செவ்வாய், 23 அக்டோபர், 2012

ராஜபக்சேவின் ராஜதந்திரத்திற்கு முன்னால் தோற்றுப்போன இந்தியாவின் சாணக்கியத்தனம்!இலங்கையின் ராஜதந்திரத்திற்கு முன் இந்தியாவின் சாணக்கியத்தனம் தோற்றுவிட்டது எனபது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்தத்தனேவுக்கும் இடையே 1987 – ல் ஏற்பட்ட ஒப்பந்தமே ஆகும் என்றும், போருக்கு பின் ஒப்பந்தத்தின்படி 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசை வற்புறுத்துவோம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு கூறி வந்தது. ராஜபக்சேவும் தான் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தபோவதாக  உறுதியாக தெரிவித்து வந்தார். இலங்கை அரசின் அந்த நாடகத்தை தமிழர்கள் நம்பவில்லை. ஆனால் இந்திய அரசு நம்பியது.

போர் முடிந்தவுடன் இலங்கை அரசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது ராஜபக்சேவின் ஏமாற்றுத்தனம் வெளியே தெரிய ஆரம்பித்தது. முதலில் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவேன் என்று கூறிய ராஜபக்சே, பின்னர் தான் மட்டும் தனித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும்  தான் உறுதியாக அமல்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.  இது ராஜபக்சேவின் முதல் பல்டி. இப்போது 13 ஆவது திருத்தத்தை கொண்டுவரப்போவதில்லை என்று தனது தம்பி கோத்தபய ராஜபக்சே மற்றும் கூட்டணி கட்சி  தலைவர்களின் பெயர்களில் அறிக்கை விட்டுவருகிறார். இது ராஜபக்சேவின் இரண்டாவது பல்டி. தற்போது திவிநேகும சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ராஜபக்சே அரசு முனைப்பில் உள்ளது. இது 13 ஆவது திருத்தத்திற்கு நேர் எதிரான சட்டவரைவாகும். 13 ஆவது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தது. ஆனால் திவிநேகும சட்டம் மாகாணங்களிடம் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தையும் பறிக்கிறது. இது ராஜபக்சே இந்தியாவிற்கு கொடுத்த லேட்டஸ்ட் மரண அடி.

இந்தியாவின் அடிப்படையான கோரிக்கையான் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்களின் பிரதிநிதியாக ஏற்ற்கொள்ளவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையைகூட இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை இப்போது நன்றாகவே உணர்ந்துள்ளது.
  
இலங்கை அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான அரசாங்கத்தின் உள்ளார்ந்த பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் கண்டுவருகின்றன ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டை பொறுத்த மட்டில் 95 வீதமானோர் சிங்களவர்களேயாவர். ௭னவே இம் மக்களுக்கு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் அடிபணிந்தே ஆக வேண்டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், இந்தியா பலவந்தமாக இலங்கை அரசியலில் ஊடுருவி 13– வது திருத்தச் சட்டத்தை தேசிய யாப்பில் பதித்து பிரிவினைவாதத்திற்கு நிலையான வித்திட்டது. குறிப்பாக அப்போதைய அரசாங்கம் பிரிவினை வாதத்தின் கைபொம்மையாகவே செயல்பட்டது. ௭வ்வாறாயினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆரம்ப காலம் தொட்டே ௭தி­ர்த்து வந்தோம். இதனை இலங்கை அரசிய­லமைப்பிலிருந்து இல்லாதொழிக்க வேண்­டும் ௭ன்றும் குரல் கொடுத்து வந்தோம்.  இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தற்போது நடவடிக்கை ௭டுத்து வருகின்றது. 13வது திருத்தத்திற்கு தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமைக்கு ௭திராகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் விமர்சனங்கள் மேலோங்கியுள்ள நிலையில் இதனை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் உள்ம­ட்­ட பேச்சுவார்த்தைகள் மேலோங்கியுள்­ளன­. இலங்கையை பொறுத்த வரையில் 95 வீதமானவர்கள் சிங்கள மக்களேயாவர். இவர்களின் ஆணையை மீறி புதிய விடயங்களை ஏற்படுத்த முயற்சிப்பது முடியாத காரியமாகும். குறிப்பாக இலங்கையில் பிரிவினை வாதத்தை இந்தியாவே கூட்டமைப்புடன் இணைந்து ஊக்குவித்து வருகின்றது. ௭னவே இலங்கைக்கு ஏதாவது நல்லது செ­ய்ய விரும்பின் இந்தியா மௌனமாக ஒது­ங்­கி நின்றால் அதுவே போதும் ௭னக் கூறினார். இதன் மூலம் இந்தியாவின் உறுதிமொழியான 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல் என்ற கொள்கை கானல் நீராகிவிட்டது  என்பது நமக்கு புலனாகிறது.

இந்தியாவின் ஆதரவோடு தங்களது நீண்ட நாள் போரில் வெற்றி கண்டவர்களுக்கு இப்போது இந்தியாவின் உதவி தேவை இல்லை. இந்தியா மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை ஒரேயடியாக ஏமாற்றிவிட்டதாக  ராஜபக்சே குழுவினர் மகிழிசியடைந்து விடமுடியாது. ஏற்கனவே ஒருமுறை விடுதலை புலிகளை வளர்த்து இலங்கை அரசுக்கு பாடம் கற்பித்தது இந்திய அரசு. அதை இன்னொரு முறை இந்தியாவால் செய்ய முடியும் எனபது இலங்கை அரசுக்கு தெரியும். அந்த பயத்தில்தான் இந்திய அரசை சமாதானப்படுத்துவதற்கு இந்த வாரத்தில் கோத்தபய ராஜபக்சே இந்திய பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் 13வது அரசியல் சட்ட திருத்தம், "திவிநேகும" சட்டவரைவு மற்றும் குமரன் பத்மநாதன் விடுதலை ஆகிய பிரச்சினைகள்  குறித்து பேசப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ள கருத்து மிகைப்பட்டதாக இருப்பினும் முற்றிலும் நிராகரிக்கக்கூடியது அல்ல. (அவ்வாறு முடிவெடுக்கும் தைரியம் மன்மோகன் சிங்-சோனியா காந்தி தலைமைக்கு உண்டா? என்பது விவாதத்திற்ககுரிய விஷயம்!)

நவம்பர்  1 அன்று  இந்தியா தலைமையில் மூன்று நாடுகளை  கொண்ட குழு இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு செய்யப்போகிறது. இக்குழு ஐ.நா அமைப்பின் UN Human Rights Council (HRC) -ன்  ஒரு பிரிவாகும். இது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஐ.நாவின்  உறுப்பு நாடுகளில் மனித உரிமைகள் நிலை பற்றி ஐ.நாவிடம் அறிக்கை சமர்பிக்கிறது. இக்குழு நவம்பர் 1 அன்று  இலங்கையில் தனது ஆய்வை நடத்துகிறது. அக்குழு தனது அறிக்கையில் தெரிவிக்கும் கருத்தினை கொண்டு இந்திய அரசின் அடுத்தக்கட்ட அரசியல் நிலைப்பாட்டை நாம் அறிந்துகொள்ள முடியும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து:

 1. 2008-2009ம் வருட கால கட்டத்தில் பதிவுலகில் எழுந்த இலங்கையில் சீனாவின் மூக்கு நுழைப்பு இப்பொழுது உறுதிபட்டுள்ளது.இந்திய பாதுகாப்பு கட்டமைப்புக்கள் கடல்,பாகிஸ்தான்,சீனாவுக்கு எட்டாத தூரம் என்ற நிலையில் உருவாக்கப்பட்டவை இப்பொழுது கேள்விக்குறியாக உருவாகியுள்ளது.மேற்கு கடலில் மும்பாய் வரை வரும் பாகிஸ்தானிய தீவிரவாதம் தென்னிந்திய கடலின் சில மைல்களை கடப்பது ஒன்றும் பெரிதான விசயமில்லை.

  Against India's interest logistic support and manpower could be easily organised with Tamilnadu and Kerala fundamental extremists.

  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு இலங்கை சார்ந்த நிலைப்பாடு இருக்கலாம்.ஆனால் சுஷ்மிதாவின் இலங்கை பயணத்தில் 13ம் சட்ட திருத்த ஒப்பந்தத்தோடு + பொறிகடலையும் ராஜபக்சே தருவார் என்ற வாக்குறுதியும் கூட காற்றில் விடப்பட்டது நன்றாகவே தெரிகிறது.

  சீனா,ரஷ்யாவின் வீடோ ஆதரவு,இலங்கை சார்ந்த பொருளாதர கடல் வணிகம் இன்ன பிற காரணிகள் போன்றவைகள் இலங்கைக்கு சாதகமாகவே உள்ளது.அமெரிக்க மனித உரிமை தீர்மானத்திற்கு பின்பான இலங்கையில் எந்த மாற்றங்களும் நிகழாதது தற்போதைய ஐ.நா அறிக்கை கூட வெறும் கண்துடைப்பாக அமையும் என்ற அவநம்பிக்கையையே உருவாக்குகிறது.

  இந்தியா மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையிலேயே உள்ளது.

  India is an aspiring superpower with a limping walk.

  பதிலளிநீக்கு