இந்திய திட்ட கமிஷன் இந்தியாவில் வறுமையை குறைக்க பல திட்டங்களை ஐந்தாண்டு திட்டங்களில் அறிமுகப்படுத்துகிறது.
அதே போல் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் (Below poverty line) எண்ணிக்கையையும் கணக்கெடுத்து வெளியிடுகிறது. 2011-12 ஆம் ஆண்டிற்கான வறுமை தொடர்பான அறிக்கையினை இந்திய திட்ட கமிஷன் 19.03.2012 அன்று வெளியிட்டுள்ளது.
2010 – 2011 ஆம் ஆண்டில், கிராமப்புறத்தில் தினக்கூலி ரூ.26 க்கு கீழ் உள்ளவர்களும், நகர்புறத்தில் ரூ. 32 க்கு கீழ் உள்ளவர்களும்
வறுமையில் உள்ளவர்கள் (Below poverty line) என இந்திய திட்ட கமிஷன் வரையறுத்தது. அதாவது ஒரு நாள் வாழ்க்கை நடத்த கிராமப்புறத்தில் ரூ. 26 ம். நகர்புறத்தில் ரூ..32 ம் போதுமானது என்பது திட்ட கமிஷன் கருத்து. தற்போது 2011 – 2012 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், கிராமப்புறத்தில் தினக்கூலி ரூ.22.42 க்கு கீழ் உள்ளவர்களும், நகர்புறத்தில் ரூ. 28.35 க்கு கீழ் உள்ளவர்களும் வறுமையில் உள்ளவர்கள் என இந்திய திட்ட கமிஷன் வரையறுத்திருக்கிறது. இது 2010 – 2011 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட தொகையை விட சுமார் ரூ.3.50௦ குறைவு ஆகும். 2010-2011 ஆம் ஆண்டை விட தற்போது விலைவாசி கிட்டத்தட்ட 50௦% முதல் 100% வரை கூடியுள்ள நிலையில், ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கைக்கான பணத் தேவையினை திட்ட கமிஷன் குறைத்துள்ளது.. மேலும் இந்தியாவில் வறுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரூ.22.42 ஐ வைத்து ஒரு இந்தியன் ஒரு நாள் வாழ்க்கையை நடத்த முடியுமா? அது சாத்தியம் ஆகுமா? நடைமுறைக்கு ஒத்து வருமா? என்று கேட்டால் பிரதமர் மன்மோகன் சிங் கூட முடியாது என்றுதான் சொல்வார்.
பாவம்! திட்ட கமிஷன். எத்தனையோ திட்டங்களை போட்டாலும் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அதன் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்தால் அது இந்தியாவில் நடக்கிற விஷயமா?. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடை நிலை அரசு ஊழியர்கள் வழியாக பாய்ந்து மக்களை அடையும் போது துரும்பாக இளைத்திருக்கும். இந்தியாவில் வறுமையை ஒழிப்போம் என்று பல அரசியல் கட்சிகள் கோஷம் போட்டாலும் சுதந்திரம் அடைந்து 64 வருடங்களாகியும் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் கூடியது. இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களினாலும் இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. எனவேதான் இந்திய திட்ட கமிஷன் வறுமையை ஒழிக்க இந்த அதிரடி திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.(!?) அதுதான் காலுக்கேத்த மாதிரி செருப்பை வெட்டுவது என்ற திட்டத்தை விட்டு செருப்புக்கேத்த மாதிரி காலை வெட்டுவது என்ற திட்டத்தை பின்பற்றுவது ஆகும். திட்ட கமிஷன் பேசாமல் வறுமை கோட்டுக்கான வரையறையை ரூ.௦0 என்று அறிவித்துவிட்டால், இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுகொள்ள வசதியாக இருக்கும்.
ஆனாலும் திட்ட கமிஷன் ஒரு விளக்கம் தருகிறது. 2004-2005 ஆம் ஆண்டின் பண வீக்கத்துடன் தற்போதைய பண வீக்கத்தை ஒப்பிட்டுதான் வறுமை கோட்டுக்கான வரையறை செய்யப்பட்டது என்று அது கூறுகிறது. உலகத்தில் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த பண வீக்க அளவீட்டினை மட்டும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது போலும. விலைவாசி எவ்வளவு கூடினாலும் பணவீக்கம் மட்டும் குறைந்து கொண்டே போகும். நம்மை போன்ற நடுத்தர மக்களுக்கும், பண வீக்க அளவீட்டிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? என்பது பட்டிமன்றம் வைத்து தீர்வு கான வேண்டிய தலைப்பு ஆகும்.
இந்திய திட்ட கமிஷன் அறிவித்துள்ள வறுமை கோட்டுக்கான வரையறை ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் வறுமையில் உள்ள மக்களை மேலும் பாதிக்கும். அரசின் பல நலத்திட்ட உதவிகள், உண்மையில் வறுமையில் உள்ள ஏராளமான மக்களுக்கு இனி கிடைப்பது கேள்விக்குறியாகும். உதாரணமாக ரேஷன் பொருட்கள் விநியோகம், அரசின் பல்வேறு பென்ஷன் மற்றும் நல திட்டங்கள் ஆகியவற்றுக்கு தகுதியான மக்கள், வறுமை கோட்டுக்கான வரையறையின் படியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆகவே அரசின் இத்திட்டங்களால் பயன்பெரும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் இனி குறைக்கப்படும்.
இறுதியாக ஒரு நம்பிக்கை செய்தி. இந்திய திட்ட கமிஷன் அறிவித்த மேற்கூறிய அளவீடு பல தரப்புகளிலும் எதிர்ப்புகளுக்கு உள்ளானதால் மத்திய அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போதைய வறுமை கோட்டு அளவீட்டு திட்டத்திற்கு பதிலாக வேறொரு புதிய திட்டம், பொருளாதார மற்றும் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பிற்கு பிறகு அமல் படுத்தப்படும் எனவும், அதுவரை பழைய அளவீட்டு திட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் வறுமை கோட்டுக்கான வரையறையை பாராளுமன்றம், அரசாங்கம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இணைந்து வரையறுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். திட்ட கமிஷன் அறிவிக்க இருக்கும் புதிய அளவீட்டு திட்டமாவது வெறும் ஏட்டு சுரைக்காயாக இருக்காமல் நடைமுறை சாத்தியம் உள்ளதாக இருக்கட்டும்.
Tweet | |||||
பேசாமல் ஒரு நாளைக்கு பத்து பைசாவை விட குறைவாக சம்பாதிப்பவர்களே வறுமை கோட்டுக்கு கீழ் வருவார்கள் என்று அறிவித்துவிட்டால், ஒரே நாளில் இந்தியாவில் வறுமை அகன்றுவிடும்.. மன்மோகன், மாண்டேக் சிங், சிதம்பரம் போன்ற ஏட்டு சுரைக்காய்கள் போடும் திட்டங்கள் இப்படித்தான் உள்ளது!
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குதங்களின் கருத்துக்கும், விமர்சனத்திற்கும் நன்றி!