ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள்! - ஒரு பார்வை.



தென்னிந்தியாவில்  முதன் முதலாக கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடித்த போது அது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. ஆனால் இன்று கர்நாடகாவில் அக்கட்சி இருக்கும் நிலைமை அக்கட்சிக்கு மிகப்பெரும் அவநம்பிக்கையை அளித்துள்ளது. விரைவில் மக்களவை தேர்தல் வர இருக்கும்போது, அதற்கு முன் வர இருக்கின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு நிறையவே  கலக்கத்தை தரலாம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 5 தேதி நடைபெற உள்ள நிலையில் Headlines Today மற்றும் C Voter  ஆகிய நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பிஜேபிக்கு சாதகமாக இல்லை. வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிஜேபி மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இக்கருத்துக்கணிப்புகள் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையில் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  அதாவது 224 தொகுதிகளிலும் 15,000 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக Headlines Today மற்றும் C Voter  தெரிவித்துள்ளது.
 
தற்போதைய கர்நாடக சட்டமன்றத்தில் பிஜேபி 104 உறுப்பினர்களை கொண்டுள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெறும் 52 இடங்களே கிடைக்கும் என கருத்க்கநிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் தற்போது 38 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 118 இடங்களை வென்று கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
 
எடியூரப்பாவின் கட்சியான Karnataka Janata Paksha (KJP) 8 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் அக்கட்சிக்கு சுமார் 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக இடங்களை கைப்பற்ற முடியாவிட்டாலும் பிஜேபியின் படு தோல்விக்கு எடியூரப்பாவின் கட்சி முக்கிய காரணமாக அமைகிறது. முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு 19 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம். 

பாரதீய ஜனதா கட்சியின் உட்கட்சி பூசல் அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.  அதே வேளையில் 62 சதவீத வாக்காளர்கள் பிஜேபியின் ஆட்சி கடந்த ஆட்சிகளை விட மோசமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

CNN-IBN-Deccan Herald-CSDS ஆகியவை இணைந்து நடத்திய  கருத்துக்கணிப்புகளும் ஏறத்தாழ இதே முடிவையே தெரிவிக்கின்றன.

தோல்வியின் விளிம்பில் உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு சிறிது நம்பிக்கை கொடுப்பவராக நரேந்திர மோடி இருக்கிறார். கர்நாடக மக்களிடையே வளர்ந்து வரும் மோடியின்  புகழ் பிஜேபிக்கு பெரிதும் கைகொடுக்க வாய்ப்பிருக்கிறது. சரிந்து கொண்டிருக்கும் பிஜேபியின் புகழை தூக்கி நிறுத்த மோடியால் முடியும் என கர்நாடகாவின்  64 சதவீத  வாக்காளர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பிஜேபியின் ஒரே துருப்பு சீட்டாக மோடி உள்ளார். அவ்வாறு சரிந்து வரும் பிஜேபியின் இமேஜை தூக்கி நிறுத்தி மீண்டும் கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் மேஜிக்கை மோடி செய்வாரானால் அது வரும் மக்களவை தேர்தலில் மோடியின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க செய்யும். அதே சமயத்தில் மோடி பிரதமராவதை எதிர்க்கும் குரல்களும் பிஜேபியில் இல்லாது போகும். மாறாக  பிஜேபி தோற்கும் நிலையில் அதற்கான பழியை மோடி மேல் சுமத்தவும் அவருடைய எதிரிகள் தயாராக இருப்பார்கள். மூழ்கும் நிலையில் உள்ள கர்நாடக பிஜேபி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தனது இமேஜை மோடி கெடுத்துக்கொள்வாரா?. எப்படி இருந்தாலும் பிஜேபியின் ஆட்சி மன்ற  குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு நெருப்பு ஆறாகவே இருக்கப்போகிறது. எனவே மோடியும் இத்தேர்தலில் தனது முழுத் திறமையை காட்ட தயாராகவே இருப்பார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில், அக்கட்சியின் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கட்சியின் இமேஜும் உயரக்கூடும்.  அதே நம்பிக்கையுடன் அது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும்  தயாராகலாம். அந்த வெற்றி களிப்பிலேயே உடனடியாக மக்களவை தேர்தலையும் நடத்த அது துணியலாம்.  அவ்வாறு காங்கிரஸ் நினைக்குமானால் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. மாறாக காங்கிரஸ் தோற்குமானால் ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் காங்கிரசின் இமேஜு மேலும் சரிந்துவிடும். அக்கட்சியின் தொண்டர்கள் தன்னம்பிக்கை குறைந்து ஒரு அவநம்பிக்கையுடனேயே மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். முன் கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கும்.  மொத்தத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் இரு கட்சிகளுக்கும் மக்களவை தேர்தலுக்கு முந்தைய அக்னி பரீட்சையாகவே இருக்கும். இத்தேர்தலின் வெற்றி, தோல்விகள் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிதளவாவது மக்களவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த நிறையவே வாய்ப்புண்டு.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன, தமிழ் வெளி ஒரு நல்ல பயனுள்ள வலைத்தளம் ... தமிழ் வெளி நன்றி....
    எமது வலைப்பகுதி
    தமிழ் வாழ் வலைப்பகுதி
    திருக்குறள்

    பதிலளிநீக்கு
  2. மோடி பிரச்சாரம் மட்டும் போதாது, மோடி மாதிரி ஆட்சியையும் நடத்தியிருக்க வேண்டும், ஆனால் இவர்கள் நடத்தியதோ கொள்ளையோ கொள்ளையடித்த ஆட்சி, ஒட்டு விழுவது கஷ்டம்.

    பதிலளிநீக்கு