வியாழன், 8 மார்ச், 2012

ராகுல் காந்தி ஹீரோவா அல்லது ஜீரோவா?

         சமீபத்தில்  நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தேர்தல் முடிவுகள் பல உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தி இருக்கலாம். தேர்தலுக்கு முன் இருந்த மிக பெரிய கேள்விகளுள் ஒன்று இந்த தேர்தலில் ராகுல் காந்தியின் தாக்கம் என்ன? என்பதாகும். அந்த கேள்விக்கும் இந்த தேர்தலில் பதில் கிடைத்திருக்கிறது.

           ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் மக்கள் அவை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி மற்றும் ரா பேலி தொகுதிகளில் ( மத்திய உத்திரபிரதேசம்) 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருகின்றன. இந்த 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் வலுவாக உள்ள பகுதிகளான பிரதப்கர் மற்றும் சுல்தான்பூர் பகுதிகளில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் மக்கள் அவை தேர்தலில் வெற்றி பெற்ற அமேதி, ராபெளி, ப்ரதப்கர், சுல்தான்பூர் ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 20௦ சட்டமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோரது உக்கிரமான பிரச்சாரம் இந்த தேர்தலில் எந்த விதமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை விட எதிர்மறை விளைவை ஏற்படுத்தி உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

           சோனியா காந்தி தோல்விக்கு பல காரணங்களை சொல்லி இருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் அவர் மறந்து விட்டார். அவர் எப்போதும் மக்களை முட்டாளாக நினைத்ததுதான் காங்கிரசின் தோல்விக்கு காரணம். வெளிநாட்டில் உள்ள இந்திய கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்காதது, லோக் பால் மசோதாவை  கேலி கூத்தாக்கியது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உறுதியான நடவடிக்கை எடுக்காதது, செயலற்ற  மத்திய அரசாங்கம் ஆகியவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என காங்கிரஸ் நினைத்தது.
                ராகுல் காந்தியை முன்னிருத்தினால் போதும் என காங்கிரஸ் நினைக்கிறது. ராகுல் காந்தியோ குடிசைக்குள் சென்று கஞ்சி குடித்தால் போதும் என நினைக்கிறார். மோட்டார் சைக்கிள் சுற்று பயணம் போகிறார். ஆனால் இந்த அரசியல் நாடகங்களை ஏற்கனவே பார்த்து  சலித்து போன மக்களுக்கு கோபம் கூட வரவில்லை. சிரிப்புதான் வந்தது. ராஜீவ் காந்தியின் மகன் என்ற தகுதியை தவிர வேறு தகுதிகள் இருப்பதை ராகுல் காந்தி இன்னும் நிரூபிக்க வில்லை. வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்ததை இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியாகதான் நாம் கருத வேண்டும்.
                இறுதியாக ராகுல் காந்திக்கு ஒரு வேண்டுகோள். அய்யா உங்கள் வேகத்தை செயலில் காட்டுங்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? குறைந்த பட்சம் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பெயர்களை கூட வெளியிட ஏன் சம்மதிக்கவில்லை? சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பழமொழி. ராகுல் சார்! மக்களுக்கு உங்கள் மீதும், உங்கள் கட்சி மீதும் சந்தேகம் உள்ளது. 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து:

  1. அருமையான கட்டுரை சார். வலையுலகிற்கு தங்களை வரவேற்கிறோம். தொடர்ந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு