செவ்வாய், 30 அக்டோபர், 2012

உங்கள் குழந்தைகளுக்கு தயவுசெய்து உடனடி நூடுல்ஸ் கொடுக்காதீர்கள்!



இன்று நம்முடைய வீடுகளின் உணவுப் பட்டியலில் உடனடி நூடுல்ஸ் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. முதலில் குழந்தைகளின் பிரியமான உணவாக இருந்த நூடுல்ஸ் இன்று அனைவருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. சமைப்பது எளிது. நேரம் மிச்சம், வேலை குறைவு, பிடித்த சுவை என்று சகல சௌகரியங்களும் உள்ளதால் இன்று நூடுல்ஸ் தமிழர்கள் உணவில் முக்கிய இடத்தை பிடித்த்விட்டது. இன்று பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவு டிபன் பாக்ஸில் கூட நூடுல்ஸ்தான் முதலிடம் பிடிக்கிறது. ஆனால் நூடுல்ஸின் கெடுதல் பற்றி தெரியாமல் பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஆசையாய் சமைத்து தருவது மிகவும்  கவலைக்குரிய விஷயமாகும். எனவேதான் இந்த பதிவினை குழந்தைகளின் நலன் கருதி இங்கு வெளியிடுகிறேன்.

அகமதாபாத்தை சார்ந்த Consumer Education and Research Society (CERC) என்ற அமைப்பு 15 நிறுவனங்களின் நூடுல்ஸ் தயாரிப்புகளை தனது ஆய்வகத்தில் ஆய்வு செய்தது. நூடுல்ஸில் உள்ளதாக கூறப்படும்  சத்துக்களான கொழுப்பு, பைபர், சோடியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் அளவு குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் நூடுல்ஸில் அதிக அளவில் சோடியமும் குறைந்த அளவு பைபரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CERC அமைப்பின் பொது மேலாளர்  ப்ரிதி ஷா தெரிவிக்கையில் நூடுல்ஸ் எனபது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான  சத்து உணவு என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் எங்களுடைய ஆய்வு முடிவுகள் அந்த நிறுவனங்கள் கூறுவதை பொய் என நிரூபித்துள்ளன என்றார். மேலும் அவர் நூடுல்ஸில்  உள்ள அதிகப்படியான சோடியம், கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்  உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய இதய நோய்களுக்கும், இரத்த அழுத்த நோய்களுக்கும் காரணமாக அமைகிறது என்று தெரிவித்தார்.

Maggi, Top Ramen, Knorr, Ching's Secret, Sunfeast Yippee!, Foodles, Tasty Treat and Wai Wai X-press ஆகிய பிராண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அனைத்து பிராண்டுகளிலும்  அதிக அளவு சோடியமும், குறைந்த அளவு பைபரும் இருப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. மேற்கண்ட ஆய்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி விளக்கம் கேட்டபோது அவைகள் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று ஷா தெரிவித்தார்.

ஆய்வின்படி 100 கிராம் நூடுல்ஸில் 821 மில்லிகிராம் சோடியம் காணப்பட்டது.. இது பிரிட்டிஷ் உணவு பாதுகாப்பு ஏஜென்சி (UK FSA) நிர்ணயித்துள்ள அளவை விட மிகவும் கூடுதலாகும். Maggi Meri Masala பிராண்டில் 100 கிராம் நூடுல்ஸில் 821 மில்லிகிராம் சோடியம் காணப்பட்டது. அதே வேளையில், Knorr Soupy பிராண்டில் அதிகபட்சமாக 100 கிராம் நூடுல்ஸில் 1,943  மில்லிகிராம் சோடியம் காணப்பட்டது.

Top Ramen நூடுல்ஸில் 6.8 சதவீதம் ஓட்ஸ் மாவு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஆய்வின் முடிவில் அதை விட குறைவான அளவே ஓட்ஸ் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் பைபர் சத்து 5.6  கிராம்  கொண்ட முழு பைபர் சத்தை உடைய நூடுல்ஸ் என Top Ramen பிராண்டு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் 100 கிராம் உணவில் 6 கிராம் பைபர் சத்து இருந்தால் மட்டுமே அந்த உணவு முழு பைபர் சத்து உடைய உணவு என UK FSA  வரையறுத்துள்ளது.

Maggi New Vegetable Atta Noodles பிராண்டு நூடுல்ஸில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள சத்து அளவுக்கும் குறைவாகவே காய்கறிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

Wai Wai X-press Instant Noodles Masala Delight பிராண்டு தனது நூடுல்ஸில் அதிக அளவு அதாவது 7 mg இரும்பு சத்து உள்ளதாக விளம்பரம் செய்கிறது. ஆனால் ஆய்வின்படி வெறும் 2.6 mg இரும்பு சத்து மட்டுமே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, UK FSA ன் குறைந்தபட்ச நிபந்தனைகளை உணவு நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என தன் அறிக்கையில் CERC தெரிவித்துள்ளது. மேலும் உணவுப்பொருளில் சேர்ந்துள்ள பொருட்கள் மற்றும் சத்துக்களின் விவரங்களை நுகர்வோர் எளிதில் கவனிக்கும் வண்ணம் தெளிவாக பேக்கிங் கவரில் உடனடி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனவா என்று உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கண்டிப்புடன் கவனிக்கவேண்டும் என்று மேலும் CERC தெரிவித்துள்ளது.

CERC –ன் மேற்கண்ட ஆய்வு முடிவுகள் நுகர்வோர் பத்திரிக்கையான இன்சைட்(Insight) ல் வெளியிடப்பட்டுள்ளது.


பைபிளில் ஒரு வசனம் உண்டு. 
உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக்  கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?” (லூக்கா 11:11 ). 
ஆனால் இன்று நாம் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான  எதிர்கால சந்ததியை உருவாக்கவேண்டிய பொறுப்பில் உள்ள நாம் அதற்கு நேர் எதிரான செயலை செய்துகொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறினால் மட்டுமே நாம் வளமான, ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கமுடியும் என்பது நிச்சயம்.

More than a Blog Aggregator

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

பாலிவுட்டின் டாப் 10 நடிகர், நடிகைகளின் தரவரிசை பட்டியல்!



பாலிவுட்டில் நடிகர், நடிகைகளின் மார்கெட்டை தரவரிசைப்படுத்துவது எனபது மிகவும் கடினமான செயல்தான். பொதுவாகவே சினிமா உலகத்தில் இன்று முதலிடத்தில் இருப்பவர் அடுத்து ஒரு படம் ஓடவில்லை என்றாலும் ராசி இல்லாத நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டுவிடுவார். சினிமா உலகில் அவருடைய மார்கெட் உடனே இறங்கிவிடும்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் Times Celebex மற்றும்   zoOm! ஆகியவை  இணைந்து முதன் முதலாக பாலிவுட் நடிகர், நடிகைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலை தயாரிக்க பல விஷயங்கள் அடிப்படை காரணிகளாக  எடுத்துக்கொள்ளப்பட்டன. பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ், பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள்  மற்றும் இணைய  செய்திகளில் இடம்பிடித்தல், ரசிகர்களின் மத்தியில் பிரபலம்  போன்ற பல்வேறு காரணிகள் எடுத்த்க்கொள்ளப்பட்டு அவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடிகர், நடிகைகள் தரவரிசைப்படுத்தப்பட்டனர். நடிகர்கள் நடிகைகள் பெற்ற புள்ளிகள் T Score (Times Score) என பெயரிடப்பட்டுள்ளன.

200 க்கும் மேற்பட்ட பத்தரிக்கைகளிலிருந்தும், 250 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளிலிருந்தும் பெறப்பட்ட புள்ளிவிவரங்களை கொண்டு விஞ்ஞான ரீதியில் முதன்முதலாக தயாரிக்கப்பட்ட பாலிவுட் தரவரிசை பட்டியல் இதுதான் என  Times Celebex  கூறுகிறது. செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசை பட்டியலானது நடிகர்களின் கடந்த இரண்டு வருட பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் , செப்டம்பர் மாதத்தில் பத்திரிக்கை செய்திகளில் இடம்பிடித்தது ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த தரவரிசை பட்டியல் ஜனவரி 2013 முதல் வாரத்தில் வெளியாகும் என்றும், அதன்பின் மாதம்தோறும் வெளியிடப்படும் என்றும்  Times Celebex தன் பத்திரிக்கை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

இப்பொழுது செப்டம்பர்-2012 மாதத்திற்கான தரவரிசை பட்டியலை நாம் பார்க்கலாம்.
Times Celebex தரவரிசை பட்டியல் (நடிகைகள்)
S.No
Actor
T Score
T Rank
1
கரீனா கபூர்
73
1
2
கேத்ரீனா கைப்
60
2
3
பிரியங்கா சோப்ரா
53
3
4
பிபாஷா பாசு
35.5
4
5
ஐஸ்வர்யா ராய்
30
5
6
சோனாக்ஷி சின்ஹா
29
6
7
வித்யா பாலன்
25
7
8
தீபிகா படுகோனே
24.5
8
9
அனுஷ்கா ஷர்மா
21
9
10
அசின்
20.5
10

Times Celebex தரவரிசை பட்டியல் (நடிகர்கள்)
S.No
Actor
T Score
T Rank
1
சல்மான் கான்  
70
1
2
அக்ஷய்குமார் 
53
2
3
ஷாருக் கான்  
52
3
4
ரன்பீர் கபூர்  
48
4
5
அமிதாப்பச்சன்  
32.5
5
6
இம்ரான் ஹஷ்மி
31
6
7
அஜய் தேவ்கன்
29.5
7
8
சயிப் அலி கான்
29
8
9
அமீர் கான்  
25.5
9
10
ரித்திக் ரோஷன்
21.5
10

Times Celebex மற்றும் zoOm! ஆகியவை  இணைந்து வெளியிட்டுள்ள மேற்கண்ட தரவரிசை பட்டியலை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?.  அல்லது உங்களின் தரவரிசை பட்டியலை இங்கே பகிரலாமே!



More than a Blog Aggregator

சனி, 27 அக்டோபர், 2012

'வாழைப்பழ நாட்டின் மாம்பழ குடிமக்கள்'- அர்த்தம் தெரியுமா?!



சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா தன் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டவுடன் கோபத்தில் ஒரு சொற்றொடரை உதிர்த்தார்.  Mango People in a Banana Republic”  என்பதுதான் அந்த வார்த்தை ஆகும். இதற்கு முன்பு கூட சசி தரூர் ஒருமுறை நம் நாட்டை Banana Republic என விமர்சித்து பலரின் எதிர்ப்பை பெற்றார். முதலில் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் எனக்கு புரியவில்லை. நான் ஒன்றும் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவனும் இல்லை. ஆனாலும் வதேரா மறுபடியும் அந்த வார்த்தையை கூறியதும் அச்சொற்றொடரின்  அர்த்தத்தை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமானது.

இணையத்தில் பொருள் தேடியபோது பலவாறு அர்த்தங்கள் கிடைத்தபோதும், அது வதேரா அவ்வாறு கூறியதன்  இடம், பொருள், ஏவலுக்கு சரிவர பொருந்தவில்லை. ஆகவே பல அகராதிகளில் கூறப்பட்டுள்ள அர்த்தங்களை ஒருங்கிணைத்து. நம் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு ஒரு அர்த்தத்தை நாம் உருவாக்கலாம்.

‘Mango People’ என்ற சொல்லுக்கு பொது ஜனம் என்று பொருள் கொள்ளலாம். இவ்விடத்தில் நாம் அதற்கு இந்திய நாட்டின் குடிமக்கள் என பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

Banana Republic என்ற சொல்லுக்கு  அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடு என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக மிகப் பெரும் கோடீஸ்வரனாகிய,  ஊழல் அரசியல்வாதிகளால்  ஆளப்படும், ஏழை மக்கள் நிறைந்த சிறிய நாடுகளை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இப்போது Mango People in a Banana Republic என்ற வார்த்தைக்கு இவ்வாறு அர்த்தம் கொள்ளலாம். வறுமை நிறைந்த மக்களை மிகப்பெரும் பணக்கார மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் ஆளும், அரசியல் நிலைப்புத்தன்மை இல்லாத நாடு இந்தியா எனபதுதான் நமக்கு கிடைக்கும் அர்த்தம் ஆகும்.


இந்தியா ஒரு வாழைப்பழ நாடு என்பதனை நீங்கள்  ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் இக்கருத்தை வதேரா கூறுவதால் அதனை மறுக்கும் முன் நாம் சற்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் நம் நாட்டை சுமார் ஐம்பது ஆண்டுகளாக  ஆண்டு வரும் ஒரு கட்சியின் தலைவரின் மருமகன் கூறுவதால் அதில் உண்மை இருக்கக்கூடும்.

நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ்தான் இருக்கிறார்கள். இந்த நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மிகப்பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். மேலும் ஊழல் செய்வதில் உலக அளவில் முன்னணி வகிக்கிறார்கள். எனவே வதேரா கூறிய கருத்து சரியானதுதான் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்தியாவை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் சாதனை இதுதான். இப்போது இந்தியாவை ஆண்டு வருவதும் காங்கிரஸ் கட்சிதான். தன் குடும்ப கட்சி இந்தியாவை ஆட்சி செய்யும் சமயத்தில் வதேரா இந்த கருத்தை ஏன் கூற வேண்டும். அவர் அர்த்தம் தெரிந்துதான் இந்த வாக்கியத்தை கூறினாரா?. அல்லது தன்னை அறியாமல் உண்மையை கூறிவிட்டாரா?.
More than a Blog Aggregator

வியாழன், 25 அக்டோபர், 2012

அஜ்மல் கசாப்பை ஏன் தூக்கிலிடவேண்டும்?



2008, நவம்பர் 26 ஆம் தேதி அன்று 9 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் கராச்சியிலிருந்து கடல் மார்க்கமாக பாகிஸ்தானின் உளவு ஏஜன்சி ISI – ஆல் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்காகவே சிறந்த ராணுவ பயிற்சிகளோடு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.   தாக்குதல் நடத்தியவர்களில் எட்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் ஒருவன் மட்டும் பாதுகாப்பு படையினரால் உயிரோடு கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் அவனுக்கு தூக்குதண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக கசாப் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான். ஜனாதிபதி அவன் மனுவை பரிசீலனைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். தற்போது உள்துறை அமைச்சகம் கசாப்பை தூக்கிலிட சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு தனது அறிக்கையை அனுப்பியுள்ளது. கசாப் மனு செய்த 31 நாளில் அவனது மனுவை நிராகரித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை சமர்ப்பித்தது ஒரு புதிய சாதனையாகும்.


இதற்கு முன் உள்துறை அமைச்சகம் 32 நாளில் முடிவெடுத்ததே சாதனையாக இருந்தது. ராஜஸ்தானை சேர்ந்த கிராமவாசி ஒருவர் தனது குடும்பத்தினரை கொன்றதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார். அவருடைய கருணை மனுவை 1996 ல் அப்போதைய உள்துறை அமைச்சகம் 32 நாளில் நிராகரித்து ஜனாதிபதிக்கு அறிக்கையை அனுப்பியது.


மகாராஷ்டிரா கவர்னர்  K.சங்கரநாராயணன் அளித்த பரிந்துரையின் பேரிலும், தீவிரவாதிகளுக்கு மன்னிப்பு இல்லை என்ற முந்தைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வகுத்த கொள்கையின்படியும் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள  அறிக்கையின் மேல்  ஜனாதிபதி இரண்டு விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம். முதலாவது அஜ்மல் கசாபின் கருணை மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தலாம். இரண்டாவது, உள்துறை அமைச்சகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி   அறிக்கையை திருப்பி அனுப்பலாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை ஜனாதிபதி திருப்பி அனுப்பமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த முறை உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவை ஜனாதிபதி கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தூக்குத்தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது தனது முடிவினை அறிவிக்காமல் முந்தைய ஜனாதிபதி பிரதீபா படேல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கண்ட மனுக்கள் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பிரணாப் பதவி ஏற்றபோது 11 கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன. அவற்றுள் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குருவின் மனுவும் ஒன்றாகும். மனுக்களின் மீது ஜனாதிபதி முடிவெடுக்க எவ்வித காலகெடுவும் இல்லை. ஆனாலும் பிரணாப் இந்த மனுக்கள் மீது துரிதமாக முடிவெடுப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அப்சல் குருவின் கருணை மனு மீது முடிவெடுக்க முடியாமல் திணறும் இந்திய அரசு, கசாபின் கருணை மனு மீது உடனடியாக முடிவெடுக்க என்ன காரணம்?. அப்சல் குருவின் வழக்கு அரசியலாக்கப்பட்டதுதான் காரணம் ஆகும். அப்சல் குருவை தூக்கிலிட்டால் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் என்று காஷ்மீர் முதல் அமைச்சர் கருத்து தெரிவித்தது நமக்கு ஞாபகம் இருக்கலாம். ஆனால் கசாப்பின் வழக்கு தொடக்கம் முதல் அரசியல் ஆக்கப்படவில்லை என்பது ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம். அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் பொறுப்போடு நடந்துகொண்டன. கசாப்பின் கருணை மனுவை நிராகரித்ததன் மூலம், அப்சல் குருவின் கருணை மனு மீது உடனடியாக முடிவெடுக்கும்படி ஜனாதிபதிக்கு நெருக்கடிகள் அதிகரிக்கலாம்.
இந்தியாவை பொருத்தவரை கசாப்பின் வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 166 அப்பாவிகளை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இந்திய நாட்டின் சட்டத்தின் படி விரைவாக விசாரித்து, குற்றத்தை  சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தது இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சியை  உலகம் முழுவதும் பறை சாற்றியுள்ளது. அதே நேரத்தில் கசாப்பின் கருணை மனுவை நிராகரித்ததன் மூலம் இந்தியா தீவிரவாதத்தை முக்கியமான பிரச்சினையாக கருதிகிறது என்பதனையும், தீவிரவாதத்தை இந்தியா எந்த நிலையிலும் சகித்துக்கொள்ளாது என்பதனையும், தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்பதையும் உலகிற்கு இந்தியா உறுதியாக தெரிவித்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக கசாப்பை தூக்கிலிடுவது என்பது 26/11- தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்தியா செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.
More than a Blog Aggregator

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ராஜபக்சேவின் ராஜதந்திரத்திற்கு முன்னால் தோற்றுப்போன இந்தியாவின் சாணக்கியத்தனம்!



இலங்கையின் ராஜதந்திரத்திற்கு முன் இந்தியாவின் சாணக்கியத்தனம் தோற்றுவிட்டது எனபது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்தத்தனேவுக்கும் இடையே 1987 – ல் ஏற்பட்ட ஒப்பந்தமே ஆகும் என்றும், போருக்கு பின் ஒப்பந்தத்தின்படி 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசை வற்புறுத்துவோம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு கூறி வந்தது. ராஜபக்சேவும் தான் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தபோவதாக  உறுதியாக தெரிவித்து வந்தார். இலங்கை அரசின் அந்த நாடகத்தை தமிழர்கள் நம்பவில்லை. ஆனால் இந்திய அரசு நம்பியது.

போர் முடிந்தவுடன் இலங்கை அரசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது ராஜபக்சேவின் ஏமாற்றுத்தனம் வெளியே தெரிய ஆரம்பித்தது. முதலில் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவேன் என்று கூறிய ராஜபக்சே, பின்னர் தான் மட்டும் தனித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும்  தான் உறுதியாக அமல்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.  இது ராஜபக்சேவின் முதல் பல்டி. இப்போது 13 ஆவது திருத்தத்தை கொண்டுவரப்போவதில்லை என்று தனது தம்பி கோத்தபய ராஜபக்சே மற்றும் கூட்டணி கட்சி  தலைவர்களின் பெயர்களில் அறிக்கை விட்டுவருகிறார். இது ராஜபக்சேவின் இரண்டாவது பல்டி. தற்போது திவிநேகும சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ராஜபக்சே அரசு முனைப்பில் உள்ளது. இது 13 ஆவது திருத்தத்திற்கு நேர் எதிரான சட்டவரைவாகும். 13 ஆவது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தது. ஆனால் திவிநேகும சட்டம் மாகாணங்களிடம் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தையும் பறிக்கிறது. இது ராஜபக்சே இந்தியாவிற்கு கொடுத்த லேட்டஸ்ட் மரண அடி.

இந்தியாவின் அடிப்படையான கோரிக்கையான் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்களின் பிரதிநிதியாக ஏற்ற்கொள்ளவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையைகூட இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை இப்போது நன்றாகவே உணர்ந்துள்ளது.
  
இலங்கை அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான அரசாங்கத்தின் உள்ளார்ந்த பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் கண்டுவருகின்றன ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டை பொறுத்த மட்டில் 95 வீதமானோர் சிங்களவர்களேயாவர். ௭னவே இம் மக்களுக்கு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் அடிபணிந்தே ஆக வேண்டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், இந்தியா பலவந்தமாக இலங்கை அரசியலில் ஊடுருவி 13– வது திருத்தச் சட்டத்தை தேசிய யாப்பில் பதித்து பிரிவினைவாதத்திற்கு நிலையான வித்திட்டது. குறிப்பாக அப்போதைய அரசாங்கம் பிரிவினை வாதத்தின் கைபொம்மையாகவே செயல்பட்டது. ௭வ்வாறாயினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆரம்ப காலம் தொட்டே ௭தி­ர்த்து வந்தோம். இதனை இலங்கை அரசிய­லமைப்பிலிருந்து இல்லாதொழிக்க வேண்­டும் ௭ன்றும் குரல் கொடுத்து வந்தோம்.  இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தற்போது நடவடிக்கை ௭டுத்து வருகின்றது. 13வது திருத்தத்திற்கு தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமைக்கு ௭திராகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் விமர்சனங்கள் மேலோங்கியுள்ள நிலையில் இதனை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் உள்ம­ட்­ட பேச்சுவார்த்தைகள் மேலோங்கியுள்­ளன­. இலங்கையை பொறுத்த வரையில் 95 வீதமானவர்கள் சிங்கள மக்களேயாவர். இவர்களின் ஆணையை மீறி புதிய விடயங்களை ஏற்படுத்த முயற்சிப்பது முடியாத காரியமாகும். குறிப்பாக இலங்கையில் பிரிவினை வாதத்தை இந்தியாவே கூட்டமைப்புடன் இணைந்து ஊக்குவித்து வருகின்றது. ௭னவே இலங்கைக்கு ஏதாவது நல்லது செ­ய்ய விரும்பின் இந்தியா மௌனமாக ஒது­ங்­கி நின்றால் அதுவே போதும் ௭னக் கூறினார். இதன் மூலம் இந்தியாவின் உறுதிமொழியான 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல் என்ற கொள்கை கானல் நீராகிவிட்டது  என்பது நமக்கு புலனாகிறது.

இந்தியாவின் ஆதரவோடு தங்களது நீண்ட நாள் போரில் வெற்றி கண்டவர்களுக்கு இப்போது இந்தியாவின் உதவி தேவை இல்லை. இந்தியா மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை ஒரேயடியாக ஏமாற்றிவிட்டதாக  ராஜபக்சே குழுவினர் மகிழிசியடைந்து விடமுடியாது. ஏற்கனவே ஒருமுறை விடுதலை புலிகளை வளர்த்து இலங்கை அரசுக்கு பாடம் கற்பித்தது இந்திய அரசு. அதை இன்னொரு முறை இந்தியாவால் செய்ய முடியும் எனபது இலங்கை அரசுக்கு தெரியும். அந்த பயத்தில்தான் இந்திய அரசை சமாதானப்படுத்துவதற்கு இந்த வாரத்தில் கோத்தபய ராஜபக்சே இந்திய பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் 13வது அரசியல் சட்ட திருத்தம், "திவிநேகும" சட்டவரைவு மற்றும் குமரன் பத்மநாதன் விடுதலை ஆகிய பிரச்சினைகள்  குறித்து பேசப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ள கருத்து மிகைப்பட்டதாக இருப்பினும் முற்றிலும் நிராகரிக்கக்கூடியது அல்ல. (அவ்வாறு முடிவெடுக்கும் தைரியம் மன்மோகன் சிங்-சோனியா காந்தி தலைமைக்கு உண்டா? என்பது விவாதத்திற்ககுரிய விஷயம்!)

நவம்பர்  1 அன்று  இந்தியா தலைமையில் மூன்று நாடுகளை  கொண்ட குழு இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு செய்யப்போகிறது. இக்குழு ஐ.நா அமைப்பின் UN Human Rights Council (HRC) -ன்  ஒரு பிரிவாகும். இது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஐ.நாவின்  உறுப்பு நாடுகளில் மனித உரிமைகள் நிலை பற்றி ஐ.நாவிடம் அறிக்கை சமர்பிக்கிறது. இக்குழு நவம்பர் 1 அன்று  இலங்கையில் தனது ஆய்வை நடத்துகிறது. அக்குழு தனது அறிக்கையில் தெரிவிக்கும் கருத்தினை கொண்டு இந்திய அரசின் அடுத்தக்கட்ட அரசியல் நிலைப்பாட்டை நாம் அறிந்துகொள்ள முடியும்.
More than a Blog Aggregator

திங்கள், 22 அக்டோபர், 2012

யாஷ் ராஜ் சோப்ராவின் டாப் 10 திரைப்படங்கள்!



யாஷ் ராஜ் சோப்ரா இந்திய திரையுலகின் ஜாம்பவான். இந்திய சினிமாவின் அடையாளம். அவர் இயக்கிய காதல் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. 1959 – ல் தொடங்கிய அவரின் திரையுலகப் பயணம் மிகப்பெரும் வெற்றிகளை உடையது. 2001 – ல் இந்திய அரசின் தாத்தா சாகேப் பால்கே விருதையும், 2005 ல் பத்ம பூஷன் விருதையும் பெற்றார்.  2012- ல் திரையுலகிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் அக்டோபர் 21, ஞாயிறன்று மறைந்தார். இன்று அவருடைய உடல் இறுதிமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.  அவர் இயக்கிய திரைப்படங்களில் டாப் 10 திரைப்படங்களாக உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்கள் இங்கே உங்களுக்காக.

1. Dilwale Dulhania Le Jayenge (1995)

 2. Daag: A Poem of Love (1973)

 

3. Deewar (1975)

 

4. Kaala Patthar (1979)

 

5. Silsila (1981)

 

6. Chandni (1989)

 

7. Lamhe (1991)

 

8. Darr (1993)

 

9. Dil To Pagal Hai (1997)

 

10. Veer-Zaara (2004)




உங்களுக்கு மிகவும் பிடித்த யாஷ் சோப்ராவின் திரைப்படம் எது என்று நீங்கள் இங்கு கூறலாமே! அல்லது நீங்கள் நினைக்கின்ற தரவரிசைபடி டாப் 10 படங்களை வரிசைபடுத்துங்களேன்.

(யாஷ் ராஜ் சோப்ராவின் மறைவிற்கு  அஞ்சலி செலுத்தும்விதமாக இந்த பதிவு வெளியிடப்படுகிறது)

More than a Blog Aggregator

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

திக்விஜய்சிங் காங்கிரஸ் கட்சியின் கதாநாயகனா? காமெடியானா? வில்லனா?



NDA ஆட்சியின்போது  வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் குடும்ப உறவினர்கள் ஊழல் செய்து சொத்து சேர்த்ததாகவும், அதற்கு காங்கிரஸ் கட்சியிடம் ஆதாரங்கள் இருந்ததாகவும், ஆனால் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கக்கூடாது என்பதற்காக அந்த ஊழலின் ஆதாரங்களை வெளியிடவில்லை என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் வதேரா, DLF , ஹரியானா காங்கிரஸ் அரசு ஆகியோருக்கிடையே பத்தரிக்கைகள் சொல்வது போல எந்த மறைமுக தொடர்பும் இல்லை என்றும், வதேராவிற்கு எந்தவித சிறப்பு சலுகைகளோ அல்லது நில ஒதுக்கீடோ வழங்கப்படவில்லை என்றும் சிங் தெரிவித்தார். வதேராவின் சொத்து குவிப்பு பற்றிய மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் சோனியா காந்தி  வதேராவின் ஆடிட்டர் இல்லை என்று சிங் பதில் அளித்தார். மேலும் வதேராவின் பிசினஸ் நடவடிக்கைகளுக்கும், சோனியா காந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறினார்.

CNN-IBN சேனலில் கரன் தாபர் நடத்தும் Devil's Advocate நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திக்விஜய்சிங், NDA ஆட்சியின் பொது நிறைய ஊழலுக்கான ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தன என்றும், ஆனால் அதனை நாங்கள் NDA ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எதிராக எனக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினால், அது நான் கூறும் பொய்யாகத்தான் இருக்கும் என்று சிங் தெரிவித்தார்.
நீங்கள் ஏன் அந்த ஆதாரங்களை வெளியிடவில்லை என்ற கேள்விக்கு நான் ஆதாரங்களை வெளியிட்டிருந்தால் அது வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கும் என்றும், அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான் அவர்கள் கடவுள்கள் அல்ல. அரசியல்வாதிகள் தங்களின் அனைத்து உறவினர்களின் நடவடிக்கைகளையும் கவனிப்பது அல்லது தொடர்வது எனபது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல என்று சிங் தெரிவித்தார்.

நீங்கள் ஏன் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உறவினர்கள் மீது புகார் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு நான் ஏன் புகார் கொடுக்கவேண்டும்?.  அந்த மாதிரி ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு பாராளுமன்றம் உட்பட நிறைய புலனாய்வு துறைகள் நாட்டில் உள்ளன என்று சிங் தெரிவித்தார்.

இதிலிருந்து திக்விஜய் சிங் என்ன சொல்ல வருகிறார்?.  எனது அனுமானம் இதுதான். 

1)பிஜேபி செய்த ஊழலை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது போல, நாங்கள் செய்த ஊழலை பிஜேபி கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும்.

2)ஊழலை கண்டுபிடிக்க பாராளுமன்றம், புலனாய்வு துறைகள் நாட்டில் உள்ளது. எதிர்க்கட்சிகளோ, பொதுமக்களோ அதுகுறித்து எந்த கேள்வியும் கேட்க கூடாது.

3)ஆளும் கட்சி செய்யும் ஊழலுக்கான ஆதாரங்கள் எதிர்கட்சிகளுக்கு கிடைத்தால் அவற்றை வெளியிடக்கூடாது. ஏனென்றால் அது எதிர்கட்சிகளின் வேலை அல்ல. மீறி வெளியிட்டால் ஊழல் செய்தவர்களின் மனம் புண்படும். மேலும் அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம், குட்டி உண்டு.  அவர்கள் ஊழல் செய்வதை பொது,மக்கள்  தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

4)சோனியா ஒன்றும் வதேராவின் ஆடிட்டர் இல்லை. வதேராவின் பிசினஸ் பற்றி சோனியாவிற்கு எதுவும் தெரியாது. அவரின் நடவடிக்கைகள் பற்றி சோனியாவிற்கு எதுவும் தெரியாது. ஆனால் வதேராவிற்கு ஆதரவாக  காங்கிரஸ் கட்சியின் பிரதமர் முதல் வட்ட செயலாளர்கள் வரை  வக்காலத்து வாங்குவார்கள்.

மேற்கண்ட உண்மைகளை சிங் வெளிப்படையாகவே கூறியிருப்பது அவரது மன தைரியத்தை காட்டுகிறது. மக்களால் என்ன செய்ய முடியும்? என்ற நம்பிக்கையின் காரணமாகவும் அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். அல்லது மக்களே ஊழலை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது பேட்டி கொடுக்கும் ஆர்வத்தில் உண்மைகளை அதன் உள்ளர்த்தம் புரியாமல் உளரியிருக்கலாம். அல்லது பரபரப்பாக பேசி பத்திரிக்கை செய்திகளில் இடம்பிடிக்க முனைந்திருக்கலாம். ஏனென்றால் பரபரப்பான அறிக்கைகளுக்கு சுப்ரமணியசாமிக்கு அடுத்து பெயர் பெற்றவர் திக்விஜய்சிங்தான்.
More than a Blog Aggregator