வியாழன், 7 ஆகஸ்ட், 2014

இராமநாதபுரம் ISIS டி ஷர்ட் விவகாரம்: காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது ஏன்!

படம்: NDTV.COM
 இராமநாதபுரத்தில் 26 முஸ்லிம் இளைஞர்கள் ISIS (Islamic State of Iraq and Syria) என்ற முத்திரை பதித்த டி ஷர்ட் அணிந்து எடுத்த குருப் போட்டோ பேஸ்புக்கில் வெளியானது பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.  இதுபோன்ற ISIS  அமைப்பினை விளம்பரப்படுத்தும் பொருட்கள் இணையத்தில் நிறைய விற்கப்படுகின்றன. முதன்முதலாக இதுபோன்ற பொருட்களின் விற்பனை இந்தோனேசியாவில் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.  இன்று உலகம் முழுவதும் இதுபோன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. ISIS முத்திரை பதித்த எந்த பொருளாக இருந்தாலும் இணையத்தில் அறிமுகமானதும் அவைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. எனவே தமிழ் நாட்டில் சிலர் ISIS அமைப்பை ஆதரிக்கும் நோக்கில் ஆடை அணிந்ததை உலகம் முழுவதும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாகவே காண முடிகிறது. எனவே இந்தியாவில்  நடந்த இந்த சம்பவத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆயினும் சம்பவம் நடந்திருப்பது தமிழ் நாட்டில் என்பதால் இந்த சம்பவம் சற்று எச்சரிக்கையுடன் காவல்துறையால் கையாளப்படுகிறது. ஏனென்றால் ISIS  அமைப்பில் உறுப்பினராக சேர்ந்த முதல் இந்தியர் ஹாஜா பக்ருதீன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்தான்.

இராமநாதபுரத்தில் நடந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் 100 எண்ணிக்கை ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது.  அவைகள் ரூ.250  என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் குறிப்பிட்ட டி ஷர்டை அணிந்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மசூதியின் முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் தற்போது இந்தியாவில் இல்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அந்த புகைப்படமும் வெளிநாட்டிலிருந்துதான் அப்லோட் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அப்துல் ரஹ்மான் மற்றும் ரிள்வான் என்ற இரு இளைஞர்கள் தீவிரவாதத்தை ஊக்குவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இளைஞர்கள் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்புகளுக்கு தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் ஆதரவு காவல்துறைக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே இது போன்ற சம்பவங்களை முளையிலேயே அழித்துவிட காவல்துறை விரும்புகிறது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை விரும்புகிறது.  ஆனாலும் இவ்வழக்கை பொறுத்தவரையில் காவல்துறை மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் ISIS அமைப்பானது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பல்ல.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்வக்கோளாரில் இதைச் செய்திருக்கலாம். விசாரணையின் போது இருவரும் தாங்கள் எந்த வித வன்முறை நோக்கத்துடனோ அல்லது பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ இதை செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனாலும் இச்சம்பவங்களை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் பின்னர் அது காட்டுத் தீயாக பரவிவிட வாய்ப்புள்ளதாக காவல்துறை நினைக்கிறது. இந்தியாவிலிருந்து இதுவரை 250 பேர் ISIS அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகவும், அதில் 18 பேர் ஈராக் சென்றுள்ளதாகவும்உளவுத்துறை நம்புகிறது.

கைது செய்யப்பட இருவரில் ரஹ்மான் என்பவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளது காவல்துறைக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது.  ஏனெனில் ISIS அமைப்பு தனது படைக்கு ஆள் சேர்க்கும் மையமாக சிங்கப்பூரை தேர்ந்தெடுத்து செயல்பட்டுவருகிறது. ISIS அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஓரிரு மாதங்கள் சிங்கப்பூரில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னரே ஈராக் அல்லது சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தமிழ் நாட்டிலிருந்து ISIS அமைப்பில் சேர்ந்த ஹாஜா பக்ருதீன் சிங்கப்பூர் வழியாகவே ஈராக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று உளவுத்துறை உறுதி செய்துள்ளது. எனவே காவல் துறை இந்த சம்பவத்தை ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எடுத்துக்கொள்ளவும் முடியாது. ஆனால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம்!? அவர்கள் தீவிரவாத நோக்கத்துடன் இச்செயலை செய்திருந்தால்  செய்திருந்தால் தண்டனைக்கு உரியவர்கள்தான். ஆனால் ஆர்வக்கோளாரில் செய்திருந்தால்?. இச்சம்பவம் இளைஞர்களின் ஆர்வக்கோளாறால் நடந்ததாகவே நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவர்களின் உண்மையான நோக்கம் தீவிரவாதமாக இருந்திருந்தால் சம்பவத்தில் ஈடுபட்ட 26 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஆனாலும் இந்த இளைஞர்கள் ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என்ற வகையில் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கு மற்றவர்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற ஆவல் வெகுவாக உள்ளது. அவர்கள் மனிதக்கடலில் அடையாளமின்றி காணாமல் போக விரும்புவதில்லை. மற்றவர்களின் கவனத்தை எப்போதும் தன் மீது ஈர்க்க எந்த வித்தியாசமான செயலையும் செய்ய அவர்கள் துணிகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழியானது சமுதாயத்திற்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் சந்தோஷத்தை தருவதாக இருக்கவேண்டும். ஆனால் இந்த இளைஞர்கள் ஆர்வக்கோளாறில் தேர்ந்தெடுத்த வழியானது கண்டிப்பாக சமுதாயத்திற்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் சந்தோஷத்தை தராது. சொல்லப்போனால் அந்த இளைஞர்களுக்கே சந்தோஷத்தை தராது என்பதை வரப்போகும் காலங்கள் உணர்த்தும். ஆனால் இச்சம்பவம் இவர்களைப் போன்ற இளைஞர்களுக்கு நல்லதொரு படிப்பினையைத் தந்துள்ளது.  


More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. Let our Muslims say this is Secular Country. Sorry! Secular at the Option of the Majority! If one Hindu is harmed in the Caliphate, it will give excuse for our Hindu-majority country to "review"" its secular status! So it will be wise for the half-baked Muslim fundamentalists not to sing praise and admire ISIS and Baghdadi! In the modern world, all have to live together, with mutual tolerance, exemplified by Hinduism. " WE ONLY: OTHERS CONVERT OR DIE " can not be allowed!!

    பதிலளிநீக்கு
  2. இதுவொல்லாம் வெறும் ஆர்வ கோளாறுக தானுங்க.
    எனது நண்பன் கூட சொன்னான் தான் பிரபாகரன் படம் பிரிண் பண்ணிய ரீசேட் முன்பு போட விரும்பியதாக. ஆபத்தானவைகளை விபரீதத்தை ஆரம்பத்திலே தடுக்கணும். காவல்துறையின் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு