ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. இது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை அளிக்கும் எனவும், ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் பெரும்பாலான தமிழர்கள் நம்புகிறார்கள். ஆனால் இத்தீர்மானத்தில் இலங்கைக்கு எவ்வித நெருக்கடி கிடையாது என்பதும் , ஈழத்தமிழர்களுக்கு எவ்விதமான நன்மையையும் கிடையாது என்பதும்தான் உண்மை.
தொடக்கத்திலேயே இத்தீர்மானம் அமெரிக்காவினால் ஐ. நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டபோது எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவெடுத்தவுடன் இத்தீர்மானத்தின் மீதான எனது சந்தேகம் மேலும் அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் லட்சகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையை ஆதரித்தன. இந்தியாதான் பின் நின்று போரை நடத்தியது என்ற தகவலும் உண்டு. 2009 ஆம் ஆண்டு தமிழர்களை அழிக்க உதவிய அமெரிக்காவும், இந்தியாவும், 2012 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவருவது ஏன்? என்ற சந்தேகம் பெருமளவில் இருந்து வந்தது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக (!?) அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இதுதான்.
1) பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
2) கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தி , அனைத்து இலங்கை மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதிபடுத்த வேண்டும்.
3) கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு
பரிந்துரைத்த பரிந்துரைகளில் இதுவரை என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன நடவடிக்கை எடுக்கப்பட
இருக்கிறது என்ற விவரங்களை இலங்கை அரசு ஐ.நா மனிதப்
பேரவையின் முன்பு வைக்க வேண்டும். போரில் சர்வதேச
விதிகள் மீறப்பட்ட புகார்கள் குறித்து கவனம் செலுத்த
வேண்டும்.
4) இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக இலங்கைக்கு ஐ. நா தொழில் நுட்ப உதவிகளை இலங்கைக்கு செய்ய வேண்டும். அதை இலங்கை அரசு எற்றுகொள்ள வேண்டும்
மேற்கண்ட தீர்மானத்தில் , இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி விசாரித்த கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழுவை நியமித்தது யார்? இக்குழு ஐ.நா மனித உரிமை பேரவையினால் நியமிக்கப் பட்டது அல்ல. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட குழுதான் அது. தெளிவாகச் சொல்லப்போனால் இலங்கை அரசு தான் செய்த போர் குற்றங்கள் பற்றி தானே தயாரித்த அறிக்கைதான் கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை. இன்னும் சொல்லப்ப் போனால் எந்தப் படுகொலையும் நடைபெறவில்லை என ராஜபக்ஷே தயாரித்த அறிக்கைதான் அது.
ஆனாலும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் ஒரு நல்ல விஷயம் இருந்தது. ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணைகளுக்கு இலங்கை அரசு கட்டாயமாக கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அந்த ஒரு நல்ல விஷயத்தையும் இந்தியா ஒரு திருத்தத்தை தீர்மானத்தில் கொண்டு வந்து நாசமாக்கிவிட்டது. அத்திருத்தத்தின்படி ஐ.நா மனித உரிமை பேரவை, இலங்கையின் மீது எவ்வித ஆலோசனைகளையும், தொழில் நுட்பங்களையும் திணிக்க முடியாது. இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் ஐ.நா மனித பேரவை எவ்வித ஆலோசனைகளையும் இலங்கைக்கு வழங்க முடியாது. அதாவது குற்றம் செய்தவருக்கு அவருடைய ஒப்புதல் இல்லாமல் தண்டனை வழங்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய இலங்கை அரசுக்கு இத்தீர்மானம் நீதிபதி அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.
மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்ற தீர்மான வரிகள் மூலம் அமெரிக்கா தனிதமிழ் ஈழம் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளது தெரிய வருகிறது. அதாவது ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தையை அமெரிக்கா தீர்மானத்தின் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தாது மட்டுமில்லாமல், இலங்கையர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இத்தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது அல்ல. முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவானதாகும்.
பிறகு ஏன் இலங்கை அரசு இத்தீர்மானத்தை கண்டு பயந்தது? உண்மையில் இலங்கை அரசின் ராஜ தந்திர நடிப்பு அது. ஐ.நா தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிரானது போல் அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளால் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கெதிரான உலக நாடுகளின் எதிர்ப்பு, இந்திய அரசுக்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பு ஆகியவற்றை சமாளிக்க அமெரிகா, இந்திய, இலங்கை அரசுகள் நடத்திய நாடகம்தான் இத்தீர்மானம். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ வலிக்கிற மாதிரி நடி என்று மூன்று அரசுகளும் நடத்திய நாடகம்தான் இத்தீர்மானம். பெரும்பாலான தமிழர்கள் இத்தீர்மான வெற்றி ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என நினைக்கின்றனர். இத்தீர்மான வெற்றியினால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கடுகளவும் உபயோகமில்லை. சொல்லப்போனால் தனிதமிழ் ஈழத்திற்கு ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக அமெரிக்க, இந்திய அரசுகள் உலகிற்கு அறிவித்ததுதான் இத்தீர்மானம்.
|
|
|
|
 |
|