ஞாயிறு, 20 ஜூலை, 2014

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய குற்றவாளி யார்? - இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்!மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 விபத்துக்குள்ளாகி உக்ரைன் நாட்டு Donetsk மாகாணத்தில் உள்ள Shakhtyorsk என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டம் நகரத்திலிருந்து மலேசியா நோக்கி 10,000  மீட்டர் உயரத்தில் சென்று கொண்டிருந்தது. விமானம் விழுந்து கிடந்த பகுதி ரஷிய நாட்டு எல்லையிலிருந்து சுமார் 32 கிமீ தொலைவில் உக்ரைன் நாட்டு பகுதிக்குள் உள்ளது. மேலும் அந்த பகுதியானது உக்ரைன் நாட்டிலிருந்து பிரிவினை கோரும் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதலாவது விமானத்தின் தொழில் நுட்ப கோளாறு அல்லது விமானியின் கவனக்குறைவாக இருக்கலாம். இரண்டாவது ஏதோ ஒரு தரப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலாக இருக்கலாம். தற்போது ஏவுகணை தாக்குதலின் காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயினும் பயணிகள் விமானத்தை தாக்கும் நோக்கம் எத்தரப்புக்கும் இருக்க காரணம் கிடையாது. எனவே இந்த ஏவுகணை தாக்குதலை எத்தரப்பு நடத்தி இருந்தாலும் அது ஒரு தவறான புரிதலினால் மேற்கொள்ளப்பட்ட தற்செயலான தாக்குதலாகத்தான் இருந்திருக்கும் என்பதும் உறுதியாக தெரிகிறது. அப்படியானால் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்திய தரப்பு எது? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அது மிக முக்கியமான கேள்வியும் கூட. நமது சந்தேக வட்டத்தில் மூன்று தரப்பினர் உள்ளனர், உண்மையான குற்றவாளி அந்த மூன்று பேரில் ஒருவர்தான். யார் அந்த குற்றவாளி? 

1. ரஷிய ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாதிகள்.
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷிய ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாதிகள் என்று உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில் இப்பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அல்லது தாங்கள் உரிமை கோரும் பகுதியின் வான்வெளியில் பறக்கும் உக்ரைன் நாட்டு ராணுவ விமானங்களை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறனும், அனுபவமும் குறைவு. எனவே இவர்கள் மலேசிய போர் விமானத்தை உக்ரைன் நாட்டு ராணுவ விமானமாக தவறுதலாக கருதியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
மேலும் இந்த விமானமானது மேற்கிலிருந்து கிழக்காக சென்றுகொண்டிருந்தது. அதாவது உக்ரைன் வான்வெளியிலிருந்து ரஷியா அல்லது கிழக்கு உக்ரைன் (பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) நோக்கி சென்று கொண்டிருந்தது. எனவே பிரிவினைவாதிகள் மலேசிய விமானத்தை உக்ரைன் நாட்டு ராணுவ விமானமாக கருதியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
  
மேலும் விமானம் சுடப்பட்டு கீழே விழுந்த பத்தியிலிருந்து புகை கிளம்பியவுடன் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் உக்ரைன் நாட்டு விமானம் சுடப்பட்டுவிட்டதாக சந்தோஷத்தில் கோஷமிட்டதை  You Tube ல் காண முடிந்தது. ஏற்கனவே உக்ரைன் நாட்டு ராணுவ சரக்கு விமானத்தை தாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக இப்பிரிவினைவாதிகள் சில தினங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்றிருந்ததனர். அந்த தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 47 பேர் பலியாகியிருந்தனர். அப்போது அச்செய்தி பெரிதாக உலக அளவில் பேசப்படவில்லை. ஆனால் மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவ விமானமாக கருதி இவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்பதற்கு தற்போது இச்செய்தி வலு சேர்கிறது.

ஆனால் 10,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு பிரிவினைவாதிகளிடம் ஆயுதங்கள் உள்ளனவா என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனெனில் அவ்வளவு உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை தாக்க மித மற்றும் தொலை தூர surface-to-air missiles னால் மட்டுமே முடியும். பிரிவினைவாதிகளும் தங்களிடம் அத்தகைய ஆயுதங்கள் இல்லையென்றும், தங்களிடம் சிறிய அளவிலான விமான தாக்குதல் ஆயுதங்கள் மட்டுமே உள்ளதென்றும் (man-portable air-defense systems), அதை உபயோகித்து  10,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்த இயலாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.  ஆனால் பிரிவினைவாதிகளிடம் BUK-M1 [aka SA-11] surface-to-air road mobile missile system (படத்தில் காண்க) உண்டு எனவும், ரஷியா இந்த ஆயுதத்தை சப்ளை செய்ததாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. பிரச்சினைக்குரிய பகுதிகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் பலர், மேற்கண்ட ஆயுதத்தை பல இடங்களில் பிரிவினைவாதிகள் வைத்திருந்ததை தாங்கள் நேரில் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த ஆயுதத்தால் 22,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தைக் கூட சுட்டு வீழ்த்த முடியும்.

2. ரஷியா.
உக்ரைன் பிரிவினைவாதிகள் விமானத்தை சுடவில்லை எனில், அடுத்த சந்தேகத்திற்குரிய குற்றவாளி ரஷியா. ரஷியா தனது ராணுவத்தின் பெரும் பகுதியை உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்து உள்ளது. கடந்த புதன் கிழமை அன்று தனது நாட்டு சுகோய்-25 ஜெட் விமானத்தை ரஷிய நாட்டு air-to-air missile தாக்கி அழித்ததாகவும், அதே நாளில் ரஷிய நாட்டு எல்லைக்குள் இருந்து மற்றொரு surface-to-air missile அதே சுகோய் ஜெட் விமானத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், திங்கட்கிழமை அன்று தனது ராணுவ சரக்கு விமானத்தை surface-to-air missile மூலமாக ரஷியா சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மலேசிய விமானம் உக்ரைன் வான்வெளியிலிருந்து ரஷியா நோக்கி பறந்து கொண்டிருந்தது. எனவே மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவ விமானமாக கருதி ரஷியா சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று ஒரு தரப்பினால் குற்றம்சாட்டப்படுகிறது, ஆனால் ரஷிய ராணுவம் மிகவும் நவீனமான கருவிகளையும், தொழில் நுட்பத்தையும் உடையது. எனவே ரஷிய ராணுவம் பயணிகள் விமானத்தை ராணுவ விமானமாக தவறுதலாக கருத வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும் உக்ரைன் நாட்டு விமானங்கள் மீது தான் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷிய அரசு மறுத்துள்ளது. மேலும் இம்மூன்று தாக்குதல்களுக்கும் உக்ரைன் பிரிவினைவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. உக்ரைன்
மூன்றாவதாக சந்தேக வட்டத்துக்குள் வருகின்ற குற்றவாளி உக்ரைன். மலேசிய விமானத்தை ரஷிய ராணுவ விமானமாக கருதி உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பது சிலருடைய குற்றச்சாட்டு. ஏற்கனவே கிழக்கு உக்ரைன் (பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) வான்வெளியில் 7,900 மீட்டருக்கு கீழ் விமானங்கள் பறக்க உக்ரைன் அரசு தடை விதித்திருந்தது. அப்பகுதியை தீவிரவாத எதிர்ப்பு தாக்குதல் பகுதியாக அறிவித்திருந்த உக்ரைன் அரசு, பயணிகள் விமானங்களை 7,900 மீட்டர் உயரத்திற்கு மேல் பறக்க அனுமதித்திருந்தது. ஆனால் மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது 10,000 மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே உக்ரைன் அதிகாரிகள் தவறுதலாக விமானத்தின் உயரத்தை கணித்து விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மேலும் விமானம் உக்ரைன் வான்வெளியிலிருந்து ரஷியா நோக்கி சென்று கொண்டிருந்தது. எனவே மலேசிய விமானத்தை  ரஷிய விமானமாக கருத உக்ரைன் கருத வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் ரஷிய விமானமாக இருப்பின் அது ரஷியாவிலிருந்து உக்ரைன் நோக்கி அல்லவா பறந்திருக்க வேண்டும். மேலும் உக்ரைன் ராணுவம் ரஷியா உடனான பிரச்சினையில் இதுவரை விமானத் தாக்குதல்களை நடத்தியதில்லை. மேலும் விமானம் சுட்டு வீழ்த்திய உடன் உக்ரைன் அரசு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தது. தான் தவறு செய்திருந்தால் இவ்வளவு விரைவாக சர்வதேச விசாரணைக்கு உக்ரைன் அழைப்பு விடுத்திருக்காது. 

 விசாரணை முடிவு: எனவே மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில்  உக்ரைன் பிரிவினைவாதிகளே குற்றவாளியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு அபாயகரமான ஆயுதங்களை சப்ளை செய்த ரஷியாவும் குற்றவாளிதான். ரஷ்யாவே நேரடியாக விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும் அதற்கு முற்றிலும் வாய்ப்புகள் இல்லை என்றும்  கூறிவிட முடியாது. ஆனால் இச்சம்பவத்தின் மூலம் உக்ரைன் மற்றும் அந்தநாட்டு பிரிவினைவாதிகளுக்கிடையேயான பிரச்சினையில் உக்ரைன் அரசுக்கு சரவதேச நாடுகளின் ஆதரவு அதிகரிக்கக்கூடும், மேலும் உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷியா அளித்து வரும் ஆதரவை நிறுத்துமாறு ரஷியா மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.
எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தின் விளைவாக உக்ரைனுக்கு அரசியல் லாபம். ரஷ்யாவிற்கும், உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கும் அரசியல் அழுத்தம். மலேசியா அரசுக்கோ வழக்கம் போல தலைவலி. பின்னே! மூன்றே மாதத்தில் இரண்டு மர்மமான விமான விபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதே!

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்: