புதன், 16 ஜனவரி, 2013

தேசிய பிரச்சினைகளும், பிரதமரின் மௌனமும்!இந்தியாவில்  பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  அரசு ஏதாவது  நடவடிக்கை எடுக்கிறதா  என்பதுதான் மிகப்பெரும் சந்தேகமாக உள்ளது பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும், நாம் ஏன் தேவை இல்லாமல் பிரச்சினைக்குள் தலையை விடவேண்டும்  என்று அரசியவாதிகள் நினைப்பார்கள் போல!. பிரச்சினை முற்றி பொதுமக்கள் தெருவில் வந்து போராட ஆரம்பித்த பின்புதான் இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.  இவர்கள் ஒவ்வொருமுறை உறக்கத்திலிருந்து விழிப்பதற்கும் மக்கள் ஒவ்வொருமுறையும் தெருவில் இறங்கி போராட வேண்டியிருக்கிறது.  லோக்பால், டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவம், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த்  ஊழல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் மக்களும், மீடியாவும், நீதித்துறையும்  போராடியிருக்காவிட்டால் UPA அரசு ஒருபோதும் நடவடிக்கை எடுத்திருக்காது. 

தேசிய பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்காதது ஒரு குற்றச்சாட்டு  என்றால், அந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் தனது  வாயை திறப்பதே இல்லை  என்பது மற்றொரு குற்றச்சாட்டு.  தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்பதை அறியவே மக்களுக்கு பல மாதங்கள் ஆகிவிடுகிறது. ஊரே தீப்பிடித்து  எரிந்தாலும் தனது வாயை திறப்பதில்லை என்ற கொள்கையில் மட்டும் பிரதமர் ஒருபோதும் தவறுவதில்லை. நாட்டின் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் பிரதமர் வாயை திறக்க எவ்வளவு காலம் பிடித்தது என்பதை இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு அட்டவணையில் காட்டியுள்ளது.

குறிப்பாக இரண்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினரால் கொலை செய்யப்பட விவகாரத்தில் பிரதமர் ஒன்பது நாட்களுக்குப் பிறகு கருத்து கூறியது பலவித குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. பலர் பல கருத்துக்களை தெரிவித்தாலும் பிரதமரின்   கருத்தைத்தானே நாம் சந்தேகமின்றி நம்ப முடியும். பிரதமர் தனது கருத்தை அல்லது கண்டனங்களை உடனடியாக தெரிவிக்காதது என்னுள் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கியது. பாகிஸ்தான் கூறிய வாதங்கள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கூட என் மனதில் உருவாக்கியது. அந்த சம்பவம் குறித்து கருத்து கூற பிரதமர்க்கு ஏன் ஒன்பது நாட்கள் தேவைப்படுகிறது?. இந்த ஒரு சம்பவத்தில் மட்டுமல்ல. எந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டாலும் பிரதமர் இதே கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார். 
   
பொதுவாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் மக்களுக்கு எந்த விஷயமும் தெரியவேண்டியதில்லை என்ற எண்ணத்தில் ஒரு அரசு செயல்படுவது அரசுக்கு நல்லதல்ல. தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்று ஓவ்வொரு இந்திய குடிமகனும் அறிய முற்படுவது நியாயமான விஷயம்தான். ஜனநாயக நாட்டில் அது பிரதமரின் கடமையும் கூட. அது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்லவே!?. ஏதாவது கருத்தை கூறி கூட்டணி கட்சிகளிடம் மாட்டிக்கொள்வதை விட, வாயையே திறக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார் போலும்! இதனை புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அவர் கருதலாம். ஆனால் மக்கள் அவரை  பலவீனமான பிரதமராகத்தான் கருதுவார்கள் என்பதே உண்மை.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்: