வியாழன், 25 அக்டோபர், 2012

அஜ்மல் கசாப்பை ஏன் தூக்கிலிடவேண்டும்?



2008, நவம்பர் 26 ஆம் தேதி அன்று 9 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் கராச்சியிலிருந்து கடல் மார்க்கமாக பாகிஸ்தானின் உளவு ஏஜன்சி ISI – ஆல் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்காகவே சிறந்த ராணுவ பயிற்சிகளோடு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.   தாக்குதல் நடத்தியவர்களில் எட்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் ஒருவன் மட்டும் பாதுகாப்பு படையினரால் உயிரோடு கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் அவனுக்கு தூக்குதண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக கசாப் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான். ஜனாதிபதி அவன் மனுவை பரிசீலனைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். தற்போது உள்துறை அமைச்சகம் கசாப்பை தூக்கிலிட சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு தனது அறிக்கையை அனுப்பியுள்ளது. கசாப் மனு செய்த 31 நாளில் அவனது மனுவை நிராகரித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை சமர்ப்பித்தது ஒரு புதிய சாதனையாகும்.


இதற்கு முன் உள்துறை அமைச்சகம் 32 நாளில் முடிவெடுத்ததே சாதனையாக இருந்தது. ராஜஸ்தானை சேர்ந்த கிராமவாசி ஒருவர் தனது குடும்பத்தினரை கொன்றதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார். அவருடைய கருணை மனுவை 1996 ல் அப்போதைய உள்துறை அமைச்சகம் 32 நாளில் நிராகரித்து ஜனாதிபதிக்கு அறிக்கையை அனுப்பியது.


மகாராஷ்டிரா கவர்னர்  K.சங்கரநாராயணன் அளித்த பரிந்துரையின் பேரிலும், தீவிரவாதிகளுக்கு மன்னிப்பு இல்லை என்ற முந்தைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வகுத்த கொள்கையின்படியும் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள  அறிக்கையின் மேல்  ஜனாதிபதி இரண்டு விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம். முதலாவது அஜ்மல் கசாபின் கருணை மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தலாம். இரண்டாவது, உள்துறை அமைச்சகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி   அறிக்கையை திருப்பி அனுப்பலாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை ஜனாதிபதி திருப்பி அனுப்பமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த முறை உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவை ஜனாதிபதி கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தூக்குத்தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது தனது முடிவினை அறிவிக்காமல் முந்தைய ஜனாதிபதி பிரதீபா படேல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கண்ட மனுக்கள் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பிரணாப் பதவி ஏற்றபோது 11 கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன. அவற்றுள் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குருவின் மனுவும் ஒன்றாகும். மனுக்களின் மீது ஜனாதிபதி முடிவெடுக்க எவ்வித காலகெடுவும் இல்லை. ஆனாலும் பிரணாப் இந்த மனுக்கள் மீது துரிதமாக முடிவெடுப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அப்சல் குருவின் கருணை மனு மீது முடிவெடுக்க முடியாமல் திணறும் இந்திய அரசு, கசாபின் கருணை மனு மீது உடனடியாக முடிவெடுக்க என்ன காரணம்?. அப்சல் குருவின் வழக்கு அரசியலாக்கப்பட்டதுதான் காரணம் ஆகும். அப்சல் குருவை தூக்கிலிட்டால் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் என்று காஷ்மீர் முதல் அமைச்சர் கருத்து தெரிவித்தது நமக்கு ஞாபகம் இருக்கலாம். ஆனால் கசாப்பின் வழக்கு தொடக்கம் முதல் அரசியல் ஆக்கப்படவில்லை என்பது ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம். அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் பொறுப்போடு நடந்துகொண்டன. கசாப்பின் கருணை மனுவை நிராகரித்ததன் மூலம், அப்சல் குருவின் கருணை மனு மீது உடனடியாக முடிவெடுக்கும்படி ஜனாதிபதிக்கு நெருக்கடிகள் அதிகரிக்கலாம்.
இந்தியாவை பொருத்தவரை கசாப்பின் வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 166 அப்பாவிகளை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இந்திய நாட்டின் சட்டத்தின் படி விரைவாக விசாரித்து, குற்றத்தை  சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தது இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சியை  உலகம் முழுவதும் பறை சாற்றியுள்ளது. அதே நேரத்தில் கசாப்பின் கருணை மனுவை நிராகரித்ததன் மூலம் இந்தியா தீவிரவாதத்தை முக்கியமான பிரச்சினையாக கருதிகிறது என்பதனையும், தீவிரவாதத்தை இந்தியா எந்த நிலையிலும் சகித்துக்கொள்ளாது என்பதனையும், தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்பதையும் உலகிற்கு இந்தியா உறுதியாக தெரிவித்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக கசாப்பை தூக்கிலிடுவது என்பது 26/11- தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்தியா செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக