ஞாயிறு, 31 மார்ச், 2013

பிஜேபியை கைப்பற்றினார் நரேந்திர மோடி!நரேந்திர மோடி பிஜேபியின் பார்லிமென்டரி போர்டில்  உறுப்பினராக ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். வரும் பொது தேர்தலில் பிஜேபி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரம் படைத்ததாக இக்குழு உள்ளது.  எனவே வரும் தேர்தலில் பிஜேபி எடுக்கும் முக்கிய முடிவுகளில் மோடியின் ஆதிக்கம் நிறையவே இருக்க வாய்ப்பிருக்கிறது.  அதே நேரத்தில் பிஜேபியில் மோடியின் ஆதிக்கம் இப்போதே கொடிகட்டி பறப்பதை நாம் உணர முடிகிறது. 

மோடியின் நெருங்கிய கூட்டாளியான அமித் ஷா இக்குழுவில் இடம் பெற்றுள்ளது பலருக்கு வியப்பை அளித்துள்ளது. இந்த அமித் ஷா 2005 – ஆண்டில் நடைபெற்ற சொராபுதீன்  ஷேக்  போலி என்கௌண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதனாலேயே தான் வகித்து வந்த குஜராத் உள்துறை மந்திரி பதவியையும் இழந்தவர். தற்போதும் இவர் மீது ஆள் கடத்தல், கொலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெயிலில்தான் தற்போது இருந்து வருகிறார்.  இவர் பிஜேபி கட்சியின் பார்லிமென்டரி போர்டில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. பிஜேபியில் மோடியின் ஆதிக்கமும், செல்வாக்கும் தவிர்க்க முடியாததாக இருப்பதையே அமித் ஷாவின் நியமனம் காட்டுகிறது.

பிஜேபியில் மோடிக்கு இணையாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் சௌஹானை பார்லிமென்டரி போர்டு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கை பிஜேபியில் மற்ற எந்த தலைவராலும் ஆதரிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் அத்வானி Vs மோடி என்று கருதப்பட்ட போட்டியை அத்வானி Vs மற்ற பிஜேபி தலைவர்கள் என்று மோடி புத்திசாலித்தனமாக திசை திருப்பியுள்ளார்.  இது  பிஜேபியில் தனக்கு இருந்த எதிரிகளை மோடி வெற்றிகரமாக வீழ்த்தி வருவதைத்தான் காட்டுகிறது. ஏற்கனவே பிஜேபியின் தனிப்பெரும் தலைவராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி கண்டு வரும் மோடி, வரும் மக்களவை தேர்தலில் இந்திய  அரசியலிலும்  தான் ஒரு சக்தி மிக்க தலைவர் என்ற சாதனையை நிகழ்த்த நினைக்கிறார். கட்சியை கைப்பற்றிய மோடி ஆட்சியை கைப்பற்றுவாரா?. பொறுத்திருந்து பார்ப்போம்.
More than a Blog Aggregator

சனி, 30 மார்ச், 2013

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!?மக்களவை தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும்  தங்களது பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி கட்ட முயற்சிகளில் உள்ளன.

பிஜேபி தனது பிரதம வேட்பாளராக நரேந்திர மோடியை  அறிவிப்பது எனபது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவ்வாறு மோடியை அறிவிக்கும் நிலையில் நிதிஷ் குமாரின் ஆதரவை இழப்பதற்கும் பிஜேபி தயாராகிவிட்டது. மோடியின் பெயரை பிஜேபி அறிவிப்பதற்கு முன்னரே கூட கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்புள்ளதாக சிலர் கருதுகிறார்கள். . ஆனால் மோடியின் பெயரை பிஜேபி வெளியிட்ட பின் அதனை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம் என நிதிஷ் குமார் திட்டமிட நிறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடக்கவே நிறைய வாய்ப்புள்ளதாகவும்  நான் நினைக்கிறேன். எனவே பிஜேபியின் தேர்தலுக்கு முந்தைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது. அதற்காக சில கூட்டணி கட்சிகளை இழக்கவும் அது தயாராகிவிட்டது. தேர்தலுக்குப்பின் பிஜேபியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெறும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் பிரதமர் வேட்பாளரின் பெயர் மாறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். தேர்தலுக்குப்பின் மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெற வேறு ஒரு மிதவாத முகம் கொண்ட பிஜேபி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட நிறைய வாய்ப்புள்ளது.

காங்கிரசை பொறுத்தவரையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்று பலர் கருதுகிறார்கள். இக்கருத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  காங்கிரஸ் கூட்டணிக்கு உறுதியான வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே ராகுல் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். ஆனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புக்கள் மங்கிய நிலையில் உள்ளன.  அப்படிப்பட்ட நிலையில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்க ராகுல் விரும்பமாட்டார். மோடியிடம் தோற்று தனது இமேஜை அரசியலின் ஆரம்ப கட்டத்திலேயே கெடுத்துக்கொள்ள ராகுல் விரும்ப மாட்டார். தோல்வியின் விளிம்பில் உள்ள காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி ராகுலுக்கு கிடையாது என்பதை கடந்த கால தேர்தல்கள் உறுதிப்படுத்திவிட்டன. ஆயினும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை அளித்தால் அந்த நிலையில் ராகுல் பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்புண்டு.

எனவே வழக்கம் போல் தேர்தலுக்கு முன் மன்மோகன் சிங் போன்ற யாரேனும் ஒரு கைப்பாவை பிரதமர்  வேட்பாளராக அறிவிக்கப்படலாம். தனக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க ஆசை உண்டு என்பதை மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே அடிமட்டத்திற்கு போய்விட்ட காங்கிரசின் இமேஜை காக்க வேறு யாரேனும் ஒருவர் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். அது சோனியா காந்தி வீட்டு சமையல்காரனாகவோ அல்லது தோட்டக்காரனாகவோ கூட இருக்கலாம். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பது காங்கிரசின் ஏமாற்றும் திட்டமாக இருக்கலாம். அல்லது டைம் பத்திரிகை கூறியுள்ளது போல் அந்த வேட்பாளர் ப. சிதம்பரமாக கூட இருக்கலாம். ஈழப் பிரச்சினையில் தமிழ் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தலின் பொது எதிர்கொள்ள அது உதவலாம் என காங்கிரஸ் நினைக்கலாம். தமிழ்நாட்டில் சில கூட்டணி கட்சிகள் கிடைக்க இத்திட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் திட்டமிடலாம்.

எனவே வரும் மக்களவை தேர்தலில் பிரதம வேட்பாளருக்கான போட்டி நரேந்திர மோடி Vs ப. சிதம்பரம் என்று இருக்கவே நிறைய வாய்ப்புண்டு. ஆனால் தேர்தலுக்குப் பின் பிரதமர் போட்டிக்கான பெயர்கள் மாற நிறைய வாய்ப்புகளும் உள்ளது. அப்படியானால் தேர்தலுக்கு முன் இக்கட்சிகள் மக்களுக்கு அளித்த பிரதம வேட்பாளர் குறித்த உறுதிமொழிகள்  என்னவாகும்?. தேர்தல் அறிக்கைகள் போன்றே அதுவும் காற்றோடு பறக்கவிடப்படும்.
More than a Blog Aggregator

வெள்ளி, 29 மார்ச், 2013

பாலிடிக்ஸ் 'பவர் ஸ்டார்' தங்கபாலு!


நன்றி:envazhi.com

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலுவின் பேட்டியினை ஒளிபரப்பினார்கள். கேள்விகளுக்கு வழக்கம்போல் சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லி காமெடி செய்துகொண்டிருந்தார் தங்கபாலு. பேட்டியின்போது  ராபர்ட் வதேராவின் நில மோசடி  ஊழல் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தங்கபாலுவை நோக்கி பேட்டியாளர் ஒரு கேள்வியினை கேட்டார். அக்கேள்விக்கு தங்கபாலு கூறிய பதில்தான் காமெடியின் உச்சகட்டமாக இருந்தது. அவர் கூறிய பதில் இதுதான்.

தான் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலையும் செய்யவில்லை என்று வதேராவே  கூறிவிட்டார். தான்  எந்த இடத்தையும் சட்ட விரோதமாக வாங்கவில்லை என்று அவரே தெரிவித்து விட்டதால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழல் நடைபெறவில்லை என்று தங்கபாலு சிரிக்காமல் கூறினாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


வதேராவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். எனவே ஊழல் நடக்கவில்லை என்று தங்கபாலு வதேராவிற்கு சான்றிதழ் கொடுக்கிறார். ஊழல் வழக்கில் வதேரா ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளி தான் தவறு செய்யவில்லை என்று கூறிவிட்டால் அதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமாம். இது தங்கபாலுவின் தீர்ப்பு! எனவே கொலை வழக்கில் குற்றவாளி தான் கொலை செய்யவில்லை என்று கூறிவிட்டால் நீதிபதி அவனை விடுதலை செய்யவேண்டியதுதான். இதுதான் தங்கபாலுவின் நீதி!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம்  பவர் ஸ்டாரை பார்த்து நானாவது காமெடியன்னு தெரிஞ்சி காமெடி பண்றேன். ஆனா நீ ஒரு காமெடியன்னு தெரியாமலேயே காமெடி பண்றியே என்று ஒரு டயலாக் சொல்வார். உண்மையிலேயே தங்கபாலுவின் பதிலைக் கேட்டபோது  எனக்கு இந்த டயலாக் தான் ஞாபகம் வந்தது.

இவர்கள் எல்லாம் மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்களா? அல்லது  உண்மையில் இவர்கள்தான் முட்டாள்களா?
More than a Blog Aggregator