ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சாராயம் விற்கும் அரசு ஏன் கள் விற்க கூடாது!?

 தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ  டாஸ்மாக் சரக்கிற்கு பஞ்சமே கிடையாது. வீட்டுக்கு வீடு மரத்தை வைங்கடான்னு சொன்ன அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கு அருகிலும் டாஸ்மாக் கடையை வைத்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைதான். பள்ளிக்கூடம், கோயில் என்று தடை செய்யப்பட பகுதிகளிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் கூட டாஸ்மாக் கடைகள் முளைத்து விடுகின்றன.

முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் சாராய கடைகள் இருக்கும் இடம் குடிமகன்களுக்கு மட்டும்தான் தெரியும்.  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்  அல்லது காட்டுப்பகுதியில்தான் கடை அமைந்திருக்கும். குடிக்கப்போகிறவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து சென்று குடித்து வருவார்கள். பகலில் குடிப்பது என்பது குடிப்பதிலும் மிக மோசமான பழக்கமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மது குடிப்பது என்பது நாகரிகமாக கருதப்படுகிறது. அதிலும் பார்ட்டி என்ற பெயரில்  கூட்டமாக மது அருந்துவது இன்று மிக நாகரிகமாக கருதப்படுகிறது. எதெற்கெடுத்தாலும் இன்று மது பார்ட்டிதான்.  கல்யாணம் என்றாலும் பார்ட்டிதான் கருமாதி என்றாலும் பார்ட்டிதான். பகலில் கூட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அரசிற்கோ டாஸ்மாக் என்பது வருமானம் தரும் கற்பகத்தரு. டாஸ்மாக் இன்று இல்லாவிட்டால் அரசாங்கமே ஸ்தம்பித்துவிடும் என்கிற நிலை வந்துவிட்டது. குடி குடியை கெடுக்கும். குடி பழக்கம் நாட்டை காக்கும் என்று ஸ்லோகத்தை மாற்றிவிடலாம். மாலை வேளைகளில் டாஸ்மாக் கடைகளை பார்க்கும்போது தமிழ்நாடே மதுவுக்கு அடிமையாகிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. இனி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது நடக்க இயலாத ஒன்று என்பதுதான் உண்மை.

ஆனால் என் மனதில் எப்போது எழும் கேள்வி ஒன்றுதான். வெளிநாட்டு மது வகைகளை விற்க ஆர்வம காட்டும் அரசு, கள்ளு கடைகளை திறக்க ஏன் அனுமதி தரவில்லை? என்பதுதான்.

தமிழ்நாட்டில்  பனை வளம் அதிகம். இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி ஆகும் அதில் 5.10 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பனை என்பது பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சோம, சுரா பானங்கள் என்பது ஆண் மற்றும் பெண் பனை மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கள்ளையே குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இன்று கள்ளுகடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் விளைவாக அம்மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அயல் நாட்டு மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு நடுத்தர அல்லது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தமிழனின் தினசரி வருமானத்தில் பெரும் பங்கு டாஸ்மாக் கடைகளிலேயே செலவிடப்பட்டுவிடுகிறது.  கள்ளு என்பது மிக குறைந்த விலையில் விற்க கூடிய மது வகை ஆகும். ஏனெனில் இதன் உற்பத்தி செலவு மிகவும் குறைவு. இதனால் மதுவுக்காக ஒரு தின கூலித்தொழிலாளி  செலவழிக்கக்கூடிய தொகை மிக குறைவாக இருக்கும். அவனது வருமானத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

மேலும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளை அரசாங்கமே தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் மூலம் கொள் முதல் செய்து  டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனை செய்யலாம். இதனால் அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.  மேலும் அரசாங்கமே கள்ளை விற்பதனால் கள்ளில் கலப்படம் செய்யப்படுவதையும்  தடுக்கலாம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளு கடைகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுவருவதை நாம் பார்க்க முடிகிறது. கேரளாவின் கள்ளுக்கடைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தளங்களாகவும் விளங்குகின்றன.


முக்கியமாக கள் விற்பனையை அனுமதிப்பதின் மூலம், அரசு பனை தொழிலை மட்டுமே  நம்பி உள்ள பல லட்ச பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய குடும்பங்களில் ஒளியேற்ற முடியும்.  சொல்லப்போனால்  கள்ளு கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்படுவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. பெரிய நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கும் மது உற்பத்தி துறையில், கடைகோடி தமிழனையும் அனுமதித்தால் அவனது பொருளாதாரம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் முன்னேற வழி பிறக்கும். எனவே அரசு இதனை ஒரு கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், கள்ளு கடைகளை திறக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பதே பல லட்சகணக்கான பனை தொழிலாளர்களின் கோரிக்கை.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. கள்ளு விற்பனை அதிகரித்தால் மது விற்பனை குறையும்...அப்புறம் எப்படி இலவசங்களை கொடுப்பது...

    பதிலளிநீக்கு
  2. அய்யா,
    சரியாக சொன்னீர்கள். எந்த ஒரு அரசாங்கமும் குறுகிய லாபங்களுக்காக மக்களுக்கு மீனைக் கொடுக்க நினைக்கிறதே தவிர மீன் பிடிக்க கற்று கொடுக்க நினைப்பதில்லை!

    பதிலளிநீக்கு