புதன், 14 நவம்பர், 2012

உலகைக் கலக்கும் தென்கொரிய பாப் பாடல் "Gangnam Style"-Dont miss it!





ஜூலை 15, 2012 அன்று வெளியான ஒரு ஒரு தென்கொரிய பாப் பாடல் இன்று உலகையே ஆட்சி செய்கிறது. இப்பாடலின் வீடியோ காட்சி யூ டியூப்- ல் இன்றைய நாள்வரை 722  மில்லியன் தடவைக்கு மேல் கண்டு ரசிக்கப்பட்டுள்ளது. யூ டியூப்- ல் அதிக தடவை கண்டுகளிக்கப்பட்ட கொரிய வீடியோ காட்சி என்றும், மொத்த  வீடியோக்களில்   அதிகமாக பார்க்கப்பட்டதில் இரண்டாவது இடத்தையும் இந்த பாப் பாடல் வீடியோ  பெற்றுள்ளது. யூ டியூப்- ல் அதிக மக்களால் விரும்பப்பட்ட வீடியோ (likes) என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அக்டோபர் மாத இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உட்பட  30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது. 2012 –ஆம் ஆண்டிற்கான MTV Europe Music Awards  விழாவில் Best Video –வுக்கான விருதை வென்றுள்ளது. இவ்வாறு இந்த பாடல் படைத்த சாதனைகளை சொல்லிகொண்டே போனால் இன்னும் பத்து பக்கம் எழுதலாம். 


தென்கொரியாவின் பாப் பாடகர் சை(PSY, TMZ சானலில் அப்படித்தான் அவர் பெயரை உச்சரிக்கிறார்கள்) என்பவர் பாடிய "Gangnam Style"  என்னும் பாடல்தான் இவ்வளவு பெரிய வெற்றிகளை குவித்திருக்கிறது. சையின் sixth studio நிறுவனம் வெளியிட்ட PSY 6 (Six Rules), Part 1 என்ற ஆல்பத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பாடலை எழுதி, பாடி, இயக்கியவர் அனைத்தும் சை தான்.
இப்பாடலின் வீடியோ  காட்சியை பார்த்த பின்பு உங்களால் ஆடாமல் இருக்க முடியாது என்பதுதான் இப்பாடலின் தனித்துவம். அதிலும் குறிப்பாக குதிரை ஸ்டைலில் சை ஆடும் ஒரு ஸ்டெப் நம்மை ஏதோ போதை மருந்துக்கு அடிமைப்படுத்துவது போல் இருக்கிறது. சையை பார்க்கும்போதே நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கிறது. அவரின் ஆட்ட வேகம், உற்சாகம், ஸ்டைல் ஆகியவற்றை பார்க்கும்போதே நமக்கு மேலும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.  இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பது தடவைக்கும் மேல்  கேட்டுவிட்டேன். அப்படியும் சலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாட்டை பாடிகொண்டே (முதல் வரி மட்டும்தான்!) ஆடவும் தொடங்கிவிட்டேன். தற்செயலாக அந்த வீடியோவை பார்த்த என் ஏழு வயது மகனும், ஆறு  வயது மகளும்  இப்போது பாட்டை பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எம்மாத்திரம்?. கூகிள் சேர்மன், இங்கிலாந்து பிரதமர், ஐநா பொது செயலர் ஆகியோர்களும் இப்போது இந்த பாட்டுக்குத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்களாம். மடோனாவும், பிரிட்னியும் இப்போது சையுடன் ஆட வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். யூ டியூப்- ல் பாடலின் வீடியோ காட்சியை பார்க்கும்பொழுது அதனுடன் சேர்ந்த மற்ற வீடியோக்களையும் பார்க்க தவறாதீர்கள்.

இந்த பாடலை பார்த்தவுடன்  நமக்குள் ஒரு உற்சாகம் பொங்கிவருவது மட்டும் உறுதி. இப்பாடலை நீங்களும் கேட்டு பாருங்கள். உற்சாகமாக ஆடுங்கள். உங்களிடமிருந்து கவலைகள், டென்ஷன், சோம்பல் அனைத்தையும் விரட்ட அற்புதமான மருந்து இந்த பாடல். இசைக்கு மொழி என்பது  ஒரு தடைக்கல் அல்லவே!.
You tube –ல் வீடியோவை காண  www.youtube.com/watch?v=9bZkp7q19f0
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து: