போதைகளில் மிகப் பெரிய போதை அதிகார போதை. அந்த போதைதான் ஒரு அரசியல்வாதிக்கு நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்தை கொடுக்கிறது. எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதை தலைக்கேறிவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் முதல் ஐந்தாண்டில் அமைதியாக இருந்த மத்திய அமைச்சர்கள், அடுத்த ஐந்தாண்டில் ஊழலில் புகுந்த விளையாட தொடங்கிவிட்டார்கள். அடுத்தடுத்து இமாலய ஊழல்களை செய்து உலக அளவில் பேரும் வாங்கிவிட்டார்கள். இவ்வளவு பெரிய ஊழல்களை எந்த தைரியத்தில் செய்கிறார்கள் என்று மக்களுக்கு வியப்பாக இருந்து வந்தது. ஊழலுக்காக இந்தியாவில் மிகப் பெரிய தலைவர்கள் யாரும் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை என்பது வேறு விஷயம். சுக்ராம் போன்று அங்கொன்று, இங்கொன்றுமாக சில அரசியல்வாதிகள் செல்வாக்கு இழந்த பிறகுதான் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு எந்த தைரியத்தில் ஊழலை செய்கிறது என்பதை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
நேற்று புனேயில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் போபார்ஸ் ஊழலை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் விரைவில் மறந்து விடுவார்கள் என்று தெரிவித்தார். 1984-85 – ல் போபார்ஸ் ஊழல பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் விரைவில் மக்கள் அதனை மறந்து விட்டனர். அதுபோல் இப்போது நிலக்கரி ஊழல் பற்றி பேசப்படுகிறது. இதுவும் விரைவில் மக்களால் மறக்கப்படும். இந்த விஷயம் மறக்கப்பட்டவுடன் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களும் நேர்மையானவர்களாக கருதப்படுவார்கள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
இதுவரை இலைமறைக்காயாய் இருந்த உண்மையை இப்போது மத்திய அமைச்சர் வெட்டவெளிச்சமாக்கி விட்டார். இந்த உண்மையை வெளிப்படையாய் கூறுவதற்கும் அமைச்சருக்கு ஒரு தைரியம் வேண்டும். அதிகார போதைதான் அந்த தைரியத்தை அமைச்சருக்கு தந்திருக்கக் கூடும். எப்படியோ மக்களுக்கு உண்மையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமைச்சரை பாராட்டுவோம். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் மக்கள் மறப்பார்கள் என்ற அரசியல்வாதிகளின் நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம்!
Tweet | |||||
தங்களது தொடர்பவர்கள் பட்டியலை காணமுடியவில்லையே!
பதிலளிநீக்கு