சனி, 2 பிப்ரவரி, 2013

கார்கில் போர்: வெளிவந்த உண்மையும், வெளிவராத மர்மங்களும்!


கார்கில் போர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் முஷராப் ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையை (Line of Control) கடந்து இந்திய பகுதிக்குள் 11 km தூரத்திற்கு  நுழைந்ததாகவும், அந்த பகுதியில் ஒரு நாள் இரவு முழுக்க தங்கி இருந்ததாகவும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி Col (retd) அஷ்பக் ஹூசைன் தற்போது தெரிவித்துள்ளார். மார்ச் 28, 1999 அன்று மேற்கண்ட சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது முஷாரப்புடன் பிரிகேடியர் மசூத் அஸ்லம் உடன் இருந்ததாகவும், அவர்கள் சிக்ரியா முஸ்தாகர் என்னும் இடத்தில் அன்றைய இரவை கழித்ததாகவும், மறுநாள் முஷராப் பாகிஸ்தான் எல்லைக்கு திரும்பியதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் தங்கிய இடத்தில் ஏற்கனவே Col அம்ஜத் ஷபிர் தலைமையில்  பாகிஸ்தானிய ராணுவம் முகாமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹூசைன் இச்செய்தியை ஏற்கனவே 2008 ல் வெளியிடப்பட்ட  தனது புத்தகமான  Witness to Blunder: Kargil Story Unfolds ல் தெரிவித்திருந்தார். அவர் வியாழக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் இதே கருத்தை வலியுறுத்தினார். கார்கில் போர் முஷராப் தலைமையில் நான்கு ஜெனரல்களால் திட்டமிடப்பட்டது என்று  Lt Gen. (retd) ஷாஹித் ஆஷிஸ் கூறியது பற்றி கருத்து கேட்ட போது ஹூசைன் இவ்வாறு தெரிவித்தார்.

டிசம்பர்  18, 1998, அன்று  பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவு  முதன் முதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதன் பின் மற்ற பிரிவுகள் LoC யை கடந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க ஆணையிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய பகுதிக்குள் முன்னேற பாகிஸ்தான் ராணுவ பிரிவுகள் ஒவ்வொன்றும் போட்டிபோட்டன என்றும்  அவர்  கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த செய்தி முதன் முதலாக ஒரு ஆடு மேய்ப்பவரால் மே 3 , 1999 அன்று இந்திய ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இது பற்றி இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி V K சிங் கருத்து தெரிவிக்கையில் தான் ஒரு ராணுவ தளபதி என்ற முறையில் இந்திய எல்லைக்குள் 11 km தூரம் வரை வந்த முஷாரபின் துணிச்சலை தாம் பாராட்டுவதாகவும், ஏனென்றால் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அதிபயங்கரமான ஒரு காரியம் என்றும் அவர் கூறினார். ஆனால் அதே சமயத்தில் இந்திய தரப்பிலும் சில தவறுகள் நடந்துள்ளன என்றும், பாகிஸ்தானிய ராணுவம் இந்திய பகுதிக்குள் அவ்வளவு தூரம் நுழைய எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

கார்கில் போர் முஜாகிதீன்களால் நடத்தப்பட்டது என்று தொடக்கத்தில் பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.. அப்போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றும் தொடர்ந்து பொய் கூறி வந்தது. ஆனால் கார்கில் போர் என்பது பாகிஸ்தான் ராணுவத்தினரால்தான்  நடத்தப்பட்டது என்ற உண்மை தற்போது பாகிஸ்தான் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை கூறிவரும் ஒரு  ஏமாற்று நாடு எனபது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேற்கண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் அறிக்கையை அதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகத்தான் பார்க்க வேண்டும். கார்கில் போர் பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரையில் வெற்றி என்றும், ஆனால் அரசியல் ரீதியாக தோல்வி என்றும், நவாஸ் ஷெரிப் அப்போது அமெரிக்காவிற்கு செல்லாமல் இருந்திருந்தால் கார்கில் போரின் முடிவு வேறாக இருந்திருக்கும் என்றும் முஷரப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  
கார்கில் போர் குறித்து விடை கிடைக்காத கேள்விகளும்  சில உண்டு. 

1) டிசம்பர்  18, 1998 அன்று இந்திய எல்லைக்குள் முதன்முதாலாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. மார்ச்28, 1999 அன்று அப்போதைய பாக். ராணுவ தளபதி முஷராப் இந்திய எல்லைக்குள் 11 km தூரம் ஊடுருவி ஒரு நாள் இரவு தங்கி சென்றுள்ளார். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்னரே (மே 3 , 1999 ) பாக். ராணுவத்தின் நடவடிக்கை இந்திய ராணுவத்திற்கு தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் நம் உளவு நிறுவனங்களுக்கு தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா?.

2)  பாக். ராணுவத்தின் நடவடிக்கை குறித்து அரசு முன்னரே அறிந்திருந்தால் ஏன் இந்திய ராணுவம் தன் நடவடிக்கையை உடனே  தொடங்கவில்லை?. பாக். ராணுவம் தொடர்ந்து முன்னேற ஏன் அனுமதிக்கப்பட்டது.? இதில் ஏதாவது ராஜ தந்திர நடவடிக்கை உள்ளதா?. அவ்வாறு ராஜ தந்திர நடவடிக்கை என்றால் அதனால் இந்தியா பெற்ற பலன் என்ன?.  இந்திய ராணுவத்தின் தாமதமான நடவடிக்கையால் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு அதிகரித்ததுதான் உண்மை. 

3) உளவு நிறுவனங்களுக்கு பாக். ராணுவத்தின் நடவடிக்கை தெரிந்திருக்கவில்லை என்றால் அவைகளின் தோல்விக்கு காரணம் என்ன?. உளவு நிறுவனங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

கார்கில் போர் முடிந்து 13 வருடங்களாகியும் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். கார்கில் போர் குறித்த இந்திய அரசின் பல நடவடிக்கைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராத  மர்மமாகவே உள்ளன.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. மிகவும். அவசியமான பதிவு உங்கள். கருத்தை நான். ஆமோதிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கேட்ட "விடை தெரியாத "கேள்விகளுக்கு கார்கில் போர் சம்யத்திலேயே பத்திரிக்கைகள் விடை சொல்லியிருந்தன,

    #காச்மீர் எல்லையில் வழக்கமாக குளிர் காலத்தில் இந்திய படைகள் வாபஸ் பெறப்பட்டுவிடும், மிகச்சிறிய அளவில் ஒரு படை மட்டும் உயரம் குறைவான ,பேஸ் கேம்பில் இருந்து தொடர்புக்கொள்ளும் தூரத்தில் நிலை நிறுத்தப்படும்.

    இந்நடைமுறை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புரிந்துணர்வுடன் இரு நாடுகளும் பேசி வைத்தே செய்யும் ஒன்று.

    இதனை பாகிஸ்தான் எக்ஸ்பிளாய்ட் செய்துவிட்டது, இதனை நம்பிக்கை துரோகம் என அப்பொழுது கருத்து சொன்ன ராணுவ அதிகாரியும் சொல்லியிருந்தார்.

    # அடுத்தது இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது நிதி துறையில் செய்த ஒரு குளறுபடி.

    குளிர்காலத்தில் வேலை செய்பவர்களுக்கு ராணுவத்தில் கூடுதல் சம்பளப்படி கொடுக்க வேன்டும் என்பதால் வெகுவாக எண்ணிக்கைகைய் குறைத்து ,பணம் சிக்கனம் செய்தார்களாம்.

    மேலும் ராணுவ உளவு நிறுவனத்திற்கு ஒதுக்கிய நிதியையும் குறைத்துவிட்டார்களாம்,

    ராணுவ உளவுப்பிரிவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் அப்பகுதி பழங்குடியினர்/மலைவாழ் மக்களுக்கு சம்பளம் வழங்கி ,ராணுவம் போகாத இடங்களிலும் தினசரி சென்று வந்து தகவல் கொடுக்க இப்படி செய்வார்களாம்.

    ஆடு மேய்ப்பது போல தினசரி எல்லையில் சுற்றி கண்கானிப்பும் ,தகவல் பறிமாற்ரமும் செய்வது வழக்கம்.

    அப்படி செலவு செய்யும் பணத்தினை தண்ட செலவு என நிதித்துறையில் யாரோ சொல்லி, நிதியை கட் செய்துவிட்டார்களாம்,கார்கில் ஊடுருவலுக்கு முன்னர் இப்படியான நடைமுறை வந்துவிட்டதால், அப்பகுதி மக்கள் குளிர்காலத்துல் மெனக்கெட்டு சுற்றி கண்காணிக்கவில்லை, பின்னர் ஊடுருவல்காரர்கள் வெகுவாக்க முன்னேறி வந்த நிலையிலேயே ஆடு மேய்ப்பவர்களால் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

    பணம் கிடைக்கவில்லை என்பதால் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் எனவும் சொல்ல முடியாது, ஏன் எனில் குளிர்காலத்தில் ஆடு மேய்க்கும் வேலை எல்லாம் செய்ய முடியாது, ராணுவம் கொடுக்கும் ப்ணத்திற்காக ஆடு மேய்ப்பது போல மலைப்பிராந்தியங்களில் சும்மாவேனும் சுற்றி வருவது வழக்கம், பல நேரங்களில் ரிஸ்க் எடுத்து நீண்ட தூரம் கூட செல்வார்கள், பணம் கொடுப்பது நிறுத்தியதால் யாரும் குளிர்காலத்தில் வேலை செய்யவில்லை.

    கடசியாக தகவல் சொன்ன ஆடு மேய்ப்பவர் கூட ராணுவத்திற்காக செய்தி சொல்லும் மெசெஞ்சர் தான், அவராக வந்து தனக்கு பழக்கப்பட்ட ராணுவ அதிகாரியிடம் அந்நியர்கள் நடமாட்டம் இருக்குனு சொல்லி இருக்கிறார்.

    இதெல்லாம் அப்பொழுது செய்தியாகவே வந்துவிட்டது, நினைவில் இருந்து சொல்கிறேன் ,கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.

    நமது உயர்மட்ட அதிகாரிகளின் சிக்கன நடவடிக்கை அல்லது அலட்சியமே கார்கில் ஊடுருவலை தாமதமாக அறிய காரணம் எனலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நமது உயர்மட்ட அதிகாரிகளின் சிக்கன நடவடிக்கை அல்லது அலட்சியமே கார்கில் ஊடுருவலை தாமதமாக அறிய காரணம் எனலாம்.//

      தங்களின் கருத்துக்களை இந்திய ராணுவத்தை பொறுத்து வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்திய உளவு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை கோட்டை விட்டதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனெனில் ஒரு நாட்டின் படையெடுப்பை கண்டுபிடிக்க ஒரு உளவு நிறுவனத்திற்கு மூன்று மாதங்கள் ஆகிறது என்பதை நான் நம்பவில்லை. தாங்கள் கூறிய காரணங்கள் சில இந்திய அரசு பத்திரிக்கைகள் மூலமாக பரப்பிய சில பொய்கள் என்றே நான் நம்புகிறேன். இந்திய உளவு நிறுவனங்களின் தோல்விக்கு காரணம் என்ன?. உண்மையில் ரா அமைப்பு முன்கூட்டியே கார்கில் ஊடுருவலை அறிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். பதில் தாக்குதல்கள் நடத்த ஏன் தாமதம் செய்தார்கள் என்பதுதான் எனக்கு விடை கிடைக்காத கேள்வி. இந்திய அரசு நினைத்து ஒன்று. நடந்தது ஒன்று என்பதே என் கருத்து. உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும்.

      நீக்கு