சனி, 29 டிசம்பர், 2012

மோடியை பாராட்டிய மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகளும்!


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய பணியினாலும், குஜராத் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணத்தினாலும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று வேறு யாரேனும் ஒருவர் கூறியிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லைதான். ஆனால் சரத் பவாரின் கட்சியை சேர்ந்த ஒருவர், அதுவும் மத்திய அமைச்சர் ஒருவர் மேற்கண்ட கருத்தை கூறியிருப்பது ஆச்சரியப்பட வைக்கின்ற ஒரு செய்திதான். அவர் வேறு யாருமில்லை . தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்  பிரபுல் படேல் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். 

தெற்கு மும்பையில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய பிரபுல் படேல் குஜராத் மக்களின் நம்பிக்கையை பெறுவதில் மோடி முழு வெற்றி பெற்றுள்ளார் என்று மேலும் தெரிவித்துள்ளார். மோடி செய்த பணிகளே அவருக்கு குஜராத் தேர்தலில் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

மேலும் அக்கூட்டத்தில் பேசிய பிரபுல் படேல் காங்கிரசின் மீது சில குற்றச்சாட்டுக்களை கூறினார். கொள்கைப்படி NCP கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. வரும்காலத்தில் அக்கூட்டணி தொடரும். ஆனால் அதற்காக தமது கட்சியின் தனிப்பட்ட  வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்றார். குஜராத்தில் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக NCP கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. ஆனால் NCP கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் பிரபுல் படேல் குற்றம்சாட்டினார். குஜராத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பானவர்கள் யார் என்பது ஆய்வு செய்யப்படவேண்டும்  என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

NCP கட்சியை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சர் தாரிக் அன்வர்  தனது உரையில்,  சிவசேனாவின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி  தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு NCP தலைவர் சரத் பவாருக்கு விடுத்த அழைப்பை குறிப்பிட்டு பேசினார்.  நம்மை பாராட்டுபவர் எதிரியாக இருந்தாலும் அதனை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பொடிவைத்துப் பேசினார்.

NCP கட்சியை சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் மேற்கண்ட கருத்தை கூறியிருந்தாலும் இதனை நாம் சரத் பவாரின் கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும். ஏனென்றால் சில விவாதத்திற்கூரிய, சர்ச்சைக்கூரிய  அரசியல் கருத்துக்கள், கட்சி தலைமையின் மறைமுக ஆசியுடன் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் வெளியிடப்படுவது அரசியல் வட்டாரத்தில் பொதுவான விஷயம்தான். தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் தற்போது வெளியிடப்படும் கருத்துக்கள் பிஜேபியை பாராட்டுவது போல் அமைந்திருந்தாலும் அதன் உண்மையான நோக்கம் அரசியல் பேரமாகவே தெரிகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான  தொகுதி பங்கீட்டு பேரத்திற்கான முதல் துருப்புச்சீட்டாக  NCP- யின் இந்த அரசியல் நடவடிக்கையை நாம் காண முடிகிறது. காங்கிரசை மிரட்ட பிஜேபியை குறிப்பாக மோடியை வாழ்த்துவது, பிஜேபியை மிரட்ட காங்கிரசை வாழ்த்துவது  என்பதுதான் இரண்டு கூட்டணிகளிலும் உள்ள சில்லறை கட்சிகளின் இன்றைய பார்முலா. இவர்களால் எப்போது வேண்டுமானாலும் எந்த கூட்டணிக்கு வேண்டுமானாலும் மாறவும் முடியும். மாற்றிப் பேசவும் முடியும். மக்களை முட்டாள்களாக நினைத்து செயல்படும் இதுபோன்ற மாநிலக்கட்சிகள்  அழிந்து, தேசியக்கட்சிகள் பலம் பெறுவதே  நாட்டுக்கு நல்லது. குறைகள் பல இருந்தாலும் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் வலு இழப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

 1. //மக்களை முட்டாள்களாக நினைத்து செயல்படும் இதுபோன்ற மாநிலக்கட்சிகள் அழிந்து தேசியக்கட்சிகள் பலம் பெறுவதே நாட்டுக்கு நல்லது. குறைகள் பல இருந்தாலும் காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் வலு இழப்பது நாட்டிற்கு நல்லதல்ல//

  இந்த மிக ஆரோக்கியமான கருத்தை கொண்ட உங்களை நான் மனதார வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு

 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு