வியாழன், 19 ஜூலை, 2012

கோலா குளிர் பானங்களில் ஆல்கஹால் - அதிர்ச்சிகர ஆய்வு முடிவு!கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இரசாயன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது போன்ற தகவல்கள் நாம் ஏற்கனவே  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நாம் அவைகளை தொடர்ந்து மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். உணவகங்கள் செல்லும் போது கவனிக்கிறேன். நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்யும் போது கவனிக்கிறேன். நீருக்குப் பதிலாக கோகோ கோலா மற்றும் பெப்சி பானங்களை மக்கள் அருந்துகிறார்கள். இயற்கை தந்த நீரை விட சிறந்த பானம் உலகில் எதுவுமில்லை. அற்புதமான சத்துக்கள் அடங்கிய இளநீர் அருந்த யாருக்கும் விருப்பமில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வேறுபாடு இல்லாமல் கோகோ கோலா மற்றும் பெப்சி பானங்கள் அருந்தப்படுகின்றன. கோகோ கோலா, பெப்சி பானங்கள் அருந்துவது ஒரு காலத்தில் நாகரிகத்தின் அடையாளமாக இருந்து இன்று அது தவிர்க்க முடியாத போதையாகி விட்டது.

இந்த மேற்கத்திய கலாச்சாரத்தால் நாம் பெற்ற பயன்தான்,    இந்தியா இன்று நீரிழிவு நோயின் தலைநகரம் என பெயர் வாங்கியிருக்கிறது. மேற்கத்திய உணவு வகைகளுக்கு நாம் மாறியதால்தான் இன்று உலகில் அதிக இதய நோயாளிகள் இந்தியாவில் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

கோகோ கோலா மற்றும் பெப்சி  குளிர்பானங்களில் ஆல்கஹால் அடங்கியிருப்பதை  தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இனி நாம்  கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களை அருந்தும்பொது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

பிரெஞ்சு அறிவியல் பத்திரிகை  ஒன்றில் வெளியான ஆராய்ச்சி கட்டுரையில் கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர் பானங்களில் மிக குறைந்த அளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது  என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஆராய்ச்சி முடிவு  பாரிசில்  உள்ள National Institute of Consumption என்ற அமைப்பினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  உலகின் முன்னணி கோலா வகை பானங்களில்,  50%  வகை பானங்கள்  ஆல்கஹால் கொண்டிருக்கின்றன என்றும், கோகோ கோலா மற்றும் பெப்சி கோலா பானங்களும் இதில் அடங்கும் என்றும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இவ்வகை பானங்களில் ஆல்கஹால் ஒரு லிட்டருக்கு 10mg  என்ற மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது என்பது சற்று மன நிம்மதியை தரும் செய்தியாகும்.


19 வகையான கோலா பானங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டதில், 9 வகையான பானங்கள் ஆல்கஹாலை  கொண்டிருக்கவில்லை என்றும், மற்ற 10 வகை பானங்கள் ஆல்கஹாலை கொண்டிருந்தன என்றும், Pepsi Cola, Coca Cola, Classic Light  மற்றும்  Coke Zero ஆகிய பானங்கள் ஆல்கஹாலை கொண்டிருந்தன என்றும் தனது ஆராச்சி கட்டுரையில் மேற்கண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இளநீரில் உள்ள சத்துக்கள்:
1.        நீர்=95%
2.        பொட்டாசியம்=310 மி.கிராம்
3.        குளோரின்=180 மி.கிராம்
4.        சோடியம்=100 மி.கிராம்
5.        கால்சியம்=30 மி.கிராம்
6.        மக்னீசியம்=30 மி.கிராம்
7.        பாஸ்பரஸ்=37 மி.கிராம்
8.        சல்ஃபர்=25 மி.கிராம்
9.        இரும்பு=0.15 மி.கிராம்
10.    காப்பர்=0.15 மி.கிராம்
11.    வைட்டமின் B=20 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில்  உள்ள சத்துகள்.
இளநீரின் மருத்துவப் பயன்கள் :
சிறுநீரகக் கோளாறுகளுக்கும், சிறுநீரகக் கற்கள் பிரச்சினைக்கும், இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இளநீர் மிக நல்ல நீரிளக்கி ஆக இருப்பதுதான். காலராவுக்கு சிகிச்சையளிக்கும்போது இளநீர் அருந்துவது பயன்தரும். காலராவின்போது, வாந்தி பேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே, முக்கியமான தாது உப்புக்களும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கும் ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புக்களையும் சேர்க்கும். மேலும், இளநீர் நோய்க்கிருமி எதிர்ப்புச் சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றவும் செய்யும். ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியத்தை உடலில் ஏற்றுவதைவிட இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது என்று வெப்ப நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இளநீரிலுள்ள வைட்டமின் பி கலவைச் சத்து இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல்துடிப்போடு சீராக்கும்.

ஆனால் குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்", காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும்.

எனவே பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஆல்கஹால் வாங்கி கொடுக்கப் போகிறீர்களா? அல்லது அக்கறையுடன் இளநீர் வாங்கி கொடுக்கப் போகிறீர்களா?. சற்றே யோசியுங்கள்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக