சனி, 29 டிசம்பர், 2012

மோடியை பாராட்டிய மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகளும்!


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய பணியினாலும், குஜராத் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணத்தினாலும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று வேறு யாரேனும் ஒருவர் கூறியிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லைதான். ஆனால் சரத் பவாரின் கட்சியை சேர்ந்த ஒருவர், அதுவும் மத்திய அமைச்சர் ஒருவர் மேற்கண்ட கருத்தை கூறியிருப்பது ஆச்சரியப்பட வைக்கின்ற ஒரு செய்திதான். அவர் வேறு யாருமில்லை . தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்  பிரபுல் படேல் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். 

தெற்கு மும்பையில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய பிரபுல் படேல் குஜராத் மக்களின் நம்பிக்கையை பெறுவதில் மோடி முழு வெற்றி பெற்றுள்ளார் என்று மேலும் தெரிவித்துள்ளார். மோடி செய்த பணிகளே அவருக்கு குஜராத் தேர்தலில் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

மேலும் அக்கூட்டத்தில் பேசிய பிரபுல் படேல் காங்கிரசின் மீது சில குற்றச்சாட்டுக்களை கூறினார். கொள்கைப்படி NCP கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. வரும்காலத்தில் அக்கூட்டணி தொடரும். ஆனால் அதற்காக தமது கட்சியின் தனிப்பட்ட  வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்றார். குஜராத்தில் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக NCP கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. ஆனால் NCP கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் பிரபுல் படேல் குற்றம்சாட்டினார். குஜராத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பானவர்கள் யார் என்பது ஆய்வு செய்யப்படவேண்டும்  என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

NCP கட்சியை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சர் தாரிக் அன்வர்  தனது உரையில்,  சிவசேனாவின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி  தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு NCP தலைவர் சரத் பவாருக்கு விடுத்த அழைப்பை குறிப்பிட்டு பேசினார்.  நம்மை பாராட்டுபவர் எதிரியாக இருந்தாலும் அதனை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பொடிவைத்துப் பேசினார்.

NCP கட்சியை சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் மேற்கண்ட கருத்தை கூறியிருந்தாலும் இதனை நாம் சரத் பவாரின் கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும். ஏனென்றால் சில விவாதத்திற்கூரிய, சர்ச்சைக்கூரிய  அரசியல் கருத்துக்கள், கட்சி தலைமையின் மறைமுக ஆசியுடன் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் வெளியிடப்படுவது அரசியல் வட்டாரத்தில் பொதுவான விஷயம்தான். தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் தற்போது வெளியிடப்படும் கருத்துக்கள் பிஜேபியை பாராட்டுவது போல் அமைந்திருந்தாலும் அதன் உண்மையான நோக்கம் அரசியல் பேரமாகவே தெரிகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான  தொகுதி பங்கீட்டு பேரத்திற்கான முதல் துருப்புச்சீட்டாக  NCP- யின் இந்த அரசியல் நடவடிக்கையை நாம் காண முடிகிறது. காங்கிரசை மிரட்ட பிஜேபியை குறிப்பாக மோடியை வாழ்த்துவது, பிஜேபியை மிரட்ட காங்கிரசை வாழ்த்துவது  என்பதுதான் இரண்டு கூட்டணிகளிலும் உள்ள சில்லறை கட்சிகளின் இன்றைய பார்முலா. இவர்களால் எப்போது வேண்டுமானாலும் எந்த கூட்டணிக்கு வேண்டுமானாலும் மாறவும் முடியும். மாற்றிப் பேசவும் முடியும். மக்களை முட்டாள்களாக நினைத்து செயல்படும் இதுபோன்ற மாநிலக்கட்சிகள்  அழிந்து, தேசியக்கட்சிகள் பலம் பெறுவதே  நாட்டுக்கு நல்லது. குறைகள் பல இருந்தாலும் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் வலு இழப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
More than a Blog Aggregator

வியாழன், 20 டிசம்பர், 2012

டெல்லி கற்பழிப்பு சம்பவம் - நானும் நீங்களும் கூட குற்றவாளிதான்!


இளம் பெண்ணும், அவரது நண்பரும் கிடந்த இடம்

டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. புதுப்புது விவாதங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காவல் துறை மீது குற்றம்சாட்டப்படுகிறது. சட்டம் ஒழுங்கில்  மாநில அரசு தேவையான அக்கறை காட்டவில்லை என்று மாநில அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் உண்மையிலேயே மிகவும் கொடுரமானவர்கள்தான். அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும். மாநில அரசும், காவல் துறையும் தார்மீக ரீதியாக இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதும் சரியான வாதம்தான். ஆனால் டெல்லியில் நடைபெற்ற கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தில் மற்றொருவரும் தார்மீக அடிப்படையில் குற்றவாளியாகிறார்.

அவர் வேறு யாருமில்லை. உங்களையும், என்னையும் உள்ளடக்கிய மிஸ்டர் பொதுஜனம்தான் ஞாயிற்றுக்கிழமை இரவு 23 வயதே நிரம்பிய ஒரு இளம் பெண்ணையும், அவரது நண்பரையும் கொடூரமான முறையில் தாக்கி, இளம்பெண்ணை கற்பழித்து இருவரையும் நிர்வாணமாக குற்றுயிரும், குலைஉயிருமாக தெருவோரத்தில் ஓடும் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு ஒரு கும்பல் தப்பியோடுகிறது. இரவு  10.24 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வருகிறது. போலீசார் அடுத்த ஆறு நிமிடங்களில் இருவரும் நிர்வாணமாக கிடந்த இடத்தை அடைந்தனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது அங்கே கிட்டத்தட்ட 50 மக்கள் குழுமி இருந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணும், அவரது ஆண் நண்பரும் இன்னும் நிர்வாண நிலையிலேயே கிடந்தனர். அங்கிருந்த ஒருவரும் அவர்களது உடலை மறைக்க சிறிதும் முயலவில்லை, அந்த வழியாக வந்த கார்கள் ஒரு நிமிடம் நின்று கவனித்துவிட்டு அதன்பின் நிற்காமல் சென்றுவிட்டன. ஆண்கள் காரின் கண்ணாடி கதவுகளை ஏற்றிவிட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்களுக்கு கூட இன்னொரு பெண்ணின் மானத்தை மறைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. உயிருக்கு போராடிய அவர்கள் இருவரையும் முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு பெரிய மனித நேயத்தை நாம் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்ப்பது சாத்தியமில்லைதான்.. எனவே அந்த காரணத்திற்காக நாம் பொதுஜனத்தை குற்றம் கூறவேண்டியதில்லை. ஆனால் தான் அணிந்திருந்த துணியினை எடுத்து அந்த இளம் பெண்ணின் உடலை மறைக்கக வேண்டும் என்ற எண்ணம் கூட அங்குள்ள ஒருவருக்கும் தோணவில்லையே ஏன்?. அந்த அளவுக்கு மனிதர்களின் மனம் மரத்துவிட்டது போல் தோன்றுகிறது. அதைவிட அசிங்கம் போலீஸ் வரும்வரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களின் இரக்கமற்ற குணம்தான். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் நாளைக்கு நமக்கும் பிரச்சினை வரும். போலீஸ், கோர்ட் என்று அலையவேண்டியிருக்கும் என்ற காரணங்கள் மக்களின் மேற்கண்ட நடவடிக்கைக்கு ஆதரவாக கூறப்படுகின்றன. காவல்துறை நம்பிக்கைக்கு உரியது அல்ல. நாளைக்கு உதவச் சென்ற நம்மையே குற்றவாளியாக்கிவிடும் என்று காவல்துறை மீது குற்றம்சாட்டப்படுகிறது.  ஒரு குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக நாம் காவல் நிலையம், கோர்ட் என்று சற்று சிரமப்பட்டால் என்ன தவறு?. அந்த அளவுக்கு கூட நமக்கு சமூகப் பொறுப்பு கிடையாதா?.  இந்த அளவுக்கு கூட சமூகப்பொறுப்பு நமக்கு இல்லை என்றால், அரசியல்வாதிகளையும், போலீசையும் குறை கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது. நாளை நமக்கு தெரிந்தவர்கள் யாராவது இதே நிலையில் இருந்தால் நாம் உதவத்தானே செய்வோம், அப்போது போலீஸ் என்ன செய்யும்? கோர்ட் என்ன கேட்கும்? என்றெல்லாம் யோசிப்போமோ?. நம் வீட்டு பெண்களுக்கு வந்தால் மட்டும்தான் நம் ரத்தம் கொதிக்குமா?. அப்படி என்றால் மனித நேயம் என்ற பண்பே நம்மிடம் செத்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

ஆகவே நம் நாட்டில் தவறு என்பது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, அனைத்து மட்டத்திலும் இருப்பது நன்கு புரிகிறது, சமூகப் பொறுப்பில்  அலட்சியம் என்பது இந்திய நாட்டின் கடைக்குடிமகன் தொடங்கி  முதல் குடிமகன் வரை ரத்தத்தில் கலந்துவிட்டது போலவே தோன்றுகிறது. எனவே டீக்கடை பெஞ்சில் அமர்ந்து  கொண்டு கவுன்சிலர் முதல் ஒபாமா வரை விமர்சிப்பதற்கு முன் நம்மை  நாமே சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை மேற்கண்ட சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அந்த வகையில் பார்த்தால் டெல்லியில் நடந்த குற்ற சம்பவத்திற்கு டெல்லி அரசும், காவல் துறையும் எந்த அளவுக்கு தார்மீக பொறுப்பேற்கிறதோ, அந்த அளவுக்கு என்னையும், உங்களையும் உள்ளடக்கிய மிஸ்டர் பொதுஜனமும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்..
More than a Blog Aggregator

செவ்வாய், 18 டிசம்பர், 2012

பணி உயர்வில் இட ஒதுக்கீடு! - சமூக நீதியா? அல்லது அநீதியா?



அரசுப் பணிகளில் வழங்கப்படும்  பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 206 வாக்குகள் மசோதாவிற்கு ஆதரவாகவும், 10 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. சமாஜ்வாடி கட்சியின் ஒன்பது எம்பிக்களும், ஒரு சுயேட்சையும் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.

இதே போல் பணி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிய உத்திரப் பிரதேச அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே செல்லாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..  குறிப்பிட்ட வகுப்பினர் அரசு உயர் பதவிகளில் பின்தங்கியுள்ளனர் என்பதற்கான  அறிவியல் பூர்வமான புள்ளி விவர ஆதாரங்களை உ.பி அரசு வழங்காததால் உச்ச நீதி மன்றம் உ.பி அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்தது.  

இப்போது ராஜ்ய சபாவில் நிறைவேறியுள்ள மசோதாவின்படி, குறிப்பிட்ட ஒரு  வகுப்பினை சேர்ந்த மக்கள் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளார்கள் அல்லது உயர் அரசு பணிகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பதற்கான எந்த புள்ளி விவர ஆதாரங்களையும் ஒரு மாநில அரசு வழங்கவேண்டியதில்லை. அவ்வாறு எந்த ஆதாரங்களும் இல்லாமலேயே ஒரு சமுதாயத்திற்கு பணி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க ஒரு மாநில அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் தருகிறது.  அரசு உயர் பதவிகளில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறும் மத்திய அரசு அதற்கான புள்ளிவிவர ஆதாரங்களை வெளியிட மறுப்பது ஏன்?. அரசின் A,B,C,D பிரிவு பதவிகளில் ஒவ்வொரு வகுப்பினரும் எத்தனை சதவீதம் உள்ளனர் என்ற புள்ளி விவரத்தினை மத்திய அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு  வெளியிடாவிட்டால், இந்த சட்டத்தை  நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை என்றுதான் பொருள். ஏனென்றால் அவ்வாறு புள்ளி விவரங்களை தராவிட்டால் உச்சநீதிமன்றத்தால் இட ஒதுக்கீடு சட்டம் தள்ளுபடி செய்யப்படும் என்பது காங்கிரசுக்கு தெரியும். சட்டத்தை முதலில் கொண்டுவந்து தாழ்த்தப்பட்ட மக்களின்  அனுதாபத்தை பெற்றுக்கொள்ளலாம். அப்புறம் உச்சநீதிமன்றம் சட்டத்தை தள்ளுபடி செய்தால் நமக்கென்ன?. நீதிமன்றம்தான் சட்டத்தை ரத்து செய்தது. எங்கள் மீது குற்றம் இல்லை என்று கூறி தப்பித்துக்கொள்ளலாம்   என்ற மனோபாவத்தில் காங்கிரஸ் இந்த மசோதாவை அவசர அவசரமாக  ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ளது.
  
காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை சமூகத்தினரிடையே பிளவை உண்டாக்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். சமூக நீதி என்ற போர்வையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டாலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயத்தில் மாயாவதியை திருப்திபடுத்தவும் இந்த மசோதா உதவக்கூடும். வேறு எந்த நீதியை வைத்து அளந்து பார்த்தாலும் பணி உயர்வில் இட ஒதுக்கீடு என்ற மசோதாவை நியாயப்படுத்த முடியாது.

அரசுப் பணியில் சேர்வதில் இட ஒதுக்கீடு என்பது புரிந்து கொள்ளக்கூடியது. பல்லாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வழங்கப்படும் சமூக நீதியாக இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தலாம். அதுவே சரியான வழிமுறையும் கூட. ஆனால் பணியில் சேர்ந்த பிறகு அரசுப் பணியாளர்கள் அனைவரும் சமமாகவே நடத்தப்படவேண்டும். தனியார் நிறுவனங்களைப் போல் திறமையை அடிப்படையாகக் கொண்டு அரசு அலுவலகங்களில் பணி உயர்வு வழகப்படுவதில்லை. ஒரு ஊழியர் பணியில் சேர்ந்த நாளைக் கொண்டே அவருடைய பணிமூப்பு (சீனியாரிட்டி) வரையறுக்கப்படுகிறது. அந்த சீனியாரிட்டியை  அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் வரிசைக்கிரமமாக பணி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே ஒரு ஊழியரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, அல்லது தனக்கு பிடித்தவருக்கு பணி உயர்வு என்ற வகையிலோ அரசு அலுவலகங்களில் ஒரு ஊழியருக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது.  அரசுத் துறைகளில் ஜாதியின் காரணமாக  யாருடைய பணி உயர்வும் மறுக்கப்படுவதில்லை.அங்கு யாருக்கும் சமூக நீதி மறுக்கப்படுவதில்லை.

அரசு அலுவலகத்தில் ஊழியர்களிடையே ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால் அதே சமயத்தில் ஒருவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காக எந்த தனிப்பட்ட சலுகைகளையும் அவர் தான் பணிபுரியும் அரசு அலுவலகத்தில் பெற இயலாது. இன்று அரசு அலுவலகங்களில் மிகப் பெரும் பதவிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இருக்கின்றனர். தனது அதிகாரி தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்பதற்காக மற்ற சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள்  யாரும் அவருக்கு மரியாதை கொடுக்காமல் இல்லை. அவர்களுக்கு கீழ் பணிபுரியாமலும்  இல்லை. எனவே அரசு அலுவலங்களில் சமூக அநீதி ஏதும் நடந்து கொண்டிருக்கவில்லை. சொல்லப்போனால் அரசு அலுவலகங்களில்தான் சமூக ஒற்றுமை உள்ளது. சமத்துவம் உள்ளது. சாதி வெறி தலைவிரித்தாடும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் கூட பல்வேறு சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர்களிடையே சுமூகமான நட்புறவு சூழ்நிலை உள்ளது. 

தன்னுடைய ஜூனியர் பணியாளர் ஒருவர், தனக்கு சீனியர் அதிகாரியாக பணி உயர்வு பெறுவது என்பது   எந்த சராசரி அரசு ஊழியனாலும் ஜீரணிக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத  ஒன்றாகும். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களிடையே ஒரு இறுக்கமான சூழ்நிலையை இந்த மசோதாவின் வெற்றி ஏற்படுத்தியுள்ளதை அரசு ஊழியர்களிடம் பேசும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பணி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசு ஊழியர்களிடையே ஜாதி பிளவை ஏற்படுத்தி அரசு நிர்வாகத்தை சீரழித்துவிடும்  என்பதே உண்மை.
More than a Blog Aggregator

வியாழன், 13 டிசம்பர், 2012

குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்! - மோடி பிஜேபியின் பிரதமர் வேட்பாளரா!?




குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மொத்தமுள்ள 182 இடங்களில்  கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அதாவது 122 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கடந்த புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. LensOnNews நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 53 இடங்களும், கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயேட்சைகள் மற்றும் பிற கட்சியினர் ஆறு இடங்களை கைப்பற்றுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பிஜேபிக்கு 117 இடங்கள் கிடைத்தன.

மேற்கண்ட கருத்துக்கணிப்பின்படி குஜராத்தில் மோடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இது ஏற்கனவே அனைவராலும் முடிவு செய்யப்பட  ஒரு கணக்கீடுதான். ஏனென்றால் தொடக்கம் முதலே குஜராத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கே கிடையாது.  இந்த வெற்றியின் மூலம் குஜராத்தின் முதல்வர் பதவியை தாண்டி சில பெரிய லாபங்களை மோடி பெற வாய்ப்புண்டு. இந்திய அரசியலில் தன்னை ஒரு கவர்ச்சி மிக்க, செல்வாக்கு  மிக்க, நிர்வாகத்திறம் படைத்த  அரசியல்வாதியாக அவர் தன்னை இந்த வெற்றியின் மூலம் காட்டிக்கொள்ள முடியும். கத்காரி முதல் அடுத்த கட்ட தலைவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி தான் ஒரு பிரதமர் பதவிக்கான தகுதியான போட்டியாளர் என்பதை தன்னுடைய கட்சிக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும் இதன் மூலம் மோடி தெரிவித்துக்கொள்வார். இதன் மூலம் மோடி பிஜேபியில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிடுவார். அப்படியானால்  2014 – நாடாளுமன்ற தேர்தலில்  மோடி பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? நிற்க!

ஆர் எஸ் எஸ்ஸிடம் எப்போதுமே எதிர்காலத்திட்டமிடல்  என்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். இரண்டு எம்பிக்களை கொண்டிருந்த ஒரு கட்சி இன்று நாட்டை ஆளும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் ஆர் எஸ் எஸ் தான். பிஜேபிக்கு முதலில் ஆதரவளிக்க தயங்கிய  மற்ற அரசியல் கட்சிகளை திட்டமிட்டு பிஜேபிக்கு ஆதரவாக திருப்பியது ஆர் எஸ் எஸ் தான். அத்வானியை தீவிர இந்துத்துவா ஆதரவாளராக உருவகப்படுத்தியதோடு,  வாஜ்பாயை மிதவாத தலைவராகவும், மதவெறி இல்லாதவராகவும் ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு முன்னிலைப்படுத்தியது. மற்ற கட்சிகளும் அத்வானி என்றால் ஆதரவளிக்க மாட்டோம் என்றும்,  வாஜ்பாய் என்றால் ஆதரவளிப்போம் என்றும் கூறி (சிறுபான்மையினரை சமாதானப்படுத்த!) வாஜ்பாயிக்கு தங்கள்  ஆதரவை அளித்தன. கலைஞர் கூட “கெட்ட மரத்தில் விளைந்த நல்ல கனி” என்று வாஜ்பாயை வர்ணித்தது நமக்கு நினைவிருக்கலாம். இதன் மூலம் ஆர் எஸ் எஸ் விரும்பியது அப்படியே நடந்தது. பிஜேபியும் மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால் அத்வானி ஆர் எஸ் எஸ்சின் சித்தாந்தத்தில் வைத்திருந்த நம்பிக்கையை விட அதிக நம்பிக்கை உடையவர் வாஜ்பாய் என்பது பலருக்கு தெரியாது.(கூட்டணி கட்சிகளும் வாஜ்பாயி மிதவாதி என்று கூறி சிறுபான்மை மக்களை ஏமாற்றின!. காரணம் அவர்களுக்கு தேவை பதவிகள்!). ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்காக திருமணமே செய்யாமல் பிரமச்சாரியாக வாழ்ந்தவர் வாஜ்பாய்.  ஆர் எஸ் எஸ்சின் பிரமச்சாரிய தொண்டர்கள் எவ்வளவு இந்துத்துவா கொள்கை பிடிப்பு கொண்டவர்கள் என்பது அவர்களுடன் பழகிப்பார்த்தவர்களுக்கு புரியும். இது கடந்த கால நிகழ்வுகள். 

2014 – நாடாளுமன்ற தேர்தலில்  ஆர் எஸ் எஸ்சின் திட்டம் இதுவாக இருக்கலாம். எப்படி 1990 –களில் அத்வானி தீவிர இந்துத்துவா ஆதரவாளராகவும், வாஜ்பாய் மிதவாத தலைவராகவும் உருவகப்படுத்தப்பட்டனரோ அதேபோல் 2014 – நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தீவிர இந்துத்துவா ஆதரவாளராகவும், அத்வானி மிதவாத சகிப்புத்தன்மை கொண்ட தலைவராகவும் உருவகப்படுத்தபடலாம். அத்வானியை மிதவாத சிந்தனை கொண்ட தலைவராக  உருவகப்படுத்தும் பணியை ஏற்கனவே இந்துத்துவா அமைப்புகள் தொடங்கிவிட்டன என நான் நினைக்கிறேன். உதாரணமாக மோடிக்கு எதிரானவர் அத்வானி என்ற கருத்து பத்திரிக்கைகளில் உருவாக்கப்படுவதை கூறலாம்.  அத்வானியின் ஜின்னா ஆதரவு பேச்சை மற்றொரு உதாரணமாக கூற முடியும்.  இந்த கணக்கீட்டின்படி 2014 – நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்பது  ஆர் எஸ் எஸ்சின் திட்டமாக இருக்கலாம். அத்வானி மீதான கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை திசை திருப்ப மோடியை துருப்பு சீட்டாக ஆர் எஸ் எஸ் பயன்படுத்தலாம். கூட்டணி கட்சிகளும் மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், அத்வானி என்றால் ஆதரவளிப்போம் என்றும் தேர்தலுக்குப் பிறகு கூறலாம். தான் துருப்பு சீட்டாக பயன்படுத்தப்படுவது கூட மோடி விரும்பி ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக இருக்கலாம் ஏனென்றால் பிஜேபியில் ஒரு தூசு அசைந்தால் கூட அது  ஆர் எஸ் எஸ்சின்  அனுமதி இல்லாமல் நடக்காது என்பதே உண்மை. மேலும்  ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்தில் மிகுந்த உறுதி கொண்டவர்கள். எனவே அத்வானிக்கு மோடி போட்டியாளர் என்றோ, வாஜ்பாயிக்கு அத்வானி போட்டியாளர் என்றோ யாராவது கூறினால் நான் நம்ப மாட்டேன். எனவே என்னைப்பொறுத்தவரை 2014 – நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னரே அறிவிக்காது. தேர்தலுக்குப்பின்   ஆர் எஸ் எஸ்சின் பிரதமர் வேட்பாளர் அத்வானியாக இருக்கலாம். அதற்கான திட்டமிடலில் மோடி ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
More than a Blog Aggregator

வெள்ளி, 7 டிசம்பர், 2012

1962 இந்திய சீன போர் - சொல்லப்படாத உண்மைகளும், சில படிப்பினைகளும்!



பெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்காவை இந்தியாவின் நண்பனாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த போர் உதவிகள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். 1962 இந்திய சீன போரின்போது அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்த வெளிப்படையான, உறுதியான ஆதரவு பற்றி பெரும்பாலான இன்றைய இந்தியர்கள்  அரிந்திராததும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அன்றைய தினத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளித்திருக்காவிட்டால் அப்போரின் முடிவு இந்தியாவிற்கு தற்போது உள்ளதை விட மிக மோசமாக இருந்திருக்கும். 

1962 இந்திய சீன போரின்போது இந்தியாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்து சீனாவின் ஆக்ரமிப்பு வேகத்தை முடக்கியது அமெரிக்காதான். இந்தியாவுக்கு ஆதரவாக USS Kitty Hawk  போர் விமானத்தை வங்காள விரிகுடா பகுதிக்கு அனுப்பவும் அமெரிக்கா தயாரானது.  அதனாலேயே சீனா தானாக போர் நிறுத்தத்தை அறிவித்து  பின்வாங்கியது. அக்காலக்கட்டத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி இந்தியர்களின் மனதில் மிகப்பெரும் ஹீரோவாக விளங்கினார். பட்டிதொட்டி எங்கும் அவரை இந்திய மக்கள் புகழ்ந்து பேசினர். சாதாரண பெட்டிக்கடைகளில் கூட கென்னடியின் புகைப்படங்கள் நேருவுடனும், காந்தியுடனும் காணப்பட்டன. 1963 நவம்பரில் கென்னடி கொலை செய்யப்பட்டவுடன், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் உலக மனித நேயத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியர்களால் கருதப்பட்டார். போரின்போது நெருக்கடி நிலையினை கையாண்ட நேருவின் செயல்பாடு  பதட்டம் நிறைந்ததாக இருந்தது. ஆனால்  அதே சமயத்தில் கென்னடியின் செயல்பாடு அமைதியாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் அமைந்தது. அதுவே கென்னடியின் மதிப்பினை இந்தியர்களின் மனதில் பன்மடங்கு உயர்த்தியது.  
  
இந்திய சீனப்போரை உலகின் மற்ற நாடுகள் அக்காலக்கட்டத்தில் ஒரு பொருட்டாக அல்லது மிக முக்கியமாக கருதவில்லை. ஏனென்றால் அப்போது கியூபா ஏவுகணைப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையே உருவான  பகைமை உலகில் மிகப்பெரும் பதட்டத்தை உருவாக்கி உலக நாடுகளின் கவனிப்பை பெற்றிருந்தது. ஆனால் இன்று சோவியத் ரஷியா சிதைவடைந்த நிலையில் கியுபா பிரச்சினை ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. ஆனால் இன்று இந்திய சீன எல்லைப் பிரச்சினை உலகின் அமைதிக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறிவிட்டது. பிற்காலத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ராணுவ மோதல் நடந்தால் அது உலக நாடுகளை பெரும்விதத்தில் பாதிக்கும் என்பது நூறு சதம் உண்மை. இந்திய சீனப் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவைகளில்  இந்தியாவில் உள்ள கம்யுனிஸ்ட் இயக்கங்களும் ஒன்று. அதுவரை காங்கிரசுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வலுவாக காலுன்றியிருந்த  கம்யுனிஸ்ட் இயக்கங்கள், அதற்குப்பின் இந்தியாவில் தலைதூக்கவே முடியவில்லை. இந்தியாவில் கம்யுனிசம் வெற்றி பெற்றிருந்தால், அது அமெரிக்க ரஷிய நாடுகளிடையே நடந்த பனிப்போரின் முடிவை வேறுவிதமாக மாற்றியிருக்கலாம்.

உண்மையில் 1962 ல் கென்னடி கியுபா பிரச்சினையில்தான்  தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தினார். இந்திய சீன போர் பிரச்சினையை கையாளும் அதிகாரத்தை அவர் அப்போதைய அமெரிக்க தூதர்  பேராசிரியர் ஜான் கேல்ப்ரைத் என்பவரிடம் ஒப்படைத்தார்.  போரில் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமான போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்க விமானப்படைகள் உஷார் செய்யப்பட்டன. வார்சாவில் இருந்த அமெரிக்க தொடர்புகளின் மூலம் சீனா கடுமையாக எச்சரிக்கப்பட்டது. சீனாவின் ஆக்கரமிப்பு நடவடிக்கை தொடருமானால், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்கும் என்று  சீனாவிடம் அமெரிக்கா உறுதியாக தெரிவித்தது. வெறும் அறிவிப்போடு நிற்காமல் அமெரிக்க விமானப்படையின் C-130 ஹெர்குலிஸ் போர்விமானம் போர்க்களத்தில் நின்ற இந்திய வீரர்களுக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், தேவையான   உடைகளையும் சப்ளை செய்தது. 

அப்படியானால் அப்போது இந்தியாவின் நண்பனாக கருதப்பட்ட சோவியத் ரஷியா என்ன செய்து கொண்டிருந்தது. அது இந்தியாவின் வரலாற்றில் மிகபெரும் ஏமாற்றத்தை அளித்த சம்பவம் ஆகும். இந்தியாவின் நம்பிக்கைக்கு நேர் எதிராக சோவியத் இந்தியாவை கைவிட்டது. போர் ஏற்பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று சோவியத் குற்றம் சாட்டியது. மேலும் போரின்போது சீனாவின் இந்திய ஆக்கரமிப்பு நடவடிக்கையை சோவியத் ஆதரித்தது. ஏற்கனவே போரின் தோல்வியால் ஏமாற்றமடைந்து, தனித்துவிடப்பட்டு, நொந்து போயிருந்த இந்தியாவுக்கு, சோவியத்தின் வெளிப்படையான  சீன ஆதரவு கொள்கை நிலை மேலும் பேரிடியாக அமைந்தது.

1962 ல் அமெரிக்க ரஷிய போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உச்சக்கட்டத்திலிருந்த நேரம். அக்டோபர் 25, 1962 அன்று சோவியத் பத்திரிகை ப்ரவ்தா தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் இந்திய சீன போருக்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியது. இந்திய சீன எல்லை கோடான மெக்மோகன் கோடு நியாயமற்றது என்றும், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் திணிப்பு என்றும், அந்த எல்லைக்கோடு சட்டப்படி செல்லாது என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியா ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று அது மேலும் குற்றம் சாட்டியது. ஆனால் சோவியத்தின் இந்த நம்பிக்கை துரோக செயலுக்கு நேர்மாறாக கென்னடியின் இந்திய ஆதரவு நிலை இருந்து. இந்தியாவுக்கு மிகவும் தேவைப்பட்ட  நேரத்தில் அமெரிக்கா எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது உதவியை அளித்தது. அதுவே இந்தியர்களின் மனதில் கென்னடி மிகப்பெரும் இடத்தை அடைய ஒரு காரணமாக அமைந்தது.

அமெரிக்க தூதர் பேராசிரியர் கேல்பிரித் தன்னிடம் பேசும்போது, அக்காலக்கட்டத்தில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து டெல்லியில் நிலை கொண்டிருந்ததாகவும், அவைகள் இந்திய திபெத் எல்லை பகுதிகளை தொடர்ந்து புகைப்படம் எடுத்து இந்தியாவிற்கு வழங்கியதாகவும் தெரிவித்தாக ஓய்வு பெற்ற col. அனில் அதாலே தெரிவிக்கிறார். ஏனென்றால் அப்போது இந்திய சீன எல்லைப்பகுதி குறித்த எந்த வரைபடமும் இந்தியாவிடம் இருக்கவில்லை. அமெரிக்க விமானங்கள் வழங்கிய புகைப்படங்கள் இந்தியாவிற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அமெரிக்காவின் இந்த உதவிகள் காரணமாக அன்றைய காலக்கட்டத்தில் இந்திய அமெரிக்க நட்புறவு வலுவான நிலையில் இருந்தது. ஏனென்றால் நண்பனின் துரோகத்தால் துவண்டிருந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் எதிபாராத உதவி உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது.
நவம்பர் 16, 1962 அன்று சீனா தானாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் அருணாச்சலப்பிரதேசத்தில் தான் ஆக்ரமித்த பகுதிகளைவிட்டு பின்வாங்குவதாகவும் அறிவித்தது. அளவுக்கு மீறி இந்தியாவின் இமயமலைப் பகுதிக்குள் ஊடுருவியதால், அப்பகுதிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைப்பது  இயலாத காரியம்  என்பதை உணர்ந்து சீனா பின்வாங்கியது உண்மைதான். ஆனால் அமெரிக்க விமானப்படையின் தலையீடும், வார்சாவிலிருந்து அமெரிக்காவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் சீனாவின் பின்வாங்கலுக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்ததை எவரும் மறுக்க முடியாது.



ஆனால் இந்திய அமெரிக்க உறவு அடுத்த ஒரு வருடத்தில் கசந்து போகத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆதரவுடன் பாகிஸ்தான் அளித்த நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் இந்திய ஆதரவு போக்கு மாறத்தொடங்கியது. ஆனால் தற்போது இந்திய அமெரிக்க நட்புறவு மீண்டும் மேம்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்சீனக்கடல் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் பிரச்சினை என்று பல உலகப்பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவின் நிலைப்பாடுடன் ஒன்றுபடுகிறது. இப்போதைய  உலக அரங்கில் இந்திய அமெரிக்க நட்புறவு மேம்படுவது இந்தியாவிற்கு நலத்தை தரும். எந்த நாடும் பிரதி பலன் பார்க்காமல் நட்பு கரத்தை நீட்டுவதில்லை.  அமெரிக்காவிடம் இருந்து சில உதவிகளை நாம் பெறும்போது, நாம் சில உதவிகளை அவர்களுக்கு வழங்குவது தவறல்ல. உலக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை ராஜதந்திரமாக பயன்படுத்துவதின் மூலம் உலக அரசியலில் நாம் சிறந்த லாபங்களை பெற முடியும். மேலும் ஆசியாவின் மிகப்பெரும் ஆபத்தான சீனாவை எதிர்கொள்ள நம் கையில் அமெரிக்கா என்னும் ஆயுதம் கண்டிப்பாக தேவை. அதேபோல் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு தேவை. எனவே இந்திய, அமெரிக்க நட்புறவு இரு நாடுகளுக்கும் பலனைத் தரக்கூடியதாகும். சிறு சிறு அரசியல் லாபங்களுக்காக அமெரிக்காவை விமர்சித்துக்கொண்டிருக்காமல், அமெரிக்காவிடம் வெளிப்படையாக நட்பு கொள்வதே எதிர்காலத்தில் இந்தியாவிற்கு நலம் பயக்கும். இந்த விஷயத்தில் தற்போது மன்மோகன் அரசு சரியான திசையிலேயே செல்வதாக நான் நினைக்கிறேன்.
More than a Blog Aggregator