வியாழன், 17 ஜூலை, 2014

அண்டை நாடுகளால் அபாயம்! -நாட்டின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் மோடி அரசு!

நம் நாட்டில் ஒளிபரப்பாகும் தனியார் ஆங்கில சேனல்கள் அனைத்திற்கும் ஒரே கொள்கைதான். நாடு கெட்டு சீரழிந்தாலும் பரவாயில்லை. நமக்கு தேவை பிளாஷ் நியூசும், டிஆர்பி ரேட்டிங்கும்தான் என்பதுதான் அது. அவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது டெல்லி மட்டும்தான். டெல்லியில் வெங்காயம் விலை கூடிவிட்டால், அது பரபரப்பு செய்தி. டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், அது பிளாஷ் செய்தி. டெல்லியில் கரண்ட் கட்டானால் அது தலைப்புச் செய்தி. இவைகளை விட்டால் பொருளாதார பிரச்சினை குறித்த செய்திகள். இவை அனைத்துமே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமே ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள்தான். ஆனால் பரபரப்புக்காக இத்தகைய குறிப்பிட்ட பகுதி சார்ந்த   பிரச்சினைகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டுவது என்பது இந்தியாவின் உண்மையான பெரும் பிரச்சினைகளை மூடி மறைத்து விடுகிறது என்பதுதான் உண்மை.

இந்தியா எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகள் மூன்று ஆகும். முதலாவதாக, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் தீவிரவாத குழுக்கள் இந்தியா மீது நடத்த இருக்கும் தாக்குதல்கள் (மும்பை தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலாக இருக்கலாம்) இரண்டாவது சீன இராணுவத்தின் இந்திய ஊடுருவல்கள் (அநேகமாக அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இருக்கலாம்). மூன்றாவதாக உள்நாட்டு வகுப்புவாத கலவரங்கள். இந்த மூன்று  பெரும் பிரச்சினைகளையும் வெகு விரைவில் மோடி அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இப்பிரச்சினைகளை குறித்து எந்த ஒரு பொது விவாதத்தையும் மீடியாக்களில் காண முடிவதில்லை.
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து எந்த ஒரு அரசாங்கமும் பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக வரலாறு இல்லை. சீனப்போரின் போது இந்திய வீரர்கள் வீரத்துடன் போரிட்ட போதும் திறமை இல்லாத ராணுவ அதிகாரிகள், தொலை நோக்கு பார்வை இல்லாத அரசியல்வாதிகள் ஆகியோரின் செயல்பாடுகள் காரணமாக இந்தியா அப்போரில் தோற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்போதைய பிரதமர் நேரு பாதுகாப்பு துறையை  நாட்டிற்கு தேவையில்லாத ஒரு துறையாக கருதியதும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆனாலும் அந்த வரலாற்றுப் பிழையை அதற்கு பின் வந்த  நமது முன்னோர்களும் திருத்திக் கொள்ளவில்லை. இப்போதும்  திருத்திக் கொண்டதாக தெரியவில்லை. எப்போதுமே பாதுகாப்பு துறை ஒரு புறக்கணிக்கப்பட்ட துறையாகவே இந்தியாவில் கருதப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதிகள், சீன ஊடுருவல், வகுப்பு வாத கலவரங்கள் பற்றி பேசிய பிரதமர் மோடி கூட, தேர்தலுக்குப் பின் இவ்விஷயங்களைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து பேசுவதில்லை. பிரதமர் கூட தனியார் ஆங்கில செய்தி ஊடகங்களின் மாய வலையில் விழுந்து விட்டார் போல் தெரிகிறது. அவருடைய எண்ணங்கள் முழுவதும் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளது.

என்னுடைய நிலைப்பாட்டிற்கு காரணம் இதுதான். இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு தனியாக ஒரு அமைச்சரை மோடி நியமிக்காதது மிகப் பெரும் தவறாகும்.  இதற்கு அருண் ஜெட்லி திறமையற்றவர் என்று  அர்த்தமல்ல. ஆனால் இது மோடி பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைத்தான் நமக்கும் உலக நாடுகளுக்கும் உணர்த்துகிறது. இந்திய நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தனி அமைச்சர் இல்லாதது, பாகிஸ்தான் மற்றும் சீனாவினால் இந்தியாவிற்கு வர உள்ள ஆபத்தை மோடி அரசு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. 1962-லும் நேரு மற்றும் அவரது சகாக்கள் சீனா இந்தியா மீது படை எடுக்காது என்ற அலட்சிய மனப்பான்மையுடனேயே கடைசி வரை இருந்தனர். (சர்தார் வல்லபாய் படேல் தவிர. சர்தார் படேல் சீன ஆபத்து பற்றி 1950-லேயே நேருவை எச்சரித்து கடிதம் எழுதியது தனிக்கதை). எனவே இப்போதைய உடனடித் தேவை பாதுகாப்புத் துறைக்காக இருபத்து நான்கு மணி நேரமும் அர்ப்பணிப்புடன் பணி செய்யும் ஒரு அமைச்சர் தேவை என்பது என் கருத்து. இதுவே நமது நாட்டின் இறையாண்மையை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உலக நாடுகளுக்கு உறுதியாக உணர்த்துவதற்கான நமது முதல் படியாக இருக்கும். 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. paathukaapputh thuraikku oru thani amaichariap pottaal, avaru palakka thosathula, yaar kitteyaavathu kaasu vaangittu inthiya raanuva rakasiyangalai virkum abaayam en kannil therikirathu

    பதிலளிநீக்கு
  2. ம்ம்... எப்படியெல்லாம் நாம கவலைப்பட வேண்டியிருக்கு!?

    பதிலளிநீக்கு