வியாழன், 21 ஆகஸ்ட், 2014

இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இரத்து: நஷ்டம் யாருக்கு?


இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான திட்டமிடப்பட்டிருந்த வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மோடி அரசினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் ஆதரவும், மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். மோடி அரசின் நடவடிக்கை சரிதானா?
மோடி அரசின் நடவடிக்கை சரிதானா என்ற கேள்வியை கேட்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை சரிதானா? என்பதுதான். இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தை குறித்து அறிவிப்பு வெளியான பிறகு கடந்த ஒன்பது நாட்களில் பதினோரு தடவை எல்லைகோட்டில் தடையை மீறி இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் காரணமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் இந்தியா மீது பதினான்கு தடவை தாக்குதல் நடத்தியுள்ளது. இரு நாடுகளிடையே நட்புறவு என்பது இரு வழிப்பாதை. அது இந்தியாவிற்கு மட்டுமே உரிய ஒருவழிப்பாதையாக எவரும் கருத முடியாது. இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட, இந்தியா மட்டும் விரும்பினால் போதாது; பாகிஸ்தானும் உண்மையாக அமைதியை விரும்ப வேண்டும்.
இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தை ரத்து ஆனதற்கு முக்கிய காரணமாக இந்தியா கூறுவது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க இருந்ததுதான். பாகிஸ்தான் தூதரின் இச்செயல் மரபுக்கு மாறானது என்று இந்தியா கருதியது. எனவே பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்தால் அது இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தையை பாதிக்கும் என இந்தியா முதலிலேயே பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் பாகிஸ்தான் தூதர் இந்தியாவின் எச்சரிக்கையை மீறி டெல்லியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்தார். மேலும் தான் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறைதான் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் தூதர் கூறிய கருத்து சரியானதுதான். இதற்கு முன்பு பாகிஸ்தான் தூதர்கள் பலமுறை காஷ்மீர் பிரிவினைவாதிகளை இந்தியாவில் சந்தித்து பேசியுள்ளார்கள். அப்போதெல்லாம் ஆட்சியில் இருந்த அரசுகள் பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை விடுவதுடன் அந்த விவகாரத்தை முடித்துவிடும். இப்போது உள்ள மோடி அரசும் அதே போல் நடந்து கொள்ளும் என்று பாகிஸ்தான் அரசு நினைத்தது தவறாகிப் போனது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கை உண்மையிலேயே பாகிஸ்தான் எதிர்பாராதது ஆகும்.
அடுத்ததாக பேச்சு வார்த்தை இரத்தானது இந்தியாவுக்கு பெரும் இழப்பு எனவும், இந்தியா நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டது எனவும் சிலரால் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகளினால் விளைந்த பலன்கள் என்ன என்று கூறினால் நாம் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இக்காலக்கட்டத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று போர்களை சந்தித்ததுதான் உண்மையில் நாம் கண்ட பலன். உண்மையில் நடக்க இருந்த பேச்சு வார்த்தையினால் அதிக அளவில் பயன் பெற்றிருக்கக்கூடிய நாடு பாகிஸ்தான்தான்.
நவாஸ் ஷரிப்பின் அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் மின் பற்றாக்குறை பாகிஸ்தான் ஆட்டிப் படைத்து வருகிறது. மேலும் இம்ரான்கான் கட்சியும், இஸ்லாமிய மதகுரு கத்ரி ஆதரவாளர்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் NAVAAZ ஷரிப் திணறி வருகிறார். இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவும் உண்டு என்றும் நம்பப்படுகிறது. நவாஸ் அரசு பாகிஸ்தான் மக்களிடையே நம்பிக்கையை விரைவாக இழந்து வருகிறது. எனவே உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஷரிப் காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுக்க நினைத்தார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்திப்பதன் மூலம் தனக்கு எதிரான பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை வேறு பக்கம் திருப்ப நினைத்தார். ஆனால் அவரது முயற்சி இந்திய அரசின் நடவடிக்கையினால் தகர்ந்து விட்டது.  மேலும் பேச்சு வார்த்தை இரத்து ஆனதின் மூலம் நாவாஸ் ஷரிப் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையையும் இழந்து விடும் அபாயத்தில் உள்ளார். இந்த பேச்சு வார்த்தை மட்டும் நடந்து இருந்தால் அதைக் காரணம் காட்டி நவாஸ் ஷரிப் அமெரிக்காவிடம் இருந்து பெரும் பண உதவிகளை பெற்றிருப்பார். இப்போது அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்தியாவை பொறுத்தவரையில் வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தையின் மூலம் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று நன்றாக உணர்ந்திருந்தது. இப்போது பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்துவதை விட வரப்போகும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை செலுத்த மோடி அரசு நினைத்தது. ஏற்கனவே வாஜ்பாய் அரசும், மன்மோகன் அரசும் காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது. எனவே காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தாமல் போனால் அது மோடி அரசுக்கு சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் பெரும்தோல்வியாக கருதப்படும். அதுமட்டுமில்லாமல் காஷ்மீரில் தேர்தலை குலைக்க எப்போதுமே பாகிஸ்தான் கடும் முயற்சி செய்யும். இந்த தேர்தலிலும் அதற்கான முயற்சிகளை பெரும் அளவில் பாகிஸ்தான் கண்டிப்பாக செய்யும். இந்த நிலையில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தத் தேவையில்லை எனக்கருதிய இந்தியா பேச்சுவார்த்தையை இரத்து செய்ய தக்க தருணத்திற்காக காத்திருந்தது. பாகிஸ்தான் தூதர் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை இந்தியா உடனடியாக பயன்படுத்திக்கொண்டது.

வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இரத்து ஆனதில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை. ஆனால் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து பாகிஸ்தான் மக்களை திசை திருப்ப காஷ்மீர் பிரச்சினையை பயன்படுத்த நினைத்த நவாஸ் ஷரிபின் திட்டம்தான் இந்தியாவால் தகர்க்கப்பட்டுவிட்டது. இந்த பேச்சு வார்த்தை இரத்து ஆனதற்கு யாரும் வருத்தப்பட தேவையில்லை. நவாஸ் ஷரிபை தவிர.
More than a Blog Aggregator