செவ்வாய், 18 டிசம்பர், 2012

பணி உயர்வில் இட ஒதுக்கீடு! - சமூக நீதியா? அல்லது அநீதியா?அரசுப் பணிகளில் வழங்கப்படும்  பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 206 வாக்குகள் மசோதாவிற்கு ஆதரவாகவும், 10 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. சமாஜ்வாடி கட்சியின் ஒன்பது எம்பிக்களும், ஒரு சுயேட்சையும் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.

இதே போல் பணி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிய உத்திரப் பிரதேச அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே செல்லாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..  குறிப்பிட்ட வகுப்பினர் அரசு உயர் பதவிகளில் பின்தங்கியுள்ளனர் என்பதற்கான  அறிவியல் பூர்வமான புள்ளி விவர ஆதாரங்களை உ.பி அரசு வழங்காததால் உச்ச நீதி மன்றம் உ.பி அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்தது.  

இப்போது ராஜ்ய சபாவில் நிறைவேறியுள்ள மசோதாவின்படி, குறிப்பிட்ட ஒரு  வகுப்பினை சேர்ந்த மக்கள் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளார்கள் அல்லது உயர் அரசு பணிகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பதற்கான எந்த புள்ளி விவர ஆதாரங்களையும் ஒரு மாநில அரசு வழங்கவேண்டியதில்லை. அவ்வாறு எந்த ஆதாரங்களும் இல்லாமலேயே ஒரு சமுதாயத்திற்கு பணி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க ஒரு மாநில அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் தருகிறது.  அரசு உயர் பதவிகளில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறும் மத்திய அரசு அதற்கான புள்ளிவிவர ஆதாரங்களை வெளியிட மறுப்பது ஏன்?. அரசின் A,B,C,D பிரிவு பதவிகளில் ஒவ்வொரு வகுப்பினரும் எத்தனை சதவீதம் உள்ளனர் என்ற புள்ளி விவரத்தினை மத்திய அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு  வெளியிடாவிட்டால், இந்த சட்டத்தை  நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை என்றுதான் பொருள். ஏனென்றால் அவ்வாறு புள்ளி விவரங்களை தராவிட்டால் உச்சநீதிமன்றத்தால் இட ஒதுக்கீடு சட்டம் தள்ளுபடி செய்யப்படும் என்பது காங்கிரசுக்கு தெரியும். சட்டத்தை முதலில் கொண்டுவந்து தாழ்த்தப்பட்ட மக்களின்  அனுதாபத்தை பெற்றுக்கொள்ளலாம். அப்புறம் உச்சநீதிமன்றம் சட்டத்தை தள்ளுபடி செய்தால் நமக்கென்ன?. நீதிமன்றம்தான் சட்டத்தை ரத்து செய்தது. எங்கள் மீது குற்றம் இல்லை என்று கூறி தப்பித்துக்கொள்ளலாம்   என்ற மனோபாவத்தில் காங்கிரஸ் இந்த மசோதாவை அவசர அவசரமாக  ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ளது.
  
காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை சமூகத்தினரிடையே பிளவை உண்டாக்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். சமூக நீதி என்ற போர்வையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டாலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயத்தில் மாயாவதியை திருப்திபடுத்தவும் இந்த மசோதா உதவக்கூடும். வேறு எந்த நீதியை வைத்து அளந்து பார்த்தாலும் பணி உயர்வில் இட ஒதுக்கீடு என்ற மசோதாவை நியாயப்படுத்த முடியாது.

அரசுப் பணியில் சேர்வதில் இட ஒதுக்கீடு என்பது புரிந்து கொள்ளக்கூடியது. பல்லாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வழங்கப்படும் சமூக நீதியாக இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தலாம். அதுவே சரியான வழிமுறையும் கூட. ஆனால் பணியில் சேர்ந்த பிறகு அரசுப் பணியாளர்கள் அனைவரும் சமமாகவே நடத்தப்படவேண்டும். தனியார் நிறுவனங்களைப் போல் திறமையை அடிப்படையாகக் கொண்டு அரசு அலுவலகங்களில் பணி உயர்வு வழகப்படுவதில்லை. ஒரு ஊழியர் பணியில் சேர்ந்த நாளைக் கொண்டே அவருடைய பணிமூப்பு (சீனியாரிட்டி) வரையறுக்கப்படுகிறது. அந்த சீனியாரிட்டியை  அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் வரிசைக்கிரமமாக பணி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே ஒரு ஊழியரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, அல்லது தனக்கு பிடித்தவருக்கு பணி உயர்வு என்ற வகையிலோ அரசு அலுவலகங்களில் ஒரு ஊழியருக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது.  அரசுத் துறைகளில் ஜாதியின் காரணமாக  யாருடைய பணி உயர்வும் மறுக்கப்படுவதில்லை.அங்கு யாருக்கும் சமூக நீதி மறுக்கப்படுவதில்லை.

அரசு அலுவலகத்தில் ஊழியர்களிடையே ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால் அதே சமயத்தில் ஒருவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காக எந்த தனிப்பட்ட சலுகைகளையும் அவர் தான் பணிபுரியும் அரசு அலுவலகத்தில் பெற இயலாது. இன்று அரசு அலுவலகங்களில் மிகப் பெரும் பதவிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இருக்கின்றனர். தனது அதிகாரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்பதற்காக மற்ற சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள்  யாரும் அவருக்கு மரியாதை கொடுக்காமல் இல்லை. அவர்களுக்கு கீழ் பணிபுரியாமலும்  இல்லை. எனவே அரசு அலுவலங்களில் சமூக அநீதி ஏதும் நடந்து கொண்டிருக்கவில்லை. சொல்லப்போனால் அரசு அலுவலகங்களில்தான் சமூக ஒற்றுமை உள்ளது. சமத்துவம் உள்ளது. சாதி வெறி தலைவிரித்தாடும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் கூட பல்வேறு சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர்களிடையே சுமூகமான நட்புறவு சூழ்நிலை உள்ளது. 

தன்னுடைய ஜூனியர் பணியாளர் ஒருவர், தனக்கு சீனியர் அதிகாரியாக பணி உயர்வு பெறுவது என்பது   எந்த சராசரி அரசு ஊழியனாலும் ஜீரணிக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத  ஒன்றாகும். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களிடையே ஒரு இறுக்கமான சூழ்நிலையை இந்த மசோதாவின் வெற்றி ஏற்படுத்தியுள்ளதை அரசு ஊழியர்களிடம் பேசும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பணி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசு ஊழியர்களிடையே ஜாதி பிளவை ஏற்படுத்தி அரசு நிர்வாகத்தை சீரழித்துவிடும்  என்பதே உண்மை.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

 1. தன்னுடைய ஜூனியர் பணியாளர் ஒருவர், தனக்கு சீனியர் அதிகாரியாக பணி உயர்வு பெறுவது என்பது எந்த சராசரி அரசு ஊழியனாலும் ஜீரணிக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களிடையே ஒரு இறுக்கமான சூழ்நிலையை இந்த மசோதாவின் வெற்றி ஏற்படுத்தியுள்ளதை அரசு ஊழியர்களிடம் பேசும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பணி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசு ஊழியர்களிடையே ஜாதி பிளவை ஏற்படுத்தி அரசு நிர்வாகத்தை சீரழித்துவிடும் என்பதே உண்மை....உங்களின் கருத்து மிகவும் உண்மை...துணிச்சலாக எழுதியதற்குப் பாராட்டுக்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் விமர்சனங்களுக்கு நன்றி!

   நீக்கு
 2. இதெல்லாம் அரசியல் ஆதாயம் தேடவே! ஜாதி பெயரைச் சொல்லி வாக்கு பெட்டியை நிறைக்க நினைக்கும் அரசியல்வாதிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களது ஆசை நிறைவேற மக்களை பிளவுபடுத்த நினைப்பதுதான் வேதனை தரும் விஷயம்!

   நீக்கு