புதன், 16 ஜனவரி, 2013

தேசிய பிரச்சினைகளும், பிரதமரின் மௌனமும்!



இந்தியாவில்  பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  அரசு ஏதாவது  நடவடிக்கை எடுக்கிறதா  என்பதுதான் மிகப்பெரும் சந்தேகமாக உள்ளது பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும், நாம் ஏன் தேவை இல்லாமல் பிரச்சினைக்குள் தலையை விடவேண்டும்  என்று அரசியவாதிகள் நினைப்பார்கள் போல!. பிரச்சினை முற்றி பொதுமக்கள் தெருவில் வந்து போராட ஆரம்பித்த பின்புதான் இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.  இவர்கள் ஒவ்வொருமுறை உறக்கத்திலிருந்து விழிப்பதற்கும் மக்கள் ஒவ்வொருமுறையும் தெருவில் இறங்கி போராட வேண்டியிருக்கிறது.  லோக்பால், டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவம், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த்  ஊழல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் மக்களும், மீடியாவும், நீதித்துறையும்  போராடியிருக்காவிட்டால் UPA அரசு ஒருபோதும் நடவடிக்கை எடுத்திருக்காது. 

தேசிய பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்காதது ஒரு குற்றச்சாட்டு  என்றால், அந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் தனது  வாயை திறப்பதே இல்லை  என்பது மற்றொரு குற்றச்சாட்டு.  தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்பதை அறியவே மக்களுக்கு பல மாதங்கள் ஆகிவிடுகிறது. ஊரே தீப்பிடித்து  எரிந்தாலும் தனது வாயை திறப்பதில்லை என்ற கொள்கையில் மட்டும் பிரதமர் ஒருபோதும் தவறுவதில்லை. நாட்டின் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் பிரதமர் வாயை திறக்க எவ்வளவு காலம் பிடித்தது என்பதை இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு அட்டவணையில் காட்டியுள்ளது.

குறிப்பாக இரண்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினரால் கொலை செய்யப்பட விவகாரத்தில் பிரதமர் ஒன்பது நாட்களுக்குப் பிறகு கருத்து கூறியது பலவித குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. பலர் பல கருத்துக்களை தெரிவித்தாலும் பிரதமரின்   கருத்தைத்தானே நாம் சந்தேகமின்றி நம்ப முடியும். பிரதமர் தனது கருத்தை அல்லது கண்டனங்களை உடனடியாக தெரிவிக்காதது என்னுள் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கியது. பாகிஸ்தான் கூறிய வாதங்கள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கூட என் மனதில் உருவாக்கியது. அந்த சம்பவம் குறித்து கருத்து கூற பிரதமர்க்கு ஏன் ஒன்பது நாட்கள் தேவைப்படுகிறது?. இந்த ஒரு சம்பவத்தில் மட்டுமல்ல. எந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டாலும் பிரதமர் இதே கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார். 
   
பொதுவாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் மக்களுக்கு எந்த விஷயமும் தெரியவேண்டியதில்லை என்ற எண்ணத்தில் ஒரு அரசு செயல்படுவது அரசுக்கு நல்லதல்ல. தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்று ஓவ்வொரு இந்திய குடிமகனும் அறிய முற்படுவது நியாயமான விஷயம்தான். ஜனநாயக நாட்டில் அது பிரதமரின் கடமையும் கூட. அது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்லவே!?. ஏதாவது கருத்தை கூறி கூட்டணி கட்சிகளிடம் மாட்டிக்கொள்வதை விட, வாயையே திறக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார் போலும்! இதனை புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அவர் கருதலாம். ஆனால் மக்கள் அவரை  பலவீனமான பிரதமராகத்தான் கருதுவார்கள் என்பதே உண்மை.
More than a Blog Aggregator

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானிடம் இந்தியா பின்வாங்குவது ஏன்?


08-01-2013 அன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் புகுந்து இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொடூரனமான முறையில் கொலை செய்தது மீண்டும் இரு நாடுகளிடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 29 பலோக் ரெஜிமென்ட் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. நாயக் சுதாகர் சிங், நாயக் ஹேம்ராஜ் என்ற  இரு இந்திய வீரர்களின் உடலையும் சிதைத்த பாகிஸ்தான் ராணுவம் இருவரின்  தலையையும் வெட்டி அதில் நாயக் சுதாகர் சிங்கின்  தலையை வெற்றிக்கோப்பையாக கருதி தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டது. பாகிஸ்தான் வழக்கம்போல் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய ராணுவத்தின் சக வீரர்களே அவர்களை கொலை செய்துவிட்டதாக முதலில் குற்றம்சாட்டியது. பின்னர் ஒரு கட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் LOC யில் நடப்பது வழக்கமானதுதான் என்றும், இந்த சம்பவத்தின் மூலம் இரு நாடுகளிடையே நட்புறவு பாதிக்காது என்றும் கூறி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

மேற்கண்ட சம்பவம் போல் பல சமபவங்கள் இதற்கு முன்னும் எல்லைகோட்டில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்தியாவும் தன் கண்டனங்களை பதிவு செய்கிறது. பாகிஸ்தானின் செயலை வன்மையாக கண்டிப்பதாக அரசியல்வாதிகள் அறிக்கைவிடுகின்றனர். பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமா? என்ற வாதங்கள் அந்த சமயங்களில் மீடியாக்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு வலுவான பதில் நடவடிக்கையும் இந்தியா எடுப்பதில்லை. பாகிஸ்தான் ராணுவமும் தனது கொடூரமான செயல்களை தொடர்ந்து நடத்தித்தான் வருகிறது. மத்தியில் ஆள்வது காங்கிரஸ் அரசானாலும் சரி, பாஜக அரசானாலும் சரி பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக பதில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர் என்பதே உண்மை. மேற்கண்ட சம்பவத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது  சர்வதேச அழுத்தத்தை உருவாக்க முனைய வேண்டிய இந்தியா, உண்மையில் இந்த சம்பவத்தை பூசி மறைக்கவே நினைக்கிறது. உண்மையில் பாகிஸ்தான்தான் மேற்கண்ட சம்பவத்தை அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் இந்திய அதிகாரிகளின் அறிக்கையை பார்க்கும்போது இந்தியாதான் இந்த சம்பவத்தை பூசி மெழுக நினைப்பதாக தோன்றுகிறது. இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயங்குவது ஏன்?. குறிப்பாக இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானிடம் பணிந்து போவது ஏன்? அல்லது உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
.
காரணம் ஒன்று
பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலை சர்வதேச நீதி மன்றத்திற்கோ, அல்லது சர்வதேச தளத்திற்கோ கொண்டு சென்றால் காஷ்மீர் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறிவிடலாம் என்று இந்தியா நினைக்கலாம். அல்லது மூன்றாவது நாடு காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வாய்ப்பு ஏற்படலாம் என்று இந்தியா நினைக்கலாம். ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் செய்யும் அனைத்து கொடும் செயல்களையும் நாம் பொறுத்துத்கொண்டிருக்க வேண்டியதில்லை. பாகிஸ்தான் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதில் நடவடிக்கை இந்தியாவால் எடுக்கப்படவேண்டும். அவ்வாறு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலை பலவீனமானது என்றுதான்  உலகநாடுகளால் கருதப்படக்கூடும்.

இரண்டாவது காரணம் 
“இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நட்புறவை விரும்பும் ஒரு சமாதான நாடு” என்று உலக நாடுகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படுவது மற்றொரு காரணம். ஆனால் நட்புறவு என்பது இரு நாடுகளும் சேர்ந்து பேணிக்காக்க வேண்டிய விஷயம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதுவும் பாகிஸ்தான் போன்ற பொறுப்பற்ற நாடுகளிடம் நட்புக் கரம் நீட்டுவது என்பது இந்தியாவின் பலவீனத்தையே உலகிற்கு காட்டும். பாகிஸ்தானுடன் கிரிகெட் விளையாடுவது, பஸ் விடுவது போன்றவை பத்திரிக்கைகளுக்கு செய்தி தரத்தான் பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன் தராது. இந்தியாவுடனான வெறுப்பில் தோன்றிய நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானின் அடிப்படை கொள்கையே இந்திய வெறுப்புதான். எனவே பாகிஸ்தானுடன் நட்பு என்பது என்றுமே நடக்காத ஒரு விஷயமாகும். எனவே அடைய முடியாத ஒன்றிற்காக பாகிஸ்தான் செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் இந்தியா தாங்கி கொள்ளவேண்டிய அவசியமில்லை. அண்டை நாடுகளை தாஜா செய்து பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என்று இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. 
   
மூன்றாவது காரணம்
காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற நம்பிக்கை இந்தியாவிற்கே இல்லாதது போல் தெரிகிறது. இந்த அவநம்பிக்கையே இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுக்க மிகப்பெரும் தடையாக உள்ளது. காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற கருத்தில் இந்தியா முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தனது தரப்பு கருத்து நியாயமானது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கவேண்டும்.

நான்காவது காரணம்
இந்தியா எடுக்கும் பதில் நடவடிக்கை இரு நாடுகளிடையே உள்ள பதட்டத்தை அதிகரித்து முழு அளவிலான போருக்கு வழி வகுத்துவிடும் என்பது சிலரின் கருத்து. இது பற்றி கவலைப்படவேண்டியது இந்தியா மட்டுமல்ல. பாகிஸ்தானும் கூடத்தான். ஆனால் எதிரி நாடு நம் மீது போரை திணிக்கும்போது அல்லது போருக்கு தயாராக இருக்கும்போது நாம் பதட்டத்தை குறைப்பது பற்றி பேசுவது நாம் பலவீனமானவர்கள் என்ற எண்ணத்தை எதிரிக்கு ஏற்படுத்திவிடும். அதுமட்டுமில்லாமல் போரை தவிர்ப்பது என்பது இந்தியாவிற்கு மட்டுமான ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது. அதுபற்றி பாகிஸ்தானும் அக்கறை கொண்டிருக்கவேண்டும். ஆனாலும் பாகிஸ்தான் போரை விரும்பும் நாடு என்பதை கடந்த கால வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். இதுவரை இந்தியாவின் மீது மூன்று போர்களை பாகிஸ்தான் திணித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தியாவின் பதில் நடவடிக்கை என்பது முழு அளவிலான போராக இருக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டால் இருநூறு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்படுவார்கள் என்ற விதியினை பாகிஸ்தானுக்கு உணரச்செய்யும் அளவினதாக அது இருக்கவேண்டும். சிலர் இதனை மனிதாபிமானமற்ற செயல் என்று கூறலாம். மனிதாபிமானம் மனிதர்களின் மீது காட்டப்படவேன்டியது. பாகிஸ்தானிடம் மனிதாபிமானம் காட்டுவது என்பது எந்த பலனையும் இந்தியாவிற்கு தராது. எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனங்களை பதிவு செய்வது, வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிக்கை விடுவது போன்ற கண்துடைப்பு காரியங்களை கைவிட்டு, பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இப்போதாவது இந்திய அரசு முன்வரவேண்டும். அவ்வாறு இந்திய அரசின் நடவடிக்கை அமையாவிடில் அது இந்திய ராணுவத்தின் மனோபலத்தை மிக அதிக அளவில் பாதித்துவிடும். இந்திய ராணுவத்திற்கும், இந்திய அரசிற்கும் இடையே உள்ள நம்பிக்கையை அது குலைத்துவிடும். எக்காரணத்தை கொண்டும் இந்திய வீரர்கள் மனதில் தாங்கள் நிராதரவானவர்கள் என்ற எண்ணம் உருவாகக்கூடாது. இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று இந்திய அரசு உலகிற்கு உணர்த்த இந்திய ராணுவத்தின் கட்டப்பட்ட கைகள் உடனடியாக அவிழ்த்து விடப்படவேண்டும்.
More than a Blog Aggregator

வியாழன், 10 ஜனவரி, 2013

டெல்லி கற்பழிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை - சில அதிர்ச்சி தகவல்கள்!



டெல்லி கற்பழிப்பு வழக்கு தொடர்பான  குற்றபத்திரிக்கையின் ஒரு சில பகுதிகளை NDTV டிவி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது நபரின் குற்ற செயல்களை குற்றப்பத்திரிக்கை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆறு குற்றவாளிகளில் குறிப்பாக இவரை மட்டும் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் இந்த நபருக்கு 17 வயதே ஆவதால் இவர் சிறார் குற்றவாளியாக (juvenile) கருதப்படுகிறார். அதாவது இந்திய சட்டத்தின்படி அவர் சிறுவனாக கருதப்படுகிறார். அறிவியல் சோதனைகள் மூலம் இவருடைய வயது பதினேழு என் நிரூபிக்கப்பட்டால், அவர் தனியாக juvenile கோர்ட்டினால் விசாரிக்கப்படுவார். அவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்கும். அந்த மூன்று ஆண்டுகளும் சீர்திருத்தப் பள்ளியில் அவருக்கு நீதிபோதனைகள் மட்டும் வழங்கப்படும்.

போலிசாரின் குற்றப்பத்திரிக்கையில் இந்த சிறுவன் செய்த குற்றங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த அன்று பேருந்தில் இந்த சிறுவன் 23 வயது நிரம்பிய பெண்ணை இரண்டு முறை கற்பழித்திருக்கிறான், அதில் ஒருமுறை அந்த பெண் மயக்க நிலையில் இருக்கும்போது கற்பழித்திருக்கிறான். மேலும் அந்த பெண்ணின் குடலை தன் வெறும் கையாலே பிடுங்கி எடுத்திருக்கிறான் அந்த  சிறுவன். கற்பழித்த பின்னர் அந்த பெண்ணை ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடும்படி ஆலோசனை கூறியதும் இந்த சிறுவன்தான் என காவல்துறை நம்புகிறது. இதனை வாசிக்கும்போது  இவ்வளவு மிருகத்தனமாக ஒரு சிறுவனால் செயல்படமுடியுமா? என்ற அதிர்ச்சி நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது. கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு குரூரமாக செயல்பட்ட இவனை சிறுவன் என்று சட்டம் அழைப்பதை நம் மனது ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது.  

மேற்கண்ட செயல்களை செய்த ஒருவனை நாம் எவ்வாறு சிறுவனாக கருத முடியும். அதிலும் ஒரு பெண்ணை கற்பழித்தவனை வயதுக்கு வராத சிறுவனாக கருதுவது என்பது முரண்பாடானது, பதினேழு வயதுக்கு குறைவான ஒரு குற்றவாளியை சிவில் வழக்குகளில் வேண்டுமானால் நாம் சிறுவனாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திட்டமிட்டு, காட்டுமிராண்டித்தனமாக கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட  பதினேழு வயதுக்கு குறைந்த ஒருவனை நாம் சிறுவனாக கருதமுடியாது. அவன் மற்ற ஐந்து குற்றவாளிகளைப் போலவே சமமாகக் கருதப்பட்டு, தண்டனை வழங்கப்படவேண்டும்.

மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்களில் வழக்கமாக ஈடுபட்டிருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் சம்பவம் நடந்த அன்று, குறிப்பிட்ட பெண்ணும், நண்பரும் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர், முந்திய பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இப்போதைய வழக்கில் சில ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையானால் கூட இவர்கள் மீண்டும் இதே போன்ற செயல்களில் ஈடுபட நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும், மீண்டும்  அதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் என்னும் ஊரில் புனிதா என்ற சிறுமி கற்பழிக்க முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்குள் குற்றவாளி போலிசாரால் கைது செய்யப்பட்டான். விசாரணையில் அவன் ஏற்கனவே தன்  உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்தகாரம் செய்ய முயற்சி செய்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட விவரம் வெளியானது. அந்த வழக்கில் பெயிலில் வெளியே வந்திருந்த பொழுது மீண்டும் அதே பாலியல் குற்றத்தை செய்திருக்கிறான். எனவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இரக்கம் காட்டுவோரும், மனித உரிமை பேசுவோரும்         அவர்கள்  அடுத்து  செய்யப் போகும்  குற்றங்களுக்கு துணை போவதாகவே நாம் கருத வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம், மேற்கண்ட டெல்லி கற்பழிப்பு வழக்கில் மிகப்பெரும் குற்றங்களை மைனர் சிறுவன் செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. தானே இக்குற்றத்தின் பெரும்பகுதியை செய்ததாக அவன் ஒப்புதல் வாக்குமூலம்கூட கொடுத்திருக்கலாம். அது அனைத்து குற்றவாளிகளும் சிறிய தண்டனையுடன் தப்பிப்பதற்கான ஒரு சிலரின் திட்டமிட்ட சதியாக கூட இருக்கலாம். மைனர் குற்றவாளி எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் அவனுக்கு மூன்று வருடத்திற்கு மேல் தண்டனை கிடையாது. எனவே அனைத்து குற்றங்களையும் மைனர் குற்றவாளி மீது சுமத்தும்போது அவனுக்கும் குறைந்த தண்டனை, மற்றவர்களுக்கும் குறைந்த தண்டனை என்பது அவர்களின் சூட்சுமமாக இருக்கலாம். சட்டமும், காவல்துறையும், மக்களும் உஷாராக இருக்கவேண்டும்!
More than a Blog Aggregator

சனி, 5 ஜனவரி, 2013

டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசு வெளியிடவேண்டும்!



கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அப்பெண்ணின் சம்மதமில்லாமல் வெளியிடுவதை இந்திய சட்டம் தடை செய்கிறது, மேலும் அப்பெண் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்தினரின் சம்மதமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட  இந்திய சட்டம் தடை செய்கிறது, டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது மகளின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று அப்பெண்ணின் தந்தை பிரிட்டனில் இருந்து வெளியாகும் Sunday People செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். தனது மகளின் பெயரை உலகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் மேற்கண்ட பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது புகைப்படம், தனது குடும்பத்தாரின் புகைப்படம், தனது வீட்டின் புகைப்படம், தனது மகளின் பெயர் என அனைத்தையும் வெளியிட அனுமதித்த அவர், தனது மகளின் புகைப்படத்தை மட்டும் தற்போது வெளியிடவேண்டாம் என்று அப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையார் தெரிவித்துள்ள கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது ஆகும். அவரின் மனோதைரியம் அவருடைய மகளின் மனோதைரியத்தை போலவே மிகவும் உயர்ந்தது. டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை. தன்னை குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முயலும்போது பட்ட காயங்களால் அவர் இறந்துள்ளார். சம்பவத்தின் போதும், அதன் பின்னரும்  அப்பெண் காட்டிய மன தைரியம் இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமை தரக்கூடியது. எனவே அவர் இந்திய பெண்களின் அடையாளமாக உள்ளார். எனவே அப்பெண்ணின் பெயர் மறைக்கப்படவேண்டிய விஷயமில்லை. பெருமையுடன் உலகிற்கு அறிவிக்கப்படவேண்டிய தகவல்தான் அது. ஆகையால் அப்பெண்ணின் பெயரை வெளியிடவேண்டும் என்ற தந்தையின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள கூடியதுதான்.

மேலும் அப்பெண்ணின் பெயரை வெளியிடுவது என்பது இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டு நடைபிணமாக வாழும் பல பெண்களின் மன தைரியத்தை அதிகரிக்கும். அவர்களுக்கு வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை டெல்லி சம்பவத்தில் இறந்த பெண்ணின் பெயர் என்றும் உணர்த்திக்கொண்டிருக்கும். அப்பெண்ணின் பெயர் உலகத்திற்கு அறிவிக்கப்படாவிட்டால் கால ஓட்டத்தில் இந்த சம்பவமே மறக்கப்படக்கூடும். அதுவே பலரின் விருப்பமாக கூட இருக்கலாம். எனவே டெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அதுமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்திற்கு டெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வைப்பது கூட சரியான முடிவுதான். அதுவே பாலியல் கொடுமைகளுக்கு எதிரான மக்களின் விழிப்புணர்வை என்றும் எழுச்சியுடன் இருக்கச்செய்யும்.

ஒருவரின் உயிரை அழிப்பதைவிட, உணர்வுகளை அழிப்பது என்பது மிகப்பெரும் குற்றமாக கருதப்படவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் உயிரை அழிப்பது என்பது அந்த நிமிடத்தோடு முடிந்து போவது, உணர்வுகளை அழிப்பது என்பது பாதிக்கப்பட்டவர் வாழும் வரை அனுபவிக்கக்கூடியது. எனவே பாலியல் கொடுமைகளுக்கு மரண தண்டனை என்பது நியாயமானதுதான். குறைந்த பட்சம் பாலியல் கொடுமைகளில் சம்பந்தப்பட்ட பெண் இறக்கும் நிலையிலாவது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.  

More than a Blog Aggregator