ஞாயிறு, 25 மார்ச், 2012

ஐ.நா தீர்மானம்: தமிழர்களை ஏமாற்றிய இந்திய, அமெரிக்க அரசுகள்!

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. இது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை அளிக்கும் எனவும், ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் பெரும்பாலான தமிழர்கள் நம்புகிறார்கள். ஆனால் இத்தீர்மானத்தில் இலங்கைக்கு எவ்வித நெருக்கடி கிடையாது என்பதும் , ஈழத்தமிழர்களுக்கு  எவ்விதமான நன்மையையும் கிடையாது என்பதும்தான் உண்மை.

தொடக்கத்திலேயே இத்தீர்மானம் அமெரிக்காவினால் ஐ. நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டபோது எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவெடுத்தவுடன் இத்தீர்மானத்தின் மீதான எனது சந்தேகம் மேலும் அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் லட்சகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையை ஆதரித்தன. இந்தியாதான் பின் நின்று போரை நடத்தியது என்ற தகவலும் உண்டு. 2009 ஆம் ஆண்டு தமிழர்களை அழிக்க உதவிய அமெரிக்காவும், இந்தியாவும்,  2012 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவருவது ஏன்? என்ற சந்தேகம் பெருமளவில் இருந்து வந்தது.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக (!?) அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இதுதான்.

1)      பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை எடுக்கும் நடவடிக்கைகள்  சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

2)      கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை  நடைமுறைபடுத்தி , அனைத்து இலங்கை மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை  உறுதிபடுத்த வேண்டும்.

3) கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு   
       பரிந்துரைத்த பரிந்துரைகளில் இதுவரை என்ன நடவடிக்கை     
       எடுக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன நடவடிக்கை எடுக்கப்பட        
      இருக்கிறது என்ற விவரங்களை இலங்கை அரசு ஐ.நா மனிதப்
     பேரவையின் முன்பு வைக்க வேண்டும். போரில் சர்வதேச
     விதிகள் மீறப்பட்ட புகார்கள் குறித்து  கவனம் செலுத்த
      வேண்டும்.

4)      இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக இலங்கைக்கு ஐ. நா தொழில் நுட்ப உதவிகளை இலங்கைக்கு செய்ய வேண்டும். அதை இலங்கை அரசு எற்றுகொள்ள வேண்டும்


மேற்கண்ட தீர்மானத்தில் , இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி விசாரித்த  கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழுவை நியமித்தது யார்? இக்குழு ஐ.நா மனித உரிமை பேரவையினால் நியமிக்கப் பட்டது அல்ல. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட குழுதான் அது. தெளிவாகச் சொல்லப்போனால் இலங்கை அரசு தான் செய்த போர் குற்றங்கள் பற்றி தானே தயாரித்த அறிக்கைதான் கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை. இன்னும் சொல்லப்ப் போனால் எந்தப் படுகொலையும் நடைபெறவில்லை என ராஜபக்ஷே தயாரித்த அறிக்கைதான் அது.

ஆனாலும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் ஒரு நல்ல விஷயம் இருந்தது. ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணைகளுக்கு இலங்கை அரசு கட்டாயமாக கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அந்த ஒரு நல்ல விஷயத்தையும் இந்தியா ஒரு திருத்தத்தை தீர்மானத்தில் கொண்டு வந்து நாசமாக்கிவிட்டது. அத்திருத்தத்தின்படி ஐ.நா மனித உரிமை பேரவை, இலங்கையின் மீது எவ்வித ஆலோசனைகளையும், தொழில் நுட்பங்களையும் திணிக்க முடியாது. இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் ஐ.நா மனித பேரவை எவ்வித ஆலோசனைகளையும் இலங்கைக்கு வழங்க முடியாது. அதாவது குற்றம் செய்தவருக்கு அவருடைய ஒப்புதல் இல்லாமல் தண்டனை வழங்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய இலங்கை அரசுக்கு இத்தீர்மானம் நீதிபதி அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்ற தீர்மான வரிகள் மூலம் அமெரிக்கா தனிதமிழ் ஈழம் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளது தெரிய வருகிறது.  அதாவது ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தையை அமெரிக்கா தீர்மானத்தின் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தாது மட்டுமில்லாமல், இலங்கையர் என்ற வார்த்தையை  மட்டும் பயன்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இத்தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது அல்ல. முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவானதாகும்.

பிறகு ஏன் இலங்கை அரசு இத்தீர்மானத்தை கண்டு பயந்தது? உண்மையில் இலங்கை அரசின் ராஜ தந்திர நடிப்பு அது. ஐ.நா தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிரானது போல் அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளால் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கெதிரான உலக நாடுகளின் எதிர்ப்பு, இந்திய அரசுக்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பு ஆகியவற்றை சமாளிக்க அமெரிகா, இந்திய, இலங்கை அரசுகள் நடத்திய நாடகம்தான் இத்தீர்மானம்.  நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ வலிக்கிற மாதிரி நடி என்று மூன்று அரசுகளும் நடத்திய நாடகம்தான் இத்தீர்மானம்.  பெரும்பாலான தமிழர்கள் இத்தீர்மான வெற்றி ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என நினைக்கின்றனர். இத்தீர்மான வெற்றியினால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கடுகளவும் உபயோகமில்லை. சொல்லப்போனால் தனிதமிழ் ஈழத்திற்கு ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக அமெரிக்க, இந்திய அரசுகள் உலகிற்கு அறிவித்ததுதான் இத்தீர்மானம்.  
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

17 கருத்துகள்:

  1. ஸலாம் சகோ.விஜய குமார்...!
    சரியான வாதங்களுடன் கூடிய நிதர்சனமான ஒரு சிறந்த பதிவு..! நன்றி சகோ..!

    //பெரும்பாலான தமிழர்கள் நம்புகிறார்கள்.//---சரியா ஆரம்பித்து இருக்கிறீர்கள்..! இதுதான் உண்மை....'நம்பாதவர்களும் உள்ளனர் நம்மைபோன்று'..!

    இரண்டு நாளுக்கு முந்தைய மனிதாபிமானி பதிவும், தங்களின் இதுவும் பலரின் தூக்கத்தை கலைக்கட்டும்..! நிகழ்வுகளை வரலாறோடு ஒப்புநோக்கி, அரசியல் நாடக கதாபாத்திரங்களின் உள்நோக்கத்தை புரிந்து இனியாவது சிந்தை விழிக்கட்டும்..!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மீது அமைதி நிலவுவதாக சகோதரர் விஜயகுமார்,

    உங்கள் கட்டுரையின் மைய கருத்தை பிரதிபளித்தே மனிதாபிமானி தளத்தில் வெளியான எதிர் கட்டுரை இருந்தது. ஆனால் சிலர் உண்மை நிலையை புரிந்துக்கொள்ள மறுத்தார்கள், எதிர்த்தார்கள்.

    அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் எவ்வளவு விஷமத்தனம் மிகுந்தது என்பதை ஐ.நா தீர்மான அறிக்கையை படிக்கும் எல்லோரும் எளிதாக புரிந்துகொள்ளலாம். உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உண்மை நிலையை விளங்கிக்கொண்டால் எதிர்க்காலத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம்.

    இந்த முறையாவது அமெரிக்கா சரியான முறையில் நடந்துக்கொள்ளும் என்று எதிர்ப்பார்த்த மக்களுக்கு வழக்கமான தன் பாணியையே அமெரிக்கா தந்திருக்கின்றது. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் 36 நாடுகள் ஆதரவு தெரிவிக்க, தான் ஒரு ஆள் மட்டுமே எதிர்த்த நாடாயிற்றே அமெரிக்கா..

    வேறு என்ன சொல்வது? உங்களின் இந்த கட்டுரை உணர்ச்சிவசத்தால் உண்மையை பரிசீலிக்க மறுக்கும் சிலருக்கு உதவும் என்பதில் ஐயமில்லை..

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  3. சகோதரர்,

    ஒரு தகவல் இந்த கட்டுரையில் தவறாக இருப்பதாக உணர்கின்றேன். ஆனால் இந்த தவறு உங்கள் கட்டுரையின் மையக்கருத்தை மாற்ற போவதில்லை.

    //இன்னும் சொல்லப்ப் போனால் எந்தப் படுகொலையும் நடைபெறவில்லை என ராஜபக்ஷே தயாரித்த அறிக்கைதான் அது.//

    இது தவறு சகோ. அப்பாவி மக்கள் கொள்ளப்படவில்லை என்று ராஜபக்சே கூறினார். ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட குழு, அப்பாவி மக்கள் விபத்துரீதியாக ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்று கூறியது. அது போல, மனித உரிமை மீறல்களில் சிங்கள ராணுவத்தினர் ஈடுபட்ட சில ஆதாரங்களும் இருப்பதாக கூறியது. இருப்பினும் இவை எல்லாம் கண்துடைப்பாக இருப்பதாக சர்வதேச மனித உரிமை கழகங்கள் குற்றம் சுமத்தின.

    பார்க்க இங்கே http://en.wikipedia.org/wiki/Lessons_Learnt_and_Reconciliation_Commission

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அமெரிக்காவின் இரட்டை நிலை.

    80களில் விதித்த இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!



    வாஷிங்டன்: 1980களில் விடுதலைப் புலிகளுடன் இலங்கை ராணுவ் மோதலைத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை தற்போது திடீரென தளர்த்தியுள்ளது அமெரிக்க அரசு.

    ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு இந்த ஆயுத விற்பனை கட்டுப்பாடுகள் தளர்த்தல் என்பது அமெரிக்காவின் இரட்டை நிலையை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கியுள்ளது.

    ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் நேற்றுதான் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாக தளர்த்தியுள்ளது.

    இருப்பினும் இது கொள்வனவு செய்யும் ஆயுதங்களுக்கேற்றப்படி மாறும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    வியாழக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய உத்தரவுப்படி, இலகுரக விமானங்கள், கண்காணிப்பு கேமராக்கள், அதுதொடர்பான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இலங்கை வாங்கிக் கொள்ள முடியுமாம்.

    குறிப்பாக வான் மற்றும் கடல் மார்க்கமான கண்காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து இலங்கை பெற முடியும்.

    கடந்த 80களில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே போர் வெடித்ததைத் தொடர்ந்து ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது.

    தற்போதுதான் அதில் முதல் முறையாக தளர்த்தலை அது மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    http://tamil.oneindia.in/news/2012/03/23/world-us-eases-restrictions-on-defense-sales-sl-aid0091.html

    பதிலளிநீக்கு
  5. கலக்கிட்டீங்க விஜயகுமார் சார். தங்களது பதிவு தமிழ்மணத்தில் மகுடத்தில் ஏறியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடர்ந்து வெற்றிகள் குவியட்டும். ஆழமான விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறீர்கள். தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை டேனியல் சார்,
      தங்களின் ஊக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
  6. உங்கள் பதிவும்,பின்னூட்டக் கருத்துக்களும் தவறான பரிமாணத்தை உணர்த்துகிறது.எந்த வரைவுகளும் சொற்பிரயோக மாற்றங்கள் பலமுறை உருவாகியே தீர்மானம்,உடன்படிக்கை என்ற அளவில் வெளிவரும்.இதற்கு சரியான உதாரணமாக இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்டு அணுசக்தி உடன்படிக்கையை கூறலாம்.விமர்சனங்கள் செய்வதும்,பதிவுகளில் கருத்துக்கள் பரிமாறுவதும் எளிது.ஆனால் ராஜாங்க அணுகுமுறைகளும்,லாபிகளை உருவாக்குவதில் செயல்படுவதும்,வலிமையான அரசு நிலைகளை அணுகுவதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல.அதனை புலம்பெயர் தமிழர்கள் ஓரளவு சாதித்திருக்கிறார்கள்.

    போர்க் குற்றங்களுக்கான நேரடி குற்றம் என்ற நிலையிலும்,ஐ.நா.மூவர் குழு அறிக்கையினை செயல்படுத்தும் படி அமெரிக்க தீர்மானம் இல்லையென்ற போதிலும் உலக அரங்கில் இலங்கை அரசின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தவும் கூடவே இலங்கை அரசே LLRC யில் வெளியிட்டவைகளை இலங்கை அரசு அமுல் படுத்துகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க அமெரிக்க தீர்மானம் வரவேற்க தகுந்த ஒன்று.இனி இலங்கை அரசு கண்ணாமூச்சி விளையாட்டு ஆடுவது தடுக்கப்படும்.

    இறையாண்மை அரசு என்ற நிலையில் தவறான காரணங்களுக்காக இலங்கை லாபிகள் செய்வதில் ஈடுபடும் போது தமிழர்கள் தங்கள் நியாயமான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே லாபி செய்ய வேண்டிய நிலை.

    அமெரிக்காவின் தீர்மானம் இல்லாத முந்தைய காலத்தின் தமிழர்கள் நிலைப்பாடு என்ன? சாத்வீகமான போராட்டங்கள் மட்டுமே.தமிழகம் தாண்டி இலங்கை பிரச்சினை வெளியே வராத ஊடக நிலை.இவற்றையெல்லாம் அமெரிக்காவின் தீர்மானம் மாற்றி ஆடுகளத்தை மாற்றி அமைத்திருக்கிறது.

    இந்தியாவின் முந்தைய இலங்கை நிலைப்பாட்டிலிருந்து மெல்ல நகரத்தொடங்கியிருக்கிறது.இனி மீதியை இலங்கை ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    இலங்கை அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதை மட்டும் இப்போதைக்கு பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா,
      தங்களின் நம்பிக்கை வெற்றி பெற வேண்டும் என்பதே ஏன் ஆசை. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் இரண்டாம் தர குடி மக்களாகவே நடத்தப்படுகிறார்கள்.

      நீக்கு
  7. உங்கள் கடைசி பாரா இன்னும் தவறான கருத்துக்களை உருவாக்குகிறது.நீங்கள் இலங்கையில் அரசு சார்ந்து செயல்படுபவர்களின் அறிக்கைகளை சரியாக கவனிப்பதில்லை என நினைக்கிறேன்.மெர்வின் டிசில்வா இலங்கை மனித உரிமை சார்பாக இலங்கையின் எதிர்காலத்துக்கு எது நன்மை தரும் என்கின்ற நோக்கில் கருத்துக்கள் சொன்னால் இலங்கைக்குள் நுழைந்தால் கை,காலை உடைப்பேன் என்கிறார்.இன்னுமொரு குறுந்தாடிக்காரர் அமெரிக்க பொருட்களையே தடை செய்வோம் என்கிறார்.அரசு சார்பு அறிக்கையோ எங்கள் இறையாண்மையில் குறுக்கிட யாருக்கும் உரிமை கிடையாதென்றும் எங்களுக்கான கால அளவீட்டில் மட்டுமே LLRC செயலபடுத்தப் படும் என்கிறது.போர்க்குற்றம் செய்த ராணுவ அதிகாரிகளின் குரல்களையே காணோம்.இந்தியா அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தந்த அடுத்த நாளே இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள்,பின்னூட்டங்கள் இலங்கையிலிருந்து உருவாகின்றன.

    Let's Welcome Srilanka's Anti American,Indian Stand.

    பதிலளிநீக்கு
  8. சலாம்,

    எங்கள் பெயர்களில் மாற்றம் செய்து இந்த பதிவுக்கு மைனஸ் வோட் போடப்பட்டுள்ளது. இதனை உங்கள் கவனத்திற்கு வைக்கின்றேன்..

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ அவர்களுக்கு,

      உங்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் மட்டுமே பெரிதாக எண்ணுகிறேன். நன்றி சகோதரரே!

      நீக்கு
    2. ஐயா விஜயகுமார் அவர்களே,

      தங்களுடைய கட்டுரை மிகவும் அபாரம். ஆனால், உண்மை அதில் மறைந்துவிட்டதே. புலிகள் மக்களைக் கொலை செய்தார்கள். ஒரு இராணுவப் போரில் மக்கள் அழிவது தவிர்க்க முடியாது.

      அமெரிக்கா கொடிய போர் குற்றங்களுக்குள் மறைந்து இருக்கின்றது. இராக், ஆப்கானிஸ்தான், வியட்னாம், இப்படி பல நாடுகளில் போர் குற்றங்கள்.

      தங்களுடைய இந்தியாவில் குற்றங்கள் நடக்கவில்லையா? தயவு செய்து கீழ் கண்ட இணயதளத்தைப் பாருங்கள். அசாமில் ஊதியம் கேட்ட ஆதிவாசிகளை எப்படி சாதாரண மக்கள் கொலை செய்தார்கள்? காவல் என்ன செய்தார்கள்?

      புலிகள் செய்த கொலைகள் எத்தனை? தங்களுக்குத் தெரியுமா?
      இலங்கை ஒரு நாடு ஒரு சமுதாயம். இதில் பிரிவினை தேவையில்லை. 15 லட்சம் மக்களுக்கு ஒரு நாடு தேவையா?
      உண்மை என்ன தெரியுமா? தமிழ் நாடு பிரிவினை கேட்கவேண்டும். ஏன்? 8 கோடி மக்களுக்கு ஒரு நாடு தேவை. நெடுமாறனைப் போன்றவர்கள், தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து பிரிப்பதற்கு போரிட வேண்டும்.

      தமிழகத்தை ஒரு தமிழனால் ஆழ முடியுமா? யாரைய்யா தமிழக அரசியல்வாதிகள்? வேற்று மாநில மக்கள்தான் தமிழகத்தை ஆழுகின்றார்கள். ஒரு தமிழனை தமிழகத்தை ஆழவையுங்கள். உங்களால் முடியுமா? பார்க்கலாம்!

      தயவு செய்து இலங்கை தமிழரை அழிக்க வேண்டாம். எரியும் நெருப்பில் தமிழ் நாட்டு மடைத்தமிழர்கள் எண்ணையை ஊற்றுகின்றார்கள்.

      தயவு செய்து தமிழக மக்கள் அடக்கி வாசிக்க வேண்டும்.

      http://www.youtube.com/watch?v=SilFqTvtzHc&oref=http%3A%2F%2Fwww.youtube.com%2Fresults%3Fsearch_query%3Dasam%2Bterror%2Btea%2Bworkers%2Bin%26oq%3Dasam%2Bterror%2Btea%2Bworkers%2Bin%26aq%3Df%26aqi%3D%26aql%3D%26gs_l%3Dyoutube.3...24732l32426l0l32864l15l15l0l0l0l0l251l2388l0j3j8l11l0.&has_verified=1

      நன்றி

      சாண்டில்யன்

      நீக்கு
    3. அய்யா,
      பெரும்பான்மையினராக தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான வேற்று மாநிலத்தவர் முதல்வராக முடிகிறது. இந்தியாவின் பிரதமரும் சிறுபான்மை இனத்தவரான சீக்கியர்தான். இலங்கையில் ஒரு தமிழர் அதிபராக முடியுமா?.

      நீக்கு
    4. வணக்கம் ஐயா,

      தங்களுடைய குறிப்புக்கு நன்றி. தாங்கள் சொல்வது சரி. ஆனால் எதற்காக மன்மோஹன் சிங்கை பிரதம மந்திரியாக வைத்தார்கள். இன்று இந்தியாவை ஆளுவது ஒரு இந்தியனா? இல்லை. சோனியா காந்தி.

      சுப்ரமணிய ஸ்வாமி இவர்களுடைய களவாடித்தனத்தை வெளியிட்டார். தயவு செய்து இணயதளத்தை பார்வையிடவும். ராஹுல் காந்தி ஒரு இந்திக குடிமகன் அல்ல என்று ஸ்வாமி வியாபிக்கின்றார். நான் கூறவில்லை. ஸ்வாமி கூறுகின்றார்.

      http://www.youtube.com/watch?v=n6HlUcr_YDA
      http://www.youtube.com/watch?v=hj07aTnq5gs&feature=relmfu
      http://www.youtube.com/watch?v=gMQ6ba8TXH8&feature=relmfu

      ஐயா,
      இந்தியக்கண்டத்தின் வம்சாவளியினரான மக்களை ஆதிவாசிக்ளென்று முத்திரை குத்திவிட்டு, வந்தவன் போனவன் எல்லாம் அனுபவிக்கின்றான்.

      இந்திரா காந்தி அம்மையாரைக் கொண்டது ஒரு சிக்கியன். ஆனால் அவர்களை மன்னித்து, ஒரு சிக்கிரை பிரதமராக வைத்திருக்கின்றார்கள் என்றால், அதன் பின்னால் எத்தனையோ குளறுபடிகள். ஆனால், ரஜிவ் காந்தியை கொண்ட தமிழ் மக்களை இந்தியர்கள் மன்னிக்கவில்லை. ஏன்? கடந்த போரில் இந்தியாவும் கைகோர்த்து நின்றுதான், தமிழர்களை கொன்று குவித்தார்கள். அது மாத்திரமல்ல, புலிகள்தான் முள்ளிவாய்க்கால் மக்களை மனிதகேடயமாக வைத்து, முடியாமல் போகும் தறுவாயில் புலிகளே, தமிழ் மக்களைக் கொன்றார்கள்.

      தமிழ் மக்கள் சீரும் சிறப்போடும் வாழ்ந்தார்கள். என்று, செல்வநாயகம் தமிழ் அரசுக்கட்சியென்று தொடங்கினாரோ, அன்று தொடங்கியது, தமிழருக்குப் பிரச்சனை.

      தமிழர் மந்திரிகளாக பதவி வகித்திருந்தார்கள். பிரச்சனை இல்லையென்றால், நாளை பிரதம மந்திரியாகவே ஒரு தமிழரை நியமிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆனால், பதவிகளைக் கொடுத்தும் எமது அரசியல்வாதிகள் அப்பதவிகளை ஏற்கவில்லையே. அது யார் குற்றம்? சுதந்திரம் கிடைத்த நாள் முதல் எமக்குப் பிரச்சனை.

      இன்று தமிழகத்தில் ஏத்தனை பிரச்சனை. அரசியலில் குதிப்பதற்கு முன் சினிமாவில் குதிப்பார்கள். பின்பு பணம் சேர்ந்தவுடன், அரசியல்வாதி. தமிழகத்தில் பேசுவது, தமிழா! அன்பரே? இல்லை, தங்க்லிஷ். எதற்கு ஒளிவு மறைவு. தமிழகத்தை சுத்த தமிழன் அரசாளவில்லை. தமிழக மக்களை கன்னடக்காரன், கேரளாக்காரன், டெல்லிக்காரன், மும்பாய்காரன், பிடித்து, அடித்துத் துவைக்கின்றான். கன்னடக்காரன் தண்ணி இல்லை எங்கின்றான். கேரளாக்காரன் தண்ணி இல்லையென்கின்றான்.

      தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் எத்தனையோ. அதை விட்டு, எம்மக்களை கொல்வதற்கு எதற்காக வழிவகுக்கின்றீர்கள்.
      ஆங்கிலத்தில் கூறுவார்கள்: மைண்ட் யுயர் ஓன் பிசினஸ் என்று.
      தமிழக அரசியல்வாதிகளும் அதைதான் கடைப்பிடிக்கவேண்டும்.
      எமக்கு தமிழீழம் என்று ஒரு நாடு தேவை இல்லை. நாம் எல்லோரும் இலங்கையர்கள்.

      ஆனால், 800 லட்சம் தமிழர்கள் வாழும் இந்தியாவில் ஒரு தமிழ் நாடு தேவை. அதற்கு சண்டையைப் பிடியுங்கள்.

      தமிழகம் (தமிழ் நாடு) ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யும் நாட்களை நாம் இலங்கையர்கள், எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

      நன்றி

      சாண்டில்யன்


      • பின் குறிப்பு: இராணுவ தலைமைக்கட்டளை அதிகாரிக்கும் சோனியாவின் அரசுக்கும் குளறுபடிகள் தொடங்கியதாக வாசித்தறிந்தோம். இந்தியாவிற்கு இனிமேல்தான் பிரச்சனை. இந்தியாவைச் சுற்றி அவர்கள் எதிரிகள். அசாம், அருணாச்சலப்பிரதேசம், முதல் பிரியும் வாய்ப்புக்கள் இருக்கின்றது.

      நீக்கு
  9. சாண்டில்யன் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.
    உங்களுக்கு ஒரு தனி தமிழ் நாடு தேவைபட்டால் 8 மில்லியனை தமிழ் சனத்தொகையை கொண்ட இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த நீங்கள் ஏன் தனி தமிழ் நாடு கேட்க கூடாது? தமிழககத்தில் TV நிகழ்ச்சிகளில் தமிழ் கதைக்கபடும் விதம் தமிழுக்கு உள்ள பரிதாபமான நிலை தமிழ் அன்னை ஜெயலலிதா தமிழ்காவலன் கருணாநிதியின் பாதுகாப்பில் இந்திய தமிழ்நாட்டில் தமிழ் நிலமை பார்த்து இலங்கையர்களாகிய நாம் கவலைப்பட்டுள்ளோம். தனி தமிழ் நாடு கேட்க வேண்டும் என்று உங்களை கட்டாயபடுத்தவில்லை. உங்களுக்கு தனி தமிழ் நாடு விருப்பமாயின் இந்தியாவில் கேளுங்கள் அல்லது விடுங்கள்.அது உங்கள் விருப்பம். இலங்கையர் ஆகிய எங்களது உயிரை வாங்காதீர்கள்.

    அமெரிக்கா தனிதமிழ் ஈழம் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளது தெரிய வருகிறது.-vijayakumar

    வெளிநாடுகளில் வசதியாக வாழும் புலி ஆதரவாளர்கள் இந்தியாவில் உள்ள தமிழ் பேசும் சிலர் சேர்ந்து தனிதமிழ் ஈழம் கோரிக்கை வைத்தால் அதை உலகம் ஏற்று கொள்ள வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  10. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பலர் அவர்களின் வாழ்வாதார தேவைகள் பற்றி பேசவோ சிந்திக்கவோ இல்லை என்பது வருத்தமான விஷயம். ராஜபக்ஷேவை தண்டிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் எந்த வகையில் உதவ முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

    ஏனெனில் ராஜபக்ஷேவை தண்டிப்பதால் மட்டும் ஈழத்தமிழர்களின் வாழ்வு பிரகாசமடைந்திடாது என்பதை அனைவருக்கும் சிந்தியுங்கள்

    பதிலளிநீக்கு
  11. ஐ.நா தீர்மானம்: தமிழர்களை ஏமாற்றிய இந்திய, அமெரிக்க அரசுகள்! கட்டுரை பற்றி கருத்துக்களும், விமர்சனங்களும் தெரிவித்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு