செவ்வாய், 10 ஏப்ரல், 2012

தூக்கமில்லையா? உங்கள் பிரச்சினையை தீர்க்க 7 வழிகள்!

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கு ஒரு பிரச்சினை. இரவில் தூக்கமே வருவதில்லை என்பதுதான் அது. தூக்க மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வரும் என்று ஒவ்வொரு மருந்துக்கடையாக ஏறி இறங்கினார். மருத்துவரின் பரிந்துரை இல்லாததால்  தூக்க மாத்திரை மருந்து கடையில் கிடைக்கவில்லை.  சில நாட்களில் தூக்கமில்லாமல் மிகவும் சோர்வாகிவிட்டார். அலுவலக பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன ஆயிற்று? என்று அவரிடம் கேட்டேன்.

ஒவ்வொரு நாளும் மிகுந்த களைப்புடன் படுக்கைக்கு செல்கிறார். ஆனால் ஒரு மணி நேரம் கூட ஆழ்ந்து தூங்குவதில்லை. இரவு முழுவதும் படுக்கையில் உருண்டும, புரண்டும் படுக்கிறார். ஆனால் தூக்கம் வருவதில்லை. ஏன் தூக்கம் வரவில்லை என்பதற்கான காரணமும் அவருக்கு தெரியவில்லை.

தூக்கமின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சில:

1)        ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குபவரைவிட, 5 மணி நேரம் தூங்குபவருக்கு மாரடைப்பு வர இரு மடங்கு வாய்ப்புண்டு.
2)        நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு.
3)        உடல் எடை அதிகமாகும் வாய்ப்புண்டு
4)       குறைவாக தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

Bangalore’s National Institute of Mental  Health and Neuro Sciences அறிக்கையின் படி இந்தியாவில் தூக்கமின்மை சம்பந்தமான வியாதிகளால் 20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோராயமாக 4 கோடி பேர் INSOMNIA என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். INSOMNIA நோய் என்பது பல நாட்கள், பல வாரங்கள் ஒருவர் தொடர்ந்து தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஆகும். ஆனாலும் மருத்துவரை அணுகுவதற்கு முன் இங்கு தரப்பட்டுள்ள 7 வழிமுறைகளை நாம் பொறுமையுடன் கடைபிடித்தால் தூக்கத்தை வரவழைக்க முடியும். உடனடியாக பலனை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள 7 வழிகளை பின்பற்றினால் நிச்சயம் பலனுண்டு.  இவ்வழிகளை பின்பற்றி பயனடைந்தவர்கள் நிறைய உண்டு. மேலும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்பே இங்கு தரப்படுகின்றன. O.K.  தூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா?

1) மது, சிகரெட், காஃபின் போன்ற போதை பொருட்களை தவிர்ப்பது நல்லது. INSOMNIA நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  கண்டிப்பாக மேற்கண்ட போதை பொருட்களை தவிர்க்க    வேண்டும். மேலும் இரவில் அதிக உணவு கூடாது. மசாலா அதிகம் உள்ள உணவு இரவில் உண்ணக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான உணவு மற்றும் மசாலா உணவு வகைகள் நமது உடலின் ஜீரண வேலையை அதிகமாக்குகிறது. இதனால் உடல் ஓய்வு பெறுவது தடுக்கப்படுகிறது.  

2) வேலைப்பளு காரணமான மன அழுத்தம் தூக்கமின்மைக்கு காரணமாகிறது. மிக பெரிய வெற்றியாளர்கள் கூட மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். நாளை என்ன வேலைகளை செய்ய வேண்டும்? என்ற சிந்தனை அவர்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. அதுவே தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. எனவே அலுவலக வேலை முடிந்த பின், படுக்கைக்கு செல்லும் முன் இடைப்பட்ட நேரத்தை இளைப்பாறுதலாக பயன்படுத்தலாம். உதாரணமாக புத்தகங்கள் படித்தல், நண்பர்களுடன் உரையாடுதல் போன்றவற்றை செய்யலாம். உங்கள் மனதில் உள்ள கவலை தரும் பிரச்சினைகளை டைரியில் வரிசையாக எழுதுவது கூட உங்களை அமைதிப்படுத்தலாம். பிரணாயாமம், தியானம் மற்றும் எளிய யோகப் பயிற்சிகளை செய்யலாம்.

3) வாரத்தில் மூன்று நாட்கள் அரை மணி நேரம் ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் பயிற்சி செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் உடலுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். எனவே தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில்  இரவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடலை உற்சாகப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தூக்கம் வருவதில்லை. ஆனால் உடலுறவு இதில் அடங்காது.

4) படுக்கை அறையில் கவனிக்கவேண்டியவை: 

(அ)
படுக்கை அறை மிக அமைதியாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க படுக்கைக்கு செல்வதற்கு முன் அனைத்து ஜன்னல்களையும், கதவுகளையும் திறந்து வைக்கலாம் அல்லது படுத்த பின் இரவில் ஜன்னலை லேசாக திறந்து வைக்கலாம்.

(ஆ)
Air Conditioned அறை எனில், அறையின் வெப்பநிலையை   உடலுக்கு பொருத்தமான, இதமான வகையில் வைத்து  கொள்ளவும்.

(இ)
படுக்கும் போது படுக்கை அறையினை முடிந்த அளவு   
 ஸ்க்ரீன் துணிகளை பயன்படுத்தி இருட்டாக்கிக் கொள்ளவும்.  வெளிச்சமான அறையிலும், சத்தம் உள்ள அறையிலும் தூங்குவதை தவிர்க்கவும்.

(உ)
அறையினை கொசு தொல்லை இல்லாதவாறு அமைத்து கொள்ளவும்.

(ஊ)
மிக கடினமான, அல்லது மிக மென்மையான mattress- ஐ தவிர்க்கவும். நடுத்தரமான mattress-ஐ  பயன்படுத்தவும். படுக்கும் போது உடலின் வளைவுகளுக்கும் mattress க்கும் இடையே இடைவெளி இல்லாதவாறு இருக்கவேண்டும். Mattress,  உடலின் வளைவுக்கு ஏற்றவாறு உடம்போடு தழுவுமாறு இருக்கவேண்டும்.


(5) ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் தூங்கி, சரியான   நேரத்தில் எழுந்திருங்கள். ஒவ்வொரு நாளும் குறுப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும் பழக்கம்  நமது உடல் கடிகாரத்தை குழப்பாது. அது நமது உடலின் சமச்சீர் தன்மையை பாதுகாக்கும். ஒரு நாளின் அதிகப்படியான தூக்கம் அடுத்த நாளின் குறைவான தூக்கத்தை நிவர்த்தி செய்யாது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. பகல் தூக்கம் குறைவான நேரமாக இருந்தாலும் அது இரவு தூக்கத்தை முழுமையாக கெடுத்துவிட வாய்ப்புண்டு.

6) படுக்கைக்கு செல்லும் முன் 34C  முதல் 38C வெப்ப நிலை உள்ள வெந்நீரில் குளிப்பது நல்லது. குளிக்கும் நீரில் லாவேண்டர் ஆயில் சேர்க்கலாம். அல்லது தலையணையில் லாவண்டர் ஆயில் ஸ்ப்ரே செய்யலாம். வாழைப்பழம்  அல்லது தேன் கலந்த பால் சாப்பிடலாம். இவற்றில் உள்ள L-tryptophan தூக்கத்தை வரவழைக்க மூளையை ஊக்கப்படுத்துகிறது.

7) கடிகாரத்தின் பிரதிபலிக்கும் வெளிச்சமும், டிக் டிக் சத்தமும் உங்களை தொந்திரவு செய்யாதவாறு கடிகாரத்தை அறையில் அமையுங்கள். தூக்கம் வராவிட்டால் படுக்கையில் வீணாக உருண்டு, புரண்டு கொண்டிருக்க வேண்டாம்.  படுக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு விருப்பமான செயலைச் செய்யுங்கள். உதாரணமாக டிவி பாருங்கள், வீடியோ கேம்ஸ் விளையாடுங்கள்.  பின் தூக்கம் வரும்போது மறுபடி படுக்கைக்கு செல்லுங்கள்.

இந்த ஆலோசனைகள் பலருக்கு உதவியுள்ளது. ஆனால் பொறுமை மிக அவசியம். இந்த ஆலோசனைகளை பல வாரங்கள் பின்பற்றிய பின்னும் பிரச்சினை தொடர்ந்தால் நீங்களாகவே மருந்துகளை குறிப்பாக தூக்க மாத்திரைகளை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டாம்.  மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து தூக்கத்தை வசப்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

   

 
More than a Blog Aggregator

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

13+ அரசியல் தீர்வு: ராஜபக்சவின் அந்தர்பல்டி! இந்தியா அதிர்ச்சி!

1987 ல் கையெழுத்திடப்பட்ட   இந்தியா இலங்கை இடையேயான  ஒப்பந்தத்தின் படி இலங்கையின் 13  வது அரசியல் சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டது. ராஜீவ்காந்தி மற்றும்  ஜெயவர்த்தனே ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி 13+ அரசியல் தீர்வு திட்டத்தினை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பது இந்தியாவின் கொள்கை. 13+ அரசியல் தீர்வு திட்டம்   இலங்கையின்  மாகாணங்களுக்கு அதிக உரிமைகளை தருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள கூட்டாட்சி (Federal set up) முறை போன்றது. இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் போன்று இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு அதிகாரத்தை தருகிறது மேலும் 13+  அரசியல் தீர்வு திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை பிந்தைய கருத்துக்கணிப்பு (referendum)  மூலம் இணைப்பது  குறித்த வழிகாட்டுதல்களையும் முறைகளையும் உள்ளடக்கியது.

போருக்குப்  பின்னால்  இலங்கையில்  13+  அரசியல் தீர்வு திட்டம்  அமல்படுத்தப்படும் என போர் நடக்கும்போது அறிவித்த ராஜபக்ச, தற்போது தலைகீழாக பல்டி அடித்து  இந்தியாவின் முகத்தில் கரியை பூசி உள்ளார். வழக்கம் போல் ஏமாந்து நிற்கிறது இந்தியா. ௦01-04-2012 அன்று நிருபர்களுக்கு பேட்டி  அளித்த  ராஜபக்ச  தான்  13+ அரசியல் தீர்வு திட்டத்தை  அமல்படுத்தப்போவதாக இந்தியாவிடம் எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றார். மேலும் PSC (Parliamentary select committee) கமிட்டியே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறியுள்ளார். அப்போது நிருபர்கள் அவரிடம், அப்படியானால் இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணா உடனான சந்திப்பின் போது தாங்கள் 13+ வது அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டு வரபோவதாக இந்தியாவிடம் உறுதிமொழி அளித்ததாக இந்தியா கூறியது பொய்யா? என்று கேட்ட போது அதற்கு ராஜபக்ச தான் முதலில் இருந்து 13+ திட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும், தற்போதும் ஆதரவாக உள்ளதாகவும், ஆனால் தமிழ் கட்சிகள் தங்கள் விருப்பங்களை PSC குழுவிடம் முன்வந்து தெரிவிக்கவேண்டும் எனவும், அதன் பின் PSC குழு இதுதான் நீ  செய்ய வேண்டியது  என்று சொன்னால் அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற தான் எந்த தடையும் சொல்ல போவதில்லை என்றும், ஆனால் இந்த பிரச்சினை  தன்னுடைய சொந்த பிரச்சினை இல்லை  என்றும், பாராளுமன்றமே PSC குழுவின்  பரிந்துரைகளை நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.  ஆனால் இதற்கு முன்னர் ராஜபக்சவும், இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணாவும் கூறிய கூற்றுக்களை சற்று நினைவுபடுத்தி பார்ப்போமானால் ராஜபக்சேயின் அந்தர்பல்டி நமக்கு புரியும்.

ஜனவரி பதினேழாம் தேதி அன்று ராஜபக்ச உடனான சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வு  குறித்து தான் ராஜபக்ச உடன் விவாதித்ததாகவும், அப்போது ராஜபக்ச 13+ அரசியல் தீர்வு திட்டத்தினை  இலங்கையில் அமல்படுத்துவதில் உறுதியாக  இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
2011 மே மாத இறுதியில் புதுடெல்லியில் வெளியிடப்பட்ட இந்திய இலங்கை வெளிநாட்டு மந்திரிகளின் கூட்டறிக்கையில் “A devolution package, building upon the 13th Amendment, would contribute towards creating the necessary conditions for such reconciliation.” என்று தெரிவித்தனர்.
போர் நடைபெறும்போது, இந்தியாவின் உதவி தேவைப்பட்டதால்  13+ திட்டம் இலங்கையில் நிறைவேற்றப்படும் என இந்தியாவுக்கு பொய் உறுதிமொழி அளித்து வந்த ராஜபக்ச, இப்போது PSC கமிட்டிதான் இது குறித்து முடிவு செய்யும் என்று கூறி இந்தியாவை கழற்றிவிடப் பார்கிறார்.. அதுமட்டுமில்லால் இலங்கையின் பிரச்சினைக்கு சமாதான தீர்வு காண எந்த வெளிநாட்டு உதவியும் தேவை இல்லை என்கிறார். எது எப்படி இருந்தாலும்  இந்தியாவின் ராஜதந்திரம் இலங்கையிடம் மற்றொரு முறை தோற்று போனது மட்டுமே உண்மை.  
இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் லக்ஷ்மன் கிரியேல்ல தெரிவிக்கையில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் 13+ தொடர்பாக விளக்கம் கேட்டபோது இலங்கை அரசு மௌனம சாதித்ததனாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு கடுகளவு உரிமைகளை கூட தருவதற்கு இலங்கை அரசுக்கு எண்ணம இல்லை என்பதையே நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் தமிழர்கள் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இதுவரை முன் வைக்கப்படவில்லை. இலங்கையில் சமத்துவ, சம உரிமைகளை கொண்ட, ஏற்றத்தாழ்வு இல்லாத அதிகார பகிர்வினை ராஜபக்ச கொண்டு வருவார் என இனிமேலும்  யாராவது நம்பினால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.  


More than a Blog Aggregator

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சாராயம் விற்கும் அரசு ஏன் கள் விற்க கூடாது!?

 தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ  டாஸ்மாக் சரக்கிற்கு பஞ்சமே கிடையாது. வீட்டுக்கு வீடு மரத்தை வைங்கடான்னு சொன்ன அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கு அருகிலும் டாஸ்மாக் கடையை வைத்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைதான். பள்ளிக்கூடம், கோயில் என்று தடை செய்யப்பட பகுதிகளிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் கூட டாஸ்மாக் கடைகள் முளைத்து விடுகின்றன.

முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் சாராய கடைகள் இருக்கும் இடம் குடிமகன்களுக்கு மட்டும்தான் தெரியும்.  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்  அல்லது காட்டுப்பகுதியில்தான் கடை அமைந்திருக்கும். குடிக்கப்போகிறவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து சென்று குடித்து வருவார்கள். பகலில் குடிப்பது என்பது குடிப்பதிலும் மிக மோசமான பழக்கமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மது குடிப்பது என்பது நாகரிகமாக கருதப்படுகிறது. அதிலும் பார்ட்டி என்ற பெயரில்  கூட்டமாக மது அருந்துவது இன்று மிக நாகரிகமாக கருதப்படுகிறது. எதெற்கெடுத்தாலும் இன்று மது பார்ட்டிதான்.  கல்யாணம் என்றாலும் பார்ட்டிதான் கருமாதி என்றாலும் பார்ட்டிதான். பகலில் கூட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அரசிற்கோ டாஸ்மாக் என்பது வருமானம் தரும் கற்பகத்தரு. டாஸ்மாக் இன்று இல்லாவிட்டால் அரசாங்கமே ஸ்தம்பித்துவிடும் என்கிற நிலை வந்துவிட்டது. குடி குடியை கெடுக்கும். குடி பழக்கம் நாட்டை காக்கும் என்று ஸ்லோகத்தை மாற்றிவிடலாம். மாலை வேளைகளில் டாஸ்மாக் கடைகளை பார்க்கும்போது தமிழ்நாடே மதுவுக்கு அடிமையாகிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. இனி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது நடக்க இயலாத ஒன்று என்பதுதான் உண்மை.

ஆனால் என் மனதில் எப்போது எழும் கேள்வி ஒன்றுதான். வெளிநாட்டு மது வகைகளை விற்க ஆர்வம காட்டும் அரசு, கள்ளு கடைகளை திறக்க ஏன் அனுமதி தரவில்லை? என்பதுதான்.

தமிழ்நாட்டில்  பனை வளம் அதிகம். இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி ஆகும் அதில் 5.10 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பனை என்பது பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சோம, சுரா பானங்கள் என்பது ஆண் மற்றும் பெண் பனை மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கள்ளையே குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இன்று கள்ளுகடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் விளைவாக அம்மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அயல் நாட்டு மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு நடுத்தர அல்லது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தமிழனின் தினசரி வருமானத்தில் பெரும் பங்கு டாஸ்மாக் கடைகளிலேயே செலவிடப்பட்டுவிடுகிறது.  கள்ளு என்பது மிக குறைந்த விலையில் விற்க கூடிய மது வகை ஆகும். ஏனெனில் இதன் உற்பத்தி செலவு மிகவும் குறைவு. இதனால் மதுவுக்காக ஒரு தின கூலித்தொழிலாளி  செலவழிக்கக்கூடிய தொகை மிக குறைவாக இருக்கும். அவனது வருமானத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

மேலும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளை அரசாங்கமே தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் மூலம் கொள் முதல் செய்து  டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனை செய்யலாம். இதனால் அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.  மேலும் அரசாங்கமே கள்ளை விற்பதனால் கள்ளில் கலப்படம் செய்யப்படுவதையும்  தடுக்கலாம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளு கடைகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுவருவதை நாம் பார்க்க முடிகிறது. கேரளாவின் கள்ளுக்கடைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தளங்களாகவும் விளங்குகின்றன.


முக்கியமாக கள் விற்பனையை அனுமதிப்பதின் மூலம், அரசு பனை தொழிலை மட்டுமே  நம்பி உள்ள பல லட்ச பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய குடும்பங்களில் ஒளியேற்ற முடியும்.  சொல்லப்போனால்  கள்ளு கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்படுவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. பெரிய நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கும் மது உற்பத்தி துறையில், கடைகோடி தமிழனையும் அனுமதித்தால் அவனது பொருளாதாரம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் முன்னேற வழி பிறக்கும். எனவே அரசு இதனை ஒரு கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், கள்ளு கடைகளை திறக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பதே பல லட்சகணக்கான பனை தொழிலாளர்களின் கோரிக்கை.
More than a Blog Aggregator