கடந்த காலங்களில் இந்தியா எந்த
அளவிற்கு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது வரலாற்றை திரும்பி
பார்த்தோமானால் நமக்கு நன்கு புரியும். 1947ல்
இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு எதிராக ஐநா சபையில் இந்தியா வாக்களித்தது. ஜவஹர்லால் நேரு தலைமையிலான
இந்திய அரசு, இஸ்ரேல் ஐநா சபையில்
உறுப்பினராக சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1949ல் வாக்களித்தது. அப்போது இஸ்ரேலில் தூதரகம் அமைப்பதற்கு கூட இந்தியா மறுத்துவிட்டது. 1974 ல்
Palestine
Liberation Organization (PLO) அமைப்பை பாலஸ்தீனியர்களின் பிரதிநிதியாக இந்தியா
அங்கீகரித்தது. அவ்வாறு அறிவித்த முதல் இஸ்லாம் சாராத நாடாக இந்தியா இருந்தது.
அக்காலத்தில் இனவெறி கொள்கை கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை எந்த அளவுக்கு இந்தியா
வெறுத்து ஒதுக்கியதோ அந்த அளவிற்கு இஸ்ரேலை வெறுத்து ஒதுக்கியது இந்தியா.
கிட்டத்தட்ட 1992 வரை இதே வெளியுறவு
கொள்கையைத்தான் இந்தியா கொண்டிருந்தது.
இந்திய இஸ்ரேல் நாடுகளின் நட்புறவு இப்போது எந்த நிலையில் உள்ளது என்று நீங்கள் கேள்வி கேட்டால் உங்களுக்கு இதுதான் எனது பதில். ரஷியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கு அதிக அளவில் ஆயுதம் ஏற்றுமதி செய்வது இஸ்ரேல்தான். கடந்த
காலங்களில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில்
ஏராளமான போராட்டங்கள் நடை பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடுவது என்பது காலத்திற்கு ஒவ்வாததாகவும், தேச நலனுக்கு எதிரானதாகவும் இந்தியாவில்
கருதப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
காசாவில் நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து
இஸ்ரேலுக்கு எதிராக சமீபத்தில் ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக
இந்தியா வாக்களித்ததை சிலர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடாக
சிலர் கருதலாம். ஆனால் அத்தீர்மானத்திற்கு ஆதரவான இந்தியாவின் வாக்கு வெறும்
சம்பிரதாயமான ஒன்றுதான். ஏனென்றால் இந்திய பாராளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக
சில எதிர்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்தபோது பாஜக அரசு
தொடக்கத்திலேயே அதை முறியடித்துவிட்டது என்பதை நாம் இங்கு நினைவு கூறவேண்டும்.
இதுவரை இஸ்ரேலுடன் கொண்டிருந்த நட்பை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்த இந்திய
அதிகாரிகள் கூட இப்போது அதை
வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் பாலதீனதிற்கு ஆதரவாக இருக்கிறோம்
என்பதை விட இஸ்ரேலுடன் வளர்ந்து வரும் ராணுவ நட்புறவு என்பது இந்தியாவிற்கு
தற்போது முக்கியமாக உள்ளது.
இந்தியாவின்
வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் நிகழ்ந்தது எப்போது? சோவியத் யூனியன் சிதறுண்ட
பிறகுதான் இந்தியாவின் பார்வை இஸ்ரேல் பக்கம் திரும்பத் தொடங்கியது எனலாம்.
நேருவின் அணி சேராக் கொள்கை இந்தியாவிற்கு எந்த பலனையும் தராது என்பதை
அக்காலக்கட்டத்தில் உணர்ந்து கொண்ட இந்தியா அதன்பின் அமெரிக்காவிடம் நெருக்கம்
காட்டத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலுடனும் இந்தியாவின் உறவு மேம்படத்
தொடங்கியது. இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கம் மோடி அரசினால்
ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது கிட்டத்தட்ட 1992ல்
நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. இரு நாடுகளிடையே தூதரக அளவிலான உறவுகள்
மலரத் தொடங்கியது அந்தக் காலக்கட்டத்தில்தான். இவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவானது
கொள்கை ரீதியானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இவ்விரு நாடுகளின் தேவைகளை அடிப்படையாக
கொண்டே இந்த நட்புறவு செழிப்பாக வளர்ந்து
வருகிறது. இருப்பினும் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. ஈரான் உடனான இந்தியாவின்
நட்பு இஸ்ரேலுக்கு நெருடலாக உள்ளது. அதேபோல் சீனா உடனான இஸ்ரேலின் நட்பு
இந்தியாவிற்கு நெருடலாக உள்ளது. அதே சமயத்தில் எந்த கருத்து வேறுபாடும் இந்த
நட்புறவை பாதிக்கக் கூடாது என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு வெறும் உதட்டளவிலான பேச்சு என்று
இஸ்ரேல் நன்றாகவே உணர்ந்துள்ளது.
இஸ்ரேலுடன் இந்தியாவின்
நெருக்கம் அதிகரிப்பதற்கு இஸ்ரேலின் ராணுவ
உதவிகளை மட்டும் நாம் காரணமாக கூற முடியாது. அதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. சர்வதேச
அளவில் லாப நஷ்டங்களை கணக்கீடு செய்தே ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை நிர்ணயம்
செய்யப்படுகிறது. அதில் நியாயம், தர்மம் பார்க்கப்படுவதில்லை. அவ்வாறு நியாயம்,
தர்மம் பார்க்கும் ஒரு நாடு உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் ஒரு பலகீனமான
நாடாகத்தான் காட்சியளிக்கும் என்பது வரலாறு.
அந்த அளவில் பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்கு இந்தியா பெற்ற பலன்களை நாம்
பார்த்தோமானால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும். உலகளவில் அதிக தொகையில் முஸ்லிம்களை
கொண்ட இரண்டாவது நாடு இந்தியா. ஆனால் இந்தியா Organization of the Islamic Conference (OIC) அமைப்பில்
பங்கேற்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சினையில்
எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இந்தியாவின் நிலைப்பாட்டை இதுவரை ஆதரிக்கவில்லை. இவ்விரு
காரணங்களும் இந்தியாவை மிகவும் அதிருப்தி அடையச் செய்துள்ளன. இந்தியாவில் தீவிரவாத
செயல்களை நிறுத்தும்படி எந்த ஒரு இஸ்லாமிய நாடும் பாகிஸ்தானுக்கு அழுத்தம்
கொடுக்காதது இந்தியாவை வெறுப்படையச் செய்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் காஷ்மீர்
பிரச்சினையில் இந்தியாவிற்கு வெளிப்படையாக தன ஆதரவை தெரிவிக்கும் நாடாக இஸ்ரேல்
உள்ளது.
மேலும் இரு நாடுகளும்
எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இரு நாடுகளுமே
தீவிரவாதத்தினால் மிகவும் பாதிப்புகளை அடைந்தவை. இரு நாடுகளுமே அல் கைதா,
ஐஎஸ்ஐஎஸ், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத குழுக்களின் தாக்குதல் வட்டத்தில்
உள்ளவை, எனவே இந்திய இஸ்ரேலிய நட்புறவிற்கு இந்திய மக்களிடையேயும் ஆதரவு பெருகி
வருகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் இறப்பதை அவர்கள்
எதிர்த்தாலும், இஸ்ரேலுக்கான ஆதரவு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது
இந்தியர்களிடையே அதிகரித்துள்ளதை நாம் காண முடிகிறது. (உ.ம்.) twitter page “#IndiaWithIsrael”. 2009ல் இஸ்ரேல் வெளியுறவுத்
துறையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வேயில் 13 நாடுகளை சேர்ந்த 5,215 பொதுமக்கள் பங்கேற்றனர். சர்வேயின் முடிவில் இஸ்ரேலின்
மிகச் சிறந்த நண்பராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகிலேயே அதிக பட்சமாக 58 சதவீத இந்தியர்கள் இஸ்ரேலின் நிலைப்பாட்டை ஆதரித்தது
சர்வேயில் தெரியவந்தது.
எவ்வாறு இருப்பினும் காங்கிரஸ்
ஆட்சி காலத்தைவிட மோடி ஆட்சியின்போது இவ்விரு நாடுகளின் நட்புறவு மேலும் வேகமாக
வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக
பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுவராஜ் இஸ்ரேலின் மிகப்பெரும் ஆதரவாளர். இந்தியாவின்
நம்பிக்கையான கூட்டாளி என இஸ்ரேலை அவர் பாராட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்
2006 முதல் 2009 வரை Indo-Israel Parliamentary
Friendship Group என்ற அமைப்பின் தலைவராகவும்
இருந்துள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது
இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தில் மிகப் பெரும் அளவில்
முதலீடு செய்த நாடுகளில் ஒன்று இஸ்ரேல் ஆகும். தெற்காசியாவில் இஸ்ரேலின்
மிகச் சிறந்த நண்பன் மோடி தலைமையிலான இந்தியா என்று International
Business Times பத்திரிக்கை
கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சியிலும் சரி. ஆர் எஸ் எஸ் அமைப்பிலும் சரி.
இஸ்ரேலுடன் கொண்டுள்ள நட்புறவை வலுவாக்க மிகப் பெரும் ஆதரவு உள்ளது. எனவே வரும்
காலங்களில் இந்திய இஸ்ரேலிய நாடுகளின் நட்புறவு ஏறுமுகமாகவே இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
Tweet |
![]() |
||||
சிறந்த கட்டுரை.
பதிலளிநீக்கு