தலிபான்கள் தங்களின்
சுய நலத்திற்காக எந்தவித கொடூரங்களையும் செய்ய துணிந்தவர்கள் எனபது உலகம்
முழுவதும் தெரிந்த விஷயம். எனவே அவர்கள் செய்யும் எவ்வளவு கொடூரமான விஷயங்களும்
நமக்கு வியப்பை தருவதில்லை. தம் நாட்டு மக்களின் கல்வி, சுதந்திரம், மனித உரிமைகளை
தரை மட்டமாக்கிய தலிபான்கள், அதனை மறைக்க
மதக் கருத்துக்களை கூறி பூசி மெழுகினர். ஆனால் தலிபான்களின் உண்மையான
நோக்கம் மக்களை அறியாமையில் மூழ்கடித்து
அவர்களை தன்னுடைய சுயலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்வதே ஆகும். தன் நாட்டின் பால்
மனம் மாறாத பிஞ்சு குழந்தைகளை அவர்கள் எவ்வாறு தம்முடைய தீவிரவாத செயல்களுக்கு
பயன்படுத்தினர் என்பதே அதற்கு அத்தாட்சி ஆகும்.
ஆப்கானிஸ்தானின்
ஹெல்மன்ட் மற்றும் காஸ்னி சிறைகளில் 224
குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தலிபான்களால் மிட்டாய்களும், சில
காசுகளும் கொடுத்து ஏமாற்றப்பட்டு மனித வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டவர்கள்.
அனாதையாக, பசியோடு இருந்த குழந்தைகளை வெறும் அறுபது பைசா லஞ்சமாக கொடுத்து தங்களது
இயக்கத்தில் சேர்த்துள்ளார்கள். இக்குழந்தைகளை பேட்டி எடுத்துள்ள சேனல் 4 தொலைகாட்சி அதனை Taliban Child Fighters என்ற பெயரில் குறும்படமாக நாளை இரவு 8 மணிக்கு (GMT) ஒளிபரப்ப உள்ளது.
குழந்தைகளை தங்களது
இயக்கத்தில் சேர்ப்பதில்லை என்று தாலிபான் தொடர்ந்து பொய் கூறிவந்துள்ளது. ஆனால் வீடில்லாத, அநாதையான குழந்தைகளை தொடர்ந்து தனது
இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சியையும்,
தேவைப்பட்டால் அவர்களை மனித வெடிகுண்டுகளாகவும் தலிபான் தொடர்ந்து பயன்படுத்தி
வந்துள்ளது. தலிபான் இயக்கத்தினால் மனித வெடிகுண்டாக மாற்றப்பட்டு, பின்
அவர்களிடமிருந்து தப்பி வந்த நியாஸ் என்ற சிறுவன்
கூறுவதை சற்று கவனியுங்கள்.
நியாஸ் |
“நான் எனது
பெற்றோருடன் வசித்து வந்தேன். ஒருநாள் அமெரிக்க கூட்டுப் படைகள் நாங்கள் இருந்த
பகுதியில் விமான தாக்குதல் நடத்தின. அப்போது எங்கள் வீட்டில் தாலிபான்கள்
பதுங்கினர். அமெரிக்க தாக்குதலில் எனது
தந்தை இதயத்திலும், தலையிலும் குண்டடிபட்டு இறந்துபோனார். எனது தாயார் மார்பில்
அடிபட்டு இறந்து போனார். அனாதையான என்னை தாலிபான்கள் கடத்திக்கொண்டு போனார்கள்.
நகர்ப்புறத்துக்கு வெளியே ஒரு இடத்தில் வைத்து துப்பாக்கி கையாள்வது மற்றும் IEDs செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். அப்போது எனக்கு
நிறைய காசுகளும், மிட்டாய்களும் கொடுத்தனர். தொடக்கத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள்
அவர்கள் எனக்கு சிறப்பு பரிசு தருவதாக கூறினார்கள். ஆனால் அது வெடிகுண்டுகள்
பொருத்தப்பட்ட ஒரு தற்கொலை பெல்ட் என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். எனது உடல் முழுவதும்
வெடிகுண்டுகளும், கிரனேடுகளும் பின்னி
பிணைந்திருந்தன. . அவர்கள் அதனை
ஒரு குறிப்பிட்ட சோதனை சாவடியில் வெடிக்கச் சொன்னார்கள். அதனை வெடிக்கச்
செய்வதற்காக எனக்கு அவர்கள் 50
Afghanis காசுகள் (இந்திய
மதிப்பில் 60 பைசா) கொடுத்தனர். நான் தற்கொலை செய்துகொண்டால்
இந்த காசுகளை வைத்து நான் என்ன செய்ய முடியும் என்று அவர்களிடம் கேட்டேன். ஆனாலும்
அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். நீ இதனை செய்தால், கடவுள் உனக்கு சொர்க்கத்தை
பரிசளிப்பார் என்று கூறினர். இறுதியாக
நான் அவர்களிடமிருந்து தப்பித்து, 9 மைல்கள் நடந்து ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்தேன்.”
இப்போது நியாசுக்கு
பத்து வயதாகிறது. லஷ்கர் கா என்னுமிடத்தில் ஒரு அநாதை இல்லத்தில் வசித்து
வருகிறான். ஆனால் மற்ற சிறுவர்கள் அவ்வளவு அதிர்ஷ்டக்காரர்கள் அல்ல. 224 சிறுவர்கள் அரசாங்கப்படையினரால் கைது செய்யப்பட்டு
சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நியாசின் கதை அவனின்
அப்பாவித்தனத்தை பறைசாற்றினாலும், சிறையிலிருக்கும் மற்றொரு சிறுவன் ஹன்ணன் கூறும்
கருத்து நம்மை வேறுவிதமாக சிந்திக்க வைக்கிறது.
ஹன்ணன் |
“என் தந்தை தாலிபான்
இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார். நான் எனது தந்தையிடமிருந்து ஆயுதங்களை கையாளும் முறையினை
கற்றுக்கொண்டேன். எனது தந்தை அமெரிக்க
கூட்டுப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டார். எனக்கு 12 வயது இருக்கும்போது நான் தாலிபான் இயக்கத்தில் சேர்ந்தேன். ஒரே வருடத்தில் ஐந்து நண்பர்களை சேர்த்துக்கொண்டு
தனியாக ஒரு தாக்குதல் பிரிவை தொடங்கினேன். புற வழி சாலைகளில் தாக்குதல்களை
நடத்தினேன். அத்தகைய ஒரு தாக்குதலின்போது நான் அரசாங்க படையினரால் கைது
செய்யப்பட்டேன். எனது தந்தையின் சாவுக்காக நான் பழி வாங்க நினைக்கவில்லை. நான்
கடவுளின் பெயரால் புனிதப்போர் செய்யவே
விரும்புகிறேன். மத நம்பிக்கை இல்லாதவர்களை நாய்களை கொல்வது போல் கொல்லலாம்
என குர்ரானில் எழுதப்பட்டிருக்கிறது.”
இந்த குறும்படத்தின்
இயக்குனரான நஜிபுல்லாஹ் கூறும்பொழுது ஹன்ணன் மற்றும் அவனை போன்ற மற்ற
சிறுவர்களிடம் பேசும்போது நான் மிகவும் கவலை அடைந்தேன். அவர்கள் ஏற்கனவே மிகவும்
ஆபத்தானவர்களாக மாறியிருந்தார்கள். அவர்கள் சிறையை விட்டு விடுதலையாகும்போது
தாலிபான் அல்லது மற்ற ஆயுத குழுக்களால் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படலாம்.
அவர்கள் உறுதியான தீவிரவாத மன நிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்.
இன்று குழந்தைகளை பொருத்தவரை உலகின் ஆபத்தான இடமாக
ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் மட்டுமல்ல, அனைத்து தீவிரவாத
குழுக்களும் சிறுவர்களை தங்களின் இயக்கத்தில் இணைத்துக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. அவர்கள் ஆப்கானிஸ்தானின்
எதிர்கால போராளிகளாக கருதப்படுகின்றனர். அங்கு ஐந்தில் ஒரு குழந்தை தனது ஐந்தாவது
பிறந்த நாளை கொண்டாட உயிரோடு இருப்பதில்லை.
ஏற்கனவே பட்டினி, வறுமை, போர், கல்வியின்மை, நிலைத்தன்மை இன்மை போன்ற
காரணங்களால் ஆப்கன் குழந்தைகள் மிகுந்த மன நெருக்கடியில் உள்ளனர். எனவே அவர்களை
ஏமாற்றி தீவிரவாதத்தின் பக்கம் இழுப்பது எளிதான ஒன்றாகிறது. ஆப்கானிஸ்தானின்
தீவிரவாத குழுக்கள் தனது விஷ விதைகளை அடுத்த தலைமுறையிடம் நன்றாக ஊன்றிவிட்டது
போலவே தெரிகிறது. அவ்வாறெனில் அது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகத்தின்
அமைதிக்கே ஆபத்தாகத்தான் முடியும். அதே சமயத்தில் தாலிபான் போன்ற தீவிரவாத
குழுக்களின் தீவிரவாத செயல்களுக்கு வக்காலத்து வாங்கும் ஞான சிகாமணிகள் ஒரு
நிமிடம் நியாசின் இடத்தில் தங்கள் குழந்தைகளை வைத்துப் பார்க்கட்டும். குழந்தைகளை
மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் எந்த ஒரு அரசியல் இயக்கமும், தீவிரவாத இயக்கமும், மனித குலத்திற்கே
விரோதமானதுதான். அவர்கள் அடிப்படை
மனித்தன்மையை இழந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.
படங்கள்: சேனல் 4
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக