ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள்! - ஒரு பார்வை.



தென்னிந்தியாவில்  முதன் முதலாக கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடித்த போது அது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. ஆனால் இன்று கர்நாடகாவில் அக்கட்சி இருக்கும் நிலைமை அக்கட்சிக்கு மிகப்பெரும் அவநம்பிக்கையை அளித்துள்ளது. விரைவில் மக்களவை தேர்தல் வர இருக்கும்போது, அதற்கு முன் வர இருக்கின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு நிறையவே  கலக்கத்தை தரலாம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 5 தேதி நடைபெற உள்ள நிலையில் Headlines Today மற்றும் C Voter  ஆகிய நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பிஜேபிக்கு சாதகமாக இல்லை. வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிஜேபி மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இக்கருத்துக்கணிப்புகள் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையில் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  அதாவது 224 தொகுதிகளிலும் 15,000 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக Headlines Today மற்றும் C Voter  தெரிவித்துள்ளது.
 
தற்போதைய கர்நாடக சட்டமன்றத்தில் பிஜேபி 104 உறுப்பினர்களை கொண்டுள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெறும் 52 இடங்களே கிடைக்கும் என கருத்க்கநிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் தற்போது 38 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 118 இடங்களை வென்று கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
 
எடியூரப்பாவின் கட்சியான Karnataka Janata Paksha (KJP) 8 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் அக்கட்சிக்கு சுமார் 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக இடங்களை கைப்பற்ற முடியாவிட்டாலும் பிஜேபியின் படு தோல்விக்கு எடியூரப்பாவின் கட்சி முக்கிய காரணமாக அமைகிறது. முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு 19 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம். 

பாரதீய ஜனதா கட்சியின் உட்கட்சி பூசல் அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.  அதே வேளையில் 62 சதவீத வாக்காளர்கள் பிஜேபியின் ஆட்சி கடந்த ஆட்சிகளை விட மோசமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

CNN-IBN-Deccan Herald-CSDS ஆகியவை இணைந்து நடத்திய  கருத்துக்கணிப்புகளும் ஏறத்தாழ இதே முடிவையே தெரிவிக்கின்றன.

தோல்வியின் விளிம்பில் உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு சிறிது நம்பிக்கை கொடுப்பவராக நரேந்திர மோடி இருக்கிறார். கர்நாடக மக்களிடையே வளர்ந்து வரும் மோடியின்  புகழ் பிஜேபிக்கு பெரிதும் கைகொடுக்க வாய்ப்பிருக்கிறது. சரிந்து கொண்டிருக்கும் பிஜேபியின் புகழை தூக்கி நிறுத்த மோடியால் முடியும் என கர்நாடகாவின்  64 சதவீத  வாக்காளர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பிஜேபியின் ஒரே துருப்பு சீட்டாக மோடி உள்ளார். அவ்வாறு சரிந்து வரும் பிஜேபியின் இமேஜை தூக்கி நிறுத்தி மீண்டும் கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் மேஜிக்கை மோடி செய்வாரானால் அது வரும் மக்களவை தேர்தலில் மோடியின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க செய்யும். அதே சமயத்தில் மோடி பிரதமராவதை எதிர்க்கும் குரல்களும் பிஜேபியில் இல்லாது போகும். மாறாக  பிஜேபி தோற்கும் நிலையில் அதற்கான பழியை மோடி மேல் சுமத்தவும் அவருடைய எதிரிகள் தயாராக இருப்பார்கள். மூழ்கும் நிலையில் உள்ள கர்நாடக பிஜேபி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தனது இமேஜை மோடி கெடுத்துக்கொள்வாரா?. எப்படி இருந்தாலும் பிஜேபியின் ஆட்சி மன்ற  குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு நெருப்பு ஆறாகவே இருக்கப்போகிறது. எனவே மோடியும் இத்தேர்தலில் தனது முழுத் திறமையை காட்ட தயாராகவே இருப்பார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில், அக்கட்சியின் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கட்சியின் இமேஜும் உயரக்கூடும்.  அதே நம்பிக்கையுடன் அது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும்  தயாராகலாம். அந்த வெற்றி களிப்பிலேயே உடனடியாக மக்களவை தேர்தலையும் நடத்த அது துணியலாம்.  அவ்வாறு காங்கிரஸ் நினைக்குமானால் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. மாறாக காங்கிரஸ் தோற்குமானால் ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் காங்கிரசின் இமேஜு மேலும் சரிந்துவிடும். அக்கட்சியின் தொண்டர்கள் தன்னம்பிக்கை குறைந்து ஒரு அவநம்பிக்கையுடனேயே மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். முன் கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கும்.  மொத்தத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் இரு கட்சிகளுக்கும் மக்களவை தேர்தலுக்கு முந்தைய அக்னி பரீட்சையாகவே இருக்கும். இத்தேர்தலின் வெற்றி, தோல்விகள் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிதளவாவது மக்களவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த நிறையவே வாய்ப்புண்டு.
More than a Blog Aggregator

புதன், 3 ஏப்ரல், 2013

ஆப்கானிஸ்தான் பிரச்சினை: இந்தியா மீது சீனா திடீர் காதல்!



சீனா எப்போதும் பாகிஸ்தானையே தனது நண்பனாக கருதி வந்துள்ளது. இந்தியா உடனான சீனாவின் நட்பு 1962 –ல் நடந்த போருக்கு பின் எந்த முன்னேற்றமும் அடையாமல் பின்னடைவே அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரும்பான்மையான நிகழ்வுகளில் இந்தியாவின் எந்த நிலைப்பாட்டையும் அது ஆதரித்ததில்லை. மேலும் கூறுவதானால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையையே சீனா எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் எனபது நீண்ட வரலாறு உடையது. தலிபானை பாகிஸ்தானும், தலிபானின் எதிர்ப்பு குழு Northern Alliance ஐ இந்தியாவும் ஆதரித்தன. தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் உதவியோடு காபூலை ஆண்டு வந்த Northern Alliance ஐ தோற்கடித்து அவர்களை நாட்டின் வடக்கு பகுதிக்கு விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றினார்கள். பின்னாளில் Northern Alliance ன் தலைவரான அஹமத் ஷா மசூத்தை தந்திரமாக கொன்று  கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் ஆதிக்கம் குறைந்தது. பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தலிபான்கள் அமெரிக்காவிடம் தோல்வி கண்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது.
  
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிப்பது எனபது தனக்கு ஆபத்தானது என்றே எப்போதும் பாகிஸ்தான் கருதுகிறது. இவ்விஷயத்தில் சீனாவும் வழக்கம் போல் பாகிஸ்தானின் கருத்தை ஆதரித்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா அப்போது விரும்பவில்லை. ஆனால் இப்போது சீனாவின் கொள்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் உணர முடிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் சீனாவின் புதிய அதிபர் ஷி ஜின்பிங் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது,  இந்தியா தொடர்பான சீனாவின் கொள்கை நிலைப்பாட்டில் ஒரு நேர்மறையான மாற்றம் தென்பட்டதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அச்சந்திப்பின் போது  அதிமுக்கியமான உலக அரசியல் நிகழ்வுகள் குறித்து வருங்காலத்தில் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க  சீனா சம்மதம் அளித்ததாகவும், அது உலக அரசியலில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஏற்றுக்கொள்ளத் தொடங்கியமைக்கான ஒரு அடையாளம் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர். 

இம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு துறை அதிகாரி யாஷ் சின்ஹா தலைமையிலான இந்திய குழுவும், சீன வெளியுறவு துறை அதிகாரி லு ஷாஹுய்  தலைமையிலான சீன குழுவும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளன. இச்சந்திப்பின் போது 2014 ல் அமெரிக்க படை வெளியேறிய பிறகு  ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள், ஆப்கன் பிரச்சினையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, தலிபானின் பயங்கரவாதம், ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை  குறித்து முதன் முதலாக விவாதிக்கப்பட உள்ளது இச்சந்திப்பு உண்மையிலேயே சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தையே நமக்கு காட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பு என்பது  தவிர்க்க முடியாதது என்பதை சீனா  உணர தொடங்கியுள்ளது. அதை விட சீனாவின் கொள்கை மாற்றத்திற்கான காரணங்களில் அதன் சுயநலமும் நிறையவே உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால்,  அது ஏற்கனவே சீனாவின் எல்லைபுற தன்னாட்சி மாகாணமான Xianjing ல் அதிகரித்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மேலும் அதிகரிக்க செய்யும்  என சீனா நினைக்கிறது.  சீனாவின் Xianjing மாகாணம் சீன-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தை  தனி நாடாக அறிவிக்கக் கூறி Turkistan Islamic Party (TIP) என்ற தீவிரவாத அமைப்பு போராடி வருகிறது. இப்பிரச்சினை தற்போது சீனாவுக்கு பெறும் தலைவலியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டிருந்த காரணத்தினால் TIP அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் சற்று குறைந்திருந்தன. 2014 –ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வாபஸ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமெரிக்க படைகள் வெளியேறினால் Xianjing மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும்  கொழுந்து விட்டு எரியக்கூடும் என சீனா நினைக்கிறது. எனவே  ஆப்கானிஸ்தான் தொடர்ந்து அரசியல் ஸ்திரத்தன்மை உள்ள நாடாக இருப்பது சீனாவுக்கு அவசியமாகிறது. பாகிஸ்தான்  மற்றும் தலிபான்களின் வரலாறுகள் ஏற்கனவே உலகம் முழுவதும் அறியப்பட்டதே. ஆகவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் இருந்தால் மட்டுமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை என்பது சாத்தியமாகும். எனவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் கரத்தை வலுப்படுத்துவது சீனாவுக்கு அவசியமாகிறது. இதுதான் இந்தியா மீது சீனா திடீர் காதல் கொண்டதற்கு காரணமாகிறது.

ஒவ்வொரு நாடும் தங்களின் சுய லாப, நட்டங்களை கணக்குப் போட்டுத்தான் தங்களின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. அதுபோலத்தான்  தனது சுய லாபங்களுக்காக தற்போது இந்தியாவை நோக்கி சீனா சற்று வளையத் தொடங்கியிருக்கிறது. காலம் அளித்துள்ள இந்த வாய்ப்பை சற்றும் நழுவ விடாமல் தனது சுயலாபத்திற்கு இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
More than a Blog Aggregator

திங்கள், 1 ஏப்ரல், 2013

மாணவிகளை ஜிகாதிகளாக மாற்றும் முஸ்லிம் அமைப்பு! -மும்பை போலீஸ் ரகசிய அறிக்கை!



மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்  மும்பை காவல்துறையால் அனுப்பப்பட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை உள்ளூர் மீடியாக்களில் வெளியானது மும்பை காவல்துறைக்கு மிகபெரும் தலைவலியை அளித்துள்ளது. அக்குறிப்பாணையில், கல்வி நிலையங்களை நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பு ஒன்று மாணவிகளை ஜிகாதிகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறது என்ற அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து காவல் அதிகாரிகளும் Girls Islamic Organisation of India என்ற அந்த அமைப்பினை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வரும்படியும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Girls Islamic Organisation of India என்ற அமைப்பின் வெளிப்படையான நோக்கம் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் மதத்தை பற்றியும், புனித குர் ஆன் பற்றியும் போதிப்பதாக இருந்தாலும், உண்மையான நோக்கம் அப்பெண்களுக்கு ஜிஹாத் பற்றியும், அதற்கான பயிற்சிகளை அளிப்பதுமாக இருந்து வருகிறது என்று மேலும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Girls Islamic Organisation of India அமைப்பின் தாய் அமைப்பு ஜமாத்-இ இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு முஸ்லிம் பெண்களுக்கு கல்வியையும், அவர்களுக்கு சமூக சேவைகளையும் வழங்கி வருகிறது. மும்பை காவல்துறை வெளியிட்ட இந்த சுற்றறிக்கை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயரை கெடுக்க நடைபெறும் திட்டமிட்ட சதி என ஜமாத் கருத்து தெரிவித்துள்ளது. இதற்காக மும்பை காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த மும்பை காவல்துறை மேற்கண்ட சுற்றறிக்கை பொதுவானது அல்ல என்றும், அது காவல்துறையின் தனிப்பட்ட ரகசிய நடவடிக்கைக்காக துறை சார்ந்த ஒரு சுற்றறிக்கை என்றும், உளவு அமைப்புகளின் அறிக்கையின் படியே அச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஜனவரி மாதத்தில் மும்பை காவல்துறை அனுப்பிய இன்னொரு ரகசிய சுற்றறிக்கையும் ஊடங்கங்களில் வெளியாகி பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. பூங்காக்களிலும்,  பீச்சிலும் காதல் செய்யும் ஜோடிகளை பிடித்து தண்டிக்கவேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் மும்பை காவல்துறை அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியிருந்தது. மேற்கண்ட பகுதிகள் ஒதுக்குப்புறமாக இருப்பதால் கிரிமினல்கள் கொள்ளை அடிப்பதற்கும், பெண்களை பாலியல் கொடுமை செய்வதற்கும் வசதியாக உள்ளது என்றும் அதனாலேயே அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் பின்னர் மும்பை காவல்துறை விளக்கம் கூறியது.
காவல் துறையில் இதுபோன்ற அதிகாரப்பூர்வமில்லாத, அலுவல் சாரா ரகசிய குறிப்புகள் சுற்றறிக்கையாக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான்.  அந்த ரகசிய குறிப்பில் ஒருவர் கண்காணிக்கப்படவேண்டும் என்று கூறப்படுவதாலேயே அவர் குற்றவாளி என்ற அர்த்தம் கிடையாது. பல்வேறு உளவு அமைப்புகளின் ரகசிய அறிக்கைகளின்படி அந்தந்த மாநில காவல் துறையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இவைகள். ஆனால் இதுபோன்ற சுற்றறிக்கைகள் “CONFIDENTIAL” என்று குறிப்பிடப்பட்டே அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த சுற்றறிக்கைகள் ஊடங்கங்களில் எளிதாக கசிகிறது என்றால் அதற்கு காரணமானவர்களை காவல்துறை உடனடியாக அடையாளம் காணவேண்டும். ஏனென்றால் இது போன்ற செயல்களை செய்பவர்களின் நோக்கம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக கூட இருக்கலாம். அல்லது காவல்துறைக்கு சங்கடங்களை விளைவித்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்குவதாக கூட இருக்கலாம். தண்டிக்கப்படவேன்டியது ரகசிய தகவல்களை வெளியிட்ட அந்த கருப்பு ஆடுதான். சட்டத்திற்கு உட்பட்டு யார் மீதும் சந்தேகப்படவும், நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் உண்டு.  மற்றபடி மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு மும்பை காவல்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டியதோ, அல்லது மன்னிப்பு கேட்க வேண்டியதோ இல்லை.
More than a Blog Aggregator