வியாழன், 7 பிப்ரவரி, 2013

ட்விட்டர் ஹேக்கிங் - பின்னணியில் சீனாவின் சதி!படம்:Google
ட்விட்டர் தளத்தை ஹேக்கிங் செய்து சுமார் 2,50,000 நபர்களது அந்தரங்க தகவல்களை ஹேக்கர்கள் திருடியதின் பின்னணியில் சீனாவின் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 

சென்ற வாரத்தில் ட்விட்டர் சமூக தளம் ஹேக்கர்களால் தாக்கப்பட்டு சுமார் 2,50,000 நபர்களது user names, ஈ-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் ஆகியவை திருடப்பட்டன. அமெரிக்க நாளிதழ்களான நியுயார்க் டைம்ஸ், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், த வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை தங்களது தளங்கள் சமீப காலமாகவே மிகப் பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளன. இத்தகைய தாக்குதலுக்கு பின்னணியில் சீனா இருப்பதாக இப்போது மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கென மிகப்பெரிய ஹேக்கர்ஸ் படை ஒன்றினை சீன அரசு ரகசியமாக உருவாக்கி உள்ளதாக இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் நம்புகின்றன. இந்த ஹேக்கர்ஸ் படை  மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரும் நிறுவனங்களின் வியாபார ரகசியங்களை கண்டுபிடிப்பது மட்டுமில்லாமல் முக்கியமான பத்திரிக்கையாளர்கள், சீன அரசின் எதிர்ப்பாளர்கள ஆகியோரது ரகசியங்கள், பிற நாடுகளின் ராணுவ ரகசியங்கள் ஆகியவற்றை உளவு பார்ப்பது போன்ற வேலைகளையும் செய்கின்றன.  சீன அரசு மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை மறுத்த போதிலும், இது போன்ற ஹேக்கிங் குற்றங்கள் சீனாவிலிருந்தே செயல்படுத்தப்படுவது போல் தோன்றுகின்றன என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

2010 ஆம் ஆண்டிற்கான பிரிட்டனின்  Strategic Defence Review அறிக்கையில் சைபர் தாக்குதல் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உள்ளது  என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வழக்கமான பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது போன்று சைபர் போருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது  என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குனர் பாப் லார்ட் தெரிவிக்கையில் ட்விட்டர் சமூக தளம் மீதான தாக்குதல் ஏதோ பொழுதுபோக்கிற்காக செய்யப்பட்டது அல்ல என்றும், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்றும், இதை தனித்த ஒரு சம்பவமாக தாம் கருதவில்லை என்றும், ட்விட்டர் போன்று பிற நிறுவனங்களும் இது போன்ற தாக்குதலுக்கு தற்காலத்தில் உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதனாலேயே தம் நிறுவனத்தின் மீதான தாக்குதலை வெளிப்படையாக தெரிவித்ததாகவும், தாக்குதல் குறித்த தகவல்களை தற்போது திரட்டிவருவதாகவும்,  இது குறித்த புலன் விசாரணையில் அரசாங்கத்திற்கும், பெடரல் லா என்போர்ஸ்மென்ட் அமைப்பிற்கும் உதவி வருவதாகவும், குற்றவாளிகளை தண்டித்து பாதுகாப்பான இணையத்தை பயன்பாட்டாளர்களுக்கு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கூகிள் நிறுவனத்தின் எக்ஸிக்யுடிவ் சேர்மன் எரிக் ஸ்மித்  தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகமான The Digital Age புத்தகத்தில் சீனாவின் ஹேக்கர்கள் எவ்வாறு உலகிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உருவாகி வருகிறார்கள் என்பதை விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை மையமாகக் கொண்ட சைபர் குற்றங்கள் உலகம் முழுமைக்கும்  பேரழிவாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே திறமை வாய்ந்த ஹேக்கர்கள் உள்ள நாடாக சீனா உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். சீனாவின் கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் தற்போது உலகம் முழுவதும் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் சீனாவை சேர்ந்த ஹேக்கர்களுக்கு  ஹேக்கிங் செய்வது என்பது மிகவும் எளிதான செயலாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நியுயார்க் டைம்ஸ், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  ஆகிய பத்திரிக்கைகள் தங்கள் மீதான சைபர் தாக்குதல் என்பது சீனாவை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களை உளவு பார்ப்பதற்கான முயற்சியே  என்று குற்றம் சாட்டியுள்ளன. சீனாவின் வருங்கால அதிபராக கருதப்படும் ஷி ஜின்பிங்கின் உறவினர்கள் ஆச்சரியமூட்டும் வகையில் சொத்து சேர்த்துள்ளது பற்றிய செய்தி தொகுப்பை வெளியிட்டவுடன், அடுத்த கணமே தனது தளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக Bloomberg Financial News  தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மீது மிகப்பெரும் சைபர் தாக்குதலை தொடுத்து வரும் சீனா தனது நாட்டில் சைபர் பாதுகாப்பை வலிமையாக வைத்துள்ளது. அது தனது மக்களுக்கு சுதந்திரமான இணையத்தை வழகுவதில்லை. சமூக வலைத்தளங்களுக்கு அனுமதியளித்தால் அரபு நாடுகளில்  ஜனநாயகத்திற்கு ஆதரவான புரட்சி வெடித்தது போன்று சீனாவிலும் புரட்சி வெடித்துவிடும் என்று சீன அரசு அஞ்சுவதாலேயே அது Twitter மற்றும் Facebook தளங்களை தடை செய்துள்ளது. சுதந்திரமான இணையம் என்பது சீனாவின் கம்யுனிச கோட்டையை தகர்த்துவிடும் என்று சீன அரசு உறுதியாக நம்புகிறது. சீனாவின் சொந்த சமூக வலைத்தளமான வெய்போ (Weibo) வில் மட்டும் சுமார் 1,000 பேர் சென்சார் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தினசரி சீன அரசுக்கு எதிரான 10 மில்லியன் செய்திகளை வெய்போ தளத்திலிருந்து நீக்குகின்றனர். கம்யுனிசத்திற்கு ஆதரவாக இணையத்தில் பதிவுகளை வெளியிட 3,00,000-க்கும் மேற்பட்ட சீனர்கள்  சம்பளத்திற்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் சீனாவின் சைபர் போரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தங்கள் நாட்டின் தலை சிறந்த கணினி நிபுணர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஏனென்றால் வருங்காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான போர் என்பது போர்க்களத்தில் வழக்கமான ஆயுதங்களுடன் நடைபெறுவதாக இருக்காது. உதாரணமாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால், எதிரி நாடு பதிலடியாக இணையத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் தேசிய மின்சார கிரிட்டை அல்லது நீர் விநியோகத்தை தடை செய்ய முற்படலாம். 

உலகத்திலேயே தனது நாட்டின் பரப்பை விரிவுபடுத்தும் ஆசை அதிகம் கொண்ட நாடு சீனாதான். தன் ஆசையை வெறும் கனவாக கொண்டிராமல் அதனை செயல்படுத்தும் திட்டத்தையும் சிறிது சிறிதாக சீன அரசு கவனமாக செய்து வருகிறது. சீன அரசு தொடங்கி இருக்கும் சைபர் போர் (cyber war) என்பது அதில் ஒரு வகைதான். பல நாடுகள் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நிலையில், வருங்காலத்தில் போர் என்பது வழக்கமான ஆயுதங்களை கொண்டு நடக்க வாய்ப்பில்லை. செலவில்லாமல், ரத்தம் சிந்தாமல் இணையத்தின் மூலம் ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கும் சைபர் போர் மட்டுமே எதிர்காலத்தில் நடக்கும். சீனாவின் சைபர் போரை எதிர்கொள்ள அமெரிக்கா,  பிரிட்டன் போன்ற நாடுகள்  தயாராகி வருகின்றன. அதுபோல இந்தியாவும் சைபர் துறையில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால்  நான் அடிக்கடி கூறுவது போல் இந்தியா தனது முதல் எதிரியாக கருதவேண்டியது சீனாவைத்தான். பாகிஸ்தானை அல்ல. சீனாவின் நவீன தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவும் தன்னை நவீனபடுத்திக்கொள்ள விடும். இல்லாவிடில் 1962 –ல் நடந்த வரலாறு மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். வரலாற்றிலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவேண்டும். தவறினால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக இருக்கலாம்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 கருத்துகள்:

 1. உலகத்தின் எந்த நாட்டவரையும் நம்பலாம். ஆனால் சீனர்களை நம்பவேக் கூடாது. நீ எனது நண்பன் என்று சொல்வார்கள், ஆனால் எப்போது சந்தர்ப்பம் அமையும் இவனைக் கொல்லலாம் என்று திட்டம் தீட்டுவார்கள்.

  எப்பொழுதும் இந்தியா எங்கள் நட்பு நாடு, நாம் பழைய பகையை மறக்க வேண்டும் என்பர்கள். ஆனால் அவர்களது எண்ணம் முழுவதும் நமது வளர்ச்சியைத் தடுப்பதிலேயே இருக்கும். பாகிஸ்தானிலும், இலங்கயிலும் ஆழமாகக் காலூன்றி இருக்கிறார்கள்.

  நமது நாட்டிற்குப் பெரிய பாதுகாப்பு அச்சுருத்தல் சீனாதான். நமது அரசு இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்கவே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியாக சொன்னீர்கள். வட கிழக்கு சீன எல்லைப்பகுதிகளில் சீன ராணுவத்தின் கட்டமைப்பு வசதிகளோடு நமது நாட்டின் கட்டமைப்பு வசதிகளை ஒப்பிட்டு பார்த்தால் நாம் அதல பாதாளத்தில் இருக்கிறோம்.

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. இந்த செய்தியை நம்புவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நமக்கு ஏதாவது ஒன்று ஆனால் துடித்துப் போகிறவர்கள் நமது பெண்டாட்டியோ பிள்ளைகளோ அல்ல, நமக்குக் கடன் கொடுத்தவர்கள்தான்!! அமெரிக்காவுக்கு கடன் கொடுப்பதில் முக்கியமான நாடுகளில் சீனாவும் ஒன்று. உலகப் பொருளாதாரமே அமரிக்கா செய்யும் ஷோவில் தான் அடங்கியுள்ளது. அதற்க்கு ஏதாவது ஊரு விளைந்தால் உலகமே ஆடும் என்பது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் அமரிக்க வங்கிகள் திவாலான போது தெரிந்தது. எனவே அமரிக்கா நாசமாகப் போக வேண்டும் என்று ஒருபோதும் சீனா விரும்பாது. சொல்லப் போனால் அமரிக்கா சீனாவின் முன்னணி கஷ்டமர், அவருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று முதலில் சீனாதான் விரும்பும், அமரிக்கா கவிழ்ந்தால் சீனாவின் பொருளாதாரமும் கவிழும், அவர்கள் தயாரிப்புகளை எங்கே போய் விற்ப்பார்கள்?!!

  பதிலளிநீக்கு