வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

லால்பகதூர் சாஸ்திரியின் மரணம் - இந்தியாவின் மாபெரும் மர்மம் !இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965 – ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின்  தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில்  சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் ஆகியோர்    ஜனவரி10, 1966 அன்று கையெழுத்திட்டனர். அதற்கு அடுத்த நாள் இந்திய பிரதமர் சாஸ்திரி தாஷ்கண்டில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சாஸ்திரியின் மரணத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதாக  பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. சாஸ்திரி அவர்களின் துணைவியார் லலிதா தன கணவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவே  சம்பவம் நடந்தது முதல் குற்றம்சாட்டி வருகிறார். சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்ற நயார் என்பவர் கூறுகையில் தாஷ்கண்டிலிருந்து திரும்பியவுடன்  தன் கணவரின் உடல் நீல நிறமாக இருந்ததாக கூறி லலிதா தன்னிடம் கோபப்பட்டதாகவும், அவர் உடலில் இருந்த குறிப்பிட்ட சில காயங்கள் குறித்து விசாரித்ததாகவும்   தெரிவிக்கிறார். மேலும் சாஸ்திரியின் உடல் ரஷ்யாவிலோ அல்லது இந்தியாவிலோ போஸ்ட்மார்டம் செய்யப்படவில்லை என்பதை லலிதா சுட்டிக்காட்டுகிறார்.

பத்திரிக்கையாளர் அனுஜ் தார் 2009 ல் தகவல் அறியும் உரிமை  சட்டம் மூலம் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கும் இடையே  மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே நடைபெற்ற  சாஸ்திரியின் மரணத்திற்கு பிந்தைய செய்தி பரிமாற்ற   ஆவணங்களை கேட்ட போது அது பற்றிய ஆவணங்களை தர  பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. சாஸ்திரியின் மரணம் குறித்து தங்களிடம் ஒரே ஒரு ஆவணம் மட்டுமே உண்டு என்றும், தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அயல்நாட்டு உறவு ஆகியவற்றை கருத்தினில் கொண்டு சாஸ்திரியின் மரணம் குறித்த ஆவணத்தை  வெளியிட இயலாது என்றும்  பிரதமர் அலுவலகம் தெரிவித்துவிட்டது. சாஸ்திரியின் குடும்பத்தினர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார் என்ற அரசின் வாதத்தை ஏற்க தயாராக உள்ளனர். ஆனால் அதே வேளையில் சாஸ்திரியின் மரணத்திற்கு பிந்தைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் இடைய நடந்த செய்தி பரிமாற்ற ஆவணங்களை  இந்திய அரசு வெளியிட வேண்டும் என விரும்புகின்றனர்.

சாஸ்திரி இந்திய நாட்டின் பிரதமர். அவரது மரணம் ஒரு வெளிநாட்டில் மர்மமான முறையில் நடந்துள்ளது. அத்தகைய மரணம்  குறித்து ஒரே ஒரு ஆவணம் மட்டுமே உள்ளது என அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை. வழக்கமாக இம்மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாட்டின் தூதர்  பல அறிக்கைகளை தனது நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அதே போல் ரஷியாவில் உள்ள இந்திய தூதர் T.N. கௌல் (T.N. Kaul )  நடந்த சம்பவம் குறித்து பல அறிக்கைகளை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். மேலும் தனது தனிப்பட்ட கருத்துக்களையும் அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதுதான் மரபும் கூட. ஆனால் அத்தகைய அறிக்கைகள் எதுவும் தன்னிடம் இல்லை என  அரசு தெரிவிக்கிறது.

ஜனவரி, 11, 1966 அன்று கடுமையான தொடர் இருமலால் சாஸ்திரி தூக்கத்திலிருந்து விழித்து கொண்டார். உடனடியாக  சாஸ்திரியுடன் ரஷியாவுக்கு சென்றிருந்த டாக்டர் R N சூக் (R N Chugh) உதவிக்கு வரவழைக்கப்பட்டார். சாஸ்திரியால் அப்போது பேச முடியவில்லை. அவர் அருகிலிருந்த ப்ளாஸ்க்கை (flask) நோக்கி கையை காட்டினார். ஒரு பணியாளர் அவருக்கு குடிக்க தண்ணீர் வழங்கினார். அதனை சிறிது குடித்ததும் சாஸ்திரி சுயநினைவினை இழந்தார். அதனை தொடர்ந்து அவரை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சாஸ்திரியின் மரணத்திற்கு பின் உடனடியாக சாஸ்திரிக்கு உணவு தயார் செய்த ரஷிய சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  ஐந்து மணி நேர விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார். விஷம் கொடுத்து  கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடக்கத்திலேயே எழுந்தாலும் பிரதமரின் உடல் பிரேதப் பரிசோதனை (post-mortem) இந்தியாவிலோ அல்லது ரஷ்யாவிலோ செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த சாஸ்திரியின் துணைவியார் இது குறித்து சந்தேகம் எழுப்பிய போதும் அதுகுறித்து விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
சாஸ்திரியின் ஆறு வாரிசுகளில் அனில் சாஸ்திரி மற்றும் சுனில் சாஸ்திரி ஆகிய இரு மகன்கள்  தற்போது உயிருடன் உள்ளனர். இருவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள். சிறிது நாளைக்கு முன்பு சுனில் பிஜேபி கட்சியில் சேர்ந்து விட்டார். சாஸ்திரியின் கடைசி மகள் திருமதி.சுமன் வழி பேரன் சித்தார்த்நாத் சிங் பிஜேபி கட்சியில் உறுப்பினராக உள்ளார். ஆனால் கட்சி பேதமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாஸ்திரி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவே நம்புகின்றனர். மேலும் அவரது மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும்  குற்றம் சாட்டுகின்றனர்.

தன் தாய் சுமன் கூறியதாக சித்தார்த்நாத் சிங்  கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார். சம்பவம் நடந்த அன்று சாஸ்திரியிடம் கடைசியாக போனில் பேசியது அவருடைய மகள் சுமன். அவருடைய  கணவர்  V.N. சிங்  State Trading Corporation ல் பணி செய்துவந்தார். சாஸ்திரி ரஷியாவில் இருந்தபோது சிங் பணி நிமித்தமாக கெய்ரோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ரஷியாவில் பணியை முடித்துவிட்டு அதன்பின் கெய்ரோவுக்கு சென்று சிங்குடன் இணைந்து அரசுப்பணி மேற்கொள்வதாக சாஸ்திரியின் பயணத்திட்டம் இருந்தது. சம்பவம் நடந்த அன்று சாஸ்திரி சுமனுக்கு போன் செய்து, சிங்  இந்திய செய்திதாள்கள்  அனைத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு கெய்ரோ வருகிறாரா? என்று உறுதிப்படுத்திகொண்டார். அவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் நான் ஒரு கோப்பை பால் அருந்திவிட்டு தூங்கப்போகிறேன் என்பதாகும். அதன் பின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சுமன் மீண்டும் பேச முயற்சி செய்தார். ஆனால் பதினைந்து நிமிடங்களுக்கு பின்னர் அவர் தந்தை இறந்துவிட்டதாக போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு ஜனதா கட்சி ஆட்சியின்போது சாஸ்திரியின் மரணம் குறித்த உண்மையை ஆராய நரேன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் விசாரணையை தொடங்கியது. ஆனால் எந்த ஒரு முடிவுக்கும் அதனால் வரமுடியவில்லை. அந்த விசாரணை கமிஷனின் எந்த ஒரு ஆவணங்களும் பாராளுமன்ற நூலகத்தில் காணப்படவில்லை. கமிஷன் விசாரணை நடத்தியதற்கான சிறு தடயம் கூட பாராளுமன்ற நூலகத்தில் காணப்படவில்லை.

எல்லாவற்றையும் விட மிகப் பெரும் மர்மமாக கீழ்க்கண்ட சம்பவத்தை கூறலாம். 1977 ஆம் ஆண்டு சாஸ்திரியின் மரணம் குறித்த விசாரணைக்கு பாராளுமன்ற குழு முன்பு ஆஜராகும்படி இரண்டு சாட்சிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஒருவரின் பெயர் R.N. சூக் (R.N. Chugh) . மருத்துவரான இவர் சாஸ்திரியுடன் ரஷியா சென்றவர். சாஸ்திரியின் மரணத்திற்கு பிந்தைய மருத்துவ விசாரணையை (medical investigation) ரஷிய மருத்துவர்களுடன் இணைந்து நடத்தியவர். மற்றொருவர் ராம்நாத். இவர் சாஸ்திரியின் தனிப்பட்ட வேலைக்காரர். சாஸ்திரியின் மரணம் நிகழ்ந்த அன்று அவருடன் இருந்தவர்.  R.N. சூக் பாராளுமன்ற விசாரணை குழு முன்பு ஆஜராக டெல்லி வந்துகொண்டிருந்தபோது ட்ரக் ஒன்று மோதி சாலை விபத்தில் இறந்து போனார். ராம்நாத் பாராளுமன்ற  குழு விசாரணைக்கு  சென்று கொண்டிருக்கும்போது  வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதி  தன்னுடைய கால்களை இழந்தார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய ஞாபக சக்தியையும் இழந்தார். அந்நிகழ்ச்சி பற்றி சாஸ்திரியின் குடும்பத்தினர் கூறும்போது ராம்நாத் விசாரணைக்கு செல்லும் முன் சாஸ்திரியின் விதவை துணைவியாரை பார்க்க வந்ததாகவும், அப்போது  ராம்நாத், தன்னுடைய மனதில் நீண்ட நாட்களாக பெரும் சுமையை சுமந்துகொண்டிருப்பதாகவும், அதனை இன்று இறக்கிவைக்கப் போவதாகவும்  சாஸ்திரியின் துணைவியாரிடம்  கூறியதாக தெரிவிக்கின்றனர்.

சாஸ்திரியின் மரணம் தொடர்பான சம்பவங்கள் ஏராளமான திருப்பங்களையும், மர்மங்களையும் உள்ளடக்கியது. அந்த மர்மங்களின் விடைகள் வெளிவரும்போது அது நம்ப முடியாததாகவும், அசாதாரணமானதாகவும் இருக்கலாம். அதுவரை சாஸ்திரியின் மரணம் இந்தியாவின் மிகப்பெரும் மர்மமாகவே  நீடிக்கும்.   
More than a Blog Aggregator

புதன், 29 ஆகஸ்ட், 2012

முன்னிஸ்வரம் கோவில் திருவிழா- சிங்கள பேரினவாதிகளின் மிரட்டல்!கொழும்பிலிருந்து சுமார் 70 km தொலைவில் இருக்கும்  சிலாவில்  (chilaw) உள்ள முன்னிஸ்வரம் ஸ்ரீ  பத்திர காளியம்மன் கோவில் திருவிழா செப்டம்பர்  1 ஆம் தேதி நடக்க உள்ளது. இக்கோவில் சிறுபான்மை இன தமிழ் மக்களுக்கு சொந்தமானதாகும். ஆண்டுதோறும் நடக்கும் இக்கோவிலின் திருவிழாவில் மிருகங்களை பலி கொடுக்கும் சம்பிரதாயம் உண்டு. இலங்கையின் சிங்கள இனவாதிகள் இக்கோவிலின் சம்பிரதாய பழக்கமான உயிர் பலி கொடுத்தல் நிகழ்ச்சியை  தடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த சிங்கள இனவாத கூட்டத்திற்கு புத்த சாமியார்களும், இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வாவும். தலைமை தாங்குகின்றனர். சென்ற வருடமும் மெர்வின் சில்வா இக்கோவிலின் திருவிழாவின் போது  கோவிலுக்குள் புகுந்து உயிர் பலி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மிருகங்களை திருடி கொண்டு போய்விட்டார். அதேபோல் இந்த வருடமும் தான் கோவிலுக்குள் புகுந்து மிருகங்களை திருடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கோவிலின் தலைமை பூசாரி உயிர் பலி கொடுக்கும் சடங்கு இந்த வருடமும் வழக்கம் போல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும்  கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு அளிக்கும்படி அதிபர் ராஜபக்சேவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சிலாவில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிகழ்வதாக தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள இனவாதிகளின் இந்த நடவடிக்கையை  சிறுபான்மை இன மக்களின் சமய நம்பிக்கைகளின் மீதான தாக்குதலாகவே கருதுகின்றனர். மிருகங்களை வதை செய்வதை தடை செய்கிறோம் என்ற பெயரில் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் சிறுமைப்படுத்தும் திட்டமிட்ட தாக்குதலாகவே இச்செயல் உள்ளது. ஜீவ காருண்ய விரும்பிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் இறுதிப்போரில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. இவர்களின் நோக்கம் மிருக வதையை தடை செய்வது அல்ல. தமிழர்களின் உறவுகளையும், உரிமைகளையும் குழி தோண்டி புதைத்த  சிங்கள பேரினவாதிகளின் தமிழின கலாச்சார அழிப்பு ஆசைதான் இதன் நோக்கமாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அந்த இனத்தின் கலாச்சாரத்தை அழிக்கவேண்டும் என்பதுதான் உலக நியதி. அந்த விதியை செயல் வடிவமாக்க துடிக்கும்   சிங்கள பேரினவாதிகளின் கலாச்சார அழிப்பு நடவடிக்கைதான் இது. இலங்கையின் வடக்கு பகுதிகளில், புத்த மதத்தினர் ஒருவர் கூட இல்லாத பகுதிகளில் கூட   ஏராளமான புத்தர் சிலைகளை நிறுவுவதின் நோக்கமும் இதுவே. 

தொடர்ந்து சிறுபான்மை தமிழின  மக்களின் உணர்வுகளோடு விளையாடும் சிங்கள பேரினவாதிகள் ஒன்றினை உறுதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் என்றுமே அவர்களாக ஆயுதப்  போராட்டத்தை தேர்வு செய்வதில்லை. ஆயுதங்கள் அவர்கள் கைகளில் உங்களைப் போன்றவர்களால் திணிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் அடுத்தக் கட்ட போராட்டத்தை தீர்மானிக்கப்போவது நீங்கள்தான்.
More than a Blog Aggregator

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

அரசுக்கு இழப்பு 3.06 லட்சம் கோடி! - பிரதமர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவரா!?மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு ஏற்கனவே பல ஊழல்களில் சிக்கிகொண்டுள்ள நிலையில் புதிதாக ஒரு சிக்கலை CAG-யின் தணிக்கை அறிக்கை உருவாக்கியுள்ளது. ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்காமல், screening committee-யின் முடிவுகள் மூலம் நியமன முறையில் வழங்குவது, டெல்லி விமான நிலைய வளர்ச்சி திட்டம், மற்றும் Reliance Power  நிறுவனத்தின் Chitrangi project மின் திட்டத்திற்கு தேவையான  நிலக்கரியை அதன் சசன் பவர் ப்ராஜெக்ட்டிலிருந்து  பெற அனுமதி அளித்தல் போன்ற திட்டங்களில் மத்திய அரசின் முடிவுகளால் இந்திய அரசுக்கு சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக  CAG-யின் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ரூ. 3.06 லட்சம் கோடி லாபம் அடைந்துள்ளதாக CAG தெரிவித்துள்ளது.
தணிக்கை -1
ஜூலை  2004 லிருந்து தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  142 நிலக்கரி சுரங்கங்கள் மூலம் அரசுக்கு ரூ. 10.7  லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக முதலில் தனது  வரைவு அறிக்கையில் தெரிவித்த  CAG, இறுதி அறிக்கையில் ரூ. 1.85 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  மேற்கண்ட இழப்பு 2004-2009 கால கட்டத்தில் நடந்துள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 2006 முதல் 2009 வரை நிலக்கரி துறை அமைச்சராக மன்மோகன்சிங் பொறுப்பு வகித்துள்ளார் என்பதாகும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சிபாரிசு செய்த பின்னும் பிரதமர் அலுவலகம் வேண்டுமென்றே ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதை தாமதப்படுத்தியது என்று  குற்றம் சாட்டியுள்ளது CAG. ஒளிவு மறைவு அற்ற, குறிக்கோள், போட்டி முறை  எதுவும் இல்லாமல் நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்த்தமைக்கு screening committee அதிகாரிகளை குற்றம்சாட்டும் CAG, பிரதமர் மீது நேரடியாக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.  TATA group, Reliance power, Jindal power and steel , Abhijit group, Bhushan group, Electrosteel, Adhunik group, S.R.Rungta group, sajjan jindal, Godavari Ispat, O.P.Jindal group, Jaiprakash Gaur, Goenka group, Essar Group, Adani, ArcelorMittal ஆகியவை நிலக்கரி ஒதுக்கீட்டினால் பெரும் பயனடைந்த நிறுவனங்களுள் சிலவாகும்.

நாட்டின் கருவூலத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா கோரியுள்ளது. நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் CAG யின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் V. நாராயணசாமி  CAG தனக்குரிய அதிகார எல்லையை மீறியுள்ளதாக கருத்து தெரிவித்தார். பெரும்பாலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள்  மாநில அரசாங்கங்களின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

ஒளிவுமறைவற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஜூன் 2004 ல் தொடங்கப்பட்டாலும், 7 வருடங்களாகியும் (பிப்ரவரி 2012 வரை)  நடைமுறைக்கு வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜூன் 2004 முதல் மார்ச் 2011 வரை 194 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதி  சுப்ரீம் கோர்ட், முன்னாள் தொலைதொடர்பு துறை மந்திரி ஆ.ராசா சட்ட விரோதமாக வழங்கிய 122  எண்ணிக்கை 2G ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை இரத்து செய்தது மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் மதிப்புமிக்க சொத்துக்கள், இயற்கை வளங்கள் ஏல முறையில் மட்டுமே விற்கப்படவேண்டும் என அரசாங்கத்தை அறிவுறுத்தியது. அதே நாளில்தான் மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் வழங்குவதற்கான சட்டத்தை நாளிதழ்களில் (Mines and Minerals (Development and Regulation) (MMDR) Act)  அறிவித்தது.  இதன் மூலம் தற்போது  அரசு எடுத்த முடிவு கூட சுப்ரீம் கோர்ட்டின் கிடுக்கிப்பிடியால்தான் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. அதாவது UPA அரசாங்கம் 2004 ல் பதவியேற்று ஆறுமாதங்களில் தொடங்கிய நடவடிக்கை  2012 ஆம் ஆண்டில்தான் முழுமை அடைந்திருக்கிறது.

ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்டத்திற்கு, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை நிலக்கரி துறை அமைச்சகம் கேட்டதின் பேரில், 2006 - ஆம் ஆண்டு மேற்கண்ட சட்டத்தை நிறைவேற்ற  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தனது சிபாரிசினை வழங்கியது. அப்படியானால் அதன்பின் ஏற்பட்ட 6 வருட தாமதத்திற்கு யார் காரணம்?. இதுவரை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாமல் நியமன முறையில் ஒதுக்கீடு செய்வதன்  மூலம் தனியார் நிறுவனங்கள் பெரும் பயனடைந்ததாக CAG தெரிவித்துள்ளது.

இதுவரை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய Screening Committee யானது, நிலக்கரி சுரங்கங்களை குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நிறுவனங்களுக்கு கமிட்டி கூட்டத் தீர்மானம் மூலம் ஒதுக்கீடு செய்து வந்தது. அனைத்து நிறுவனங்களிடமிருந்து  விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், நிறுவனங்களை தேர்வு செய்யும் தன்னிச்சையான அதிகாரம் Screening Committee- யிடம் இருந்தது. ஆனாலும் நிலக்கரி சுரங்கங்களின் மதிப்பை நிர்ணயிப்பதற்கான, விண்ணப்பங்களின் ஒப்பீட்டு மதிப்பீட்டு முறை கைக்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கூட்ட தீர்மான கோப்புகளிலோ  அல்லது வேறு ஆவணங்களிலோ காணப்படவில்லை என CAG தெரிவித்துள்ளது. ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான மதிப்பு எதனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை எனவும், நியமன ஒதுக்கீட்டில் ஒளிவு மறைவற்ற தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் CAG தெரிவித்துள்ளது.

தணிக்கை –2
அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக  CAG-யால் சுட்டிக்காட்டப்பட்ட மற்றொரு திட்டம்  டெல்லி விமான நிலைய விரிவாக்கத் திட்டமாகும். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு திட்டம் இதுவாகும்.  Airport Authority of India (AAI) மற்றும் தனியார் நிறுவனமான DIAL- ம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. DIAL. நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை GMR Infrastructure நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி DIAL  நிறுவனம் விமான நிலையத்தின் 240  ஏக்கர் நிலத்தை 58 ஆண்டுகளுக்கு தன்னுடைய வியாபார பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்நிலத்தின் மதிப்பினை Rs 24,000 கோடி என Airport Economic Regulatory Authority நிர்ணயித்துள்ளது.  மேற்கண்ட நிலத்தின் 58 வருட குத்தகை மூலம்  லைசென்ஸ் கட்டணமாக கிடைக்கும் வருமானம் Rs 1,63,557  கோடி என DIAL நிறுவனம் கணக்கிட்டுள்ளது.  இதில் DIAL க்கு கிடைக்கும் பங்கு Rs 88,337 கோடி. ஆனால் இத்திட்டத்தில் DIAL நிறுவனத்தின் முதலீடு வெறும்  Rs 2,450 கோடி மட்டுமே. மேலும் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் DIAL நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது என்றும் அரசிற்கு எதிரானதாக உள்ளது என்றும் CAG அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் விரிவாக்க கட்டணம் (Development Fee)  வசூலிக்கும் உரிமையை  DIAL  நிறுவனத்திற்கு ஒப்பந்த விதிமுறைகளை மீறி Civil Aviation Ministry வழங்கியதற்கு CAG ஆட்சேபனை தெரிவித்துள்ளது. முதலில் செய்யப்பட  ஒப்பந்தத்தில் விரிவாக்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான ஷரத்து இல்லை என்றும், அது பிந்தைய காலத்தில் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது என்வும் CAG தெரிவித்துள்ளது இது டெண்டர் விதிமுறைகளை மீறிய செயலாகும். இந்த முடிவால்  DIAL நிறுவனம்   Rs 3,415 கோடி லாபம் அடைந்துள்ளது எனவும், இதன் மூலம்  அரசுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு  யார் பொறுப்பு என்பதை நிர்ணயிக்கும்படியும்  CAG தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பயணங்களுக்கு  விரிவாக்க கட்டணம்  Rs 220 முதல்  Rs 520 வரையும், சர்வதேச பயணங்களுக்கு  Rs 490 முதல்  Rs 1,200 வரையும் வசூலிக்கப்படுகிறது.

தணிக்கை –3
மூன்றாவதாக CAG தெரிவித்த ஆட்சேபனை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள Reliance Power  நிறுவனத்தின் சசன் அல்ட்ரா மெகா பவர் ப்ராஜெக்ட் மீதானது ஆகும்.

நிலக்கரி துறை அமைச்சகம் சசன் பவர் ப்ராஜெக்ட்டிற்கு முதலில் இரண்டு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியது. அவைகளில் இருந்து கிடைக்கும் நிலக்கரி சசன் பவர் ப்ராஜெக்ட்டிற்கு போதவில்லை என்று தெரிவித்த Reliance Power  நிறுவனம் மூன்றாவதாக ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கும்படி அரசை கோரியது. அதன்படி நிலக்கரி துறை அமைச்சகம் மூன்றாவது நிலக்கரி  சுரங்கத்தை Reliance Power  நிறுவனத்திற்கு ஒதுக்கியது. அதன்பின் சிறிது காலம் கழித்து மேற்கண்ட மூன்று சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் அதிகப்படியான நிலக்கரியை, தன்னுடைய Chitrangi project  மின் திட்டத்திற்கு பயன்படுத்த Reliance Power  நிறுவனம் அனுமதி கோரியது.  அரசு அக்கோரிக்கையை ஏற்றது. இதன் மூலம் அனில் அம்பானியின்  Reliance Power  நிறுவனம் Rs 29,033 கோடி லாபம் அடைந்தது எனவும் அரசிற்கு Rs 29,033 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும்  CAG தெரிவித்துள்ளது.  எனவே Reliance Power  நிறுவனத்திற்கு மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்க எடுக்கப்பட்ட முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று CAG கருத்து தெரிவித்துள்ளது. பிந்தைய காலத்தில் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு,  டெண்டர்  விதிமுறைகளை மீறிய செயல் என்றும், அம்முடிவால் Reliance Power  நிறுவனம் பெரும் லாபம் பெற்றுள்ளதாகவும் CAG தெரிவித்துள்ளது.
 
இதில் கவனிக்கப்படவேண்டிய செய்தி என்னவென்றால், முதலில் சசன் பவர் ப்ராஜெக்ட்டிற்கு நிலக்கரி போதவில்லை என்று கூறி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை அரசிடமிருந்து பெற்ற  Reliance Power  நிறுவனம், சிறிது காலம் கழித்து அதிகப்படியாக கிடைக்கும் நிலக்கரியை தன்னுடைய மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்த அரசிடம் அனுமதி கோரியதுதான். நிலக்கரி போதவில்லை என Reliance Power  கூறியது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தாமல், இந்திய அரசு நிறுவனமான NTPC யின் வசமிருந்த   நிலக்கரி சுரங்கத்தை பறித்து தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது குறித்து  CAG கேள்வி எழுப்பியுள்ளது.

சசன் ப்ராஜெக்ட் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை யுனிட் Rs 1.196 என்ற விலையில் அரசுக்கு விற்கும் Reliance Power  நிறுவனம், சசன் பவர் ப்ராஜெக்ட்டின் அதிகப்படியான நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை (Chitrangi project) அரசுக்கு யுனிட்  Rs 2.45-3.702 என்ற விலையில் விற்கிறது என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். நியாயமாக Reliance Power  அவ்வாறு தயாரித்த மின்சாரத்தை சசன் ப்ப்ராஜெக்ட்டின் விலையான Rs 1.196 க்கு  வழங்கும்படி அரசு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் கூடுதல் விலைக்கு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக CAG அறிக்கை தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவால் அரசுக்கு  Rs 29,033 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG தெரிவித்துள்ளது.

 அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு (CAG கணக்கீட்டின் படி )
1) நிலக்கரி ஒதுக்கீடு மூலம் அரசுக்கு இழப்பு     -  Rs.  1,86,000 கோடி
2) டெல்லி விமான நிலைய திட்டத்தால் இழப்பு  -  Rs     88,337 கோடி
      Development Fee        வசூல் மூலம் இழப்பு   -  Rs        3,415 கோடி
3)Reliance Power நிறுவன ஒப்பந்தம் மூலம் இழப்பு  -  Rs.   29,033 கோடி                                                                                                                           -----------------
            அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு       -   Rs.    3,06,785 கோடி
                                                                                                                     ------------------

காங்கிரசின் நீண்ட கால பிரச்சாரமான பிரதமர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற வாதம் தற்போது வெளிவந்துள்ள ஊழல்கள் மூலம் மேலும் பலவீனமடைந்துள்ளது. ஏனென்றால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலக் கட்டத்தில் 2006 முதல் 2009 வரை நிலக்கரி துறை அமைச்சராக மன்மோகன்சிங் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸ் வழக்கம் போல் CAG தன் அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை  CAG வெளிப்படுத்தியபோது, CAG யின் கணக்கீடு தவறு என்று கூறியவரும், ஜீரோ லாஸ் தியரியை கண்டுபிடித்த அறிவாளியுமான   கபில் சிபல், அதன் பின் தொலைத்தொடர்பு துறை அமைச்சராகி CAG நிர்ணயித்த விலைக்கே 2G ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகையை நிர்ணயித்து  CAG யின் அறிக்கையை உண்மை என உலகிற்கு நிரூபித்ததை நாம் அனைவரும் அறிவோம். எனவே  CAG மீதான காங்கிரசின் குற்றச்சாட்டு இனி மக்களிடம் செல்லுபடியாகாது. தவறு செய்வது மட்டும்தான் குற்றம் என்பதில்லை. தவறுக்கு துணை போவதும் குற்றம்தான். பிரதமர் எனக்கு தெரியாது என்று சொல்வதோ, மெளனமாக இருப்பதோ, முந்தைய பிஜேபி அரசு செய்ததை செய்தேன் என்று விளக்கம் கூறுவதோ குற்றச்சாட்டுகளுக்கு பதிலாகாது. பிரதமர் அவர்களே! உங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான விளக்கத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நீங்கள் மிகப் பெரிய பொருளாதார மேதை என்று அப்பாவி ஏமாளி இந்தியக்குடிமகன் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறான்.
More than a Blog Aggregator

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

புருஸ் லீயின் மரணம் - விடை காண முடியாத மர்மங்கள்!1973. ஜூலை 20 அன்று  புரூஸ் லீ, 67,பீகான் ஹில் ரோடு, கௌலூன் டோங், ஹாங்காங் என்னும் முகவரியில் உள்ள குடியிருப்பில் இறந்துவிட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. புரூஸ் லீயின் மரணம் அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. உடற் தகுதியில் அவரை மிஞ்ச எவரும் கிடையாது.  எனவேதான் அவரது மரணம் நடந்த அடுத்த நிமிடமே பல வதந்திகள் உலவத்தொடங்கின. உண்மையில் புரூஸ் லீ மரணம் அடைந்த அன்று நடந்தது என்ன?

புரூஸ் லீயின் மனைவி லிண்டாவின் அறிக்கையின்படி, புரூஸ் லீ சம்பவம் நடந்த அன்று மதியம் 2 மணிக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரேமண்ட் சௌ என்பவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் Game of Death என்ற சினிமா தயாரிப்பது பற்றி ஆலோசித்தனர்.  இந்த ஆலோசனை மதியம் 4 மணிவரை நடந்தது. பின் இருவரும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த தைவான் நடிகை பெட்டி டிங்பே (Betty Tingpei) வீட்டிற்கு சென்றனர். அங்கு மூவரும் அத்திரைப்படத்தின் கதை பற்றி ஆலோசனை செய்தனர். மூவரும் அன்றிரவு ஒரு விருந்தில்  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் George Lazenby - யை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். அவரை தனது படத்தில் நடிக்க வைக்க லீ திட்டமிட்டிருந்தார். பின் ரேமண்ட் சௌ மாலையில் நடைபெற இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அதன் பின் சிறிது நேரம் கழித்து தனக்கு தலை வ்லிப்பதாக புரூஸ் லீ கூறினார். டின்க்பே வழக்கமாக தான் பயன்படுத்தும்  ஈகுவாஜெசிக் (Equagesic) என்ற மாத்திரையை லீக்கு கொடுத்தார். அம்மாத்திரை அதிக சக்தி உடைய அஸ்பிரின் மருந்தாகும். அதன்பின் அவர் இரண்டு சாதாரண பானங்களைத் (soft drinks) தவிர எதையும் உண்ணவில்லை. 

இரவு 7:30 மணிக்கு லீ, டிங்பேயின் படுக்கையில் தூங்க சென்றார். அன்றிரவு ரேமண்ட் சௌ, டின்க்பேக்கு போன் செய்து, ஏன் நீங்கள் இருவரும் இன்னும் திட்டமிட்டபடி இரவு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டார். தூங்கி கொண்டிருக்கும் லீயை தன்னால் எழுப்ப முடியவில்லை என்ற டின்க்பே கூறினார். உடனே சௌவும் டிங்பேயின் வீட்டிற்கு வந்து லீயை எழுப்ப முயற்சித்தார். அதன்பின்  அவர்கள்  ஆம்புலன்சை அழைத்தனர்..  உடனடியாக குயின் எலிசபெத்  மருத்துவமனைக்கு லீ கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  
போஸ்ட்மார்டம் அறிக்கையின்படி அவர் ஒருவகை அலர்ஜியினால் வருகின்ற  cerebral edema  என்னும் மூளை வீக்கத்தினால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தலைவலிக்காக சாப்பிட்ட ஈகுவாஜெசிக் (Equagesic) என்ற மாத்திரையினால் இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறினர். மேலும் லீயின் வயிற்றில் மரிஜூவானா என்னும் போதை பொருள் உண்டதற்கான தடயம் இருந்தது. எனவே இந்த போதை பொருள் வேதி வினை மூலம் மூளை வீக்க அலர்ஜியை உண்டாக்கியிருக்கலாம் என சில மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் லீ உட்கொண்டிருந்த போதை பொருளின் அளவு மிக குறைவாக இருந்தது எனவும், அது லீ சம்பவம் நடந்த அன்று காபி அருந்தினார் என்ற விஷயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை விட முக்கியத்துவம் குறைந்தது என்று ஒரு மருத்துவர் கூறியதாக  கொரோனோர் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

R.D. டியர் (R.D. Teare) லண்டன் யுனிவர்சிட்டியில்  தடவியல் மருத்துவ துறையில் பேராசிரியராக பணிபுரிபவர்.  90,000 க்கும் மேலான போஸ்ட்மார்டம் செய்த அனுபவம் உள்ளவர்.  லீயின் மூளை வீக்க அலர்ஜிக்கு  மரிஜுவனா காரணமாக இருக்கும் என்ற வாதத்தை அவர் நிராகரித்தார். அவருடைய கருத்துப்படி cerebral edema என்னும் மூளை வீக்கத்திற்கான காரணம் ஈகுவாஜெசிக் (Equagesic) மாத்திரையில் உள்ள வேதிப்போருட்களான மெப்ரோபமட் (meprobamate) அல்லது அஸ்பிரின் (aspirin) அல்லது இரண்டுமே காரணமாக இருக்கலாம் என்பதாகும். விசாரணை அதிகாரிகளால் மேற்கண்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் எந்த விசாரணை அறிக்கைகளும், டாக்டர்களும், லீயின் மரணத்திற்கான காரணங்களை உறுதியிட்டு கூறமுடியவில்லை என்பதே உண்மை.
குயின் எலிசபெத் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர். R.R லைசெட் (Dr. R.R. Lycette), லீ உண்ட ஈகுவாஜெசிக் (Euagesic) என்ற மாத்திரையில் உள்ள ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்பொருட்கள் மூளை வீக்க அலர்ஜியை உண்டாக்கியிருக்கலாம் என்றும், அவர் தலையில் எந்த காயமும் இல்லாதபோதும் அவருடைய மூளையின் எடை 1,400 கிராமிலி ருந்து, 1,575 கிராமாக வீங்கியிருந்தது என்றும், இரத்த குழாய்களில்  எந்த வித அடைப்போ அல்லது வெடிப்போ காணப்படவில்லை என்பதால்  இரத்த கசிவினால் மரணம் என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
லீயின் மரணத்தில் மர்மம மறைந்திருக்கிறது என்ற செய்தி பரவுவதற்கு  லீ இறந்தவுடன் ரேமண்ட் சௌ அளித்த பேட்டிதான் முக்கிய காரணமாக இருந்தது. ரேமண்ட் சௌ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்று நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக விவரித்தார். அப்பொழுது லீயின் சொந்த வீட்டில் லீ இறந்ததாக சௌ தெரிவித்தார். ஆனால் புலனாய்வு பத்திரிகைகள் லீ, தைவான் நடிகை பெட்டி டின்க்பே வீட்டில் இறந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தன. சௌ எதை மறைக்க  பொய் சொன்னார் என்பது மிகப் பெரிய மர்மமாக இருந்தது.

எனவே  ரசிகர்கள் மத்தியில் புது, புது வதந்திகள் ஒவ்வொரு நாளும் வலம்வரத் தொடங்கின. லீ ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க மறுத்ததால் அவரை ஹாலிவுட் மாபியாக்கள் கொன்றுவிட்டதாக ஒரு சாரார் நம்புகின்றனர். லீ ஹாங்காங் தாதாக்களுக்கு பாதுகாப்பு தொகை (protection money ) என்னும் மாமூல் கொடுக்க மறுத்ததால் அவர் தாதாக்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம என்று சிலர் கருதினர். அக்காலத்தில் சீன நடிகர்கள் அவ்வாறு தாதாக்களுக்கு பணம் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது. சிலர் லீ தீய சக்தியால் சபிக்கப்பட்டவர் என்றனர். அவர் ஹாங்காங்கில் வாங்கிய வீடு தீய சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். சிலர் அவர் நடிகை பெட்டி டின்க்பேயுடன் உடலுறவு கொண்டபோது இறந்துவிட்டதாக கூறினர். மேலும் சிலர் லீ  தற்காப்பு கலையை வெளிநாட்டவர்களுக்கு கற்றுகொடுதததால் கோபமுற்ற சீன தற்காப்பு ஆசிரியர்கள் அவரை போட்டி சண்டைக்கு அழைத்து கொன்றுவிட்டதாக கூறினர். பெரும்பாலான சீனர்கள் லீயின் அதிகப்படியான் உடற்பயிற்சியே அவரை கொன்ற்விட்டதாக நம்புகின்றனர். சிலர் லீயின் மரணம் அவர் பிறக்கும்போதே எழுதப்பட்ட விதி என்கின்றனர். இன்னும் சிலரோ லீயின் மரணம் ஜோடிக்கப்பட்ட நாடகம் என்றும், சரியான தருணத்தில் மீண்டும்  வருவதற்காக அவர் காத்துகொண்டிருக்கிறார் என்றும் கருதுகின்றனர்.
சிகாகோவை சேர்ந்த Dr.பில்கின்ஸ் (Dr Filkins)    லீ மரணத்தின் அதிகாரபூர்வமான விளக்கங்களை ஏற்க மறுக்கிறார். அவர்  2006 – ஆம் ஆண்டு சீட்டில் நகரத்தில் நடந்த அமெரிக்கன் அகாடமி ஆப் சயின்சஸ் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது மருந்தின் எதிர்விளைவுகளால் லீக்கு மரணம் ஏற்பட்டிருந்தால் லீயின் கழுத்தும் வீங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வீங்கவில்லை. எனவே லீ  sudden unexpected death in epilepsy (SUDEP) என்ற திடீர் பாதிப்பினால் இறந்திருக்கக்கூடும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.  SUDEP என்ற மருத்துவ கொள்கை 1995 ஆம் ஆண்டில்தான் மருத்துவ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. SUDEP என்பது இதயத்தின்  அல்லது நுரையீரலின் செயல்பாட்டை நிறுத்தக்கூடிய திடீரென்று மூளையில் தோன்றும் ஒருவகை வலிப்பு என மருத்துவர்களால் வரையறுக்கப்படுகிறது. மூளையில் திடீரென அளவுக்கதிகமாக நடைபெறும் மின் செயல்பாடுகளால் இவ்வகை வலிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இதன் பாதிப்பால் ஆண்டுதோறும் இங்கிலாந்தில் 500 பேர் இறக்கின்றனர்.  SUDEP பாதிப்பினால் உலகம் முழுவதும் 50 மில்லியன்  மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில் 90% மக்கள் வளரும் நாடுகளில் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக 20  முதல் 40 வயதுவரை  உள்ள ஆண்களிடம் அதிகமாக காணப்படும் இவ்வகை பாதிப்பு தூக்கம் இல்லாததாலும், அதிக மன அழுத்தத்தாலும் உருவாகிறது. லீ அத்தருணத்தில் மிகுந்த உடல் மற்றும் மன  அழுத்தத்தால் பாதிக்கப்படிருந்ததாக டாக்டர் பில்கின்ஸ் தெரிவிக்கிறார்.

எவ்வாறாயினும் லீ மரணம் இயற்கையானது என்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவில்லை. அதற்கேற்ப அவருடைய மகன் பிரான்டன் லீயின் மரணமும் மர்மமான முறையில் இருந்தது. பிரண்டன் லீ அமெரிக்க திரைப்படங்களில் நடித்துவந்தார். அவரும் தற்காப்பு கலைகளில் சிறந்தவராக விளங்கினார். மார்ச், 31, 1993 அன்று 20th Century Fox  நிறுவனத்தின் தயாரிப்பான The Crow  திரைப்பட ஷூட்டிங்கில்  அவர் நடித்துக்கொண்டிருந்தபோது துரதிருஷ்டவசமாக துப்பாக்கி குண்டடிபட்டு இறந்துபோனார். ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் டம்மி குண்டுகளுக்கு பதிலாக உண்மையான குண்டுகள் லோட் செய்யப்பட்டிருந்தது. ஷூட்டிங்கில் அந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டபோது, உண்மையாகவே பிராண்டன் லீ பலியானார். அப்போது அவருடைய வயது 28. பிரான்டன் லீயின் மரணத்தின் பின்னாலும் சில வதந்திகள் உண்டு. அதிலொன்று பிரான்டன் லீ தனது தந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனை அறிந்த மாபியாக்கள் அவரை கொன்றுவிட்டனர் என்பதாகும்.

புருஸ் லீயின் மரணம் இயற்கையானது என்பதை தெளிவுபடுத்த  மருத்துவர்கள் பல விளக்கங்களை கூறினாலும், அவர்களால் அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்களை அளிக்க முடியவில்லை. அதுவே லீயின் மரணம் பற்றிய மர்மங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. அவருடைய மரணத்திற்கான உண்மையான காரணம் அவருடன் அன்று இருந்த நபர்களுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாகும்.
More than a Blog Aggregator

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மம்தா பானர்ஜி - ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி!?

முஹமது பின் துக்ளக்  திரைப்படத்தில் ஒரு நடிகர் சோவிடம், ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் வித்தியாசம் என்ன? என்று கேட்பார். அதற்கு சோ, ஒரு நாட்டை  ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்தால் அது சர்வாதிகாரம். ஒரு நாட்டை மாநிலங்களாக  பல சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தால் அது ஜனநாயகம் என்று பதில் கூறுவார். இந்த வசனம் எந்த நாட்டுக்கு பொருந்துமோ இல்லையோ, இந்தியாவிற்கு அத்தனை கன கச்சிதமாக பொருந்துகிறது. வோட்டு கேட்டு வரும்போது கூழை கும்பிடும், கூன் வளைந்த முதுகுமாய் வரும் அரசியல்வாதிகள், பதவிகளையும், அதிகாரங்களையும் அடைந்தவுடன் சர்வாதிகாரி தோரனைக்கு மாறிவிடுகிறார்கள்.

சம்பவம் 1

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ர, மம்தாவை பற்றிய ஒரு கார்ட்டூனை மெயில் மூலம் 65 பேருக்கு  அனுப்பினார். . முன்னாள் ரயில்வேதுறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை எப்படி கட்சியைவிட்டு வெளியேற்றுவது என்று மம்தாவும், முகுல் ராயும் ஆலோசனை செய்வதாக அக் கார்ட்டூனின் கருத்து இருந்தது. கார்ட்டூனில் மம்தாவின் தலையில்லாத உருவம் வரையப்பட்டிருந்தது. கார்ட்டூனின்  தலைப்பாக "our CM has lost her head" என குறிப்பிடப்பட்டிருந்தது. விமர்சனம் என்பது மம்தாவுக்கு பிடிக்காத விஷயமாச்சே!. அம்பிகேஷ் கைது செய்யப்பட்டார். அதோடு மட்டுமில்லாமல் திரிணாமுல் கட்சி தொண்டர்களால் கொலை மிரட்டலுக்கு ஆளானார்.  15 க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். தான் ஒரு CPM  தொண்டர் என எழுதித்தரும்படி திரிணாமுல் தொண்டர்களால் மிரட்டப்பட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று காவல் துறையில்  புகார் செய்யுமளவுக்கு அம்பிகேஷ் திரிணாமுல் தொண்டர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளானார். மேலும்  அம்பிகேஷ்,  சென்குப்தா என்பவருடைய மெயில் id – யை பயன்படுத்தி கார்ட்டூனை அனைவருக்கும் அனுப்பியிருந்ததால் சென்குப்தாவும் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க CID போலீஸ்,   சமூக வலைத்தளங்களில் மம்தாவின் நன்மதிப்பை குறைக்கும் வகையில்  வேண்டுமென்றே எழுதப்பட்டு வரும்   கருத்துக்களை நீக்கும்படி facebook போன்ற வலைத்தளங்களுக்கு கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

சம்பவம் 2

மே 19 –ஆம் தேதியன்று ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அந்த விவாதத்தில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர், பார்க் ஸ்ட்ரீட்  பகுதியில் ஒரு ஆங்கிலோ இந்திய பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை சுட்டிகாட்டி, பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று கேட்டார். உடனே மம்தாவுக்கு கோபம பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அந்த மாணவனை பார்த்து நீ ஒரு மாவோயிஸ்ட் என்றார்.

சம்பவம் 3

கடந்த ஆகஸ்ட் 8-ஆம்  தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள பெல்பஹாரி என்னுமிடத்தில்  மம்தா பானர்ஜி கலந்து கொண்ட பொது கூட்டம் நடந்தது. பெல்பஹாரி ஒரு காலத்தில்  மாவோயிஸ்ட்கள் வலுவாக கால் ஊன்றியிருந்த ஒரு பகுதியாகும்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது நோவா கிராமத்தை சேர்ந்த சிலாதித்ய சௌத்திரி என்னும் விவசாயி, முதலமைச்சர் மம்தாவைப் பார்த்து, உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வறுமையால் விவசாயிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். வெறும் வெற்று பேச்சு உறுதிமொழிகள் மட்டும் போதாது. விவசாயிகளின் வறுமையை போக்க  அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.  என்று  கேள்வி கேட்டார். அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பி அந்த விவசாயிக்கு ஆதரவு தெரிவித்தனர்.  ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால்தானே சொல்வதற்கு. மம்தாவிற்கு கோபம்தான்  பொத்துக்கொண்டு வந்தது..  அந்த விவசாயி ஒரு  மாவோயிஸ்ட் என குற்றம் சாட்டினார். சௌத்திரியை ஒரு போடோக்ராப்கார் போட்டோ எடுக்க முயற்சித்த போது, மம்தா மைக்ரோ போனில் அவனை போட்டோ எடுக்காதீர்கள். அவன் ஜார்கண்டிளிருந்து வந்த மாவோயிஸ்ட். அவன் ஒரு தீய மனிதன்  என்று கத்தினார். அவன் ஒரு கிரிமினல் என்று வசைமாரி பொழிந்தார். அதோடு நிற்காமல் கேள்வி கேட்டவரை கைது செய்யும்படி காவல்துறைக்கு கட்டளையிட்டார்.
காவல்துறை  சிலாதித்ய சௌத்திரியை கைது செய்து  Additional Chief Judicial Magistrate சுபர்ணா தாஸ் முன்பு ஆஜர்படுத்தியது.  அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) கீழ்க்கண்ட குற்றப்பிரிவுகளின்  கீழ் வழக்குகள் தொடரப்பட்டது.

Sec. 332 (voluntarily causing hurt to deter public servant in discharge of duty),
Sec.333(voluntarily causing grievous hurt to deter public servant in   
discharging public duty),
Sec.353 (assault or criminal force to deter public servant from discharging duty),
Sec.447 (criminal trespass) and
 Sec.506 (criminal intimidation) of IPC.
ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் மக்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அதேபோல் பொதுவாழ்க்கைக்கு வந்தபின் எவருமே  விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். என்னை யாரும் விமர்சிக்க கூடாது என்று நடந்துகொள்வது மம்தாவின் சர்வாதிகார போக்கைத்தான் காட்டுகிறது. ஒரு  தலைவருக்கு முக்கிய தகுதியாக இருக்க வேண்டிய சகிப்புத்தன்மை சிறிது கூட இல்லாதவராக மம்தா இருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் ஏதும் இல்லாதவராக இருக்கிறார். ஒரு குடிமகனுடைய அடிப்படை உரிமைகளை கூட மதிக்காத அவர், அரசியல் சட்டத்தையே அவமதிப்பு செய்கிறார். மன்னராட்சி போன்று, தன்னை விமர்சிப்பவர்களை கைது செய்யும்படி காவல்துறையினருக்கு சட்ட விரோத ஆணைகளை பிறப்பிக்கிறார்.  
முன்னாள் சுப்ரீம கோர்ட் நீதிபதி மற்றும் Press Council of India தலைவர் மார்கண்டேய கட்ஜு மேற்கண்ட சம்பவங்கள் குறித்து கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 

அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் அரசின் சட்ட விரோத ஆணைகளை செயல்படுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம். நாஜி போர் குற்றம் தொடர்பான நூரம்பர்க் (Nuremburg) விசாரணையில், நாஜி போர் குற்றவாளிகள் தாங்களாக எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், தாங்கள் ஹிட்லரின் ஆணைகளை மட்டுமே  செயல்படுத்தினோம் என்றும், அதனால் தங்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்றும் வாதாடினார்கள். ஆனால் அவர்களுடைய வாதம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். நாஜி போர் குற்றவாளிகளுக்கு ஏற்பட்ட நிலை தமக்கு எற்பட வேண்டாம் என்று மேற்கு வங்க அதிகாரிகள் நினைத்தால், அவர்கள் நுரம்பர்க விசாரணை தீர்ப்பிலிருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டும்

இப்போது மறுபடியும் ஒரு தடவை முதல் பத்தியை படித்து பாருங்கள். நாம் எத்தகைய நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும்.
More than a Blog Aggregator

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தென் சீனக்கடல் பிராந்தியத்தில் சீனாவுடன் மோத தயாராகும் இந்தியா!தென் சீனக்கடல் பகுதியின் உரிமைக்காக நடந்த  பல அதிகாரச் சண்டைகளை வரலாறு ஏற்கனவே கண்டிருக்கிறது. தென் சீனக்கடல் பகுதியின் முக்கிய சக்திகளாக ஜப்பான், சீனா, தென்கொரியா, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளை சொல்லலாம்.  இவற்றில் சீனா மிகப் பெரும் சக்தியாக இந்த பகுதியில் ஆளுமை செலுத்தி வருகிறது.  தென் சீனக்கடல் பகுதி தற்போது  மிகவும் பதட்டமான  மண்டலமாக மாறிவருகிறது. காரணம் அப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகள் தென் சீன கடல் பகுதி தனது நாட்டின் எல்லைக்குட்பட்டது என உரிமை கொண்டாடுகின்றன. குறிப்பாக சீனா, ASEAN அமைப்பின் பெரும்பாலான நாடுகளுடன் தென் சீன கடல் பகுதி தொடர்பான எல்லை பிரச்சினை கொண்டுள்ளது. சீனா தனது அண்டை நாடுகளுடன் (இந்தியா, பூடான் தவிர) பெரும்பாலான எல்லை பிரச்சினைகளை தீர்த்துவிட்ட நிலையில், இப்பிரச்சினை உலக அளவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் சீனக்கடல் பகுதி திடீரென முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள எண்ணை வளம்தான் காரணம். சீனாவின் கனிம வள மற்றும் சுரங்க அமைச்சகம் (Ministry of Geological Resources and Mining) தென் சீனக்கடல் பகுதியில் 17.7 பில்லியன் டன் எண்ணை வளம் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளது.  குவைத்தின் எண்ணை வளம் 13 பில்லியன் டன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பகுதியில் 1.1 டன் எண்ணை வளம் உள்ளது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சிலர் கூறுகின்றனர். தென் சீன கடல் பகுதி சீனாவால் இரண்டாம் பெர்சியன் கடல் என அழைக்கப்படுகிறது. சீன அரசின்  China Offshore Exploration Corp. அடுத்த இருபதாண்டுகளில் இப்பகுதிகளில் $30 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5  வருடங்களில், வருடத்திற்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

வியட்நாம் சீனாவுடன் நில எல்லைகளையும், கடல் எல்லைகளையும் பகிர்ந்துள்ள நாடாகும். தென் சீன கடல் பகுதியில்  எண்ணை கிணறுகள் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே உரிமை பிரச்சினை இருந்து வருகிறது இந்நிலையில் செப்டெம்பர் -2011-ல்  இந்தியாவின் ONGC (OIL and Natural Gas Corporation of India) நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம்  ONGC Videsh Limited, தென் சீன கடல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் (Block Number 128) எண்ணை கிணறு அமைப்பதற்கான மூன்று வருட ஒப்பந்தத்தை வியட்நாம் அரசின் பெட்ரோவியட்நாம் (PetroVietnam) நிறுவனத்திடமிருந்து பெற்றது. இரு  நாடுகளுக்கிடையே எரிபொருள் துறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்புக்கு  பரிசளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தை வியட்நாம் இந்தியாவுக்கு அளித்தது. இப்பகுதியில் இந்தியா எண்ணை கிணறு அமைப்பதற்கு சீனா தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அதிகாரி ஜியாங் யு இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். 
 
தென் சீன கடல் பகுதி சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சீனாவின் நிலைப்பாடு வரலாற்று ஆதாரங்களையும், சர்வதேச விதிகளையும்  அடிப்படையாக கொண்டது. சீனாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட தென் சீன கடல் பகுதியில் எந்த ஒரு நாடும் எண்ணை கிணறு அமைப்பதை எதிர்க்கிறோம். இப்பிரச்சினையில் எந்த ஒரு அயல் நாடும் தலையிடாது என்று நம்புகிறோம்.

இதற்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் பதில் அளிக்கையில்  சீனா  தன் கருத்தினை தெரிவித்துள்ளது எனவும், இருப்பினும் இந்தியா, வியட்நாம் அரசுடன் செய்துகொண்ட  ஒப்பந்தப்படி தன் மேல் நடவடிக்கையை தொடரும் எனவும், இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை சீன அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். வியட்நாம், இந்திய நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பும் சீனாவிற்கு கவலையை அளித்துள்ளது. தென் சீன கடல் பகுதியின் ஏறத்தாழ முழுவதையுமே தனக்கு சொந்தமானது என சீனா கூறிவரும் நிலையில், இந்தியா இப்பிராந்தியத்தில் தனது செயல்பாடு வர்த்தக நோக்கில் மட்டுமே என சீனாவிடம் தெரிவித்துள்ளது.

வியாட்நாமிற்கான  இந்திய தூதர் ரஞ்சித் ரே,   தென் சீன கடல் எல்லைப்பிரச்சினை சர்வதேச விதிகளின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றும்,  இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் 50%  இப்பகுதி வழியாக நடைபெறுகிறது   என்றும், இப்பகுதியின் கப்பல் போக்குவரத்து எல்லைப்பிரச்சினையால் பாதிக்கப்படக்கூடாது என்றும்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இப்பிரச்சினை சர்வதேச விதிகளின்படி தீர்க்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் சீனா இப்பிரச்சினை சர்வதேச விதிகளின்படி தீர்க்கப்படவேண்டும் என்ற வாதத்தை எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட நாடுகளின் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளின் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடாகும்.

ஜூலை 22, 2011, அன்று நட்பு பயணமாக இந்தியாவின் INS Airavat உட்பட நான்கு போர் கப்பல் வியாட்நாமிற்கு தென் சீன கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ரேடியோ செய்தி ஓன்று பெறப்பட்டது. சீன கடற்படை என்று தன்னை கூறிக்கொண்ட அந்த தொடர்பாளர் இந்திய கப்பல்களை தென் சீனக்கடல் பகுதிக்கு வரவேற்பதாக தெரிவித்தார். இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத இந்திய கடற்படை அதிகாரி தெரிவிக்கையில் அந்த ரேடியோ செய்தியின் தொனி வரவேற்பதாக இருந்தாலும், தென் சீன கடல் பகுதி சீனாவுக்குரியது என்ற கருத்தை வலியுறுத்துவதாக இருந்தது என்று தெரிவித்தார். ஆனாலும் எந்த சீன போர் கப்பலோ, அல்லது போர் விமானமோ கண்ணில் படவில்லை என்றும், இந்திய போர் கப்பல் திட்டமிட்டபடி தன் பயணத்தை தொடர்ந்தது என்றும் இந்திய கடற்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்திய கடற்படை மேலும் தெரிவிக்கையில் சர்வதேச கடல் பபகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும், அதே சுதந்திரம் தென் சீன கடல் பகுதியிலும் பின்பற்றப்படவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்தார். மேலும் சர்வதேச கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கான அனைத்து நாடுகளின் உரிமைகள் அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் தென் சீன கடல் பகுதி சீனாவுக்கு சொந்தமானதல்ல என்றும், அது சர்வதேச எல்லைக்குட்பட்டது என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது சீன அரசின் எண்ணை நிறுவனமான China National Offshore Oil Corporation (CNOOC) தென் சீன கடல் பகுதியில் 9 இடங்களில் எண்ணை கிணறு தோண்டுவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு டெண்டர் அழைப்பு விடுத்தததுள்ளது. அறிவிக்கப்பட்ட 9 இடங்களும் வியட்நாமின் எல்லைக்கு  உட்பட்டவை என்று வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்தததுள்ளது. சீனாவின் அறிவிப்பில் உள்ள குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சீனா அறிவித்த 9 இடங்களில் block number 128 ம்  அடங்கும். இந்த பிளாக் இந்தியாவின் ONGC நிறுவனத்திற்கு எண்ணை கிணறு அமைக்க வியட்நாம் அரசால் ஏற்கனவே ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட இடமாகும். இதன் மூலம் சீனா இந்தியாவுடன் நேரடியாக மோத தயாராகிவிட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பிராந்தியத்தின் அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியா தென் சீன கடல் பகுதியில் எண்ணை கிணறு அமைக்கும் பணியினை கைவிடவேண்டும் என்று சீன அரசு இந்தியாவை கேட்டுள்ளது. சீனாவின் எதிர்ப்புக்கு அடிபணியாத இந்தியா, கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தென் சீன கடல் பகுதியில் அதிகப்படியான எண்ணை கிணறுகள் அமைக்கவும், விரிவுபடுத்தவும்  வியாட்நாமுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் மூலம் தென் சீன கடல் பகுதி சீனாவுக்குரியது என்ற சீனாவின் வாதத்தை இந்தியாவும், வியட்நாமும் நிராகரித்துள்ளன. மேலும் ஐ. நா விதிகளின்படி குறிப்பிட்ட பகுதிகள் வியாட்நாமிற்கு சொந்தமானவை என இந்தியா அறிவித்தது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும்  கிழக்கு ஆப்பிரிக்கா கடற்கரையிலிருந்து தென் சீன கடல் பகுதி வரை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம், எரிசக்தி, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இந்தியா கருதுகிறது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான  குளோபல் டைம்ஸ் நாளிதழ் 25-10-2011 அன்று “Don't take peaceful approach for granted” என்ற தலைப்பின் கீழ் கீழ்க்கண்டவாறு எழுதியது.

If these countries don't want to change their ways with China, they will need to prepare for the sounds of cannons. We need to be ready for that, as it may be the only way for the disputes in the sea to be resolved

சீனாவின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாக தெரிந்தே இந்தியா தென் சீன கடல் பகுதியில் துணிந்து தலையிடுகிறது. இதற்கு அமெரிக்காவும் மறைமுகமாக ஆதரவளிக்கக் கூடும்.  இதன் மூலமாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள இந்தியாவும், சீனாவின் அண்டைனாடுகளும் மறுத்துள்ளன. இதன் காரணமாக சீனா தன அண்டை நாடுகளுடன் ஒரு போரைக்கூட தொடங்கலாம். ஒருவேளை அப்போர் இந்தியாவிற்கு எதிரானதாக கூட இருக்க முடியும். அதுவும் இந்தியாவுக்கு தெரியும். அதனால் இந்தியாவும்  எதற்கும் தயாராகவே உள்ளது என்பதை அறிய முடிகிறது.

More than a Blog Aggregator