திங்கள், 17 செப்டம்பர், 2012

யாசர் அராபத் மரணத்தில் மர்மம்! - அல் ஜசீரா டிவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!



யாசர் அராபத், Palestine Liberation Organization (PLO) அமைப்பின் தலைவர்.  பாலஸ்தீன மக்களின் அன்புக்குரிய தலைவர். தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கழித்தவர். பாலஸ்தீன மக்களை பொருத்தவரை விடுதலை போராட்ட வீரர். ஆனால் இஸ்ரேலை பொருத்தவரை அவர் ஒரு தீவிரவாதி. அவர் 11-11-2004 அன்று மரணமடைந்தார். அவர் இரத்தம் உறைதல் பாதிப்பால் (Disseminated Intravascular Coagulation or DIC) பிரான்சில் இயற்கை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது அல் ஜசீரா தொலைக் காட்சி அறிவித்துள்ளது. இது பற்றிய உண்மைகளை அறிய சட்டப்பூர்வமான  விசாரணைக்கு  பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

அராபத்தின் மனைவி சுஹா கூறுகையில் அக்டோபர் 12, 2004 அன்று அராபத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும்,  வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட அவர், அதன் பின் வயிற்று வலியால் மேலும் சோர்வடைந்ததாக தெரிவிக்கிறார். உடல் நிலைமை மேலும் மோசமடையவே அவர் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் இருந்து பாரிசில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் 11-11-2004 அன்று மரணமடைந்தார். அவர் மரணத்தில் மர்மம உள்ளதாக அவர் இறந்தது முதல் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. யாசர் அராபத் கொலை செய்யப்பட்டிருக்கலாம்  என்ற  வாதத்திற்கான  ஆதாரங்களை  எட்டு வருடங்களுக்கு பிறகு அல் ஜசீரா தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அல் ஜசீரா தொலைக்காட்சி  அராபத்தின் மனைவி சுஹாவிடம் அராபத் கடைசியாக பயன்படுத்திய  பொருட்களை  பெற்று சுவிட்சர்லாந்தில் உள்ள Institute of Radiation Physics என்ற பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனம் தனது பரிசோதனையின் முடிவை வெளியிட்டது. அவ்வறிக்கையில்  அராபத் உள்ளாடை, டூத் பிரஷ் மற்றும் தொப்பியில் பொலொனியம்-210 கதிர்வீச்சு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இம்முடிவு இறுதியானது அல்ல என்றும், அராபத்தின் எலும்பு சோதனை செய்யப்பட்ட பிறகே இம்முடிவை உறுதி செய்ய இயலும் என்றும்  அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

பொலொனியம்-210 என்ற கதிர்வீச்சு தனிமத்தின் பெயரை நீங்கள் ஏற்கனவே கேள்விபட்டிருக்கலாம். 2006, நவம்பரில் ரஷிய அரசினை கடுமையாக விமர்சித்த முன்னாள் ரஷிய உளவாளி அலெக்சாந்தர் லித்விநெங்கொ (Alexander Litvinenko) திடீரென உடல் நலம் குன்றி லண்டன் மருத்துவமனையில் இறந்து போனார். பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் பொலொனியம்-210 கதிர்வீச்சு அதிக சக்தியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலொனியம்-210 கதிர்வீச்சினால் கொலை செய்யப்பட முதல் நபர் அவர்தான். பொலொனியம் தனிமத்தின் ஐசோடோப்பான பொலொனியம் -210 மேரி கியூரி என்ற பெண் விஞ்ஞானியால்  19- ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிக அணுக்கதிர்வீச்சினை உடையது. இதன் கதிர்வீச்சின் பாதிப்பு ஒரு இடத்தில் இருப்பதை நாம் சாதாரண நிலையில் கண்டுபிடிக்க முடியாது. அது மணம், நிறம் போன்ற எந்த குணங்களும் அற்றது. 0.1 மைக்ரோ கிராம் அளவு தனிமம் உடலுக்குள் சென்றாலே அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. இத்தனிமத்தின் கதிர்வீச்சு மனித தோலினை கடந்து செல்ல இயலாது. குறிப்பிடத்தக்க அளவு தனிமம் உடலுக்குள் சென்றால் மட்டுமே மரணத்தை ஏற்படுத்தும். உதாரணமாக இத்தனிமத்தின் கதிர்வீச்சு  உண்பது மூலமாகவோ, அல்லது சுவாசிப்பது மூலமாகவோ உடலுக்குள் செல்ல முடியும். நமது சுற்றுப்புறத்திலும் குறைந்த அளவு இத்தனிமம் உள்ளது.

இதனை அடுத்து சுஹா தன கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.. ஆனாலும் தன் புகாரில் அவர் யார் மேலும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. தற்போது விசாரணையை தொடங்கியுள்ள பிரான்ஸ் அதிகாரிகள் அராபத்தின் உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். பாலஸ்தீன அதிகாரிகள் உடலை தோண்டி எடுக்க அனுமதியை சென்ற மாதம் வழங்கியுள்ளனர். ஆனால் அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொலொனியம் -210 தனிமத்தின் அரை ஆயுட்காலம் 138 நாட்கள் மட்டுமே. அதாவது அத்ததனிமம்  விரைவில் அழிந்துவிடக்கூடியது. எனவே விரைவில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மைகளை வெளிக்கொணர முடியும். தாமதித்தால் அவர் உடலில் உள்ள கதிர்வீச்சு தடயங்கள் அழியக்கூடும். அராபத்தின்  உடல் அவர் இறுதி நாட்களை கழித்த முசொலியம் (mausoleum) என்னும் அரசுக்குரிய  இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அங்குதான் அவர் கடைசி மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலிய அரசால் வீட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார். 

அராபத் கொலை செய்யப்பட்டிருந்தால் அவர் யாரால் கொலை செய்யப்பட்டிருப்பார்?. அனைவரும் இஸ்ரேலை சந்தேகிப்பது நியாயம்தான்.  ஏனென்றால் பொலொனியம்-210 எளிதில் கிடைப்பதில்லை. ஒரு சில நாடுகளால் மட்டுமே இத்தனிமத்தை தயாரிக்க முடியும். அணு உலை இருந்தால் மட்டுமே அதனை தயாரிக்க முடியும். இஸ்ரேல் அத்தனிமத்தை இருப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளன.  2002 ல் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன் இஸ்ரேலிய பத்திரிகை  Ma'ariv க்கு அளித்த பேட்டியில் 1982 ல் இஸ்ரேலிய படைகள் தெற்கு லெபனானை கைப்பற்றிய போது யாசர் அராபத்தை கொலை செய்யாததற்கு தான் இப்போது வருத்தப்படுவதாக தெரிவித்தார். 2003 ல்  அப்போதைய இஸ்ரேல் துணை பிரதமர் ஈஹுட் ஆல்மேர்ட்,  அராபத்தை கொலை செய்வது இஸ்ரேல்  மேற்கொள்ளப்படவேண்டடிய நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது என தெரிவித்தார். இவையெல்லாம் இஸ்ரேல் அராபத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. 99.9% சதவீத பாலஸ்தீன மக்கள் யாசர் அராபத் இஸ்ரேல் உளவு அமைப்பால்  கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை இஸ்ரேலிய அதிகாரிகள் மறுக்கிறார்கள். அராபாத்தை கொலை செய்து அவரை மிகப் பெரிய தியாகியாக்க இஸ்ரேல் எப்போதுமே விரும்பியதில்லை என்றும், அவ்வாறு கொல்ல வேண்டும் என்று இஸ்ரேல் விரும்பியிருந்தால் தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அதனை  செய்திருக்கும் என்றும், 2004- ல் அவர் அரசியல் செல்வாக்கினை இழந்த நிலையில் அவரை கொல்ல  வேண்டிய அவசியம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதே சமயத்தில் அராபத்தின் மரணம் மீதான விசாரணை பாலஸ்தீன அதிகாரிகளுக்கும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அராபத்தின் உள்ளாடைகள்  மீதான  சுவிஸ் பரிசோதனைகூட ஆதாரங்களை (பொலொனியம் -210 ) அல் ஜசீரா தொலைக்காட்சி முதன் முதலில் வெளியிட்டது. ஆனால் அராபத்தின் மரணம் குறித்து விசாரிக்க பாலஸ்தீன அரசால் அமைக்கப்பட்ட டிரவி விசாரணை கமிஷன் ஏன் இதை முதலில் கண்டுபிடிக்கவில்லை என்பது வியப்பினை தருகிறது. மேலும் அராபத்துக்கு  மிக வலுவான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவருடைய உணவு கூட மற்றொருவரால் உண்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் பாலஸ்தீன அதிகாரிகளின் பங்களிப்பு இல்லாமல் கொலை திட்டத்தை செயல்படுத்துவது என்பது கொலையாளிக்கு சாத்தியமில்லாதது ஆகும். பிரான்சின் விசாரணைக்கு பாலஸ்தீன அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக ஏற்கனவே சுஹா குற்றம் சாட்டியுள்ளது  இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும். அராபத்தின் மரணம் பற்றிய மர்மங்களை உடைக்க பாலஸ்தீன அரசு உண்மையாக முயற்சி செய்யவில்லை என்றே பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் நம்புகின்றனர். 

விடை தெரியாத கேள்விகள் சில.
1) அராபத்தின் கல்லீரலை சோதனை (biopsy) செய்ய சுஹாஅராபத் அனுமதி மறுத்தது ஏன்?
2)  அராபத்தின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்படாதது ஏன்?
3)அராபத்தின் உடலில்  பல்வேறு இடங்களில் இரத்தம் அசாதாரணமாக  உறைந்ததற்கும், அதனை தொடர்ந்த வலுவான ஸ்ட்ரோக்குக்கும்  சரியான காரணத்தை திறமை மிக்க பிரெஞ்சு மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்காதது ஏன்?. அராபத்தின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைக்க பிரெஞ்சு அரசு முயற்சி செய்கிறதா?.

அராபத்தின்  மரணம் பற்றிய விசாரணை எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பொன்மொழி. அதற்கேற்ப அராபத் மரணத்தின் மர்மத்திரை தற்போது விலக ஆரம்பித்திருக்கிறது. அந்த திரை முழுவதும் விலகும் போது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நமக்கு கிடைக்கலாம். ஏனெனில் ஒரு வெற்றிகரமான நாடகத்தின் கிளைமாக்ஸ்  எவரும் எதிர்பார்க்காத ஒன்றாகவே இருக்கும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்: