புதன், 3 ஏப்ரல், 2013

ஆப்கானிஸ்தான் பிரச்சினை: இந்தியா மீது சீனா திடீர் காதல்!



சீனா எப்போதும் பாகிஸ்தானையே தனது நண்பனாக கருதி வந்துள்ளது. இந்தியா உடனான சீனாவின் நட்பு 1962 –ல் நடந்த போருக்கு பின் எந்த முன்னேற்றமும் அடையாமல் பின்னடைவே அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரும்பான்மையான நிகழ்வுகளில் இந்தியாவின் எந்த நிலைப்பாட்டையும் அது ஆதரித்ததில்லை. மேலும் கூறுவதானால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையையே சீனா எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் எனபது நீண்ட வரலாறு உடையது. தலிபானை பாகிஸ்தானும், தலிபானின் எதிர்ப்பு குழு Northern Alliance ஐ இந்தியாவும் ஆதரித்தன. தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் உதவியோடு காபூலை ஆண்டு வந்த Northern Alliance ஐ தோற்கடித்து அவர்களை நாட்டின் வடக்கு பகுதிக்கு விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார்கள். பின்னாளில் Northern Alliance ன் தலைவரான அஹமத் ஷா மசூத்தை தந்திரமாக கொன்று  கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் ஆதிக்கம் குறைந்தது. பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தலிபான்கள் அமெரிக்காவிடம் தோல்வி கண்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது.
  
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிப்பது எனபது தனக்கு ஆபத்தானது என்றே எப்போதும் பாகிஸ்தான் கருதுகிறது. இவ்விஷயத்தில் சீனாவும் வழக்கம் போல் பாகிஸ்தானின் கருத்தை ஆதரித்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா அப்போது விரும்பவில்லை. ஆனால் இப்போது சீனாவின் கொள்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் உணர முடிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் சீனாவின் புதிய அதிபர் ஷி ஜின்பிங் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது,  இந்தியா தொடர்பான சீனாவின் கொள்கை நிலைப்பாட்டில் ஒரு நேர்மறையான மாற்றம் தென்பட்டதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அச்சந்திப்பின் போது  அதிமுக்கியமான உலக அரசியல் நிகழ்வுகள் குறித்து வருங்காலத்தில் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க  சீனா சம்மதம் அளித்ததாகவும், அது உலக அரசியலில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஏற்றுக்கொள்ளத் தொடங்கியமைக்கான ஒரு அடையாளம் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர். 

இம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு துறை அதிகாரி யாஷ் சின்ஹா தலைமையிலான இந்திய குழுவும், சீன வெளியுறவு துறை அதிகாரி லு ஷாஹுய்  தலைமையிலான சீன குழுவும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளன. இச்சந்திப்பின் போது 2014 ல் அமெரிக்க படை வெளியேறிய பிறகு  ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள், ஆப்கன் பிரச்சினையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, தலிபானின் பயங்கரவாதம், ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை  குறித்து முதன் முதலாக விவாதிக்கப்பட உள்ளது இச்சந்திப்பு உண்மையிலேயே சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தையே நமக்கு காட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பு என்பது  தவிர்க்க முடியாதது என்பதை சீனா  உணர தொடங்கியுள்ளது. அதை விட சீனாவின் கொள்கை மாற்றத்திற்கான காரணங்களில் அதன் சுயநலமும் நிறையவே உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால்,  அது ஏற்கனவே சீனாவின் எல்லைபுற தன்னாட்சி மாகாணமான Xianjing ல் அதிகரித்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மேலும் அதிகரிக்க செய்யும்  என சீனா நினைக்கிறது.  சீனாவின் Xianjing மாகாணம் சீன-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தை  தனி நாடாக அறிவிக்கக் கூறி Turkistan Islamic Party (TIP) என்ற தீவிரவாத அமைப்பு போராடி வருகிறது. இப்பிரச்சினை தற்போது சீனாவுக்கு பெறும் தலைவலியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டிருந்த காரணத்தினால் TIP அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் சற்று குறைந்திருந்தன. 2014 –ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வாபஸ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமெரிக்க படைகள் வெளியேறினால் Xianjing மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும்  கொழுந்து விட்டு எரியக்கூடும் என சீனா நினைக்கிறது. எனவே  ஆப்கானிஸ்தான் தொடர்ந்து அரசியல் ஸ்திரத்தன்மை உள்ள நாடாக இருப்பது சீனாவுக்கு அவசியமாகிறது. பாகிஸ்தான்  மற்றும் தலிபான்களின் வரலாறுகள் ஏற்கனவே உலகம் முழுவதும் அறியப்பட்டதே. ஆகவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் இருந்தால் மட்டுமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை என்பது சாத்தியமாகும். எனவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் கரத்தை வலுப்படுத்துவது சீனாவுக்கு அவசியமாகிறது. இதுதான் இந்தியா மீது சீனா திடீர் காதல் கொண்டதற்கு காரணமாகிறது.

ஒவ்வொரு நாடும் தங்களின் சுய லாப, நட்டங்களை கணக்குப் போட்டுத்தான் தங்களின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. அதுபோலத்தான்  தனது சுய லாபங்களுக்காக தற்போது இந்தியாவை நோக்கி சீனா சற்று வளையத் தொடங்கியிருக்கிறது. காலம் அளித்துள்ள இந்த வாய்ப்பை சற்றும் நழுவ விடாமல் தனது சுயலாபத்திற்கு இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 கருத்துகள்:

  1. சீனாவின் புதிய தலைவர்கள் புதிய கொள்கைகளோடு வந்துள்ளார்கள், குறிப்பாக இந்தியாவோடு கொஞ்சம் நட்புக் கரம் நீட்டவும், இஸ்லாமிய தீவிரவாதங்களை அடக்கவும் நினைக்கின்றனர். பாகிஸ்தான் என்பது இங்கும் ஆடி, அங்கும் ஆடி காசு வாங்கும் கூத்தாடி நாடு எனலாம். ஆகையால் சீனா சண்டைக்காரன் காலில், அதாவது இந்தியாவோடு சுமூகமாக போகலாம் எனக் கருதி இருக்கலாம். இப்போது இருக்கும் இந்திய அரசும் பெரும் எதிர்ப்பரசல்ல, நெகிழ்வுத் தன்மை வாய்ந்த அரசே. சீனா கைப்பற்றிய பல ஆயிரம் ச.கி,மீ நிலங்களை சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டு சிக்கிமை இந்தியாவின் அங்கம் என அங்கீகாரம் வாங்கிக் கொண்டார்கள். சீனாவுக்கும் - இந்தியாவுக்கும் உள்ள பிரச்சனை பொருளாதார போட்டி மறறும் பிரம்மபுத்திரா நீர், அருணாச்சல பிரதேச சிக்கல்கள். இப்போது சீனாவின் முக்கிய எண்ணம் எல்லாம் இந்தியாவோடு இயைந்து திபெத் பிரச்சனை குறைக்க வேண்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்பதே. அத்தோடு பண்டைய பட்டுநூல் பாதை வாணிபத்தை தொடங்க வேண்டும் என்பதுமே. எல்லாம் அவரவர் நலன் சார்ந்தே கொள்கைகள் வகுக்கப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது சீனாவின் முக்கிய எண்ணம் எல்லாம் இந்தியாவோடு இயைந்து திபெத் பிரச்சனை குறைக்க வேண்டும்//
      உண்மைதான். இந்தியாவின் கையில் உள்ள இன்னொரு துருப்பு சீட்டு திபெத் பிரச்சினை. பிற்காலத்தில் சீனாவோடு சில பேரங்கள் பேச இந்த பிரச்சினை உதவலாம். ஆனால் அப்பாவி திபெத் மக்களின் நிலைமை!?. ஏற்கனவே தலாய்லாமா இந்தியாவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டது போல்தான் தெரிகிறது!

      நீக்கு
  2. //காலம் அளித்துள்ள இந்த வாய்ப்பை சற்றும் நழுவ விடாமல் தனது சுயலாபத்திற்கு இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.//
    நிச்சயமாய் தங்கள் சுயலாபத்திற்கு இந்திய தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை நினைத்தால்தான் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

      நீக்கு
  3. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அது இந்திய அரசியல் ராஜதந்திரிகளின் கைகளிளிதான் இருக்கிறது!

      நீக்கு
  4. மனிதர்களைப் போல தேசங்களும் சுயநலம் பிடித்தவைகள் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாளைக்கு பிறகு வருகை தந்திருக்கிறீர்கள்! ஏன் இந்த இடைவெளி?. சமூக அக்கறை நிறைந்த உங்கள் கட்டுரைகள், கவிதைகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
    2. கருத்துரைகள் மட்டும் இடுவேன். பதிவுகள் கொஞ்ச நாள் கழித்து. அன்புக்கு மிக்க நன்றி

      நீக்கு