைகள் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளையே தங்களது முன்னுதாரணமாக வைத்து செயல்பட்டன. எனவே பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்கும் ISIS அமைப்புக்கும் இடையே கொள்கை ரீதியாகவும், தாக்குதல் ரீதியாகவும் தொடர்பு ஏற்படுவது இயற்கையானதுதான்.  இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லைதான்.

ஈராக்கில் போர் முடிந்ததும் இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் திரும்புவார்கள்.  பாகிஸ்தானில் மிகப்பெரும் தீவிரவாத தாக்குதல்கலை இவர்கள் நடத்துவார்கள். ஏற்கனவே ஷியா இனத்தவர் மீது மிகப் பெரும் இனப்படுகொலை நடத்திவரும் பாகிஸ்தான் சுன்னி பிரிவு தீவிரவாத அமைப்புகளான பாகிஸ்தான் தலிபான், லஷ்கர் இ தொய்பா மற்றும் Lej அமைப்பினர் மிகப் பெரிய தாக்குதலை பாகிஸ்தான் மற்றும் உலக ஷியா இனத்தவர் மீது நடத்துவார்கள். அவர்களின் தாக்குதல் ஷியா இனத்தவர் மீது மட்டுமே இருக்காது. அவர்களின் பொது எதிரியான இந்தியாவும் அவர்களின் இலக்கில் கண்டிப்பாக உண்டு. இவர்களை எதிர்கொள்ள இந்திய மக்களும் இந்திய அரசாங்கமும் தயாராக இருக்கிறார்களா? என்பதுதான் இப்போதைய மிகப் பெரிய கேள்வி, வந்த பின் காப்பதை விட வரும் முன் காப்பது நல்லது என்பது பழைய பழமொழி. ஆனால் இந்திய அரசாங்கம் எப்போதுமே கற்றுக்கொள்ளாத பழமொழி!
More than a Blog Aggregator

வெள்ளி, 11 ஜூலை, 2014

வெந்த புண்ணில் சிகரெட்டால் சுடும் இந்திய நிதியமைச்சர்!



இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தனது பட்ஜெட் அறிக்கையில் பல புதிய வரி திட்டங்களை அறிவித்துள்ளார். வழக்கம்போல் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏறத்தாழ அனைத்து ஆண்டுகளிலும் வரி உயர்த்தப்படுவதால் விலை அதிகரிக்கப்படும் பொருள் ஒன்று உண்டு. அது என்றைக்குமே விலை குறைந்ததில்லை. அது வேறொன்றுமில்லை. சிகரெட்தான். இந்த ஆண்டும் சிகரெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அதிகரிக்கப்படும் வரி விகிதம் ஆச்சரியத்தை தருகிறது. எக்சைஸ் வரியானது 11% சதவிகிதம் முதல் 72% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிகரெட்டு பாக்கெட்டின் விலை தற்போது ரூ.100 என இருந்தால் அது ரூ.111 -172 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே இனி "smoking is now more injurious to wealth." என்ற வாசகத்தை  சிகரெட்டு பாக்கெட்களில் பதிவதுதான் சரியாக இருக்கும்.

இதுகுறித்து அருண்ஜெட்லி கருத்து தெரிவிக்கும்போது இந்த முடிவானது மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.  மேலும் மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களின் விலையை கூட்டியதற்காக தான் வருத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. சிகரெட்டு எனபது உணவுப் பொருள் அல்ல. அதனால் ஒரு சிறு நன்மை கூட கிடையாது. சொல்லப்போனால் அது மனிதனை அடிமைப்படுத்தி மரணத்தை கொடுக்கும் ஒரு விஷம். புகைப்பதால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3,000 பேர் இறக்கின்றனர். நிதி அமைச்சருக்கு உண்மையிலேயே மக்களின் நலம் குறித்து அக்கரை இருக்குமானால் சிகரெட்டு மற்றும் பாண், குட்கா பொருட்களை தடை செய்யலாமே. ஆனால் இன்றுவரை சிகரெட்டு மற்றும் அனைத்து புகையிலை பொருட்களும் இந்தியாவில் சட்ட பூர்வமான பொருட்களாகவே உள்ளனவே. 

நிதி அமைச்சர் ஏன் இப்பொருட்களை தடை செய்யவில்லை. ஏனென்றால் நிதி அமைச்சரின் உண்மையான நோக்கம் எனபது மக்களின் உடல்நலம் அல்ல. அவரை பொருத்தவரை அரசாங்கத்தின் முக்கியமான வருமான ஆதாரம் பாண், குட்கா, சிகரெட்டு மற்றும் புகையிலை பொருட்கள்தான். தமிழ் நாட்டிற்கு டாஸ்மாக் போல. (சாராயம் விற்க டார்கெட் வைத்துக்கொண்டே மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் அரசாங்கம் உலகத்திலேயே நாமாகத்தான் இருப்போம்). புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டே மக்களின் உடல்நலம் பேசுகிறார் நிதி அமைச்சர்.

மது மற்றும் புகையிலை பொருட்களின் விலைகளை அரசாங்கம் கூட்டுவது வருமானத்திற்காகத்தான். ஏனென்றால் விலை ஏற்றத்திற்காக எவரும் போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கப்போவதில்லை என அமைச்சருக்கும், நிறுவனங்களுக்கும் நன்றாகவே தெரியும். அவ்வாறு நிறுத்த வேண்டும் என போதைக்கு அடிமையானவர்கள் நினைத்தாலும் அது அவர்களால் முடிகிறதில்லை. இதுவும் உலகம் அறிந்த விஷயம். இந்த உலகம் அறிந்த உண்மையை நீங்கள் உரக்க சொல்லலாமே. நிதி அமைச்சர் அவர்களே! நாங்கள் உங்களின் விலையேற்றத்தை குறை கூறவில்லை. உங்களின் பொய் வார்த்தைகள்தான் எங்களை காயப்படுத்துகின்றன.

விலை உயர்வினால் மேல் தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அப்படியானால் இதனால் பாதிக்கப்படுவது யார்? வழக்கம்போல் நடுத்தர மக்களும் கீழ் தட்டு மக்களும்தான். சிறிய வருமானத்தில் மேலும் ஒரு பகுதியை அவன் இதற்காக ஒதுக்க வேண்டும். விலை உயர்வு அவனை புண்ணாக்கி கொண்டிருக்கும் வேலையில், நிதி அமைச்சரின் போ(கே)லி வார்த்தைகள் வெந்த புண்ணில் சிகரெட்டால் சுடுகிறது.
More than a Blog Aggregator

ஞாயிறு, 21 ஜூலை, 2013

தாலிபான்களின் விஸ்வரூபம் 2 - விரைவில்...?



தலிபான்கள் தங்களின் சுய நலத்திற்காக எந்தவித கொடூரங்களையும் செய்ய துணிந்தவர்கள் எனபது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். எனவே அவர்கள் செய்யும் எவ்வளவு கொடூரமான விஷயங்களும் நமக்கு வியப்பை தருவதில்லை. தம் நாட்டு மக்களின் கல்வி, சுதந்திரம், மனித உரிமைகளை தரை மட்டமாக்கிய தலிபான்கள், அதனை மறைக்க  மதக் கருத்துக்களை  கூறி பூசி  மெழுகினர். ஆனால் தலிபான்களின் உண்மையான நோக்கம்  மக்களை அறியாமையில் மூழ்கடித்து அவர்களை தன்னுடைய சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்வதே ஆகும். தன் நாட்டின் பால் மனம் மாறாத பிஞ்சு குழந்தைகளை அவர்கள் எவ்வாறு தம்முடைய தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தினர் என்பதே அதற்கு அத்தாட்சி ஆகும். 
 
ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மற்றும் காஸ்னி சிறைகளில் 224 குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தலிபான்களால் மிட்டாய்களும், சில காசுகளும் கொடுத்து ஏமாற்றப்பட்டு மனித வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டவர்கள். அனாதையாக, பசியோடு இருந்த குழந்தைகளை வெறும் அறுபது பைசா லஞ்சமாக கொடுத்து தங்களது இயக்கத்தில் சேர்த்துள்ளார்கள். இக்குழந்தைகளை பேட்டி எடுத்துள்ள சேனல் 4 தொலைகாட்சி அதனை Taliban Child Fighters என்ற பெயரில் குறும்படமாக நாளை இரவு 8 மணிக்கு (GMT) ஒளிபரப்ப உள்ளது.
குழந்தைகளை தங்களது இயக்கத்தில் சேர்ப்பதில்லை என்று தாலிபான் தொடர்ந்து பொய் கூறிவந்துள்ளது. ஆனால் வீடில்லாத, அநாதையான குழந்தைகளை தொடர்ந்து தனது இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சியையும், தேவைப்பட்டால் அவர்களை மனித வெடிகுண்டுகளாகவும் தலிபான் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. தலிபான் இயக்கத்தினால் மனித வெடிகுண்டாக மாற்றப்பட்டு, பின் அவர்களிடமிருந்து தப்பி வந்த நியாஸ் என்ற சிறுவன்  கூறுவதை சற்று கவனியுங்கள்.

நியாஸ்
நான் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். ஒருநாள் அமெரிக்க கூட்டுப் படைகள் நாங்கள் இருந்த பகுதியில் விமான தாக்குதல் நடத்தின. அப்போது எங்கள் வீட்டில் தாலிபான்கள் பதுங்கினர். அமெரிக்க தாக்குதலில்  எனது தந்தை இதயத்திலும், தலையிலும் குண்டடிபட்டு இறந்துபோனார். எனது தாயார் மார்பில் அடிபட்டு இறந்து போனார். அனாதையான என்னை தாலிபான்கள் கடத்திக்கொண்டு போனார்கள். நகர்ப்புறத்துக்கு வெளியே ஒரு இடத்தில் வைத்து துப்பாக்கி கையாள்வது மற்றும் IEDs செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். அப்போது எனக்கு நிறைய காசுகளும், மிட்டாய்களும் கொடுத்தனர். தொடக்கத்தில்  நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள் அவர்கள் எனக்கு சிறப்பு பரிசு தருவதாக கூறினார்கள். ஆனால் அது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஒரு தற்கொலை பெல்ட் என்பதை பின்னர்தான்  உணர்ந்தேன். எனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளும், கிரனேடுகளும் பின்னி  பிணைந்திருந்தன. .  அவர்கள் அதனை ஒரு குறிப்பிட்ட சோதனை சாவடியில் வெடிக்கச் சொன்னார்கள். அதனை வெடிக்கச் செய்வதற்காக எனக்கு அவர்கள் 50 Afghanis காசுகள் (இந்திய மதிப்பில் 60 பைசா) கொடுத்தனர். நான் தற்கொலை செய்துகொண்டால் இந்த காசுகளை வைத்து நான் என்ன செய்ய முடியும் என்று அவர்களிடம் கேட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். நீ இதனை செய்தால், கடவுள் உனக்கு சொர்க்கத்தை பரிசளிப்பார் என்று கூறினர்.  இறுதியாக நான் அவர்களிடமிருந்து தப்பித்து, 9 மைல்கள் நடந்து ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்தேன்.

இப்போது நியாசுக்கு பத்து வயதாகிறது. லஷ்கர் கா என்னுமிடத்தில் ஒரு அநாதை இல்லத்தில் வசித்து வருகிறான். ஆனால் மற்ற சிறுவர்கள் அவ்வளவு அதிர்ஷ்டக்காரர்கள் அல்ல. 224 சிறுவர்கள் அரசாங்கப்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நியாசின் கதை அவனின் அப்பாவித்தனத்தை பறைசாற்றினாலும், சிறையிலிருக்கும் மற்றொரு சிறுவன் ஹன்ணன் கூறும் கருத்து நம்மை வேறுவிதமாக சிந்திக்க வைக்கிறது. 

ஹன்ணன்
என் தந்தை தாலிபான் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார். நான் எனது தந்தையிடமிருந்து  ஆயுதங்களை கையாளும் முறையினை கற்றுக்கொண்டேன்.  எனது தந்தை அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டார். எனக்கு  12 வயது இருக்கும்போது நான் தாலிபான் இயக்கத்தில் சேர்ந்தேன். ஒரே  வருடத்தில் ஐந்து நண்பர்களை சேர்த்துக்கொண்டு தனியாக ஒரு தாக்குதல் பிரிவை தொடங்கினேன். புற வழி சாலைகளில் தாக்குதல்களை நடத்தினேன். அத்தகைய ஒரு தாக்குதலின்போது நான் அரசாங்க படையினரால் கைது செய்யப்பட்டேன். எனது தந்தையின் சாவுக்காக நான் பழி வாங்க நினைக்கவில்லை. நான் கடவுளின் பெயரால் புனிதப்போர் செய்யவே  விரும்புகிறேன். மத நம்பிக்கை இல்லாதவர்களை நாய்களை கொல்வது போல் கொல்லலாம் என குர்ரானில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த குறும்படத்தின் இயக்குனரான நஜிபுல்லாஹ் கூறும்பொழுது ஹன்ணன் மற்றும் அவனை போன்ற மற்ற சிறுவர்களிடம் பேசும்போது நான் மிகவும் கவலை அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மிகவும் ஆபத்தானவர்களாக மாறியிருந்தார்கள். அவர்கள் சிறையை விட்டு விடுதலையாகும்போது தாலிபான் அல்லது மற்ற ஆயுத குழுக்களால் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படலாம். அவர்கள் உறுதியான தீவிரவாத மன நிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்.

இன்று குழந்தைகளை பொருத்தவரை உலகின் ஆபத்தான இடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் மட்டுமல்ல, அனைத்து தீவிரவாத குழுக்களும் சிறுவர்களை தங்களின் இயக்கத்தில் இணைத்துக்கொள்ள மிகுந்த ஆர்வம்  காட்டுகின்றன. அவர்கள் ஆப்கானிஸ்தானின் எதிர்கால போராளிகளாக கருதப்படுகின்றனர். அங்கு ஐந்தில் ஒரு குழந்தை தனது ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாட உயிரோடு இருப்பதில்லை.  ஏற்கனவே பட்டினி, வறுமை, போர், கல்வியின்மை, நிலைத்தன்மை இன்மை போன்ற காரணங்களால் ஆப்கன் குழந்தைகள் மிகுந்த மன நெருக்கடியில் உள்ளனர். எனவே அவர்களை ஏமாற்றி தீவிரவாதத்தின் பக்கம் இழுப்பது எளிதான ஒன்றாகிறது. ஆப்கானிஸ்தானின் தீவிரவாத குழுக்கள் தனது விஷ விதைகளை அடுத்த தலைமுறையிடம் நன்றாக ஊன்றிவிட்டது போலவே தெரிகிறது. அவ்வாறெனில் அது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகத்தின் அமைதிக்கே ஆபத்தாகத்தான் முடியும். அதே சமயத்தில் தாலிபான் போன்ற தீவிரவாத குழுக்களின் தீவிரவாத செயல்களுக்கு வக்காலத்து வாங்கும் ஞான சிகாமணிகள் ஒரு நிமிடம் நியாசின் இடத்தில் தங்கள் குழந்தைகளை வைத்துப் பார்க்கட்டும். குழந்தைகளை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் எந்த ஒரு அரசியல் இயக்கமும்,  தீவிரவாத இயக்கமும், மனித குலத்திற்கே விரோதமானதுதான். அவர்கள்  அடிப்படை மனித்தன்மையை இழந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.

படங்கள்: சேனல் 4
More than a Blog Aggregator

வியாழன், 18 ஜூலை, 2013

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார்கள் -லேட்டஸ்ட் நிலவரம்!

1. Maruti Alto 800


2013 -ம் ஆண்டில் இம்மாதம் வரை இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான டாப் 10 கார்களின் வரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நம்  வீட்டு கார் அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களும், புதிய கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களும், சும்மா தெரிந்து கொள்ளலாம்  என்ற ஆர்வத்தில் உள்ளவர்களும்   மேலே தொடர்ந்து படிக்கலாம். 





2. Maruti Suzuki Swift Dzire
1. Maruti Alto 800
அக்டோபர்  2012 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது, 2013-ம ஆண்டில் இதுவரை 1,37,406 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை Alto 800 மற்றும்  K10 மாடல்களின் கூட்டு எண்ணிக்கை ஆகும்.

2. Maruti Suzuki Swift Dzire
மாதத்திற்கு சராசரியாக 10,000+  விற்பனையாகி இந்த கார் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 2013-ம ஆண்டில் இதுவரை 1,04,713  கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. Chevrolet Sail  மற்றும்  Honda Amaze போன்ற கார்களின் அறிமுகம் இதன் விற்பனையை பாதிக்கும் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும் தன்னுடைய இரண்டாம் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.



3. Maruti Suzuki Swift

3. Maruti Suzuki Swift
May, 2005.ல் அறிமுகமான இந்த கார் இந்த ஆண்டில் இதுவரை 87,308 எண்ணிக்கை விற்பனையாகி பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

4. Maruti Suzuki WagonR
ஜப்பானில் 1993 ம ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, சுசுகி நிறுவனத்தால் இன்று வரை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2010 இறுதியில் சுசுகி நிறுவனம் இந்தியாவில் ஐந்து மில்லியன் WagonR கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது புதிய மாடல் WagonR காரை அறிமுகப்படுத்தியுள்ளது சுசுகி நிறுவனம். இந்த ஆண்டில் இதுவரை 78,389 கார்கள் விற்பனையாகி பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.


4. Maruti Suzuki WagonR



5. Mahindra Bolero
இந்தியாவின் கிராமப்புற மோசமான சாலைகளுக்கு ஏற்ற வாகனம் இதுதான். என் அனுபவத்தில்  இதை உறுதியாக சொல்கிறேன . இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் SUV( Sports Utility Vehicle)  ரக வாகனமும் இதுதான். இந்த ஆண்டில் இதுவரை 59,973 கார்கள் விற்பனையாகி பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.







6. Hyundai i10












9. Innova

10.Indica+Vista

 .  

6. Hyundai i10
ஹுன்டாய் நிறுவனம் விரைவில் புதிய மாடல் i10 கார்களை அறிமுகப்படுத்த உள்ளது என்ற போதிலும், தற்போதைய i10 மாடல்களின் விற்பனை சற்றும் குறையவில்லை. இந்த ஆண்டில் இதுவரை  50257 கார்கள் விற்பனையாகி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

7. Hyundai Eon
Maruti Alto 800 மாடலின் கடுமையான போட்டியினை சமாளித்து இந்த ஆண்டில் இதுவரை 50108 கார்கள் விற்பனையாகி பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.

8. Hyundai i20
Hyundai i10 மற்றும்  Eon  மாடல்களின் வரிசையில் ஹூண்டாய்நிறுவனம் அறிமுகப்படுத்திய மாடல்  i20 ஆகும். இந்த ஆண்டில் இதுவரை 50108 கார்கள் விற்பனையாகி பட்டியலில் எட்டாம்  இடத்தில் உள்ளது.

9. Innova
MPV( Multi Purpose Vehicle) மாடல் காரான இது இந்தியாவில் பெரும்பாலும் கமர்சியல் வகை பயன்பாட்டுக்கானது என்றே கருதப்படுகிறது. இருந்தபோதிலும் இன்னோவா கார்கள் இந்த ஆண்டில் இதுவரை 33353 எண்ணிக்கை விற்பனையாகி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை அடைந்துள்ளது.

10.Indica+Vista
மோட்டார் வாகனத் துறையில் டாட்டா நிறுவனத்தின் நிலை முன்னேற்றமாக இல்லாவிட்டாலும், அந்த நிறுவனத்தின்  Indica+Vista  மாடல் கார்கள் இந்த ஆண்டில் இதுவரை 33206  கார்கள் விற்பனையாகி பட்டியலில் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது.

விற்பனை வரிசை ஒ.கே! தர வரிசையில் எது பெஸ்ட்? உங்கள்  சாய்ஸ் எது என்று சொல்லலாமே!


நன்றி: www.indianexpress.com



More than a Blog Aggregator

சனி, 13 ஜூலை, 2013

தாலிபான்களின் முகத்தில் கரியை பூசிய மலாலா!




மலாலா யூசப்சாய்  இன்று நியூயார்க்கில் ஐ. நா சபையில் பேசியதில் குறிப்பாக ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது. தலிபான்கள் அவர் மீது நடத்திய கொலைவெறி தாக்குதல் குறித்து பேசும் போது அவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். 

தாலிபான் பயங்கரவாதிகள் சுட்ட குண்டுகள் என்னை மௌனமாக்கிவிட்டன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுவிட்டனர். என்னுடைய பலவீனம், பயம், நம்பிக்கையின்மை மட்டுமே இறந்தது.

தலிபான்களின் தாக்குதலுக்கு இதைவிட மிகப்பெரிய எதிர்தாக்குதலை வேறு யாரும் நடத்திவிட முடியாது. அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் தலிபான்களுக்கு ஏற்படுத்திய அழிவை விட, இச்சிறு பெண் தன் சொற்பொழிவினால் தலிபான்களுக்கு தார்மீக ரீதியில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளார். தலிபான்களை இதைவிட யாரும் அவமானப்படுத்த முடியாது.

இன்று மலாலாவின் பதினாறாவது பிறந்த நாள். இந்த நாளை  MALALA DAY”  என ஐ. நா அறிவித்துள்ளது. இதைப்பற்றி மலாலா பேசும்போது இது என்னுடைய நாள் அல்ல. இது தங்களின் உரிமைக்காக குரல் எழுப்பும் ஒவ்வொரு சிறுவன், சிறுமி, பெண்ணின் நாள் ஆகும் என்றார். தலிபான்கள் எவ்வளவு பெரிய கோழைகள் என்பதை மலாலாவின் மன உறுதி உலகிற்கு காட்டியுள்ளது. தலிபான்களை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை. மலாலா போன்ற மன உறுதி மிக்க பெண்களே போதும்.
  
பாகிஸ்தானில் மட்டும் ஐம்பது லட்சம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தைகள் எனபது குறிப்பிடத்தக்கது. மலாலாவை கொலை செய்து மற்ற பெண்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்த நினைத்த தலிபான்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். அது உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது சுதந்திரம் என்பதைத்தான். அது ஆயுதத்தின் முன் சமரசம் ஆனதாக என்றுமே வரலாறு இல்லை.
More than a Blog Aggregator

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள்! - ஒரு பார்வை.



தென்னிந்தியாவில்  முதன் முதலாக கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடித்த போது அது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. ஆனால் இன்று கர்நாடகாவில் அக்கட்சி இருக்கும் நிலைமை அக்கட்சிக்கு மிகப்பெரும் அவநம்பிக்கையை அளித்துள்ளது. விரைவில் மக்களவை தேர்தல் வர இருக்கும்போது, அதற்கு முன் வர இருக்கின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு நிறையவே  கலக்கத்தை தரலாம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 5 தேதி நடைபெற உள்ள நிலையில் Headlines Today மற்றும் C Voter  ஆகிய நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பிஜேபிக்கு சாதகமாக இல்லை. வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிஜேபி மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இக்கருத்துக்கணிப்புகள் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையில் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  அதாவது 224 தொகுதிகளிலும் 15,000 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக Headlines Today மற்றும் C Voter  தெரிவித்துள்ளது.
 
தற்போதைய கர்நாடக சட்டமன்றத்தில் பிஜேபி 104 உறுப்பினர்களை கொண்டுள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெறும் 52 இடங்களே கிடைக்கும் என கருத்க்கநிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் தற்போது 38 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 118 இடங்களை வென்று கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
 
எடியூரப்பாவின் கட்சியான Karnataka Janata Paksha (KJP) 8 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் அக்கட்சிக்கு சுமார் 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக இடங்களை கைப்பற்ற முடியாவிட்டாலும் பிஜேபியின் படு தோல்விக்கு எடியூரப்பாவின் கட்சி முக்கிய காரணமாக அமைகிறது. முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு 19 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம். 

பாரதீய ஜனதா கட்சியின் உட்கட்சி பூசல் அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.  அதே வேளையில் 62 சதவீத வாக்காளர்கள் பிஜேபியின் ஆட்சி கடந்த ஆட்சிகளை விட மோசமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

CNN-IBN-Deccan Herald-CSDS ஆகியவை இணைந்து நடத்திய  கருத்துக்கணிப்புகளும் ஏறத்தாழ இதே முடிவையே தெரிவிக்கின்றன.

தோல்வியின் விளிம்பில் உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு சிறிது நம்பிக்கை கொடுப்பவராக நரேந்திர மோடி இருக்கிறார். கர்நாடக மக்களிடையே வளர்ந்து வரும் மோடியின்  புகழ் பிஜேபிக்கு பெரிதும் கைகொடுக்க வாய்ப்பிருக்கிறது. சரிந்து கொண்டிருக்கும் பிஜேபியின் புகழை தூக்கி நிறுத்த மோடியால் முடியும் என கர்நாடகாவின்  64 சதவீத  வாக்காளர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பிஜேபியின் ஒரே துருப்பு சீட்டாக மோடி உள்ளார். அவ்வாறு சரிந்து வரும் பிஜேபியின் இமேஜை தூக்கி நிறுத்தி மீண்டும் கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் மேஜிக்கை மோடி செய்வாரானால் அது வரும் மக்களவை தேர்தலில் மோடியின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க செய்யும். அதே சமயத்தில் மோடி பிரதமராவதை எதிர்க்கும் குரல்களும் பிஜேபியில் இல்லாது போகும். மாறாக  பிஜேபி தோற்கும் நிலையில் அதற்கான பழியை மோடி மேல் சுமத்தவும் அவருடைய எதிரிகள் தயாராக இருப்பார்கள். மூழ்கும் நிலையில் உள்ள கர்நாடக பிஜேபி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தனது இமேஜை மோடி கெடுத்துக்கொள்வாரா?. எப்படி இருந்தாலும் பிஜேபியின் ஆட்சி மன்ற  குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு நெருப்பு ஆறாகவே இருக்கப்போகிறது. எனவே மோடியும் இத்தேர்தலில் தனது முழுத் திறமையை காட்ட தயாராகவே இருப்பார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில், அக்கட்சியின் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கட்சியின் இமேஜும் உயரக்கூடும்.  அதே நம்பிக்கையுடன் அது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும்  தயாராகலாம். அந்த வெற்றி களிப்பிலேயே உடனடியாக மக்களவை தேர்தலையும் நடத்த அது துணியலாம்.  அவ்வாறு காங்கிரஸ் நினைக்குமானால் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. மாறாக காங்கிரஸ் தோற்குமானால் ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் காங்கிரசின் இமேஜு மேலும் சரிந்துவிடும். அக்கட்சியின் தொண்டர்கள் தன்னம்பிக்கை குறைந்து ஒரு அவநம்பிக்கையுடனேயே மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். முன் கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கும்.  மொத்தத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் இரு கட்சிகளுக்கும் மக்களவை தேர்தலுக்கு முந்தைய அக்னி பரீட்சையாகவே இருக்கும். இத்தேர்தலின் வெற்றி, தோல்விகள் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிதளவாவது மக்களவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த நிறையவே வாய்ப்புண்டு.
More than a Blog Aggregator

புதன், 3 ஏப்ரல், 2013

ஆப்கானிஸ்தான் பிரச்சினை: இந்தியா மீது சீனா திடீர் காதல்!



சீனா எப்போதும் பாகிஸ்தானையே தனது நண்பனாக கருதி வந்துள்ளது. இந்தியா உடனான சீனாவின் நட்பு 1962 –ல் நடந்த போருக்கு பின் எந்த முன்னேற்றமும் அடையாமல் பின்னடைவே அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரும்பான்மையான நிகழ்வுகளில் இந்தியாவின் எந்த நிலைப்பாட்டையும் அது ஆதரித்ததில்லை. மேலும் கூறுவதானால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையையே சீனா எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் எனபது நீண்ட வரலாறு உடையது. தலிபானை பாகிஸ்தானும், தலிபானின் எதிர்ப்பு குழு Northern Alliance ஐ இந்தியாவும் ஆதரித்தன. தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் உதவியோடு காபூலை ஆண்டு வந்த Northern Alliance ஐ தோற்கடித்து அவர்களை நாட்டின் வடக்கு பகுதிக்கு விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார்கள். பின்னாளில் Northern Alliance ன் தலைவரான அஹமத் ஷா மசூத்தை தந்திரமாக கொன்று  கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் ஆதிக்கம் குறைந்தது. பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தலிபான்கள் அமெரிக்காவிடம் தோல்வி கண்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது.
  
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிப்பது எனபது தனக்கு ஆபத்தானது என்றே எப்போதும் பாகிஸ்தான் கருதுகிறது. இவ்விஷயத்தில் சீனாவும் வழக்கம் போல் பாகிஸ்தானின் கருத்தை ஆதரித்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா அப்போது விரும்பவில்லை. ஆனால் இப்போது சீனாவின் கொள்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் உணர முடிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் சீனாவின் புதிய அதிபர் ஷி ஜின்பிங் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது,  இந்தியா தொடர்பான சீனாவின் கொள்கை நிலைப்பாட்டில் ஒரு நேர்மறையான மாற்றம் தென்பட்டதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அச்சந்திப்பின் போது  அதிமுக்கியமான உலக அரசியல் நிகழ்வுகள் குறித்து வருங்காலத்தில் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க  சீனா சம்மதம் அளித்ததாகவும், அது உலக அரசியலில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஏற்றுக்கொள்ளத் தொடங்கியமைக்கான ஒரு அடையாளம் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர். 

இம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு துறை அதிகாரி யாஷ் சின்ஹா தலைமையிலான இந்திய குழுவும், சீன வெளியுறவு துறை அதிகாரி லு ஷாஹுய்  தலைமையிலான சீன குழுவும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளன. இச்சந்திப்பின் போது 2014 ல் அமெரிக்க படை வெளியேறிய பிறகு  ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள், ஆப்கன் பிரச்சினையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, தலிபானின் பயங்கரவாதம், ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை  குறித்து முதன் முதலாக விவாதிக்கப்பட உள்ளது இச்சந்திப்பு உண்மையிலேயே சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தையே நமக்கு காட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பு என்பது  தவிர்க்க முடியாதது என்பதை சீனா  உணர தொடங்கியுள்ளது. அதை விட சீனாவின் கொள்கை மாற்றத்திற்கான காரணங்களில் அதன் சுயநலமும் நிறையவே உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால்,  அது ஏற்கனவே சீனாவின் எல்லைபுற தன்னாட்சி மாகாணமான Xianjing ல் அதிகரித்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மேலும் அதிகரிக்க செய்யும்  என சீனா நினைக்கிறது.  சீனாவின் Xianjing மாகாணம் சீன-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தை  தனி நாடாக அறிவிக்கக் கூறி Turkistan Islamic Party (TIP) என்ற தீவிரவாத அமைப்பு போராடி வருகிறது. இப்பிரச்சினை தற்போது சீனாவுக்கு பெறும் தலைவலியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டிருந்த காரணத்தினால் TIP அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் சற்று குறைந்திருந்தன. 2014 –ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வாபஸ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமெரிக்க படைகள் வெளியேறினால் Xianjing மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும்  கொழுந்து விட்டு எரியக்கூடும் என சீனா நினைக்கிறது. எனவே  ஆப்கானிஸ்தான் தொடர்ந்து அரசியல் ஸ்திரத்தன்மை உள்ள நாடாக இருப்பது சீனாவுக்கு அவசியமாகிறது. பாகிஸ்தான்  மற்றும் தலிபான்களின் வரலாறுகள் ஏற்கனவே உலகம் முழுவதும் அறியப்பட்டதே. ஆகவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் இருந்தால் மட்டுமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை என்பது சாத்தியமாகும். எனவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் கரத்தை வலுப்படுத்துவது சீனாவுக்கு அவசியமாகிறது. இதுதான் இந்தியா மீது சீனா திடீர் காதல் கொண்டதற்கு காரணமாகிறது.

ஒவ்வொரு நாடும் தங்களின் சுய லாப, நட்டங்களை கணக்குப் போட்டுத்தான் தங்களின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. அதுபோலத்தான்  தனது சுய லாபங்களுக்காக தற்போது இந்தியாவை நோக்கி சீனா சற்று வளையத் தொடங்கியிருக்கிறது. காலம் அளித்துள்ள இந்த வாய்ப்பை சற்றும் நழுவ விடாமல் தனது சுயலாபத்திற்கு இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
More than a Blog Aggregator

திங்கள், 1 ஏப்ரல், 2013

மாணவிகளை ஜிகாதிகளாக மாற்றும் முஸ்லிம் அமைப்பு! -மும்பை போலீஸ் ரகசிய அறிக்கை!



மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்  மும்பை காவல்துறையால் அனுப்பப்பட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை உள்ளூர் மீடியாக்களில் வெளியானது மும்பை காவல்துறைக்கு மிகபெரும் தலைவலியை அளித்துள்ளது. அக்குறிப்பாணையில், கல்வி நிலையங்களை நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பு ஒன்று மாணவிகளை ஜிகாதிகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறது என்ற அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து காவல் அதிகாரிகளும் Girls Islamic Organisation of India என்ற அந்த அமைப்பினை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வரும்படியும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Girls Islamic Organisation of India என்ற அமைப்பின் வெளிப்படையான நோக்கம் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் மதத்தை பற்றியும், புனித குர் ஆன் பற்றியும் போதிப்பதாக இருந்தாலும், உண்மையான நோக்கம் அப்பெண்களுக்கு ஜிஹாத் பற்றியும், அதற்கான பயிற்சிகளை அளிப்பதுமாக இருந்து வருகிறது என்று மேலும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Girls Islamic Organisation of India அமைப்பின் தாய் அமைப்பு ஜமாத்-இ இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு முஸ்லிம் பெண்களுக்கு கல்வியையும், அவர்களுக்கு சமூக சேவைகளையும் வழங்கி வருகிறது. மும்பை காவல்துறை வெளியிட்ட இந்த சுற்றறிக்கை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயரை கெடுக்க நடைபெறும் திட்டமிட்ட சதி என ஜமாத் கருத்து தெரிவித்துள்ளது. இதற்காக மும்பை காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த மும்பை காவல்துறை மேற்கண்ட சுற்றறிக்கை பொதுவானது அல்ல என்றும், அது காவல்துறையின் தனிப்பட்ட ரகசிய நடவடிக்கைக்காக துறை சார்ந்த ஒரு சுற்றறிக்கை என்றும், உளவு அமைப்புகளின் அறிக்கையின் படியே அச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஜனவரி மாதத்தில் மும்பை காவல்துறை அனுப்பிய இன்னொரு ரகசிய சுற்றறிக்கையும் ஊடங்கங்களில் வெளியாகி பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. பூங்காக்களிலும்,  பீச்சிலும் காதல் செய்யும் ஜோடிகளை பிடித்து தண்டிக்கவேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் மும்பை காவல்துறை அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியிருந்தது. மேற்கண்ட பகுதிகள் ஒதுக்குப்புறமாக இருப்பதால் கிரிமினல்கள் கொள்ளை அடிப்பதற்கும், பெண்களை பாலியல் கொடுமை செய்வதற்கும் வசதியாக உள்ளது என்றும் அதனாலேயே அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் பின்னர் மும்பை காவல்துறை விளக்கம் கூறியது.
காவல் துறையில் இதுபோன்ற அதிகாரப்பூர்வமில்லாத, அலுவல் சாரா ரகசிய குறிப்புகள் சுற்றறிக்கையாக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான்.  அந்த ரகசிய குறிப்பில் ஒருவர் கண்காணிக்கப்படவேண்டும் என்று கூறப்படுவதாலேயே அவர் குற்றவாளி என்ற அர்த்தம் கிடையாது. பல்வேறு உளவு அமைப்புகளின் ரகசிய அறிக்கைகளின்படி அந்தந்த மாநில காவல் துறையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இவைகள். ஆனால் இதுபோன்ற சுற்றறிக்கைகள் “CONFIDENTIAL” என்று குறிப்பிடப்பட்டே அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த சுற்றறிக்கைகள் ஊடங்கங்களில் எளிதாக கசிகிறது என்றால் அதற்கு காரணமானவர்களை காவல்துறை உடனடியாக அடையாளம் காணவேண்டும். ஏனென்றால் இது போன்ற செயல்களை செய்பவர்களின் நோக்கம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக கூட இருக்கலாம். அல்லது காவல்துறைக்கு சங்கடங்களை விளைவித்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்குவதாக கூட இருக்கலாம். தண்டிக்கப்படவேன்டியது ரகசிய தகவல்களை வெளியிட்ட அந்த கருப்பு ஆடுதான். சட்டத்திற்கு உட்பட்டு யார் மீதும் சந்தேகப்படவும், நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் உண்டு.  மற்றபடி மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு மும்பை காவல்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டியதோ, அல்லது மன்னிப்பு கேட்க வேண்டியதோ இல்லை.
More than a Blog Aggregator