சனி, 23 ஜூன், 2012

சிறுவானி அணை பிரச்சினை : கேரள அரசியல்வாதிகளின் இனவாத அரசியல்!

 
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தமிழ் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பித்து விட்டது. அட்டப்பாடி நீர்ப்பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே 4.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையினைக் கட்ட திட்டமிடுகிறது. காவிரி நடுவர் மன்றம் முன்பும் 4.5 டி.எம்.சி அளவு நீரை அட்டப்பாடி திட்டத்திற்காக கேரளா கோரியிருந்தது.ஆனால் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் அட்டப்பாடிக்காக 2..87 டி.எம்.சி அளவுதான் நீர் ஒதுக்கமுடியும் எனக்கூறிவிட்டது. நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து கேரளாவும், கர்நாடகமும் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்திருக்கின்றன. அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது, கேரளா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மீறி சிறுவாணியில் அணை கட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும், எனவே, மத்திய அரசு கேரளம் அவ்வாறு அணை கட்டக்கூடாது என அறிவுறுத்தவேண்டும் எனவும், மத்திய நீர் ஆணையம் அவ்வாறு அணை கட்ட அனுமதியளிக்கக்கூடாது எனவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் சளைத்தவர்கள் அல்ல.  தங்களுக்கு ஆதாயம் என்றால் டெல்லியில் சென்று காத்து கிடப்பதும், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கடிதத்துடன் முடித்துகொள்வதும் இந்த அரசியல்வாதிகளுக்கு சகஜம்தான். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் வாயை திறக்கப்போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.  பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் நமக்கு தெரியும். கேரள அரசு 2006 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற தீர்ப்பை  நடைமுறைபடுத்த மறுத்து kerala irrigation and conservation (amendment) Act 2006 சட்டத்தை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இயற்றி கேரளாவில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு பற்றி முடிவு எடுக்கும் உரிமை கேரளாவுகே உண்டு என கூறியது. அதாவது அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றமோ, அல்லது எந்த ஆணையமோ கேரளாவிற்கு ஆணையிட முடியாது என்றது. கேரளா அரசு கொண்டு வந்த இந்த சட்டம் செல்லுமா? என்பது தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் முன் பரிசீலனையில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் இவ்வாறு சட்டம் இயற்றி கொண்டால் தேசிய ஒருமைப்பாடு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?.  
அணையின் பலம் பற்றி ஆராய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் அடங்கிய நிபுணர் குழு அணை பலமாக உள்ளது என அறிக்கை அளித்துள்ளது. அணையின் பலத்தை பற்றி பொறியாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். எம்பிக்களும், MLA க்களும் எவ்வாறு முடிவு செய்ய முடியும்? இந்த  அறிக்கையை கேரள அரசு உரிய காரணங்கள் இல்லாமல் ஏற்க மறுப்பது கேரள மக்களிடையே இன வெறியை அணையவிடாமல் தூண்டிவிடுவதற்காகத்தான்.
கர்நாடக அரசும், கேரளா அரசும் ஏன் தமிழ் நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிக்கின்றன?. நிச்சயமாக வோட்டு அரசியல்தான் காரணம். உள்ளூர் பிரச்சினைகளால் இழந்து வரும் தம் செல்வாக்கினை தூக்கி நிறுத்த,  மக்களை திசை திருப்புவதற்காகவே மக்களின் இன உணர்வுகளை தூண்டி விட்டு இது போன்று பிரச்சினைகளை உருவாக்குகின்றன அரசியல் கட்சிகள். மக்கள் அரசியல் கட்சிகளின் இந்த சதி திட்டத்திற்கு பலியாகிவிடக்கூடாது.   
மாநிலங்களுகிடையிலான பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று பிரச்சினையை ஆறப்போட்டால் அது தானாகவே தீர்ந்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம்.  இரண்டு பாழாய் போன வோட்டு அரசியல். காரணம் எதுவாக இருந்தாலும் நியாயமான முறையில் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் அது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வித்தாகிவிடும். பரம எதிரியாக இருக்கும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கூட சிந்து நதி தொடர்பாக தண்ணீர் பிரச்சினை வராதபோது இந்திய மாநிலங்களுக்கிடையே பிரச்சினை ஏன் வருகிறது?. இந்தியாவில் தேசிய கட்சிகள் வலுவிழந்து மாநில கட்சிகள் பலம் பொருந்தியவைகளாக இருப்பதற்கு மக்களின் குறுகிய மனம் காரணமா? அல்லது தம்  உரிமைகளை மாநில கட்சிகளே பெற்று தரும் என மக்கள் நம்புகிறார்களா?. இந்தியாவின் தேசிய கட்சிகள் கூட  பிராந்திய கட்சிகள் போன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு முடிவினை எடுத்து  குறுகிய மனதுடன் அரசியல் செய்வது ஏன்?.
ஆனால் மாநில அரசுகள்  எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையிலயே இருக்கின்றன.  பல மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட மதிப்பதில்லை. அதாவது அரசியல் சட்டத்தை கூட மதிப்பதில்லை. அரசியல் சட்டத்தை மதிக்காத மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய இப்போதைய  மத்திய அரசுக்கு தைரியம்  உண்டா?
மாநில மக்களிடையே இன வெறியை தூண்டும் இத்தகைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை தொடக்கத்திலயே இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு அடக்க வேண்டும். இல்லையெனில் மத்திய அரசின்  கையாலாகாத்தனம்  மக்களை தூண்டி விட்டு குளிர் காயும் அரசியல்வாதிகளுக்கு மென்மேலும் வலுவைத்தரும். இத்தகைய அரசியல்வாதிகள் பெறும் அரசியல் அதிகாரம்  இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிப்பதாக அமையும்.   



More than a Blog Aggregator

புதன், 20 ஜூன், 2012

கலாம் என்றால் கலகம்! கருணா என்றால் துரோகமா?!

கலாம் என்றால் கலகம் என்று அர்த்தம் சொன்ன கலைஞர் அவர்களின் அறிவாற்றலையும், எதுகை மோனை திறமையையும்  நினைத்து புளகாங்கிதம் அடைந்த எனக்கு கருணாநிதி என்ற பெயருக்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஆவலானது. என் மூளையை கசக்கி பிழிந்து யோசித்துகொண்டிருந்தேன்.

இதற்கிடையில் கலைஞர் டெசோ (Tamil eelam supporters organization) என்ற இயக்கத்தை மறுபடியும் ஆரம்பித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதாவது டெசோ இயக்கம் தமிழ் ஈழம் பெற்று தரும் என அறிவித்திருந்தார்.  இந்த அறிக்கையை வெளியிடும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்கும். அது வேறு விஷயம். ஆனால் எனக்கு ஒரு ஆவல் உண்டாயிற்று. இந்த டெசோ இயக்கம் இதற்கு முன்னால் என்ன பணியினை செய்தது?. அதன் தோற்றம் எப்படி? அதன் நோக்கம் என்ன?. இப்படி பல வினாக்கள் எனக்குள் உண்டாயிற்று. இணையத்தில் தேடினேன். கிடைத்த விவரங்கள் இதுதான்.
.தமிழ் ஈழ மக்களுக்கு உற்ற துணையாக இருப்போம், அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ் ஈழம் மலர வழி காணுவோம் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் டெசோ எனும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (TESO). 1985-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் இந்த அமைப்பு உருவானது.
இந்த அமைப்பின் 5 முக்கிய நோக்கங்கள்:
இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு
இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது
போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது
தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது
இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது ஆகியனவாகும்.
இந்த 5 உறுதிமொழிகளை, டெசோஅமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணி பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி படித்து, அதனை மக்கள் ஏற்பதை  நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
1985- ல் டெசோ ஆரம்பிக்கப்பட்டபோது  கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக கூட கிடையாது டெசோ அமைப்பின் முக்கிய ஐந்து நோக்கங்களில் ஒன்றையாவது கருணாநிதி மனப்பூர்வமாக பின்பற்றினார் என்று யாராலும் கூற முடியாது.. ஆட்சியில் இருக்கும்போது டெசோ கொள்கைகளை மறந்து விடுவதும், ஆட்சியில் இல்லாதபோது டெசோ இயக்க கொள்கைகள் ஞாபகத்துக்கு வருவதும் சிறந்த ராஜதந்திரம் என்பது  அவர் நம்பிக்கை. ஆனால் மக்கள் அவரை இப்போது ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?
ஈழப்போரின் இறுதிகட்டத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டபோது கண்டும் காணாமல் வாய் மூடி காங்கரஸ் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போது  டெசோ ஈழம் வாங்கி தரும் என்கிறார். ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஈழம் பற்றி கருணாநிதி பேசுவதின் நோக்கம் என்ன?.  டெசோ மீண்டும் தொடங்கப்பட்டது ஈழம் வாங்கித்தர அல்ல. அதிமுக பக்கம் காங்கிரஸ் தாவி விடுமோ என்ற சந்தேகமும், எனவே காங்கிரசை மிரட்டி வைக்கவும்தான்  டெசோ இயக்கம் கருணாநிதியால் தொடங்கப்பட்டது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
இங்கே நண்பர்கள் பேசும்போது, இலங்கையிலே நடத்தப்பட்ட சிங்களவர்கள் நடத்திய கொடுமைகள் பற்றியும், அந்த கொடுமைகளை தாங்கி கொண்டு உயிர்விட்ட, சிங்கள வெறியர்களால் துரத்தப்பட்டு இன்னமும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்கு உரிமை கிடைக்க இந்திய அரசை வலியுறுத்துவோம். இந்திய அரசை நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம் என்பது மாத்திரம் அல்ல. உலகத்தினுடைய கவனத்தை திருப்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பதற்கு அடையாளமாகத்தான் விழுப்புரத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அடைந்துள்ள டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க, அவர்களுடைய நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க டேசோ மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

இப்போது எனக்கு ஒரு சந்தேகம்.

அப்படியானால் பல்லாயிரக்கணக்கான  அப்பாவி மக்கள் இறுதிபோரில் கொல்லப்பட்டபோது இவர் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லையா? அல்லது இவர் கொடுத்த நெருக்கடிக்கு மதிப்பு இல்லையா?.இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதும், இன்னும் மக்கள் கொல்லப்படுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று வசனம் பேசியதும் தமிழர் நெஞ்சில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை கருணாநிதி அறிவாரா?

ஒருவேளை கருணா என்றால் துரோகம்  என்று அர்த்தமோ?   
More than a Blog Aggregator

சனி, 16 ஜூன், 2012

அப்துல் கலாமிற்கு இந்தியாவின் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை!!!

காங்கிரசுக்கும், நேர்மைக்கும்  எப்போதும் சம்பந்தம் கிடையாது என்பது நமக்கு தெரியும். இந்த உண்மை மறுபடியும் ஜனாதிபதி தேர்தல் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அப்துல் கலாம் நேர்மையின் பிறப்பிடம். இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாக  இருப்பவர். வீண் ஆடம்பரம் இல்லாதவர். நடுநிலையானவர். ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். இத்தகைய தகுதிகள் இருந்தால் சோனியாவுக்கும், காங்கிரசுக்கும் அப்துல் கலாமை எப்படி பிடிக்கும்?. சோனியா காந்திக்கு தேவை காலடியில் வாலை ஆட்டிகொண்டு நிற்கும் ஒரு நாய் குட்டி. அப்துல் கலாம் நிச்சயம் அவ்வாறு நடக்க மாட்டார். நீதியின்படி நடப்பவர் அப்துல் கலாம். சோனியா முன்னாள் கையை கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் குணம் படைத்தவர்  அல்ல அப்துல் கலாம்.

அதே போல் கருணாநிதிக்கும் அப்துல் கலாமை ஆதரிக்க பிடிக்கவில்லை.  தமிழன், தமிழன் என்று கூவும் கருணாநிதிக்கு ஒரு தமிழனை ஜனாதிபதியாக்க விருப்பமில்லை. அவர் ஏற்கனவே மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தவர்தான் அவருடைய தமிழ் பாசம் அபாடிப்பட்டது. தமிழனை, தமிழ் இனத்தை  நம்ப வைத்து கெடுத்தவர் இவரை போல் எவருமில்லை. அப்துல் கலாம் ஒன்றும் அதிமுக கட்சி உறுப்பினர் இல்லையே! பிறகு ஏன் அவருக்கு அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவதில் விருப்பமில்லை.. அவருக்கு இப்போதைய லட்சியம் தனது மகளை காப்பாற்ற வேண்டும். அதற்காக எத்தனை தமிழனையும் பலி கொடுக்க தயார். குடும்பத்துக்காகவும், பதவிக்காகவும்  ஈழத்தையே பலி கொடுத்தவர்தானே  அவர். இப்போது டெசோ இயக்கம் தனி ஈழம் வாங்கித் தரும் என்று வெட்கமில்லாமல் சொல்கிறார். தமிழனை இன்னும் முட்டாள் என நினைத்து கொண்டிருக்கிறார். இவர்தான் உலகத் தமிழர்களின் இன மான தலைவராம். பேசாமல் மதம் மாறுவது போல் இனம் மாறிவிடலாம் போலிருக்கிறது.                   
காங்கிரசின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரணாப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவரா இல்லையா  என்பது என்னுடைய வாதம் அல்ல.ஆனால் அப்பதவிக்கு கட்சி சார்பற்ற, நடுநிலையான  ஒருவர்தான் பொருத்தமானவராக இருக்க முடியும். மத்திய அரசின் பல ஊழல்கள் வெளிவந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சில அனுகூலங்களை தரலாம். ஆனால் ஜனாதிபதி பதவியின் நம்பகத்தன்மை  பாதிக்கப்படகூடும்.

காங்கிரஸ் கட்சியால் சென்ற முறை தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிபா பட்டீல் அவர்களின் தகுதிகள் சிலவற்றை சற்று பார்ப்போம். இந்திரா காந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தவர், காங்கிரஸ் உறுப்பினர். 5 தடவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். விஸ்ராம் பட்டில் கொலை வழக்கில் சம்பந்தபட்டிருப்பதாக புகார், பிரதிபா மகிளா சஹாகரி வங்கியின் பண மோசடியில் சம்பந்தபட்டிருப்பதாக புகார், அவர் தொடங்கிய Sant Muktabai Sahakari Sakhar Karkhana sugar factory யில் லோன் கட்டாத defaulter,  1991 – 1996 வரை அமராவதியில் MP யாக இருந்தபோது MPLADS  நிதி  ரூ. 36 லட்சத்தை  தனது கணவரின் அறக்கட்டளைக்கு திருப்பியாதாக புகார்,   தனது பதவி காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த வகையில் அரசுக்கு செலவு Rs.205 கோடி. இதுதான் காங்கிரஸ் கட்சி சென்ற முறை தேர்ந்தெடுத்த ஜனாதிபதியின் தகுதிகள். இப்படிப்பட்ட காங்கிரஸ் அப்துல் கலாமை ஆதரிக்கும் என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்.

மக்களின் விருப்பம் அப்துல் கலாம் மட்டுமே. மக்களின் விருப்பம் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் மக்களின் விருப்பம் பொது தேர்தலின் போது மட்டுமே கவனிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் அரசியல் லாபங்கள் மட்டுமே கவனிக்கப்படும். மக்களிடம்  கருத்து கணிப்பு நடத்தினால், அல்லது மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை இருந்தால் யார் வெற்றி பெறுவார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிக்கும் தெரியும்.ஆனால் மக்களின் விருப்பத்தை நிராகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் உண்மையிலேயே மக்கள் விரோத கட்சியாகிவிட்டது. ஏற்கனவே மூழ்கி போன கப்பலாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேலும் மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால்  தோல்வி அவருக்கல்ல. மக்களுக்குத்தான். ஆனால் மக்கள் காலம் வரும் வரை காத்திருந்து காங்கிரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

More than a Blog Aggregator