திங்கள், 1 அக்டோபர், 2012

சச்சின்! ப்ளீஸ் ஓய்வு பெற்றுவிடுங்கள்- ஒரு ரசிகனின் கடிதம்.



அன்புள்ள சச்சின் அவர்களுக்கு,
உங்களின் தீவிர ரசிகன் எழுதிக்கொள்வது. நீங்கள் விளையாட வந்த காலத்தில் இருந்து இன்று வரை உங்கள் ஆட்டத்தை அணு அணுவாக ரசித்தவன் என்ற உரிமையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.. அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் உங்களது குணங்களினாலும்  கவரப்பட்டவன். மைதானத்தில் நீங்கள் நடந்து கொள்ளும் முறை இனி வரக்கூடிய அனைத்து இளம் விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பாடமாகவே இருக்கும். உங்களது தேசப்பற்று கண்டு நான் பல நேரங்களில் வியந்திருக்கிறேன். ஒரு மேட்ச் தோற்றால் கூட ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று அழுவீர்களாமே?. அவ்வளவு ஈடுபாட்டுடன் கிரிக்கெட்  விளையாடுபவர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். இன்று நீங்கள் அடைந்திருக்கும் உயரம், சாதனைகள் எவராலும் எளிதில் எட்ட முடியாது. ஆனால் இப்பொழுது இந்த கடிதத்தினை மிகவும் வருத்தமுடன்  நான் எழுதுகிறேன்.

சமீப காலங்களாக பல பத்திரிக்கைகளும், விளையாட்டு விமர்சகர்களும் தங்களது ஓய்வைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். எனக்கும் அவர்கள் மீது கடுமையான கோபம வந்தது. ஆனால் தனிமையில் சிந்தித்து பார்த்த பொது அவர்களின் வாதத்தில் இருந்த நியாயத்தை உணர முடிந்தது.

தங்களுக்கு வயதாகி விட்டதால் விளையாட்டு திறன்  குறைந்து விட்டது என்பது அவர்களின் ஒரு குற்றச்சாட்டு. தங்களுக்கு இப்போது 39 வயதாகி விட்டது. இந்த வயதில் அவனவன் சோடா புட்டி கண்ணாடியோடும், முட்டி  தேய்ந்தும் அலையிறான். ஆனால் நீங்கள் உடற் தகுதியுடன் இருப்பதை பாராட்ட இவர்களுக்கு மனதில்லை. மாறாக விமர்சிக்கிறார்கள்.  ஆனாலும் வேகப்பந்து வீச்சிற்கு ஏற்ப உங்கள் கால்களும், கண்களும் துரிதமாக செயல்பட மறுப்பது  எனக்கே தெரிகிறது. அது உங்களின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்தான். ஆனால் எவ்வளவு பெரிய சுப்பன் ஆனாலும் இயற்கையை வெல்ல முடியாதே!. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு முறை  க்ளீன்போல்டு ஆகி மிடில் ஸ்டம்ப் பறந்தபோது உங்களுக்கு வயதாகிவிட்டதை நீங்கள் உணர்ந்தீர்களோ இல்லையோ உலகம் உணர்ந்து கொண்டது. உங்களின் தீவிர அபிமானி கவாஸ்கர் கூட பெங்களூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் கமென்ட்ரியில்  இதே கருத்தை கூறியதை கவனித்தீர்களா?. அசாருதீன் கூட உங்கள் ஆட்டத்திறன் குறைந்துவிட்டதாக கூறுகிறார். அதை கேட்ட போது உங்கள் ரசிகனாகிய என் மனது எவ்வளவு கஷ்டப்பட்டது  தெரியுமா?.  நீங்கள் செய்த சாதனையில் ஒரு பங்கு கூட செய்யாத பயலுக எல்லாம் உங்களை விமர்சனம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இந்த அவமானமெல்லாம் உங்களுக்கும், எனக்கும் எதற்கு?. நீங்கள் ஏன் ஓய்வு பெறுவது பற்றி சிந்திக்கக்கூடாது?.

ஓய்வு பற்றி கருத்து தெரிவிக்கும்பபோது நான் விரும்பும் வரை கிரிக்கெட் விளையாடுவேன் (as long as I am enjoying the cricket) என்று கூறுகிறீர்கள்.  தங்களின் வாதம் எவ்வாறு சரியாக இருக்க முடியும்?. ஒரு விளையாட்டு வீரர் தான் விரும்பும் வரையோ அல்லது  மக்கள் விரும்பும் வரையோ  எப்படி விளையாட முடியும்?. உடற்தகுதியும், திறமையும் இருந்தால்தானே  நாட்டுக்காக விளையாட முடியும். இந்திய கிரிக்கெட் அணியை உங்கள் சொந்த அணியாக நினைத்துவிட்டீர்களோ என எண்ணத்தோன்றுகிறது. நான் விரும்பும் வரை விளையாடுவேன் என்று இப்போது டான் பிராட்மன் விளையாட வந்தால் நம்மில்  யார் ஏற்றுக்கொள்வார்கள்?.

நீங்கள் விளம்பர வருவாய்க்காக விளையாடுவதாக மற்றொரு கோஷ்டி கூறி வருகிறது. நீங்கள் ஏற்கனவே 110 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்து விட்டீர்கள் என்பது இந்த மூடர்களுக்கு தெரியவில்லை. நீங்கள் பணத்தாசை பிடித்து அலைவதாக கூறுகிறார்கள். இதை கேட்கும்போது எனக்கே வருத்தமாகிறது. உங்கள் மனது என்ன பாடு படும்?. இந்த அவமானத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு நாட்டுக்கு சேவை செய்யவேண்டுமா?. சற்று யோசியுங்கள்.

நீங்கள் நினைத்தால் மீண்டும் பழைய பார்முக்கு வர முடியும். அந்த நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. ஏற்கனவே இதே மாதிரியான சில சூழ்நிலைகளை வெற்றிகரமாக கடந்து வந்தவர்தான் நீங்கள். ஆனால் நீங்கள் புகழின் உச்சியில் இருக்கும்போதே ஓய்வு பெறுவதுதான் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில்   கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக சச்சினை அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்ற பேச்சினை கேட்கும் தைரியம் என் போன்ற ரசிகர்களுக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். டான் பிராட்மன், இம்ரான் கான், கவாஸ்கர் போன்றவர்கள் திறமையின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெற்றார்கள். ஏன் தெரியுமா?. எவ்வளவு சாதனைகள் செய்தாலும் கடைசி நான்கு மேட்ச்களை  மட்டுமே சுயநலம் பிடித்த ரசிகன் ஞாபகம் வைத்திருப்பான்.  பழைய சாதனைகளை மறந்துவிடுவான் என்பதற்காகத்தான்..  சச்சின் இன்னும் சிறிது காலம் விளையாடலாமே என்று ஒவ்வொரு ரசிகனும் ஏங்க வேண்டும். ஏன் சச்சின் இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கேட்க வைத்துவிடாதீர்கள்.  தேர்வு குழுவினரின் இரக்கத்தினால் சச்சின் அணியில் இடம் பிடித்தார் என்று வரலாறு எழுதப்படுவது உங்கள் பெருமைக்கு ஏற்றதல்ல.

இளைய வீரர்களுக்கு சச்சின் வழி விடவேண்டும் என்று ஒரு கோஷ்டி கூறிவருகிறது. என்னமோ இந்தியாவில் திறமை மிக்க இளைய வீரர்கள் குவிந்து கிடப்பது மாதிரி.  ஐந்தாறு  மேட்ச் நன்றாக விளையாடுவதை வைத்து இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என கூறுவது முட்டாள்தனம் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால் இந்த பாழாய் போன கிரிக்கெட் விமர்சகர்களுக்கு தெரியவில்லை. பழைய சாதனைகளை வைத்துதான்  நீங்கள் அணியில் நீடிப்பதாக வாய் கூசாமல் சொல்கிறார்கள். நீங்களும்தான் ஓய்வு பெற்று பாருங்களேன். இந்த இளைய தலைமுறையினர் என்னத்தை கிழிக்கிறார்கள் என்று பார்ப்போம்.  

ஏதோ என் மனதில் பட்டதெல்லாம் சொல்லிவிட்டேன். உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். ஏனென்றால் நேத்து பெஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் எல்லாம் உங்களை விமர்சனம் பண்ணும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. உலகத்துக்கே கிரிக்கெட் சொல்லி கொடுத்த கிரிக்கெட் கடவுள் நீங்கள். இன்னைக்கு சின்னப் பயலுக எல்லாம் உங்களுக்கு கிரிக்கெட் சொல்லி தாரேன்னு அட்வைஸ் பன்றானுங்க. சச்சின் சார்? பட்ட அவமானமெல்லாம்  போதும். இந்த நன்றி கெட்ட கிரிக்கெட் உலகத்தில் இனியும் கேவலப்படவேண்டாம். தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்கள். ப்ளீஸ்!  

அன்புடன்
மனம் நொந்த உங்கள் தீவிர ரசிகன். 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக