புதன், 28 மார்ச், 2012

காமம் காதலின் நீட்சியல்ல!

காமம்
காதலின் நீட்சியல்ல!

காமம்
காதலின்
உருவ வழிபாடு
உயிர் வடிவம்
உடலும் உயிரான அற்புதம்
சமத்துவ மதம்
ஆழ்நிலை தியானம்
உள்ளங்களின்  சமாதி நிலை

ளமை நதியில்
பொங்கி வரும்
காம வெள்ளத்தில்
மூழ்கி  முத்தெடுப்போம்
உயிரை உருவாக்கும்
அர்த்தனாரீஸ்வரராகி
கடவுளாவோம்

காமமில்லா காதல்
காதலில்லா காமம்
உயிரில்லா சடம்

காமத்தை
குற்றவாளியாக்கி
காதலை
சிறையிலடைக்காதீர்!
காமம் குற்றமல்ல.

கவே...
வாருங்கள் உலகத்தாரே!
காமத்தைக்
கொண்டாடி
காதலை
கரை சேர்ப்போம்.
More than a Blog Aggregator

செவ்வாய், 27 மார்ச், 2012

வறுமையை ஒழிக்க இந்திய திட்ட கமிஷன் அதிரடி திட்டம்!

இந்திய திட்ட கமிஷன் இந்தியாவில் வறுமையை குறைக்க பல திட்டங்களை ஐந்தாண்டு திட்டங்களில் அறிமுகப்படுத்துகிறது.
அதே போல் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழே  உள்ள மக்களின் (Below poverty line) எண்ணிக்கையையும்  கணக்கெடுத்து வெளியிடுகிறது. 2011-12 ஆம் ஆண்டிற்கான வறுமை தொடர்பான அறிக்கையினை இந்திய திட்ட கமிஷன் 19.03.2012 அன்று வெளியிட்டுள்ளது.

2010 – 2011 ஆம் ஆண்டில், கிராமப்புறத்தில் தினக்கூலி ரூ.26 க்கு கீழ் உள்ளவர்களும், நகர்புறத்தில் ரூ. 32 க்கு கீழ் உள்ளவர்களும்
வறுமையில் உள்ளவர்கள் (Below poverty line) என இந்திய திட்ட கமிஷன் வரையறுத்தது. அதாவது ஒரு நாள் வாழ்க்கை நடத்த கிராமப்புறத்தில் ரூ. 26 ம். நகர்புறத்தில் ரூ..32 ம் போதுமானது என்பது திட்ட கமிஷன் கருத்து. தற்போது 2011 – 2012 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், கிராமப்புறத்தில் தினக்கூலி ரூ.22.42 க்கு கீழ் உள்ளவர்களும், நகர்புறத்தில் ரூ. 28.35 க்கு கீழ் உள்ளவர்களும் வறுமையில் உள்ளவர்கள்  என இந்திய திட்ட கமிஷன் வரையறுத்திருக்கிறது.  இது 2010 2011 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட  தொகையை விட சுமார் ரூ.3.50௦ குறைவு ஆகும். 2010-2011 ஆம் ஆண்டை விட தற்போது விலைவாசி கிட்டத்தட்ட 50௦% முதல் 100% வரை கூடியுள்ள நிலையில், ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கைக்கான   பணத் தேவையினை  திட்ட கமிஷன் குறைத்துள்ளது..  மேலும் இந்தியாவில் வறுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரூ.22.42 ஐ வைத்து ஒரு இந்தியன் ஒரு நாள் வாழ்க்கையை  நடத்த முடியுமா? அது சாத்தியம் ஆகுமா? நடைமுறைக்கு ஒத்து வருமா? என்று கேட்டால் பிரதமர் மன்மோகன் சிங் கூட முடியாது என்றுதான் சொல்வார்.

பாவம்! திட்ட கமிஷன். எத்தனையோ திட்டங்களை போட்டாலும் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியவில்லை.  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அதன் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்தால் அது இந்தியாவில் நடக்கிற விஷயமா?. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடை நிலை அரசு ஊழியர்கள் வழியாக பாய்ந்து மக்களை அடையும் போது துரும்பாக இளைத்திருக்கும். இந்தியாவில் வறுமையை ஒழிப்போம் என்று பல அரசியல் கட்சிகள் கோஷம் போட்டாலும் சுதந்திரம் அடைந்து 64 வருடங்களாகியும்  இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் கூடியது.  இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களினாலும் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. எனவேதான் இந்திய திட்ட கமிஷன் வறுமையை ஒழிக்க இந்த  அதிரடி திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.(!?) அதுதான் காலுக்கேத்த மாதிரி செருப்பை வெட்டுவது  என்ற திட்டத்தை விட்டு செருப்புக்கேத்த மாதிரி காலை வெட்டுவது என்ற திட்டத்தை பின்பற்றுவது ஆகும். திட்ட கமிஷன் பேசாமல் வறுமை கோட்டுக்கான வரையறையை ரூ.௦0 என்று அறிவித்துவிட்டால், இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுகொள்ள வசதியாக இருக்கும்.

ஆனாலும் திட்ட கமிஷன் ஒரு விளக்கம் தருகிறது. 2004-2005 ஆம் ஆண்டின் பண வீக்கத்துடன் தற்போதைய பண வீக்கத்தை ஒப்பிட்டுதான் வறுமை கோட்டுக்கான வரையறை செய்யப்பட்டது என்று அது கூறுகிறது. உலகத்தில் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த பண வீக்க அளவீட்டினை மட்டும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது போலும. விலைவாசி எவ்வளவு கூடினாலும் பணவீக்கம் மட்டும் குறைந்து கொண்டே போகும். நம்மை போன்ற நடுத்தர மக்களுக்கும், பண வீக்க அளவீட்டிற்கும்  ஏதேனும் சம்பந்தம் உண்டா? என்பது பட்டிமன்றம் வைத்து தீர்வு கான வேண்டிய தலைப்பு ஆகும்.


இந்திய திட்ட கமிஷன் அறிவித்துள்ள வறுமை கோட்டுக்கான வரையறை ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் வறுமையில் உள்ள மக்களை மேலும் பாதிக்கும். அரசின் பல நலத்திட்ட உதவிகள்,  உண்மையில் வறுமையில் உள்ள ஏராளமான மக்களுக்கு இனி கிடைப்பது கேள்விக்குறியாகும்.  உதாரணமாக ரேஷன் பொருட்கள் விநியோகம், அரசின் பல்வேறு பென்ஷன் மற்றும் நல திட்டங்கள் ஆகியவற்றுக்கு தகுதியான மக்கள்,  வறுமை கோட்டுக்கான வரையறையின் படியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆகவே அரசின் இத்திட்டங்களால் பயன்பெரும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் இனி குறைக்கப்படும்.

இறுதியாக ஒரு நம்பிக்கை  செய்தி. இந்திய திட்ட கமிஷன் அறிவித்த மேற்கூறிய அளவீடு பல தரப்புகளிலும் எதிர்ப்புகளுக்கு உள்ளானதால் மத்திய அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போதைய வறுமை கோட்டு அளவீட்டு திட்டத்திற்கு பதிலாக வேறொரு புதிய திட்டம், பொருளாதார மற்றும் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பிற்கு  பிறகு  அமல் படுத்தப்படும் எனவும், அதுவரை பழைய அளவீட்டு திட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் வறுமை கோட்டுக்கான வரையறையை பாராளுமன்றம், அரசாங்கம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இணைந்து வரையறுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். திட்ட கமிஷன் அறிவிக்க இருக்கும் புதிய அளவீட்டு திட்டமாவது வெறும் ஏட்டு சுரைக்காயாக இருக்காமல் நடைமுறை சாத்தியம் உள்ளதாக இருக்கட்டும்.
More than a Blog Aggregator

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஐ.நா தீர்மானம்: தமிழர்களை ஏமாற்றிய இந்திய, அமெரிக்க அரசுகள்!

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. இது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை அளிக்கும் எனவும், ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் பெரும்பாலான தமிழர்கள் நம்புகிறார்கள். ஆனால் இத்தீர்மானத்தில் இலங்கைக்கு எவ்வித நெருக்கடி கிடையாது என்பதும் , ஈழத்தமிழர்களுக்கு  எவ்விதமான நன்மையையும் கிடையாது என்பதும்தான் உண்மை.

தொடக்கத்திலேயே இத்தீர்மானம் அமெரிக்காவினால் ஐ. நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டபோது எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவெடுத்தவுடன் இத்தீர்மானத்தின் மீதான எனது சந்தேகம் மேலும் அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் லட்சகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையை ஆதரித்தன. இந்தியாதான் பின் நின்று போரை நடத்தியது என்ற தகவலும் உண்டு. 2009 ஆம் ஆண்டு தமிழர்களை அழிக்க உதவிய அமெரிக்காவும், இந்தியாவும்,  2012 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவருவது ஏன்? என்ற சந்தேகம் பெருமளவில் இருந்து வந்தது.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக (!?) அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இதுதான்.

1)      பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை எடுக்கும் நடவடிக்கைகள்  சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

2)      கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை  நடைமுறைபடுத்தி , அனைத்து இலங்கை மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை  உறுதிபடுத்த வேண்டும்.

3) கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு   
       பரிந்துரைத்த பரிந்துரைகளில் இதுவரை என்ன நடவடிக்கை     
       எடுக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன நடவடிக்கை எடுக்கப்பட        
      இருக்கிறது என்ற விவரங்களை இலங்கை அரசு ஐ.நா மனிதப்
     பேரவையின் முன்பு வைக்க வேண்டும். போரில் சர்வதேச
     விதிகள் மீறப்பட்ட புகார்கள் குறித்து  கவனம் செலுத்த
      வேண்டும்.

4)      இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக இலங்கைக்கு ஐ. நா தொழில் நுட்ப உதவிகளை இலங்கைக்கு செய்ய வேண்டும். அதை இலங்கை அரசு எற்றுகொள்ள வேண்டும்


மேற்கண்ட தீர்மானத்தில் , இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி விசாரித்த  கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழுவை நியமித்தது யார்? இக்குழு ஐ.நா மனித உரிமை பேரவையினால் நியமிக்கப் பட்டது அல்ல. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட குழுதான் அது. தெளிவாகச் சொல்லப்போனால் இலங்கை அரசு தான் செய்த போர் குற்றங்கள் பற்றி தானே தயாரித்த அறிக்கைதான் கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை. இன்னும் சொல்லப்ப் போனால் எந்தப் படுகொலையும் நடைபெறவில்லை என ராஜபக்ஷே தயாரித்த அறிக்கைதான் அது.

ஆனாலும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் ஒரு நல்ல விஷயம் இருந்தது. ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணைகளுக்கு இலங்கை அரசு கட்டாயமாக கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அந்த ஒரு நல்ல விஷயத்தையும் இந்தியா ஒரு திருத்தத்தை தீர்மானத்தில் கொண்டு வந்து நாசமாக்கிவிட்டது. அத்திருத்தத்தின்படி ஐ.நா மனித உரிமை பேரவை, இலங்கையின் மீது எவ்வித ஆலோசனைகளையும், தொழில் நுட்பங்களையும் திணிக்க முடியாது. இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் ஐ.நா மனித பேரவை எவ்வித ஆலோசனைகளையும் இலங்கைக்கு வழங்க முடியாது. அதாவது குற்றம் செய்தவருக்கு அவருடைய ஒப்புதல் இல்லாமல் தண்டனை வழங்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய இலங்கை அரசுக்கு இத்தீர்மானம் நீதிபதி அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்ற தீர்மான வரிகள் மூலம் அமெரிக்கா தனிதமிழ் ஈழம் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளது தெரிய வருகிறது.  அதாவது ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தையை அமெரிக்கா தீர்மானத்தின் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தாது மட்டுமில்லாமல், இலங்கையர் என்ற வார்த்தையை  மட்டும் பயன்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இத்தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது அல்ல. முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவானதாகும்.

பிறகு ஏன் இலங்கை அரசு இத்தீர்மானத்தை கண்டு பயந்தது? உண்மையில் இலங்கை அரசின் ராஜ தந்திர நடிப்பு அது. ஐ.நா தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிரானது போல் அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளால் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கெதிரான உலக நாடுகளின் எதிர்ப்பு, இந்திய அரசுக்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பு ஆகியவற்றை சமாளிக்க அமெரிகா, இந்திய, இலங்கை அரசுகள் நடத்திய நாடகம்தான் இத்தீர்மானம்.  நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ வலிக்கிற மாதிரி நடி என்று மூன்று அரசுகளும் நடத்திய நாடகம்தான் இத்தீர்மானம்.  பெரும்பாலான தமிழர்கள் இத்தீர்மான வெற்றி ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என நினைக்கின்றனர். இத்தீர்மான வெற்றியினால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கடுகளவும் உபயோகமில்லை. சொல்லப்போனால் தனிதமிழ் ஈழத்திற்கு ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக அமெரிக்க, இந்திய அரசுகள் உலகிற்கு அறிவித்ததுதான் இத்தீர்மானம்.  
More than a Blog Aggregator

புதன், 21 மார்ச், 2012

செல்போன் உபயோகிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய 4 முக்கிய குறிப்புகள்

செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது  அவசரத்திற்கு உதவக்கூடிய  4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.


112    - Network signal  இல்லாத போது இந்த எண்ணை டயல்  
               செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
               எமர்ஜென்சி அழைப்புகளை நாம் கொடுக்க முடியும்.            
               செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த  
               எண்ணுக்கு   அழைப்பு கொடுக்க முடியும் 
      .


*3370௦# - செல்போனில் பேட்டரி சார்ஜ் மிக குறைவாக உள்ள
                     போது இந்த எண்ணை அழுத்தினால் பேட்டரி தனக்குத்     
                     தானே தன்னுடைய சேமிப்பில் இருந்து சார்ஜ் செய்து
                     கொள்ளும். பின் நாம் பேட்டரி சார்ஜ் செய்யும் போது
                     தன் சேமிப்பையும் நிரப்பி கொள்ளும். இந்த வசதி
                    நோக்கியா செல்போனில் மட்டுமே உண்டு.


*#06#  -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI     
                    எண்ணை தெரிந்து கொள்ளலாம். செல்போன்
                    தொலைந்து போனால் காவல் துறையில் புகார்
                    அளிக்கும்போது இந்த எண் மிகவும் அவசியம். போனை
                    எடுத்தவர்கள் எந்த நெட்வொர்க் சிம் கார்டை
                    பயன்படுத்தினாலும் காவல் துறையினர் எளிதில் கண்டு
                    பிடித்து விடுவார்கள். மேலும் நெட்வொர்க் அளிக்கும்
                    நிறுவனத்திற்கு தொலைந்து போன  செல்போனின் IMEI   
                    எண்ணை அளித்தால் நம் செல்போனை பிறர் 
                     பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து
                     விடுவார்கள்.

*#92702689# -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI  
                                    எண்ணையும் ,  செல்போன் தயாரிக்கப்பட்ட
                                    நாளினையும் தெரிந்து கொள்ளலாம்
More than a Blog Aggregator

திங்கள், 19 மார்ச், 2012

போபார்ஸ் பீரங்கி ஊழலும், காங்கிரசின் சூழ்ச்சி பிரச்சாரமும்...

அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போதும் உணவருந்தும் போதும் நண்பர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவது உண்டு. அது பொதுவாக ஒரு தரமான கருத்து பரிமாற்றமாக இருக்கும். பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளும் களமாகவும் அது இருக்கும்.

அன்று உணவருந்தும் பொது திடீர் என்று போபார்ஸ் பீரங்கி ஊழல் பற்றி பேச்சு எழுந்தது. எதிர் கட்சிகளே மறந்து போன பீரங்கி ஊழல் பற்றி பேச்சு எழுந்ததும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக நண்பர் ஜஸ்டின் அவர்கள் கூறிய கருத்து என்னை ஈர்த்தது. அவர் கூறிய கருத்து இதுதான்.

போபார்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்று பத்திரிகைகளும் எதிர் கட்சிகளும் குற்றம் சாட்டினாலும் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற போபார்ஸ் பீரங்கி தான் காரணம்.  போபார்ஸ் பீரங்கி இல்லை என்றால் நாம் கார்கில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. எனவே போபார்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்ற வாதம் உண்மையானதல்ல.என்பதே அவர் கருத்தாகும்.

இது நண்பருடைய சொந்த கருத்து அல்ல என்பது எனக்கு புரிந்தது. அது கார்கில் போரின் போது காங்கிரஸ் தலைவர்களால் முன் வைக்கப்பட்ட கருத்தாகும்.காங்கிரஸ் தலைவர்கள் எப்போதுமே பிரச்சினைகளை திசை திருப்புவதில் வல்லவர்கள்.காங்கிரசின் சூழ்ச்சிக்கு என் நண்பரும் பலியாகி இருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது.

நான் என் நண்பரின் கருத்துக்கு மறுப்புரை தெரிவித்தேன்.

போபார்ஸ் பீரங்கியின் தரத்தினை குறித்து எவரும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. அது உலகின் மிக சிறந்த பீரங்கியாகவே இருக்கலாம். பிரச்சினை அதுவல்ல. அந்த பீரங்கி வாங்கப்பட்ட போது கை மாறிய கமிஷன் தொகை எவ்வளவு? யாருக்கு கமிஷன் வழங்கப்பட்டது.? அவ்வாறு வழங்கப்பட்ட கமிஷன் தொகை இந்திய தேசத்தின் பணம் அல்லவா? என்பதுதான் உண்மையான பிரச்சினை. இன்றைய கால கட்டத்தில்  மேற்கண்ட கேள்விகளுக்கு நமக்கு விடையும் தெரியும்.  கமிஷன் தொகை 64 கோடி ரூபாய் போய் சேர்ந்த குவோட்ட்ராச்சி யார்?. குவோட்ட்ராச்சிக்கும், சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம்?. குவோட்ட்ராச்சியை தப்ப விட்டது யார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பாத  காங்கிரஸ் கட்சியினர்  பிரச்சினையை திசை திருபபுவதர்காகத்தான் போபார்ஸ் பீரங்கியின் தரத்தை பற்றி பேசுகின்றனர். காங்கிரசின் சூழ்ச்சி பிரச்சாரத்தை நீங்களும் நம்பிவிட்டீர்கள்.என்று நான் கூறினேன்.

நான் பேசி முடித்ததும் நண்பர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவருக்கு நான் சொன்ன வாதத்தில் உள்ள உண்மை புரிந்திருக்கும். அவரை சொல்லி குற்றமில்லை. காங்கிரசின் குள்ள நரித்தனம் அது.

இப்போதும் கூட அண்ணா ஹசாரே கொண்டு வந்த லோக் பால் திட்டத்தை திசை திருப்ப  வலிமையற்ற லோக் பால் திட்டத்தை கொண்டு வந்து லோக் பால் திட்டத்தையே காமெடி ஆக்கியது ,ஈழத்தமிழர் உரிமை பிரச்சினையை தீவிர வாத பிரச்சினையாக திசை திருப்பியது மட்டுமில்லாமல் தன குடும்ப பழிவாங்களுக்கு பயன்படுத்தி கொண்டது என்று காங்கிரசின் குள்ள நரித்தனங்களுக்கு  உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.


More than a Blog Aggregator

வெள்ளி, 16 மார்ச், 2012

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்ய வேண்டியது என்ன?

              சில நாட்களுக்கு முன்பு தமிழ் பத்திரிகை ஒன்றினை படித்துக் கொண்டிருந்தேன். அப்பத்திரிகையில் புலம் பெயர்ந்த ஈழத்துக் கவிஞர் ஒருவரது பேட்டி வெளியாகி இருந்தது. பேட்டி எடுத்த நண்பர் ஈழத்தை பற்றி, ஈழப் போராட்டத்தை பற்றி பல கேள்விகளை கேட்டார். கவிஞரும் வேதனையோடு பதில்களை சொல்லி கொண்டே வந்தார். ஈழப் போராட்டத்தின் தொடக்கம், மக்களின் துயரங்கள், ஈழ மக்களின் மன உறுதி என பல செய்திகளை அவர் கூறினார்.

பேட்டியின் சிறப்பான அம்சம் நிருபர் இறுதியாக கேட்ட கேள்விதான்.

நிருபர்: தற்போது தமிழ் ஈழ மக்களுக்கு இந்தியா செய்ய                        
       வேண்டியது என்ன?

அதற்கு கவிஞர் உடனே சொன்னார்.

 மறுபடியும் முதல்ல இருந்தா?

 அத்துடன் பேட்டியும் முடிந்தது.

கவிஞரின் பதில்  நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூறும் நகைச்சுவை வசனம்தான். ஆனால் இந்த பதிலை படித்ததும் எனக்கு விவரிக்க முடியாத உணர்வும் , சிந்தனையும் ஒரே நேரத்தில உண்டாயிற்று.

இந்தியா செய்ய வேண்டியதை விட, செய்ததை நினைத்து பார்த்தால் நிருபர் கேட்ட கேள்வியின் நகைச்சுவை தெரியும். கவிஞரின் பயமும் புரியும்.

தன்  குடும்ப  பழி  வாங்கும் உணர்சிக்காக ஒரு இனத்தையே  அழித்த   காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, இனி ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?

        இலங்கை எம் தாய் நாடு என்றால், இந்தியா எம் தந்தை நாடு என்று பெருமையாக சொன்ன ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய  அரசு, இனி ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?

       கோவிலிலும், பாதுகாக்கப்பட்ட இடங்களிலும்   தஞ்சம் அடைந்தவர்களை குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என்று பாராமல் கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு சர்வ தேச வக்காலத்து வாங்கிய இந்திய அரசு, இனி ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?


     ஈழத் தமிழர்கள் தங்கள் நிலைமைக்கு யாருடைய பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடைய மனஉறுதி மிகப் பெரியது. இவ்வளவு இழப்பிற்கு பின்னும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சாதாரணமானதல்ல. ஒரு இயக்கமாக ஒன்று அல்ல இரு நாட்டின் ராணுவத்தையே எதிர்த்தவர்கள். சினிமாவிலும், சாராயக் கடைகளிலும்  தன இன அடையாளத்தை தொலைத்து ஆட்டு மந்தைகளாகி போன தமிழ் நாட்டு தமிழனை போல் இல்லாமல் , தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாரதியின் சொல்லுக்கு உலகளவில் உதாரணமாய் நிற்கிறான் ஈழத் தமிழன். எத்தனை முறை அவன் வீழ்ந்தாலும் அத்தனை முறையும் அவன் எழுவான். வெற்றி பெறுவான்.

           எனவே இனி இந்தியா ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது இனிமேலாவது இந்திய அரசு ஈழத் தமிழர்களின் நல்வாழ்விற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்பது  போன்ற காகித அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பதுதான். ஏன் என்றால் இது போன்ற அறிக்கைகள் ஈழத் தமிழன் மீதான இலங்கை ராணுவத்தின் மனிதாபிமானமற்ற  தாக்குதல்களை விடவும் மிகவும் கொடூரமானதாகும்.,  


.


     
More than a Blog Aggregator

சனி, 10 மார்ச், 2012

பெரு வெடிப்பு நடக்கும், நம்பிக்கை இழக்காதே!

என்
சகோதரிகள் சீரழிக்கப்பட்டனர்
முலைகள் அறுக்கப்பட்டன
முலைக்காம்புகள் முற்களால் கிழிக்கப்பட்டன
உயிருடன் எரிக்கப்பட்டனர்
கைகள் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டனர்
குழந்தைகளும் தப்பவில்லை
வீடுகள் தரைமட்டமானது
திறந்தவெளி சிறையில் கைதிகளாய்
பிள்ளை  இழந்து
தந்தை இழந்து
தாய் இழந்து
சொந்தம் இழந்து
ஆதரவை இழந்து
தலைவனை இழந்து
நாட்டினை இழந்து
அழுவதற்கு கண்ணீரும் இழந்து
மௌனமாய் தமிழ் ஈழம்

மகன் கேட்டான்
அப்பா! நாம் தோற்றுவிட்டோமா?

மகனே!
உயிரை இழந்தோம்
உணர்வை இழக்கவில்லை
இடத்தை இழந்தோம்
இனமானம் இழக்கவில்லை
உடல்களை புதைத்தோம்
லட்சியங்களை புதைக்கவில்லை
லட்சிய புருஷர்கள் சாகலாம்
லட்சியங்கள் சாகாத வரை
தோல்விகள் நமக்கில்லை

ஒவ்வொரு தமிழனும் எரிமலை
இதயத்தில் நெருப்பு குழம்புகளாய்
சுதந்திர வேட்கை
மௌனத்தை தோல்வி என எண்ணாதே!
பெரு வெடிப்பு நடக்கும்
நம்பிக்கை இழக்காதே!

             -கேள்வி பதில் தொடரும்...More than a Blog Aggregator

வியாழன், 8 மார்ச், 2012

ராகுல் காந்தி ஹீரோவா அல்லது ஜீரோவா?

         சமீபத்தில்  நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தேர்தல் முடிவுகள் பல உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தி இருக்கலாம். தேர்தலுக்கு முன் இருந்த மிக பெரிய கேள்விகளுள் ஒன்று இந்த தேர்தலில் ராகுல் காந்தியின் தாக்கம் என்ன? என்பதாகும். அந்த கேள்விக்கும் இந்த தேர்தலில் பதில் கிடைத்திருக்கிறது.

           ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் மக்கள் அவை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி மற்றும் ரா பேலி தொகுதிகளில் ( மத்திய உத்திரபிரதேசம்) 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருகின்றன. இந்த 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் வலுவாக உள்ள பகுதிகளான பிரதப்கர் மற்றும் சுல்தான்பூர் பகுதிகளில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் மக்கள் அவை தேர்தலில் வெற்றி பெற்ற அமேதி, ராபெளி, ப்ரதப்கர், சுல்தான்பூர் ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 20௦ சட்டமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோரது உக்கிரமான பிரச்சாரம் இந்த தேர்தலில் எந்த விதமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை விட எதிர்மறை விளைவை ஏற்படுத்தி உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

           சோனியா காந்தி தோல்விக்கு பல காரணங்களை சொல்லி இருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் அவர் மறந்து விட்டார். அவர் எப்போதும் மக்களை முட்டாளாக நினைத்ததுதான் காங்கிரசின் தோல்விக்கு காரணம். வெளிநாட்டில் உள்ள இந்திய கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்காதது, லோக் பால் மசோதாவை  கேலி கூத்தாக்கியது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உறுதியான நடவடிக்கை எடுக்காதது, செயலற்ற  மத்திய அரசாங்கம் ஆகியவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என காங்கிரஸ் நினைத்தது.
                ராகுல் காந்தியை முன்னிருத்தினால் போதும் என காங்கிரஸ் நினைக்கிறது. ராகுல் காந்தியோ குடிசைக்குள் சென்று கஞ்சி குடித்தால் போதும் என நினைக்கிறார். மோட்டார் சைக்கிள் சுற்று பயணம் போகிறார். ஆனால் இந்த அரசியல் நாடகங்களை ஏற்கனவே பார்த்து  சலித்து போன மக்களுக்கு கோபம் கூட வரவில்லை. சிரிப்புதான் வந்தது. ராஜீவ் காந்தியின் மகன் என்ற தகுதியை தவிர வேறு தகுதிகள் இருப்பதை ராகுல் காந்தி இன்னும் நிரூபிக்க வில்லை. வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்ததை இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியாகதான் நாம் கருத வேண்டும்.
                இறுதியாக ராகுல் காந்திக்கு ஒரு வேண்டுகோள். அய்யா உங்கள் வேகத்தை செயலில் காட்டுங்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? குறைந்த பட்சம் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பெயர்களை கூட வெளியிட ஏன் சம்மதிக்கவில்லை? சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பழமொழி. ராகுல் சார்! மக்களுக்கு உங்கள் மீதும், உங்கள் கட்சி மீதும் சந்தேகம் உள்ளது. 
More than a Blog Aggregator

புதன், 7 மார்ச், 2012

சீனாவுடன் இந்தியா போர். நீங்கள் தயாரா?

இந்தியாவின் எதிரி நாடு எது என்றால் நம்மில் பலரும் பாகிஸ்தான் என்றுதான் பதில் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் சீனா தான் இந்தியாவின் உண்மையான எதிரி நாடு. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடும் பகை நாடு சீனா தான்.
பாகிஸ்தானுடன் இதுவரை நடந்த மூன்று  போர்களிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றிருக்கிறது. போரின் மூலம் இந்தியாவை வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தானும் உணர்ந்திருக்கிறது. எனவே பாகிஸ்தானை நமக்கு நிகரான எதிரியாக நினைக்க முடியாது. சீனாவை போல் ஆக்ரமிப்பு எண்ணம  கொண்ட ஒரு நாடு உலகத்தில் வேறு நாடு எதுவும் இல்லை எனலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கேற்ப பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடுகிறது சீனா. ராணுவ வழியில் பாகிஸ்தானுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது சீனா. அதற்கு பதிலாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் பணியை சீனாவுக்கு அளித்திருக்கிறது பாகிஸ்தான். அந்த பணியை காரணம் காட்டி ஏராளமான ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் குவித்திருக்கிறது சீனா.   இந்தியாவின் வட எல்லையில் மட்டும் சீனாவின் அபாயம் இல்லை.

            இலங்கையில் சீனாவின் ராணுவ  நடமாட்டம் இப்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு இரண்டு லாபம்.  இதன் மூலம் இந்தியாவை மிரட்டி தன அடிமையாக வைத்து கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார லாபம் அடைவது. இந்தியாவை அடக்க இலங்கை பயன்படுத்தும் துருப்பு சீட்டு சீனா.  சீனாவுக்கு இலங்கை ஒரு சிறந்த ராணுவ தளம்.
கடந்த வருடம் சீனாவின் ராணுவம் PLA பலமுறை இந்தியாவின் வட பகுதியில் எல்லை தாண்டி புகுந்தது. பல இடங்களில் சீனா என்று எழுதி வைத்து விட்டு போனார்கள். எந்த விதத்தில் பார்த்தாலும் சீனாவை நாம் நம்ப முடியாது. அதற்கு 1962 ல் நடந்த சம்பவத்தை நாம் கூற முடியும். இந்தோ சீனா பாய் பாய் என்று சொல்லி சொல்லியே கழுத்தை அறுத்தார்கள். எனவே சீனாவை எந்த காலத்தில் நாம் நம்பினாலும் நம்மை போல் முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.

          இப்போதும் சீனா நம் மீது ஒரு போர் நடத்திகொண்டு  இருக்கிறது. அது பொருளாதார ரீதியான போர் ஆகும். குறைந்த விலையிலான தரமற்ற பொருள்களை இந்தியாவில் கள்ளத்தனமாக குவிக்கிறது சீனா. இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் சந்தையை  நிர்மூலமாக்கி  இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைப்பதுதான் சீனாவின் நோக்கம். எனவே இந்திய பிரஜைகளான நாம் சீனாவின் தயாரிப்புகளை நிராகரிக்க வேண்டும்.

           அமெரிக்க உளவு நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் இந்தியா,  சீனாவுடன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட போருக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனாவின் கோபமூட்டும் செயல்களால் இந்தியா பொறுமை இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
             இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சீனாவுடன் போர் வரும். நம் வாழ் நாளிலேயே அந்த உக்கிரமான போரை பார்க்க போகிறோம் என்பது உறுதி. அது எப்போது என்பதுதான் கேள்வி.சீனா உலகிலேயே மிக பெரிய ராணுவம் கொண்ட நாடு. இந்தியாவை விட வலிமையான ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மால் சீனாவை சமாளிக்க முடியுமா?. நாம் பாகிஸ்தான் பற்றி கவலைப்பட வேண்டாம்.  நாம் உண்மையில் கவலைப்பட வேண்டியது சீனாவை பற்றிதான். தமிழ் நாடு சீனாவில் இருந்து தொலைவில் இருக்கலாம். ஆனால் இலங்கைக்கு பக்கத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது. சீனாவும் இலங்கையும் என்றைக்கும் இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் எதிரிதான்.
More than a Blog Aggregator

வெள்ளி, 2 மார்ச், 2012

இன்று என் வலையுலக பயணம் ஆரம்பம் - ஆதரவு தாரீர் தமிழ் சொந்தங்களே!


வலையுலக சொந்தங்களுக்கு வணக்கம்.  என் பெயர் விஜயகுமார். நான் புதிதாக பிளாக் இன்றுதான் துவங்கி உள்ளேன். பல்சுவைப் பதிவுகளை தொடர்ந்து இடலாம் என்று கருதுகிறேன். உங்களின் பேராதரவை எனக்குத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி !

இப்படிக்கு,

என்றும் அன்புடன்,
பதிவர் விஜயகுமார்.
More than a Blog Aggregator