திங்கள், 30 ஜூலை, 2012

நிலாச் சோறுநிலாச்சோறு மறந்து
டிவிசோறு உண்ணும
குழந்தைகள்

அறிவால்
உலகம் வென்று
தூரத்தால்  
சொந்தம் இழந்த
வாரிசுகள் 

தொலைகாட்சி நாடகங்களில்
தொலைந்துபோன
இல்லத்தரசிகள்
  
தூங்கியபின் வந்து
விழிக்கும் முன்
காணாமல் போகும்
குடும்பத்தலைவர்கள்  

மூத்த குடிமக்களை
முதியோர் இல்லத்திற்கு
தத்து கொடுத்த
குடும்பங்கள்

பிரசவிக்கும் மண்ணில்  
தனக்கு தானே
கட்டிய கல்லறைகளாக
மாட மாளிகைகள்


இயற்கையின்  உயிர்த்தன்மை கொன்று 
நெளியும் புழுக்களாய்
மனிதர்கள்

எந்தன் கூட்டின்
நிலா முற்றத்தில்  
ஒன்றாய் கூடி
கதைகள் பேசி
உண்டு களித்து
இன்புற்றிருக்கும்
புன்னகை முகங்கள்
இனி
காண்பது கூடுமோ?!
கனவாகி போகுமோ?!

ஏக்கங்களை  
மூளையின் செல்களில்
புதைத்து
காத்திருக்கிறேன்
இயந்திரமாய்!
More than a Blog Aggregator

திங்கள், 23 ஜூலை, 2012

காமம்! காதலின் கடவுள் துகள்!!காமம்!
காதலின் கடவுள் துகள்  
உனக்கும் எனக்கும்
சமத்துவ பேரின்ப வரம் தந்த
மார்க்சிய கடவுள்

மனு தோன்றா காலத்து தோற்றம் என்றும்
முதுமை காணா  மார்கண்டேயன்
இருப்பின் உயிர் மூலம்

நேற்று போல் இன்றில்லை
இன்று போல் என்றுமில்லை
நாளையும் இன்றுபோல் இருப்பதில்லை
ஒவ்வொரு நாளும் அந்நியம்
ஆனாலும் மிக அந்நியோன்யம்

சாகும் வரை சலிப்பதில்லை நான்
சாகும் வரை சாவதுமில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை
மாயாஜாலம் காட்டும்
மாயக் கண்ணன்

காதலென்னும் உலக மதம் தந்து
மதம் அழித்த ஆத்திகவாதி

கரை காண முடியா பேரின்ப கடல்
விண்டது ஒரு துளிதான்   அந்த
காமேஸ்வரனின் அடி முடி காணும் வரை
எந்தன் உயிர் வழி பயணம் தொடரும்!


More than a Blog Aggregator

வியாழன், 19 ஜூலை, 2012

கோலா குளிர் பானங்களில் ஆல்கஹால் - அதிர்ச்சிகர ஆய்வு முடிவு!கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இரசாயன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது போன்ற தகவல்கள் நாம் ஏற்கனவே  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நாம் அவைகளை தொடர்ந்து மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். உணவகங்கள் செல்லும் போது கவனிக்கிறேன். நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்யும் போது கவனிக்கிறேன். நீருக்குப் பதிலாக கோகோ கோலா மற்றும் பெப்சி பானங்களை மக்கள் அருந்துகிறார்கள். இயற்கை தந்த நீரை விட சிறந்த பானம் உலகில் எதுவுமில்லை. அற்புதமான சத்துக்கள் அடங்கிய இளநீர் அருந்த யாருக்கும் விருப்பமில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வேறுபாடு இல்லாமல் கோகோ கோலா மற்றும் பெப்சி பானங்கள் அருந்தப்படுகின்றன. கோகோ கோலா, பெப்சி பானங்கள் அருந்துவது ஒரு காலத்தில் நாகரிகத்தின் அடையாளமாக இருந்து இன்று அது தவிர்க்க முடியாத போதையாகி விட்டது.

இந்த மேற்கத்திய கலாச்சாரத்தால் நாம் பெற்ற பயன்தான்,    இந்தியா இன்று நீரிழிவு நோயின் தலைநகரம் என பெயர் வாங்கியிருக்கிறது. மேற்கத்திய உணவு வகைகளுக்கு நாம் மாறியதால்தான் இன்று உலகில் அதிக இதய நோயாளிகள் இந்தியாவில் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

கோகோ கோலா மற்றும் பெப்சி  குளிர்பானங்களில் ஆல்கஹால் அடங்கியிருப்பதை  தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இனி நாம்  கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களை அருந்தும்பொது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

பிரெஞ்சு அறிவியல் பத்திரிகை  ஒன்றில் வெளியான ஆராய்ச்சி கட்டுரையில் கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் மிக குறைந்த அளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது  என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஆராய்ச்சி முடிவு  பாரிசில்  உள்ள National Institute of Consumption என்ற அமைப்பினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  உலகின் முன்னணி கோலா வகை பானங்களில்,  50%  வகை பானங்கள்  ஆல்கஹால் கொண்டிருக்கின்றன என்றும், கோகோ கோலா மற்றும் பெப்சி கோலா பானங்களும் இதில் அடங்கும் என்றும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இவ்வகை பானங்களில் ஆல்கஹால் ஒரு லிட்டருக்கு 10mg  என்ற மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது என்பது சற்று மன நிம்மதியை தரும் செய்தியாகும்.


19 வகையான கோலா பானங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டதில், 9 வகையான பானங்கள் ஆல்கஹாலை  கொண்டிருக்கவில்லை என்றும், மற்ற 10 வகை பானங்கள் ஆல்கஹாலை கொண்டிருந்தன என்றும், Pepsi Cola, Coca Cola, Classic Light  மற்றும்  Coke Zero ஆகிய பானங்கள் ஆல்கஹாலை கொண்டிருந்தன என்றும் தனது ஆராச்சி கட்டுரையில் மேற்கண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இளநீரில் உள்ள சத்துக்கள்:
1.        நீர்=95%
2.        பொட்டாசியம்=310 மி.கிராம்
3.        குளோரின்=180 மி.கிராம்
4.        சோடியம்=100 மி.கிராம்
5.        கால்சியம்=30 மி.கிராம்
6.        மக்னீசியம்=30 மி.கிராம்
7.        பாஸ்பரஸ்=37 மி.கிராம்
8.        சல்ஃபர்=25 மி.கிராம்
9.        இரும்பு=0.15 மி.கிராம்
10.    காப்பர்=0.15 மி.கிராம்
11.    வைட்டமின் B=20 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில்  உள்ள சத்துகள்.
இளநீரின் மருத்துவப் பயன்கள் :
சிறுநீரகக் கோளாறுகளுக்கும், சிறுநீரகக் கற்கள் பிரச்சினைக்கும், இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இளநீர் மிக நல்ல நீரிளக்கி ஆக இருப்பதுதான். காலராவுக்கு சிகிச்சையளிக்கும்போது இளநீர் அருந்துவது பயன்தரும். காலராவின்போது, வாந்தி பேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே, முக்கியமான தாது உப்புக்களும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கும் ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புக்களையும் சேர்க்கும். மேலும், இளநீர் நோய்க்கிருமி எதிர்ப்புச் சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றவும் செய்யும். ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியத்தை உடலில் ஏற்றுவதைவிட இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது என்று வெப்ப நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இளநீரிலுள்ள வைட்டமின் பி கலவைச் சத்து இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல்துடிப்போடு சீராக்கும்.

ஆனால் குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்", காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும்.

எனவே பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஆல்கஹால் வாங்கி கொடுக்கப் போகிறீர்களா? அல்லது அக்கறையுடன் இளநீர் வாங்கி கொடுக்கப் போகிறீர்களா?. சற்றே யோசியுங்கள்.
More than a Blog Aggregator

ஞாயிறு, 15 ஜூலை, 2012

சிகரெட் குடிக்கும் பழக்கத்தை நிறுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பு!


சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனாலும் தங்களுடைய மன உறுதியால் சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு முடியாதவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒரே ஒரு தடுப்பு ஊசி  உங்களின் பல வருட கால விட முடியாத சிகரெட் பழக்கத்தை விட்டு விடச்செய்யும். அதுமட்டுமில்லாமல் சிகரெட் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் பிற்காலத்தில் அப்பழக்கம் உருவாகாமல் இருக்க தடுப்பு மருந்தாகவும் உபயோகிக்க முடியும். நிகோடின் அடிமையாக உள்ள நம்மை நிகோடினை வெறுக்கும் மனிதனாக மாற்றும்.

விஞ்ஞானிகள் புதியதாக கண்டுபிடித்துள்ள இந்த DNA தடுப்பு ஊசி  நம் உடம்பில் சிறப்பு எதிர்ப்பு சக்தியினை (Antibodies) உருவாக்கி நம்மை சிகரெட்டை வெறுக்கச் செய்கிறது. ஒரே ஒரு முறை மட்டுமே இந்த தடுப்பு ஊசியினை  பயன்படுத்தினால் போதும் என்றும், அதுவே நாம் வாழ் நாள் முழுவதும் சிகரெட்டை உபயோகிக்க விடாமல் தடுக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கண்டுபிடிப்பு  பாதுகாப்பானது மற்றும்  பயன் தரக்கூடியது என்று உறுதியாக  நிரூபிக்கப்பட்டால். இந்த தடுப்பு ஊசியானது பள்ளிக்கூட தடுப்பு ஊசி அட்டவணையிலும் இடம் பிடிக்க முடியும். காரணம்  இன்று காச நோய்க்கான தடுப்பு ஊசியை விட சிகரெட் பழக்கத்தை விட செய்வதற்கான தடுப்பு ஊசியே முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது இந்த தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு நிலையிலேயே  உள்ளது எனவும்,  எலியின் மீது பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது எனவும் டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 2014 ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் மீதான  பரிசோதனைகள் செய்யப்படும் எனவும், 5 ஆண்டுகளுக்கு பின்னரே தடுப்பு ஊசி விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது எனவும், தடுப்பு ஊசி மீதான ஆரம்ப கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக உள்ளது எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு ஊசியானது  வடிவமைக்கப்பட்ட ஜீன்களை கொண்டது. அவை உருவாக்கும் ஜீன்கள், சிகரெட் உருவாக்கும் நிகோடின் மூளையை சென்று அடைவதை தடுக்கிறது, அதன் காரணமாக நிகோடினின்  போதையினை தூண்டும் செயல் தடுக்கப்பட்டு ஒருவர் நிகோடின் அடிமையாக மாறுவது தடுக்கப்படுகிறது. ஒருவரது கல்லீரல் இத்தகைய எதிர்ப்பு சக்தியினை வாழ்நாள் முழுவதும் உற்பத்தி செய்கிறது. எனவே அவர் எப்போது சிகரெட்டை உபயோகிக்க தொடங்கினாலும் இந்த எதிர்ப்பு சக்தி வேலை செய்ய தொடங்குகிறது.

மேற்கண்ட தடுப்பு ஊசியானது Weill Cornell Medical College,  New York – இல் உருவாக்கப்பட்டு வருகிறது.

இக்கண்டுபிடிப்பு வெற்றிகரமாக நடைமுறைக்கு வருமானால் அதுவே இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும்.
More than a Blog Aggregator

சனி, 14 ஜூலை, 2012

ராஜபக்சவின் தப்புக்கணக்கு! - தினமணி தலையங்கம்


ராஜபக்சவுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், வடக்கு மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!- என்கிறது தமிழ்நாட்டின் தினமணிநாளேட்டில் இன்று வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்.
அதிபர் ராஜபக்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.

      அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ச, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்டம்பருக்குப் பிறகு நடத்தலாம் என்கின்ற முடிவை அறிவித்திருக்கிறார். தேர்தலைத் தள்ளிப்போட அவர் அளித்துள்ள முக்கியக் காரணம் வாக்காளர் பட்டியல் தான். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது.

     தற்போது இப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், முன்பு புலிகளின் அச்சத்தால் வெளியேறிய தமிழர்கள் திரும்பிவந்து மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கியுள்ளனர். ஆகவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பிறகு இங்கே முறையாகத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது ராஜபக்ச அரசின் அறிவிப்பு.

    இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் நமது சந்தேகம். கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது. தமிழர்கள் வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழர்கள் வாக்களித்தார்கள். அதிக இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள். இப்போது மட்டும் ராஜபக்சவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?.  

   யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம். அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும். மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபக்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.

    இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், “மேலை நாடுகளின் தீயசக்திகள்”, வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபக்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள். இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபக்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் மேலை நாடுகளின் தீயசக்திகள்என்றெல்லாம் பேசுகிறார்கள்.

    வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர் கொண்டிருக்கின்றன. புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான். தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல.

  ராஜபக்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.
அதிபர் ராஜபக்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும்.
ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபக்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.

    இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை. இலங்கையின் அடிப்படைப் பிரச்சினையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான்.

    அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனிதஉரிமைகள் மிதிக்கப்பட்ட போதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.

     இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது. அதை ஏன் ராஜபக்ச மறுக்க வேண்டும்? அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.

    நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!

More than a Blog Aggregator