புதன், 28 நவம்பர், 2012

இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!

பறக்கும் தட்டுக்கள்! (படம்:ITBP)

இந்தியாவின்  சீன எல்லைப் பகுதிகளில் வானத்தில் தென்பட்ட அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் (Unidentified Flying  Objects, or  UFOs) இந்திய அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 1 முதல்  அக்டோபர் 15 வரைக்கும்  இடைப்பட்ட காலத்தில் 100 க்கும் மேற்பட்ட தடவைகள் பறக்கும் தட்டுக்கள் போன்ற அமைப்பை கொண்ட பொருட்கள்  வானத்தில் தென்பட்டதாக அங்கும் வசிக்கும் மக்களால் தெரிவிக்கப்பட்டது.  பறக்கும் தட்டுக்களை அப்பகுதியில் உள்ள இந்திய வான்படை, NTRO தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவு மற்றும் இந்திய, திபெத் எல்லை காவல் (ITBP) உள்ளிட்ட   இந்திய ராணுவ படையினரால் பார்க்கப்பட்டதாகவும், அக்காட்சி அவர்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்தரிக்கை தெரிவித்துள்ளது. இதே பறக்கும் தட்டுக்கள்  சீனாவிலும் பலரால் காணப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

அக்காட்சியை பார்த்த சிலர் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த பலூன் போன்ற அப்பொருட்கள்  கீழ்வானத்திலிருந்து எழுந்து  வானத்தின் குறுக்காக மூன்று அல்லது ஐந்து  மணி நேரங்கள் பயணம் செய்து  அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். தனக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்து பார்த்த ராணுவ அதிகாரிகள் வானத்தில் தென்பட்ட அப்பொருட்கள் ஆளில்லாத விமானமாகவோ அல்லது தாழ்வாக பறக்கும் செயற்கைகோளாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
Indian Astronomical Observatory ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்களை பல நாட்களாக ஆராய்ச்சி செய்தும் அதன் மர்மங்களை உடைக்கமுடியவில்லை. அடையாளம் காணப்பட முடியாத அப்பொருளின் மர்மங்களை அவிழ்க்க முடியாவிட்டாலும், அவைகள் சிறு கோள்களோ, அல்லது எரிகற்களோ இல்லை என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
இந்திய சீன எல்லையானது 2,100 மைல் அளவுடையது. இந்த எல்லைகளுக்கு பொறுப்பான இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பறக்கும் தட்டுக்கள் போன்று வானத்தில் காணப்பட்டவை சீன ஆளில்லாத விமானங்கள்  அல்லது தாழ் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள்  என்ற வாதத்தை நிராகரித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய திபெத் எல்லை காவல் படையினர் (ITBP) தமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் வானத்தில் காணப்பட்ட அந்த  கோளவடிவமான பொருளை அடையாளம் காண முடியாத ஒளிரும் பொருட்கள் (Unidentified Luminous Objects, or ULOs) என குறிப்பிட்டுள்ளனர். அப்பொருட்கள் சில நேரங்களில் பகல்வேளையிலும், சில நேரங்கள் இரவு வேளையிலும் காணப்பட்டதாக அவர்கள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர். ITBP அளித்த புகைப்படங்களை ஆராய்ந்த ராணுவ அதிகாரிகள் அவைகள் ஆளில்லாத உளவு விமானம் என்ற வாதத்தை நிராகரித்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் நடமாடும் ரேடார் அமைப்பையும், ஸ்பெக்ட்ரம் அனலைசர் கருவியையும் இந்திய சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகில் உள்ள மலையின் உச்சியில்  இந்திய ராணுவம் நிறுவியது. ஆனால் வெறும் மனித கண்களுக்கு புலப்பட்ட ஒரு  பறக்கும் பொருள், அங்கிருந்த ரேடாரின் கண்களுக்கு புலப்படவில்லை. அதாவது ரேடார் அந்த பறக்கும் பொருளை சுட்டிக்காட்ட தவறியது. எனவே  அந்த பறக்கும் பொருட்கள் உலோகத்தால் செய்யப்படாமல் இருக்கலாம் என்று இந்தியா டுடே தெரிவித்தது. இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய வான்படையினர் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருளை கண்டனர். பின்னர் அவைகள் சீனர்களின் ஒளிரும் பலூன்கள் (lanterns) என்று இந்திய ராணுவத்தால் விளக்கம் கொடுக்கப்பட்டன. 
சீனாவின் ஒளிரும் பலூன்கள்
மேற்கண்ட ஒளிரும் பறக்கும் பொருட்களை ஆதாரப்பூர்வமாக விளக்க முடியாத விஞ்ஞானிகள், அதே சமயத்தில் அவைகள் வேற்றுக் கிரகவாசிகள் என்ற வாதத்தையும் ஏற்க மறுக்கின்றனர். வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் இந்தியா டுடே -க்கு அளித்த பேட்டியில் அடையாளம் காண முடியாத ஒளிரும் பறக்கும் பொருட்கள் (UFOs) வேற்றுக்கிரகவாசிகள்  என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றார்.
உண்மை எதுவாயினும் இந்தியா  இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே நமது முடிவு. ஏனென்றால் சீனாவுடன் நமது உறவு தொடர்ந்து சீர்கெட்டு வரும் நிலையில், சீனாவோ தனது ராணுவத்தை பல புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பலப்படுத்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் தனது நிலைகளை நவீனப்படுத்திவருகிறது. இந்த ஒளிரும் பறக்கும் பொருட்கள் சீனாவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் இந்த ஒளிரும் பறக்கும் பொருளை சுடவேண்டாம் என இந்திய ராணுவத்தினருக்கு மேல்மட்டத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக சில  தகவல்கள்  வெளிவந்தது. அவ்வாறு அப்பொருளை இந்திய ராணுவம் தாக்கினால் அது சீனாவுக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்ற காரணத்திற்காக அக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே பயம்தான் 1962 – சீன போரின்போது நமக்கு பெரும் தோல்வியை தந்தது. வரலாற்றில் தோல்விகளை மறக்கலாம். ஆனால் தோல்விகள்  தந்த பாடங்களை இந்தியா ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் ஆசை.
More than a Blog Aggregator

செவ்வாய், 27 நவம்பர், 2012

தென் கொரிய பாப் பாடல் "Gangnam Style" உலக சாதனை படைத்தது!



மிக அதிகமாக யு டியுப்பில் பார்க்கப்பட்ட வீடியோவாக தென் கொரிய பாப் பாடகர் சை(Psy)-யின்  “Gangnam Style”  பாடல் சாதனை படைத்திருக்கிறது. ஜஸ்டின் பீபரின் “Baby” பாடல் படைத்த சாதனையை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முறியடித்து உலகில் அதிகம் தடவை பார்க்கப்பட்ட வீடியோவாக சையின் பாடல் சாதனை படைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால் ஆங்கிலம் இல்லாத வேற்று மொழி வீடியோ ஒன்று யு டியுப்பில் உலக சாதனை படைத்துள்ளது ஆகும். விரைவில் ஒரு பில்லியன்  தடவை யு டியுப்பில் பார்க்கப்பட்ட முதல் வீடியோவாக  இப்பாடல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை “Gangnam Style”  பாடல் யு டியுப்பில் 827 மில்லியன் தடவை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. இதுவரை யு டியுப்பில் எந்த வீடியோவும் 1 பில்லியன் தடவை பார்க்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.  “Gangnam Style”  பாடல் இந்த வருடத்திற்குள் அந்த சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் பீபரின் “Baby”  பாடல் 805 மில்லியன் தடவை பார்க்கப்பட்டுள்ளது.

சை யின் “Gangnam Style.” பாடல் வீடியோ யு டியுப்பில் ஒவ்வொரு நாளும் 7 மில்லியன் முதல்  10 மில்லியன் தடவை கண்டுகளிக்கப்படுகிறது. சென்ற சனிக்கிழமை  மட்டும் 11 மில்லியன் தடவை இந்த வீடியோ யு டியுப்பில் ரசிக்கப்பட்டது.

யு டியுப்பில் அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள் (All time) As on 26-11-2012

1) Psy (“Gangnam Style”, 827 million)

2) Justin Bieber (“Baby” 805 million)

3) Jennifer Lopez/Pitbull (“On the Floor,” 625 million)

4) Eminem/Rihanna (“Love the Way You Lie,” 517 million)

5) LMFAO (“Party Rock Anthem,” 503 million)

6) Shakira’s World Cup theme (“Waka Waka,” 501 million)

7) “Charlie” clip (498 million)

8) Lady Gaga (“Bad Romance,” 498 million)

9) Brazilian singer Michel Telo (“Ai Se Eu Te Pego,” 462 million)

10) Don Omar (“Danza Kuduro,” 407 million).

இதுபற்றிய முந்தைய  பதிவினை பார்க்க 
http://writervijayakumar.blogspot.com/2012/11/gangnam-style-dont-miss-it.html
More than a Blog Aggregator

வியாழன், 22 நவம்பர், 2012

கசாப்புக்கு தூக்கு! -இந்தியாவை பழிவாங்க தலிபான் சபதம்!



அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதற்காக இந்தியாவை பழிவாங்கப்போவதாக தலிபான் அறிவித்துள்ளது. இந்தியர்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் தாக்கபோவதாக தலிபான் எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தூக்கிலிடப்பட்ட கசாபின் உடலை பாகிஸ்தானில் உள்ள அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானின் தெஹ்ரி இ தலிபான் அமைப்பின் செய்திதொடர்பாளர் இசானுல்லா இசான் வடமேற்கு பாகிஸ்தானில் நிருபர்களுக்கு தொலைபேசி மூலம் கொடுத்த பேட்டியில் மேற்கண்ட செய்தியினை தெரிவித்தார்.  கசாபின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக, உலகின் எந்த இடத்திலும் நாங்கள் இந்தியர்களையும், இந்திய நலன்களையும் தாக்குவோம் என்று அப்போது அவர் தெரிவித்தார். மேலும் கசாபின் உடலை கசாபின் பெற்றோர்களிடம் இந்தியா ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கசாபின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், நாங்கள் இனிமேல் கொல்லும் இந்தியர்களது  உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இந்தியாவை எச்சரித்தார். 
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத லஷ்கர் இ தொய்பா கமாண்டர் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில் தங்களுடைய அமைப்பினால் கசாப் ஹீரோவாக சித்தரிக்கப்படுவான் என்றும், பிற்காலத்தில் இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதலுக்கு அவன் முன்னுதாரணமாக திகழ்வான் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானவுடன்  பாகிஸ்தான் தலிபான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தது. தலிபானின்  செய்தி தொடர்பாளர்  இசான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அறிக்கையில் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்தார். இந்தியா எந்த குற்றவாளியையும் எளிதில் தண்டிப்பதில்லை. இந்தியா தீவிரவாதத்தை கையாள்வதில் மிகவும் மென்மையான நாடு என்ற எண்ணம உலகம் முழுவதும் வலுவாக வேரூன்றியுள்ளது. இந்த எண்ணமே கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என்ற தைரியத்தை தலிபானுக்கு தந்திருக்கலாம். ஆனால் கசாப்பின் மரண தண்டனை மிக விரைவில் நிறைவேற்றப்பட்டது தலிபானுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கலாம். அதுவே தலிபானின் கோபத்திற்கும், பழிவாங்கல் அறிக்கைக்கும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் மிக விரைவாக விசாரணை முடித்து தூக்கிலிடப்பட்டதில் கசாப் இரண்டாம் இடத்தை வகிக்கிறான்.

கசாப்பை பற்றிய சில துணுக்கு செய்திகள்:

மும்பை போலீசார் அஜ்மல் கசாப்புக்கு வைத்த ரகசிய அடையாள பெயர் 'C-7096'. கசாப் தூக்கிலிடப்படும்வரை இந்த பெயரைத்தான்  பொலிசார் தங்கள் ரகசிய தகவல்  பரிமாற்றங்களில்  பயன்படுத்தினர். 

2008, நவம்பர், 26 ,  புதன்கிழமை அன்று கைது செய்யப்பட கசாப் அதே புதன்கிழமை தினத்தன்று புனே ஏர்வாடா ஜெயிலில் நவம்பர் 21, காலை 7:30 க்கு தூக்கிலிடப்பட்டான். கசாப்பின் வயது 25.  

இதற்கு முன்னதாக கடைசியாக மகாராஷ்ட்ராவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1995.

தூக்கிலிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்ட  தகவல் கசாப்பிற்கு நவம்பர் 12  அன்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கசாப் தூக்கிலிடப்படுவது முடிவாகிவிட்டது. அதனை ரகசியமாக செயல்படுத்தும் திட்டத்திற்கு “Operation X” என்று பெயரிடப்பட்டது.

கசாப் தூக்கிலிடப்படுவது பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கூட முன்கூட்டியே சொல்லப்படவில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.

கசாபை தூக்கிலிட்ட பணியாளுக்கு புதிய சம்பள தொகையான ரூ.5000/- சம்பளமாக வழங்கப்பட்டது. 1960 லிருந்து  இன்று வரை ரூ.10/- மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுவந்தது. கசாபை தூக்கிலிட சம்பளமே வேண்டாம் என பலர் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கசாப் கடைசியாக தெரிவித்த செய்தி தான் தூக்கிலிடப்படுவதை தன் அன்னையிடம் தெரிவித்து விடுங்கள் என்பதுதான். அவனது கடைசி வார்த்தை 'Tell my Ammi'. அவனுடைய இறுதி ஆசை இஸ்லாமாபாத்தில்  உள்ள இந்திய ஹைகமிஷன் மூலம் நிறைவேற்றப்பட்டது. கசாப் தூக்கிலிடப்படும் செய்தி அவனுடைய தாயாருக்கு கூரியர் மூலம் இந்திய ஹைகமிஷனால் நேற்று தெரிவிக்கப்பட்டது. கசாப் அம்மாவின் பெயர் நூரி லாய். 

கசாப் தூக்கிலிடப்படும் செய்தி முன்னதாகவே பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாக சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
More than a Blog Aggregator

திங்கள், 19 நவம்பர், 2012

இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!



Indiavisitinformation.com
பால் தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழுஅடைப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தானேயை சேர்ந்த ஷாகீன் தாடா என்று  பெண் நேற்று மும்பை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.  பால் தாக்கரேயின் மரணத்திற்காக மும்பையில் முழு அடைப்பு நடத்தக்கூடாது என்றும்,  நாம் பகத் சிங்கையும், சுஹ்தேவையும் நினைவு கூறவேண்டும் என்றும் அவர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.  இதைவிட கொடுமை என்னவென்றால் அவரது கருத்தினை “Likes” செய்ததால் ஷாகீனின் தோழி ரேனுவும் கைதுசெய்யப்பட்டார்.

உள்ளூர் சிவசேனா தலைவர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இ.த.ச பிரிவு 505(2) (statements creating or promoting enmity, hatred or ill-will between classes) -ன் கீழ் கைது செய்யப்பட்டனர். இருவரும் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் சுதிர் குப்தா தெரிவித்தார்.

பேஸ்புக்கில் ஷாகீனின் கருத்து வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில்  40 பேர்களை கொண்ட சிவசேனா தொண்டர்கள் படை பல்காரில் உள்ள  ஷாகீனின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை  தாக்கி சேதப்படுத்தியது.

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்கண்டேய கட்ஜு மும்பை பொலிசாரின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரு பெண்களையும் கைது செய்த மும்பை போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் மும்பை போலீசார் மீது முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தான்  சட்டப்பூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கப்போவதாக கட்ஜு தெரிவித்துள்ளார்.

கட்ஜு தனது இ-மெயிலில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“I will deem it that you as CM are unable to run the state in a democratic manner as envisaged by the Constitution to which you have taken oath and then legal consequences will follow,”

சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யவேண்டும் என்றும், அவர்களை கைது செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கட்ஜு முதல் அமைச்சருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னை பொருத்தவரை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது எவருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவதாக கருத முடியாது என்றும், நமது அரசியல் சட்டத்தின் Article 19 ன்படி பேச்சுரிமை என்பது நமது அடிப்படை உரிமை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கட்ஜு மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் இந்த கைது நடவடிக்கை பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கையாக கருத முடியும் என்றும், ஒருவரை தவறான முறையில் கைது செய்வதும், குற்றம் ஏதும் செய்யாத ஒருவரை சிறையில் வைப்பதும்  பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் கிரிமினல் குற்றமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகள் மக்களின் பேச்சுரிமையை மறைமுகமாக பறிக்க நினைக்கிறார்கள். பந்த் நடத்த ஒரு அமைப்பிற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒருவருக்கு உண்டு. ஆனால் இத்தகைய கைது  நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி மிரட்ட நினைக்கின்றனர்.   பத்திரிக்கைகள் மீது பாய்ந்தால் அவைகள் அவர்களை திருப்பி அடிப்பார்கள். ஆனால் அப்பாவி மக்களுக்கு பத்தரிக்கைகள் போல் பின்புலம் கிடையாது. எனவே அவர்களை எளிதில் மிரட்டலாம் எனபது அவர்கள் கணக்கு. அதனால்தான் அரசியல்வாதிகள்  மீது ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்களை பத்திரிக்கைகள் தெரிவிக்கும்போது அமைதியாக இருந்துவிடும் அவர்கள், சமூக வலைத்தளங்களில் ஒரு சராசரி இந்தியன் தனது கருத்தை தெரிவிக்கும்போது தைரியமாக பொங்கி எழுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெரிய பத்திரிக்கைகள் கூட இந்த விஷயத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பதுதான் என் எண்ணம். 

இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏனென்றால் அந்த அச்சத்தை என் மனதில் விதைப்பதில் இந்த அரசியல்வாதிகள் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.  
More than a Blog Aggregator

ஞாயிறு, 18 நவம்பர், 2012

யாசர் அராபத் கல்லறை இன்று உடைப்பு! - மர்மம் உடைபடுமா!?


அராபத்தின் கல்லறை தோண்டஆயத்தம்!

பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள  மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.

அராபத் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அராபத் அணிந்திருந்த உடைகளை சுவிட்சர்லாந்தின் Institut de Radiophysique ஆய்வகம் ஆய்வு செய்தது. ஆய்வகத்தின் இயக்குனர் பிரான்காயிஸ் போசூட் (Francois Bochud) தெரிவிக்கையில் தங்களின் ஆய்வாளர்கள் அராபாத்தின் டூத் பிரஷ், உடைகள், அவர் அடிக்கடி தலையில் அணியும் கருப்பு வெள்ளை துணி ஆகியவை ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அப்போது அராபத்தின் உடையில் காணப்பட்ட அவர் உடல் திரவத்தின் கறையில் 180 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவில் 'போலோனியம்-210'  கதிர்வீச்சு ஐசோடோப் காணப்பட்டதாகவும், வழக்கமாக   5 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவில்தான் அது காணப்படும் என்றும் கூறினார்.  பெகொரல் (Becquerel) எனபது கதிர்வீச்சை அளக்க பயன்படும் அளவீடாகும். அவருடைய உடல் திரவத்தின் கரை இல்லாத ஆடையில் வெறும் 10 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே கதிர்வீச்சு காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அராபத்தின் உடலில் இந்த கொடிய கதிர்வீச்சு செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியாவை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

 இந்நிலையில் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரின் மேற்கு கரையில் உள்ள அராபத்தின் இல்லத்தில் உள்ள கல்லறை இன்று உடைக்கப்படுகின்றது. கான்கிரீட்டினால் கட்டப்பட்ட இந்த கல்லறையை முழுமையாக உடைத்து, அராபத்தின் உடலை வெளியே எடுக்கும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லறையை இடிக்கும் பணி  இன்று  தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 'போலோனியம்-210'  கதிர்வீச்சு ஐசொடோப் அவர் உடலில் உள்ளதா  என்று பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு அவரது உடலில் 'போலோனியம்-210' கதிர்வீச்சு ஐசொடோப் அளவுக்கும் அதிகமாக காணப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அராபாத்தின் மரணம் கொலை வழக்காக மாற்றப்படலாம்.
இதற்கிடையே அவரது உடலை தோண்டி எடுப்பது தெரியவந்தால், ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனாலும் புதைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவரத்தானே செய்யும்!?.

இதுபற்றிய விரிவான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். http://writervijayakumar.blogspot.com/2012/09/blog-post.html
More than a Blog Aggregator

வெள்ளி, 16 நவம்பர், 2012

2G அலைக்கற்றை ஏலம் தோல்வி! - காங்கிரசால் மறைக்கப்படும் சில உண்மைகள்!


வினோத் ராய், CAG of India

2G அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த அளவிற்கு போகாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரியும், திக்விஜய் சிங்கும் CAG வினோத் ராய் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது CAG  2010 –ல் நிர்ணயித்த தொகைக்கு  2G  ஏலம் போகவில்லை என்றும், அதனால் அது முன்னதாக தன் தணிக்கை அறிக்கையில்  தெரிவித்த அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு என்ற கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மற்றொரு காங்கிரஸ் தலைவரோ உண்மை மக்களின் முன் வைக்கப்பட்டுள்ளது என்று கிண்டலாக கூறுகிறார். அதாவது  2G  ஏலத்தில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று இதுவரை CAG கூறியது பொய்யான தகவல் என்றும், அதன் மூலம் 2G  ஏலத்தில் ஊழலே நடக்கவில்லை என்றும் மறைமுகமாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 2G  ஏலத்தில் ஊழல் என்று குற்றம் சாட்டியாவர்கள் காங்கிரசிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார் மனிஷ் திவாரி.

2G  அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த தொகைக்கு போகாமல் தோல்வியில் முடிந்திருக்கலாம். CAG  தனது அறிக்கையில் தெரிவித்த  அளவிற்கும் மிகக்குறைவான தொகைக்கு ஏலம் போயிருக்கலாம். ஆனால் அதற்காக CAG  தனது தணிக்கை அறிக்கையினில் தவறான தகவல்களை அளித்திருக்கிறார் என்று கூறுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. அதுமட்டுமில்லாமல் 2G ஏலம் மிகக்குறைந்த அளவிற்கு போயுள்ளதால் அதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்ற காங்கிரசார் முடிவுக்கு வருவதையும் என்னால் ஏற்கமுடியவில்லை. என்னுடைய மூன்று வாதங்கள் இதுதான். 

1) 2008- ல் அலைக்கற்றை ஏலத்தின்போது  122 லைசென்சுகள் Rs.9,200 கோடிக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டன.  ஆனால் தற்போது 2012 - ல் வெறும் 22 லைசென்சுகள் Rs.9,407 கோடிக்கு ஏலம் சென்றுள்ளன. அப்படியானால் முன்னதாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மையா? பொய்யா?. 2008- ல்  122 லைசென்சுகளை ஏலம் விட்டு அரசுக்கு கிடைத்த தொகை தற்போது வெறும் 22 லைசென்சுகளை ஏலம் விட்டதில் அரசுக்கு கிடைத்திருக்கிறது.

2)  CAG தனது அறிக்கையினை 2010-ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போதைய சந்தையின் அதிகபட்ச அலைக்கற்றை விலையினை கொண்டு CAG அனைத்து பகுதிகளுக்குமான விலையினை நிர்ணயித்திருக்கலாம். அந்த காலக்கட்டத்திற்கான விலை நிர்ணயம் தற்போதைய காலக்கட்டத்திற்கு பொருந்தாமல் இருக்கலாம்.  CAG நிர்ணயித்த தொகை 2008- ஆம் ஆண்டிற்கான அலைக்கற்றை மதிப்பாகும். அம்மதிப்பு  2012-ஆம் ஆண்டில் குறைந்திருக்கலாம். அதற்காக  CAG நிர்ணயித்த 2008- ஆம் ஆண்டிற்கான அலைக்கற்றை மதிப்பு தவறு என்று அர்த்தமாகாது.

3) இன்றைய கால கட்டத்தில் 3G, 4G என்ற தொழில் நுட்பங்கள் வந்துவிட்டபிறகு 2G யின் மதிப்பு தானாகவே குறைவது இயற்கைதான். உதாரணமாக நான் 2007 –ல் நோக்கியா N70 செல்போன் வாங்கும்போது விலை ரூ.12,000/-. ஆகும். அதற்காக தற்போதும் அதே விலைக்கு அந்த போனை விற்க முடியுமா?. அந்த போனை யாருக்காவது இலவசமாக கொடுத்தால் கூட வாங்க மறுக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்கள் வந்தவுடன், பழையவை கழிக்கப்படுவது இயற்கைதான். அதற்காக நான்  2007 –ல் ரூ.12,000/-.க்கு N70 செல்போன் வாங்கியது பொய்யாகி விடுமா?. அல்லது 2012 ல் அதன் விலை ரூ.500/- என்பதற்காக 2007 –லும் அதன் விலை ரூ.500/- தான் என்று கூறமுடியுமா?. மேலும் நாட்டின் அப்போதைய பொருளாதார நிலை வேறு. இப்போதைய பொருளாதார நிலை வேறு. இப்போதைய பொருளாதார மந்த நிலை கூட அலைக்கற்றை ஏலத்தை பாதித்திருக்கலாம்.

CAG தனது தணிக்கை அறிக்கையில் தெரிவித்த கணக்கீட்டில் ஒரு சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அலைக்கற்றையின் விலை மதிப்பு என்பதை துல்லியமாக கணிப்பது CAG யால் மட்டுமல்ல, வேறு எவராலும் முடியாத காரியம்தான். CAG குறிப்பிட்ட அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு என்பது உண்மையை விட சற்று அதிகமான தொகையாக கூட இருக்கலாம்.   ஆனால் அதற்காக 2008- ஆம் ஆண்டு அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவே இல்லை என்பது   வடிகட்டின பொய்யாகும். அரசுக்கு மிகப்பெரும் தொகை இழப்பு ஏற்பட்டிருகிறது என்பதுதான் நூறு சதவீதம் உண்மை.

அதேசமயத்தில் இப்போதைய 2G அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த தொகைக்கு போகாமல் தோல்வி அடைந்தற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் என்னுள் எழுகின்றன. அவை உண்மையா? என்பதை காலம் எனக்கு உணர்த்தலாம். 
More than a Blog Aggregator

புதன், 14 நவம்பர், 2012

உலகைக் கலக்கும் தென்கொரிய பாப் பாடல் "Gangnam Style"-Dont miss it!





ஜூலை 15, 2012 அன்று வெளியான ஒரு ஒரு தென்கொரிய பாப் பாடல் இன்று உலகையே ஆட்சி செய்கிறது. இப்பாடலின் வீடியோ காட்சி யூ டியூப்- ல் இன்றைய நாள்வரை 722  மில்லியன் தடவைக்கு மேல் கண்டு ரசிக்கப்பட்டுள்ளது. யூ டியூப்- ல் அதிக தடவை கண்டுகளிக்கப்பட்ட கொரிய வீடியோ காட்சி என்றும், மொத்த  வீடியோக்களில்   அதிகமாக பார்க்கப்பட்டதில் இரண்டாவது இடத்தையும் இந்த பாப் பாடல் வீடியோ  பெற்றுள்ளது. யூ டியூப்- ல் அதிக மக்களால் விரும்பப்பட்ட வீடியோ (likes) என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அக்டோபர் மாத இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உட்பட  30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது. 2012 –ஆம் ஆண்டிற்கான MTV Europe Music Awards  விழாவில் Best Video –வுக்கான விருதை வென்றுள்ளது. இவ்வாறு இந்த பாடல் படைத்த சாதனைகளை சொல்லிகொண்டே போனால் இன்னும் பத்து பக்கம் எழுதலாம். 


தென்கொரியாவின் பாப் பாடகர் சை(PSY, TMZ சானலில் அப்படித்தான் அவர் பெயரை உச்சரிக்கிறார்கள்) என்பவர் பாடிய "Gangnam Style"  என்னும் பாடல்தான் இவ்வளவு பெரிய வெற்றிகளை குவித்திருக்கிறது. சையின் sixth studio நிறுவனம் வெளியிட்ட PSY 6 (Six Rules), Part 1 என்ற ஆல்பத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பாடலை எழுதி, பாடி, இயக்கியவர் அனைத்தும் சை தான்.
இப்பாடலின் வீடியோ  காட்சியை பார்த்த பின்பு உங்களால் ஆடாமல் இருக்க முடியாது என்பதுதான் இப்பாடலின் தனித்துவம். அதிலும் குறிப்பாக குதிரை ஸ்டைலில் சை ஆடும் ஒரு ஸ்டெப் நம்மை ஏதோ போதை மருந்துக்கு அடிமைப்படுத்துவது போல் இருக்கிறது. சையை பார்க்கும்போதே நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கிறது. அவரின் ஆட்ட வேகம், உற்சாகம், ஸ்டைல் ஆகியவற்றை பார்க்கும்போதே நமக்கு மேலும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.  இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பது தடவைக்கும் மேல்  கேட்டுவிட்டேன். அப்படியும் சலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாட்டை பாடிகொண்டே (முதல் வரி மட்டும்தான்!) ஆடவும் தொடங்கிவிட்டேன். தற்செயலாக அந்த வீடியோவை பார்த்த என் ஏழு வயது மகனும், ஆறு  வயது மகளும்  இப்போது பாட்டை பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எம்மாத்திரம்?. கூகிள் சேர்மன், இங்கிலாந்து பிரதமர், ஐநா பொது செயலர் ஆகியோர்களும் இப்போது இந்த பாட்டுக்குத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்களாம். மடோனாவும், பிரிட்னியும் இப்போது சையுடன் ஆட வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். யூ டியூப்- ல் பாடலின் வீடியோ காட்சியை பார்க்கும்பொழுது அதனுடன் சேர்ந்த மற்ற வீடியோக்களையும் பார்க்க தவறாதீர்கள்.

இந்த பாடலை பார்த்தவுடன்  நமக்குள் ஒரு உற்சாகம் பொங்கிவருவது மட்டும் உறுதி. இப்பாடலை நீங்களும் கேட்டு பாருங்கள். உற்சாகமாக ஆடுங்கள். உங்களிடமிருந்து கவலைகள், டென்ஷன், சோம்பல் அனைத்தையும் விரட்ட அற்புதமான மருந்து இந்த பாடல். இசைக்கு மொழி என்பது  ஒரு தடைக்கல் அல்லவே!.
You tube –ல் வீடியோவை காண  www.youtube.com/watch?v=9bZkp7q19f0
More than a Blog Aggregator

செவ்வாய், 13 நவம்பர், 2012

கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் McAfee antivirus நிறுவனர்!-மர்மங்கள் விலகுமா!?



ஜான் மெக்கபி(John McAfee), McAfee ஆண்டி வைரஸ் நிறுவனத்தை 1990-களில் தோற்றுவித்தவர். 67 வயது நிரம்பிய அவர் பெலிஸ் (Belize) தீவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அம்பேர்கிரிஸ் கேய்  என்ற குட்டித்தீவில் ஆடம்பர பங்களாவில்  கடந்த நான்கு வருடங்களாக வசித்துவருகிறார். பெலிஸ் தீவு முன்பு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்த ஒரு நாடாகும். அமெரிக்கரான கிரிகோரி பவுல் (Gregory Faull) என்பவரை ஜான் மெக்கபி கொலை செய்துள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும்  பெலிஸ் காவல் அதிகாரி மார்கோ விடால் தெரிவித்துள்ளார்.

பவுலின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய கடந்த ஞாயிறன்று ஜான் மெக்கபி வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ஆனால் ஜான் மெக்கபி தலை மறைவாகிவிட்டதாகவும் காவல் அதிகாரி மேலும் தெரிவித்தார். கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் நபராக ஜான் மெக்கபி அறிவிக்கப்பட்டுள்ளார் என்று விடால் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பல மாதங்களுக்கு முன்னதாக விடால் தலைமையிலான குழு ஒன்று ஆயுதம்,  போதைமருந்து பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ஜான் மெக்கபியின் வீட்டில் சோதனை நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போதும் ஜான் மெக்கபி பல மணி நேரம் போலீஸ் கஸ்டடியில்  சிறை வைக்கப்பட்டார்.உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு தேர்தல் பிரச்சார செலவுகளுக்கு நன்கொடை வழங்க மறுத்ததால் தாம் கைது செய்யப்பட்டதாக அப்போது ஜான் மெக்கபி  தெரிவித்திருந்தார்.

புளோரிடாவை சேர்ந்த 52 வயதான பவுல் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டதாக அவருடைய வீட்டு வேலைக்காரர் கடந்த ஞாயிறன்று காலை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். கொலை நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து 9mm ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது பவுலின் கழுத்தின் பின்பகுதியில் உள்ள காயத்துடன் சரியாக பொருந்துவதாகவும் பெலிஸ் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரபேல் மார்டினஸ் தெரிவித்தார். 

குற்றவாளி பவுலின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், பவுலின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காணவில்லை என்றும் போலீசின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 

தீவில் வசிக்கும் மக்கள்  Gizmodo இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சில நாட்களுக்கு முன்பு பவுல், ஜான் மெக்கபி இடையே தகராறு நடந்ததாக கூறியுள்ளனர். உள்ளூர் மக்கள் தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் Gizmodo இணையதளத்திற்கு சில தகவல்களை அளித்துள்ளனர். ஜான் மெக்கபியின் நடவடிக்கைகள் மர்மமாகவும், சந்தேகத்திற்கிடமானதாகவும் இருந்துவந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.  அவர் தீவில் தன்னுடைய சக அமெரிக்க சமூகத்திடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர். ஜான் மெக்கபி சமீப காலமாக மனநிலையை தூண்டக்கூடிய  மருந்துகள் தயாரிப்பது குறித்து ஆய்வுகள்  செய்துவந்தார்  என்றும் Gizmodo இணையதளம் மேலும் தெரிவித்துள்ளது.

சில காலங்களாகவே John McAfee குறித்து எதிர்மறையான தகவல்களே ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தன. கோபுரத்தில் வாழ்ந்து  சேற்றில் விழுந்த பெரிய மனிதர்களுள் அவரும் ஒருவராகிவிட்டார். இனிவரும் காலங்களில் McAfee ஆண்டி வைரஸ் நிறுவனர் John McAfee- யின் மர்ம ரகசியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்று நாம் நம்பலாம்.
More than a Blog Aggregator

திங்கள், 12 நவம்பர், 2012

அலுவலகத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய 10 கட்டளைகள்!



அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம் மன நிம்மதியை கெடுத்துவிடும். சிறப்பான அலுவலக சூழல் ஏற்பட நாம் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பத்து வழிமுறைகள் இங்கே உள்ளன. இதனை பின்பற்றினால் அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக நாம் பெயர் எடுக்கலாம். என் அலுவலக அனுபவங்கள் அதற்கு சாட்சி.

1.நல்ல வேலையை ரகசியமாக தேடுங்கள்!
தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் விருப்பம் இல்லாமல் ஒரு வேலையை செய்வது என்பது மிகப்பெரிய கொடுமையாகும். ஆனால் நீங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதை பற்றி  அலுவலகத்தில்  மற்றவர்களுடன் விவாதிக்கவேண்டாம். உங்களுக்கு புதிய வேலை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பழைய வேலையிலேயே தொடர நேரிடலாம். அப்போது நீங்கள் விருப்பம் இல்லாமல் வேலையில் நீடிக்கிறீர்கள் என்ற விஷயம் அலுவலகம் முழுவதும் தெரிந்திருக்கும். அது உங்கள் மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம். 

2.கிசுகிசு, வதந்தி வேண்டாம்!
நீங்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் செலவிடுகிறீர்கள். சக பணியாளர்களின் அந்தரங்க தகவல்கள், விருப்பு வெறுப்புகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அதனை அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அம்பலப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் பேசக்கூடிய கிசுகிசு மிகவும் வேகமாக பரவக்கூடியது. முதுகுக்கு பின்னால் பேசக்கூடியவர், நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று பெயர் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

3.செக்ஸ் சப்ஜெக்ட் பேசாதீர்கள்!
செக்ஸ் பற்றிய விஷயங்களை நீங்கள் அலுவலகத்தில் பேச வேண்டாம். செக்ஸ் என்பது உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமான அந்தரங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருக்கலாம். ஆனாலும் உங்கள் தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கைகள் பற்றி அலுவலகத்தில் பேசவேண்டாம்.

4.மேலதிகாரிகளிடம் புகார் செய்யாதீர்கள்!
நீங்கள்  செய்யும் வேலையில் உங்களுக்கு பல மனக்குறைகள்  இருக்கலாம். ஆனால் அவற்றை அடிக்கடி மேலதிகாரிகளிடம் புகார்களாக எடுத்துச்செல்லாதீர்கள்  அல்லது எதிர்மறையாக விமர்சிக்காதீர்கள். அது நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் வேலையை மதிக்கவில்லை அல்லது வெறுக்கிறீர்கள் என்ற எண்ணத்தை மேலதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்யும் வேலையை வெறுக்கிறீர்கள் என்ற எண்ணம் சக ஊழியர்களிடையே அல்லது வாடிக்கையாளர்களிடையே ஏற்படுமானால் அது உங்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும். மேலும் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு பதவிஉயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவிக்க அது காரணமாக அமைந்துவிடலாம்.

5.சம்பளம் உஷ்!அது ரகசியம்!
உங்கள் அலுவலகத்தில் ஒரே மாதிரியான பணி செய்யும் அலுவலர்கள் வெவ்வேறு விதமான ஊதியம் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் மற்றவர்களைவிட நீங்கள் அதிகமான சம்பளம் பெறுகிறீர்களா? அல்லது குறைவான சம்பளம் பெறுகிறீர்களா? என்பதை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம். நீங்கள் பெறும் சம்பளம் அதிகமாக இருந்தால் மற்றவர்கள் உங்கள் மீது  பொறாமைப்படலாம். மற்றவர்களைவிட குறைவாக இருந்தால் உங்களை ஏளனம் செய்யலாம். எனவே உங்கள் ஊதியத்தை மற்றவர்களிடம் கூறாதீர்கள்.

6.நிதிநிலைமை பற்றி பேசவேண்டாம்!
ஊதிய விவரம் எவ்வாறு ரகஸியமானதோ, அதைப்போன்று உங்களின் குடும்ப நிதிநிலைமை பற்றியும் அலுவலகத்தில் பேசவேண்டாம். உதாரணமாக குடும்பத்தில் நிதி பிரச்சினை இருந்தால் கூட அதனை உங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் பிரச்சினை. அது மற்றவர்களுக்கு தெரியவேண்டியதில்லை. நீங்கள் அவ்வாறு சொல்வதை சக ஊழியர்கள் விரும்பாமல் கூட இருக்கலாம். ஒன்றிரண்டு பேர் உங்களின் நிதிநிலைமை பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சக ஊழியர் அனைவருக்கும் தெரிந்தால் அது தேவையில்லாத வதந்திகளையும், கிசுகிசுக்களையும் அலுவலகத்தில் பரப்பிவிடலாம்.

7.குடும்ப பிரச்சினை அலுவலகத்தில் வேண்டாம்!
உங்களுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினை இருக்கலாம். நீங்கள் எப்போதும் வெறுப்பான மனநிலையில் இருக்கலாம். அல்லது திருப்தி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எந்த பிரச்சினைகளையும் நீங்கள் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அல்லது மருத்துவர்களுடனும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்கு அவற்றை கொண்டுசெல்லாதீர்கள்.

8.அரசியல் வேண்டாம்!
அரசியல் மக்களை பிரிக்கிறது. அலுவலகத்தில் அரசியல் பற்றிய விவாதங்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற விவரத்தை கூறவேண்டாம். நாளிதழ்களில் வெளியான அரசியல் செய்திகள் குறித்து உங்கள் கருத்துக்களை கூறுதல், சக ஊழியர்களிடம் நீங்கள் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று விசாரித்தல் போன்றவைகளை தவிர்த்துவிடுங்கள். சில ஊழியர்கள் அரசியலை உணர்ச்சிபூர்வமாக அணுகக்கூடும். அதே ஊழியர்கள் உங்களின் தினசரி அலுவலகப் பணிகளுக்கு உதவி செய்பவராக இருக்கலாம். உங்களின் அரசியல் கருத்துக்கள் அவரை உங்களிடமிருந்து விலகச்செய்யலாம்.

9.மதம் வேண்டாம்!
மதம் எனபது ஒரு மனிதனின் அந்தரங்கமாக இருக்கவேண்டிய விஷயமாகும்.  அது அரசியலைவிட மிக கொடியது. அது மனிதர்களை பிரிக்கக்கூடியது. எனவே மதம் பற்றிய உங்களின் கருத்துக்களை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் பேச வேண்டாம்.

10.உணர்ச்சியை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் அதிகமான நேரத்தை செலவிடவேண்டியிருக்கும். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கலாம். அது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அதற்காக மற்றவர்கள் மீது நீங்கள்  கோபத்தைக் காட்டுவதை ஏற்க முடியாது.  உங்களின் உணர்ச்சிகளை அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது வெளிக்காட்டாதீர்கள். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள்  அவர்களுடன் பணிபுரிய வேண்டியதிருக்கலாம். ஒரு நாள் கோபம் பல ஆண்டுகள் நல்லுறவை பாதிக்கலாம். மேலும் உங்களுடைய உணர்வு வெளிப்பாடு சக ஊழியர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மீது  தவறான எண்ணங்கள் அலுவலகத்தில் உருவாவது தவிர்க்கப்படவேண்டும்.
More than a Blog Aggregator

ஞாயிறு, 11 நவம்பர், 2012

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-இ தொய்பா பயிற்சி! - பாக். அதிகாரிகள் ரகசிய சாட்சியம்.



மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு லஷ்கர் தொய்பா அமைப்பு தனது பயிற்சி முகாம்களில் பயிற்சி கொடுத்ததாக ஐந்து பாகிஸ்தான் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ரகசிய சாட்சியம் அளித்துள்ளதாக டெய்லி டான் பத்திரிக்கை ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ராவல்பிண்டியின்  அடியாலா சிறையில் உள்ள தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ஒரு  நீதிமன்றத்தில் பாகிஸ்தான் குற்றபுலனாய்வு துறையை சேர்ந்த ஐந்து ஆய்வாளர்கள் அரசு தரப்பு சாட்சியங்களாக மேற்கண்ட சாட்சியத்தினை அளித்துள்ளார்கள்.   அரசு தரப்பு சாட்சியங்கள்  அளித்த ரகசிய வாக்குமூலத்தை நீதிபதி சௌத்திரி ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் பதிவு செய்தார்.

ஆய்வாளர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சகிர் ரஹ்மான் லக்வி உட்பட அனைத்து தீவிரவாதிகளும் கராச்சி, மன்சிரா, தட்டா மற்றும் முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள லஷ்கர்-இ- தொய்பா பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இவர்களில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த லக்வி நவீன வெடிபொருட்களை உபயோகப்படுத்துவதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்ததாகவும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதிக்கான லஷ்கர்-இ-தோய்பா தளபதியாக லக்வி செயல்பட்டார் என்றும்  அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலருக்கு கராச்சியில் உள்ள கடப் நகரத்திற்கு அருகே உள்ள கடலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும்  நீதிபதிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.

சாட்சியங்களின் வாக்குமூலங்கள் சுதந்திரமாகவும், எந்தவிதமான மிரட்டல் இல்லாமலும் பதிவு செய்யப்பட்டதாக Federal Investigation Agency யின் சிறப்பு வழக்கறிஞர் சௌத்திரி சுல்பிகர் அலி நீதிபதியிடம் தெரிவித்தார்.
லக்வி, க்வாஜா முஹம்மத் ஹாரிஸ் ஆகியோர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் ஆய்வாளர்களை குறுக்கு விசாரணை செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதை ஆய்வாளர்கள் நேரில் பார்த்தார்களா? என்ற கேள்விக்கு தாங்கள் ஒருபோதும் லஷ்கர்-இ-தோய்பா பயிற்சி முகாம்களுக்கு சென்றது இல்லை என்றும்,     குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயிற்சி பெற்றதை நேரில் பார்த்தது இல்லை என்றும், உளவாளிகள் மூலமாக தாங்கள் மேற்கண்ட  தகவல்களை பெற்றதாகவும்  ஆய்வாளர்கள் பதில் அளித்தனர்.

லக்வியின் வக்கீல் தெரிவிக்கையில், தன்னுடைய கட்சிக்காரர்கள்  மும்பை தீவிரவாத செயல்களில் செயபட்டதற்கான நேரடியான ஆதாரங்களை  சாட்சியங்கள் (ஆய்வாளர்கள்)  அளிக்கவில்லை எனவும், உளவாளிகளிடமிருந்து பெற்றதாக கூறும்  தகவல்களை அவர்கள் ஒருபோதும் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
லக்வியோ அல்லது மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களோ அதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளிலோ அல்லது பயிற்சியிலோ ஈடுபட்டிருந்தது குற்ற புலனாய்வு துறைக்கு  முன்பே தெரிந்திருந்தால்  அவர்களுடைய பெயர்கள் ஏன் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு அவர்களுடைய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பு ஒரு பொய்யான கதையை தயாரித்திருக்கிறது என்றும், ஐந்து ஆய்வாளர்களுடைய சாட்சியங்கள் அந்த கதையில் ஒரு அத்தியாயம் என்றும் லக்வியின் வழக்கறிஞர் தெரிவித்தார். மீண்டும் விசாரனையை நீதிபதி டிசம்பர் 1 –ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ரகசிய வழக்கு விசாரணை பற்றி கருத்து தெரிவிக்காத அரசு வக்கீல், சாட்சி அளித்த அதிகாரிகள்  தற்போது மிகுந்த மன நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் Voice over Internet Protocol இணைப்பை பெற பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்தனர் என்பதற்கான  சாட்சியத்தை இதே ஐந்து  அதிகாரிகள்தான் முன்னர் நீதிமன்றத்தில் அளித்தனர் எனபது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த  Voice over Internet Protocol இணைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

நவம்பர் 2008 – ல் மும்பையின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்கியதில்  166 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்தது யார் என்ற விவரம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் நம் ஆசை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குரல்  மாதிரியை பெறுவதற்கே நான்கு வருடங்களாகியும்  முடியாமல்  நம் அரசு நாக்கு தள்ளிவிட்டதே!
More than a Blog Aggregator

சனி, 10 நவம்பர், 2012

வாழிய அன்னை ஊழல் வாழியவே!



வாழிய அன்னை ஊழல்  வாழியவே
வானவர் தானவர் போற்றிடவே!
வாழிய அன்னை ஊழல் வாழியவே
வையகம் போற்றிட வாழியவே! (1)

காசும் சட்டமும்  காத்திடவே
அடி பொடி தொண்டரும் வாழ்த்திடவே
மேலிடம் கீழிடம்  அருளிடவே
ஊழல் அன்னையும் உதித்தாள் அவனியிலே! (2)

தலைநகரத்துவசன் மனம் மகிழ
பாரத நாடே மண மணக்க
மக்களின் நடுவே வறுமை  போல்
ஊழல் தாயவள் உதித்தனளே! (3)

லட்சம்கோடி  ஊழல்  கண்டு
மன்னவன் மோகனனும் மதி மயங்கினனே
கையூட்டு சுவை  கண்டவுடன்
கோடி இன்னும் பல கேட்டனனே! (4)

அதிகார வர்க்கத்தின் மடியினிலே
களிப்புடன் தவழ்ந்தாள் குழந்தையென
கொண்டவர் மனங்கள் கனிந்திடவே
கொட்டிக் கொடுத்தாள் சுவிஸ் வங்கியினிலே! (5)

பாரதம் முழுதும்  கால் நீட்டி
கொள்ளை அழகு முகம் உயர்த்தி
செல்லம் போலே ஊழல் அன்னையும்   
செங்கீரை போலே ஆடினளே! (6)
 
குடிமக்கள் நலன்கள்  துச்சமென
பாமரர் இரத்தம் குடித்து
வறுமையை காத்திடும் தலைவி
அன்னையின் தாலாட்டில் உறங்கினளே! (7)

ஊழல் செய்யும் கரங்களினை
அழகாய்ச் சேர்த்து அன்னையவள்
சகல மன்னர்களும் சந்தோஷம் கொள்ள
சப்பாணி கொட்டி மகிழ்ந்தனளே! (8)

பவழம் ஒத்த செவ்வாயில்
பாகை ஒக்கும் தேனொழுக
நாட்டை விற்று கோடி பெற்றவர்க்கு
பரிசாய் பதவிகள் தந்தனளே! (9)

வாவா வென்று அரசியல் அழைக்க
வாஞ்சை மீற அதிகாரம் அழைக்க
அகிலத்தை நடத்தும் ஊழற்கண்ணி
தளிர்ப் பதம் பதித்து நடந்தனளே! (10)

கார்ப்ரேட் முதலாளிகள்  கண்டனராம்
விளையாட ஆசை கொண்டனராம்
பெரிய பெரிய  கரம் உயர்த்தி
அவளை அருகினில் அழைத்தனரே! (11)

பாரத அன்னையின் இதயத்தினிலே
வாகாய் மணலைக் குவித்தெடுத்து
அதிலே கொஞ்சம் நீர் தெளித்து
அழகாய்ச் சமாதி செய்தனளே! (12)

நாட்டின் வளங்களை சுரண்டி வந்து
கருத்துடன் அவற்றை பதுக்கி வைத்து
களிப்புடன் ஊழல் அன்னையும்  
கழங்காடி மிக மகிழ்ந்தனளே! (13)

அங்கும் இங்கும் வியாபித்து
பாரதமெங்கும் நீக்கமற நிறைந்து
புவியினர் எல்லாம் வியந்திடவே
பாங்குடன் அம்மானை ஆடினளே! (14)

வறுமை  என்னும் ஊஞ்சலிலே
மாந்தரை ஆட்டிடும் மங்கையவள்
மரகத ஊஞ்சல் தனிலமர்ந்து
தலைநகர மன்னர்கள்  மகிழ ஆடினளே! (15)

வாழிய அன்னை ஊழல் வாழியவே
வானகம் வையகம் வாழ்த்திடவே
வாழிய அன்னை ஊழல் வாழியவே
வணங்குவர் உள்ளத்தில் வாழியவே! (16)
More than a Blog Aggregator