திங்கள், 30 ஜூலை, 2012

நிலாச் சோறு



நிலாச்சோறு மறந்து
டிவிசோறு உண்ணும
குழந்தைகள்

அறிவால்
உலகம் வென்று
தூரத்தால்  
சொந்தம் இழந்த
வாரிசுகள் 

தொலைகாட்சி நாடகங்களில்
தொலைந்துபோன
இல்லத்தரசிகள்
  
தூங்கியபின் வந்து
விழிக்கும் முன்
காணாமல் போகும்
குடும்பத்தலைவர்கள்  

மூத்த குடிமக்களை
முதியோர் இல்லத்திற்கு
தத்து கொடுத்த
குடும்பங்கள்

பிரசவிக்கும் மண்ணில்  
தனக்கு தானே
கட்டிய கல்லறைகளாக
மாட மாளிகைகள்


இயற்கையின்  உயிர்த்தன்மை கொன்று 
நெளியும் புழுக்களாய்
மனிதர்கள்

எந்தன் கூட்டின்
நிலா முற்றத்தில்  
ஒன்றாய் கூடி
கதைகள் பேசி
உண்டு களித்து
இன்புற்றிருக்கும்
புன்னகை முகங்கள்
இனி
காண்பது கூடுமோ?!
கனவாகி போகுமோ?!

ஏக்கங்களை  
மூளையின் செல்களில்
புதைத்து
காத்திருக்கிறேன்
இயந்திரமாய்!
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து: