இளம் பெண்ணும், அவரது நண்பரும் கிடந்த இடம் |
டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் நாட்டையே
உலுக்கி விட்டது. புதுப்புது விவாதங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று பாரதீய ஜனதா
கட்சி மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை
என்று காவல் துறை மீது குற்றம்சாட்டப்படுகிறது. சட்டம் ஒழுங்கில் மாநில அரசு தேவையான அக்கறை காட்டவில்லை என்று மாநில
அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் உண்மையிலேயே
மிகவும் கொடுரமானவர்கள்தான். அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்பதுதான் சரியான
தண்டனையாக இருக்கும். மாநில அரசும், காவல் துறையும் தார்மீக ரீதியாக இந்த
சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதும் சரியான வாதம்தான். ஆனால் டெல்லியில்
நடைபெற்ற கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தில் மற்றொருவரும் தார்மீக அடிப்படையில்
குற்றவாளியாகிறார்.
அவர் வேறு யாருமில்லை. உங்களையும், என்னையும்
உள்ளடக்கிய மிஸ்டர் பொதுஜனம்தான் ஞாயிற்றுக்கிழமை இரவு 23 வயதே
நிரம்பிய ஒரு இளம் பெண்ணையும், அவரது நண்பரையும் கொடூரமான முறையில் தாக்கி,
இளம்பெண்ணை கற்பழித்து இருவரையும் நிர்வாணமாக குற்றுயிரும், குலைஉயிருமாக
தெருவோரத்தில் ஓடும் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு ஒரு கும்பல் தப்பியோடுகிறது.
இரவு 10.24
மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வருகிறது. போலீசார் அடுத்த ஆறு
நிமிடங்களில் இருவரும் நிர்வாணமாக கிடந்த இடத்தை அடைந்தனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது
அங்கே கிட்டத்தட்ட 50 மக்கள் குழுமி இருந்தனர். ஆனால் அந்த இளம்
பெண்ணும், அவரது ஆண் நண்பரும் இன்னும் நிர்வாண நிலையிலேயே கிடந்தனர். அங்கிருந்த
ஒருவரும் அவர்களது உடலை மறைக்க சிறிதும் முயலவில்லை, அந்த வழியாக வந்த கார்கள் ஒரு
நிமிடம் நின்று கவனித்துவிட்டு அதன்பின் நிற்காமல் சென்றுவிட்டன. ஆண்கள் காரின்
கண்ணாடி கதவுகளை ஏற்றிவிட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்களுக்கு கூட இன்னொரு
பெண்ணின் மானத்தை மறைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. உயிருக்கு போராடிய அவர்கள்
இருவரையும் முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு
பெரிய மனித நேயத்தை நாம் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்ப்பது சாத்தியமில்லைதான்..
எனவே அந்த காரணத்திற்காக நாம் பொதுஜனத்தை குற்றம் கூறவேண்டியதில்லை. ஆனால் தான்
அணிந்திருந்த துணியினை எடுத்து அந்த இளம் பெண்ணின் உடலை மறைக்கக வேண்டும் என்ற
எண்ணம் கூட அங்குள்ள ஒருவருக்கும் தோணவில்லையே ஏன்?. அந்த அளவுக்கு மனிதர்களின்
மனம் மரத்துவிட்டது போல் தோன்றுகிறது. அதைவிட அசிங்கம் போலீஸ் வரும்வரை சுற்றி
நின்று வேடிக்கை பார்த்த மக்களின் இரக்கமற்ற குணம்தான்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் நாளைக்கு
நமக்கும் பிரச்சினை வரும். போலீஸ், கோர்ட் என்று அலையவேண்டியிருக்கும் என்ற
காரணங்கள் மக்களின் மேற்கண்ட நடவடிக்கைக்கு ஆதரவாக கூறப்படுகின்றன. காவல்துறை
நம்பிக்கைக்கு உரியது அல்ல. நாளைக்கு உதவச் சென்ற நம்மையே குற்றவாளியாக்கிவிடும்
என்று காவல்துறை மீது குற்றம்சாட்டப்படுகிறது.
ஒரு குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக நாம் காவல் நிலையம், கோர்ட்
என்று சற்று சிரமப்பட்டால் என்ன தவறு?. அந்த அளவுக்கு கூட நமக்கு சமூகப் பொறுப்பு
கிடையாதா?. இந்த அளவுக்கு கூட
சமூகப்பொறுப்பு நமக்கு இல்லை என்றால், அரசியல்வாதிகளையும், போலீசையும் குறை கூற
நமக்கு என்ன தகுதி இருக்கிறது. நாளை நமக்கு தெரிந்தவர்கள் யாராவது இதே நிலையில்
இருந்தால் நாம் உதவத்தானே செய்வோம், அப்போது போலீஸ் என்ன செய்யும்? கோர்ட் என்ன
கேட்கும்? என்றெல்லாம் யோசிப்போமோ?. நம் வீட்டு பெண்களுக்கு வந்தால் மட்டும்தான்
நம் ரத்தம் கொதிக்குமா?. அப்படி என்றால் மனித நேயம் என்ற பண்பே நம்மிடம் செத்துவிட்டதாகத்தானே
அர்த்தம்.
ஆகவே நம் நாட்டில் தவறு என்பது அரசியல்வாதிகள்
மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, அனைத்து மட்டத்திலும் இருப்பது நன்கு
புரிகிறது, சமூகப் பொறுப்பில் அலட்சியம்
என்பது இந்திய நாட்டின் கடைக்குடிமகன் தொடங்கி முதல் குடிமகன் வரை ரத்தத்தில் கலந்துவிட்டது
போலவே தோன்றுகிறது. எனவே டீக்கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டு கவுன்சிலர் முதல் ஒபாமா வரை
விமர்சிப்பதற்கு முன் நம்மை நாமே சுய
விமர்சனம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை மேற்கண்ட சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில் பார்த்தால் டெல்லியில் நடந்த குற்ற சம்பவத்திற்கு டெல்லி அரசும்,
காவல் துறையும் எந்த அளவுக்கு தார்மீக பொறுப்பேற்கிறதோ, அந்த அளவுக்கு என்னையும்,
உங்களையும் உள்ளடக்கிய மிஸ்டர் பொதுஜனமும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்..
Tweet | |||||
உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.அருமை
பதிலளிநீக்கு//நம் நாட்டில் தவறு என்பது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, அனைத்து மட்டத்திலும் இருப்பது நன்கு புரிகிறது, சமூகப் பொறுப்பில் அலட்சியம் என்பது இந்திய நாட்டின் கடைக்குடிமகன் தொடங்கி முதல் குடிமகன் வரை ரத்தத்தில் கலந்துவிட்டது போலவே தோன்றுகிறது. எனவே டீக்கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டு கவுன்சிலர் முதல் ஒபாமா வரை விமர்சிப்பதற்கு முன் நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை மேற்கண்ட சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.//
டீக்கடை பெஞ்சிலும் மற்றய இடங்களிலும் கூடியிருந்து விளாசும் போது பார்க்க வேண்டுமே.
பேச்சினாலயே ஆட்சியை பிடித்த அரசியல்வாதிகள் நிறைந்த நாடு நம் நாடாச்சே! தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி! ஆக்கப்பூர்வமான செயலுக்குத்தான் நம் நாட்டில் பஞ்சம்!
பதிலளிநீக்குநகர்ப்புறங்களில் தான் இப்படி, கிராமப் புறங்களில் நிச்சயம் காப்பாற்றியிருப்பார்கள். அவர்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு போலீஸ் கோர்ட்டு கேசு என்று குடுக்கும் குடைச்சல் தான் உதவத் தயங்குவதர்க்கு முதல் காரணம். தென்மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டரை வெட்டியா பின்னர் அந்த இடத்தில் இருந்த மாதிரியே அவரை மருத்துவமனைக்கு யடுத்துச் செல்ல முன்வரவில்லை, அந்தாள் தண்ணீர் தண்ணீர் என்று கத்தியபோது, ஒர்த்தன் என்ட்ட நின்று ஒரு பாட்டிலை நாய்க்கு எரிவது போல எரிந்து விட்டு ஓடிவிட்டான், அதையும் அவர் குடிக்காமல் செத்துப் போனார். மனிதம் செத்துப் போனது.
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் சார்!. கிராமப்புறங்களில்தான் இன்னும் மனிதம் வாழ்கிறது.
பதிலளிநீக்கு