ஞாயிறு, 15 ஜூலை, 2012

சிகரெட் குடிக்கும் பழக்கத்தை நிறுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பு!


சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனாலும் தங்களுடைய மன உறுதியால் சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு முடியாதவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒரே ஒரு தடுப்பு ஊசி  உங்களின் பல வருட கால விட முடியாத சிகரெட் பழக்கத்தை விட்டு விடச்செய்யும். அதுமட்டுமில்லாமல் சிகரெட் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் பிற்காலத்தில் அப்பழக்கம் உருவாகாமல் இருக்க தடுப்பு மருந்தாகவும் உபயோகிக்க முடியும். நிகோடின் அடிமையாக உள்ள நம்மை நிகோடினை வெறுக்கும் மனிதனாக மாற்றும்.

விஞ்ஞானிகள் புதியதாக கண்டுபிடித்துள்ள இந்த DNA தடுப்பு ஊசி  நம் உடம்பில் சிறப்பு எதிர்ப்பு சக்தியினை (Antibodies) உருவாக்கி நம்மை சிகரெட்டை வெறுக்கச் செய்கிறது. ஒரே ஒரு முறை மட்டுமே இந்த தடுப்பு ஊசியினை  பயன்படுத்தினால் போதும் என்றும், அதுவே நாம் வாழ் நாள் முழுவதும் சிகரெட்டை உபயோகிக்க விடாமல் தடுக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கண்டுபிடிப்பு  பாதுகாப்பானது மற்றும்  பயன் தரக்கூடியது என்று உறுதியாக  நிரூபிக்கப்பட்டால். இந்த தடுப்பு ஊசியானது பள்ளிக்கூட தடுப்பு ஊசி அட்டவணையிலும் இடம் பிடிக்க முடியும். காரணம்  இன்று காச நோய்க்கான தடுப்பு ஊசியை விட சிகரெட் பழக்கத்தை விட செய்வதற்கான தடுப்பு ஊசியே முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது இந்த தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு நிலையிலேயே  உள்ளது எனவும்,  எலியின் மீது பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது எனவும் டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 2014 ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் மீதான  பரிசோதனைகள் செய்யப்படும் எனவும், 5 ஆண்டுகளுக்கு பின்னரே தடுப்பு ஊசி விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது எனவும், தடுப்பு ஊசி மீதான ஆரம்ப கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக உள்ளது எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு ஊசியானது  வடிவமைக்கப்பட்ட ஜீன்களை கொண்டது. அவை உருவாக்கும் ஜீன்கள், சிகரெட் உருவாக்கும் நிகோடின் மூளையை சென்று அடைவதை தடுக்கிறது, அதன் காரணமாக நிகோடினின்  போதையினை தூண்டும் செயல் தடுக்கப்பட்டு ஒருவர் நிகோடின் அடிமையாக மாறுவது தடுக்கப்படுகிறது. ஒருவரது கல்லீரல் இத்தகைய எதிர்ப்பு சக்தியினை வாழ்நாள் முழுவதும் உற்பத்தி செய்கிறது. எனவே அவர் எப்போது சிகரெட்டை உபயோகிக்க தொடங்கினாலும் இந்த எதிர்ப்பு சக்தி வேலை செய்ய தொடங்குகிறது.

மேற்கண்ட தடுப்பு ஊசியானது Weill Cornell Medical College,  New York – இல் உருவாக்கப்பட்டு வருகிறது.

இக்கண்டுபிடிப்பு வெற்றிகரமாக நடைமுறைக்கு வருமானால் அதுவே இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக