செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் குற்றவாளி தாவூத் இப்ராஹீம் எங்கே?



இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தங்கள் அரசு தாவூத் இப்ராஹிமை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும், விரைவில் அவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வழக்கம் போல சம்பிரதாயமானதா? அல்லது நிஜமாக நடக்கக்கூடியதா?.  தாவூத் இப்ராஹீம், இந்தியாவின் மோஸ்ட் வான்டட் குற்றவாளி. 1993 ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தாவூத்தின் சட்ட விரோத  நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கடத்தலில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டிருந்த தாவூத்தின் நெட்வொர்க், தற்போது தீவிரவாத நடவடிக்கைகளிலும், தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தானோ தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது. தாவூத் பாகிஸ்தானில் இருக்கிறானோ இல்லையோ, தாவூத் பிரச்சினை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே உள்ள உறவை பாதித்து வரும் ஒரு காரணியாக உள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்புக்குப் பின் தாவூத் இந்தியாவை விட்டு வெளியேறினான். அதன் பின் அவன் இந்தியாவிற்கு வரவே இல்லை. அவன் இந்தியாவை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆயிற்று. அவன் பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறான் என்று இந்தியாவால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஒத்துழைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவுத் பாகிஸ்தானில் வசிக்கும் முகவரியை துல்லியமாக இந்திய அரசு தெரிவித்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து அவன் பாகிஸ்தானில் இல்லை என மறுத்து வருகிறது. தாவூத்தை தேடப்படும் குற்றவாளியாக ஐநா சபை அறிவித்துள்ள போதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து அவனை காப்பாற்றி வருகிறது. 

தாவூதின் கராச்சி வீடு
இதற்கிடையே கராச்சியில் வசித்து வந்த தாவூத், ஒசாமா மீதான அமெரிக்க அரசின் நடவடிக்கை போல தன்மீது மோடி அரசு கமாண்டோ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தில்  பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு தன் இருப்பிடத்தை மாற்றிவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன, அவன் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் பூமிக்கு அடியில் (Under ground) பங்களாவில் வசித்து வருவதாகவும் ஒரு சாரார் நம்புகின்றனர். தாவூத் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி விட்டதாக ஒரு சாரார் கூறி வருகின்றனர். தாவூத்தின் பாதுகாப்பு பொறுப்பை பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஸ்ஐ ஏற்றுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தாவூதின் முன்னாள் கூட்டாளியும், தற்போதைய பரம எதிரியுமான சோட்டா ராஜன் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் தாவூத் முன்பு கராச்சியில் தங்கி இருந்தபோது தன்னுடைய ஆட்களை அனுப்பி அவனை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் திட்டத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட தாவூத் தன்னுடைய பயண திட்டப்படி குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை எனவும், எனவே தன்னுடைய ஆட்கள் அவனை கொலை செய்ய முடியாமல் திரும்பி விட்டனர் என்றும் தெரிவித்தான். மேலும் சோட்டா ராஜன் கூறும்போது தனக்கு கிடைத்த தகவலின்படி தற்போது தாவூத் ஐக்கிய அரபு நாடுகளில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். சோட்டா ராஜனின் கருத்து இந்திய அரசின் கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது. எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு காலக் கட்டத்தில் தாவூத் பாகிஸ்தானில் வசித்து வந்துள்ளது உறுதியாகிறது.

பாகிஸ்தான் தொடர்ந்து தாவூத் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருகிறது. எடுத்துக்காட்டாக, 2013-ல் நவாஸ் ஷெரிப்பின் சிறப்பு தூதுவர் ஷரியர் கான் தன்னை மீறி ஒரு உண்மையை உளறிவிட்டார். ஒரு பேட்டியில் அவர் தாவூத் பாகிஸ்தானை விட்டு விரட்டியடிக்கப்பட்டு விட்டார்  என தெரிவித்தார். இதன் மூலம் 1993 குண்டு வெடிப்புக்குப் பின் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தாவூத் பாகிஸ்தானில் வசித்து வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் தான் கூறியதின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அவர் சுதாகரித்துக் கொண்டு அடுத்த நாளே தனக்கு தாவூத் பற்றி எந்த தகவலும் தெரியாது என்று . பல்டியடித்தார். மேலும் அவர், தாவூத் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தாவூத் பாகிஸ்தானை விட்டு விரட்டியடிக்கப்பட்டது உண்மையானால், அவன் பாகிஸ்தானில் இருக்கும்போது ஏன் இந்தியாவிற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது இந்திய அரசின் கேள்வி.

2013 ஆகஸ்டில் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட அப்துல் கரீம் டுண்டா என்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி தான் ஒரு வருடத்திற்கு முன்பு தாவூத் இப்ராஹிமை கராச்சியில் சந்தித்ததாக விசாரணையில் தெரிவித்தான்.  டுண்டா 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைவர்களின் அறிக்கைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. அவற்றிக்கு நம்பகத் தன்மையும் கிடையாது. அவர்கள் தாங்கள் இன்று கூறிய கருத்தை எவ்வித கூச்சமும் இல்லாமல் மறுநாளே மறுப்பார்கள். பாகிஸ்தான் அதிகாரிகளின் அறிக்கைகளை மொத்தமாக எடுத்துப் பார்த்தால் அவை முரண்பாடுகளின் ஒட்டுமொத்த உருவம் என்பது அனைவருக்கும் புரியும். ஒசாமா பின்லேடன் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பாகிஸ்தானில்தான் வசித்து வந்தார். அமெரிக்காவால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பாகிஸ்தான் நினைத்தால் அது யாரை வேண்டுமானாலும் மறைத்து வைக்க முடியும். அதில் ஆச்சரியமில்லை.
 
தாவூத் இன்டர்போல் அமைப்பால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவனின் இருப்பிடம் தெளிவாக தெரிந்த பின்னும் இந்தியாவால் அவனை கைது செய்ய முடியவில்லை. என்ன காரணம்? இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற இந்தியா தவறிவிட்டதுதான் காரணம்.  ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை போல் இந்தியா செயல்பட வாய்ப்பு மிகவும் குறைவு. அது ஒரு போருக்கு கூட இரு நாடுகளையும் இழுத்துச் சென்றுவிடலாம். ஆனால் சர்வதேச நாடுகளின் ஆதரவை  பெறுவதின் மூலம் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கக்கூட இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது.  அத்தகைய நடவடிக்கையை  மேற்கொள்ள முடியாது எனில், பாகிஸ்தான் மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை இந்தியா அதிகரிக்கச் செய்ய வேண்டும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவு இன்றி தாவூத்தை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியாது. ஆனால் துரதிருஷ்டவிதமாக கடந்த இருபது ஆண்டுகளாக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறும் விஷயத்தில் இந்தியா வெற்றி பெற இயலவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக