இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என இந்திய அரசின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு நட்பு நாடா? என்பதை அவ்விரு நாடுகளுக்கிடையேயான கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை வைத்தே கணிக்க முடியும்.
1971 – இந்திய பாகிஸ்தான் போரின் போது இலங்கை பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. பாகிஸ்தான் ராணுவம் தனது தளவாடங்களை மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போது பங்களாதேஷ்) கொண்டு செல்ல இலங்கை பெரும் உதவி செய்தது. மேலும் பாகிஸ்தான் போர் விமானங்கள் தனது பண்டாரநாயக விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதி வழங்கியது. ஏனென்றால் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் பறக்க முடியாததால், எரிபொருள் நிரப்ப இலங்கையின் உதவி அவர்களுக்கு கண்டிப்பாக தேவைபட்டது. இல்லாவிடில் அவர்கள் பங்களாதேஷை அடைய முடியாத சூழ்நிலை இருந்தது. இவ்வாறு இந்தியாவுடன் போர் புரிந்த ஒரு நாட்டிற்கு தளவாட உதவிகளும், அரசியல் ஆதரவும் அளித்த இலங்கை எப்படி இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும்?. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த Lanka-Pakistan business council - கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் ஹைகமிஷனர் சீமா இலாஹி பலூக் (Seema Ilahi Baloch) 1971 – இந்திய பாகிஸ்தான் போரின் போது இலங்கை பாகிஸ்தானுக்கு அளித்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப அனுமதி, தளவாட மற்றும் அரசியல் ரீதியான ஆதரவு போன்ற இலங்கையின் உதவிகளை பாகிஸ்தானியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று மேலும் அவர் கூறினார். இதனை இந்திய மத்திய அமைச்சர்கள் யாராவது மறுக்க முடியுமா?. கண்டிப்பாக முடியாது. அப்படியானால் இலங்கை எப்படி இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும்?
1971 – போரில் இலங்கையின் பாகிஸ்தான் ஆதரவு போக்கினால் கடும் அதிருப்தி அடைந்த இந்திரா காந்தி இலங்கையை வழிக்கு கொண்டு வர RAW -வின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியினையும், பணத்தையும் அளித்து தனது முழு ஆதரவை வழங்கினார் என்றொரு வாதமும் உண்டு.
சீனாவை காரணம் காட்டி, இந்தியாவை மிரட்டி தனக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்ளும் இலங்கையின் ராஜ தந்திரம் முன் இந்தியாவின் ராஜா தந்திரம் தோற்றுவிட்டதுதான் உண்மை. உதாரணமாக திரிகோணமலை, சம்பூரில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உதவியுடன் அணு உலை நிறுவும் திட்டத்தினை இலங்கை அரசு உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் அதிகரிக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறப் போவது உண்மை. இனி இதற்கு பதிலாக இந்தியாவே ஒரு அணு உலையை இலங்கைக்கு நிர்மாணித்து தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்த பின் இலங்கை வெளியுறவு துறை துணை அமைச்சர் ஹுசைன் A . பைலா (Hussein A. Bhaila) பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசும், மக்களும் பாகிஸ்தானையே இலங்கையின் உண்மையான நட்பு நாடு என்று கருதுகிறார்கள் என்று கூறியதை நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்.
சிங்கள ராணுவம் இதுவரை 550 – க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறது. இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் கூட எல்லை கடந்து செல்லும் இந்திய மீனவர்களை கைது மட்டுமே செய்கிறது. ஆனால் இந்தியாவின் நட்பு நாடாக காங்கிரஸ் அரசால் கருதப்படும் இலங்கை, இந்தியாவின் 550 – க்கும் மேற்பட்ட மீனவ குடிமக்களை கொன்றிருக்கிறது. ஒருவேளை தமிழ் நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையோ!?. தனது நாட்டின் ஒரு குடிமகனுக்கு ஆபத்து என்றால் கூட போர் கப்பல்களை அனுப்பும் அமெரிக்க அரசின் பொறுப்புணர்ச்சியில் 1/550 பங்கு கூட இந்தியாவுக்கு இல்லையே!?. அதைக்கூட விட்டு விடலாம். ஆனால் தன் நாட்டின் அப்பாவி குடிமக்களை கொலை செய்யும் ஒரு நாட்டினை நட்பு நாடு என்று கூறுவது எப்படி நியாயம்?.
வரலாற்றை திரும்பிப் பார்ப்போமானால் எப்போதுமே இலங்கை இந்தியாவின் எதிரி நாடுகளோடு நட்பு பாராட்டி வரும் ஒரு நாடாகவே இருந்து வருகிறது. நாளையே பாகிஸ்தான் அல்லது சீனா, இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்நாடுகளுக்கு இலங்கை அனைத்து உதவிகளையும் செய்யும் என்பதுதான் நிதர்சனம். எனவே இலங்கை ஒருபோதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியாது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இலங்கையை தனது வழிக்கு கொண்டு வரும் துருப்பு சீட்டு இப்போது இந்தியாவின் கையில் இல்லை என்பதே உண்மை.
Tweet | |||||
நெஜமாலுமா? இவனுகளுக்கே யாரும் உதவி செய்தா தான் உண்டு, இவய்ங்க பாகிஸ்தானுக்கு உதவியது புதிய தகவல் தான்! மறுபடி ஞாபகப்படுத்துகிறேன் அந்த பாலோவர் லிஸ்டை இணைக்கலாமே!
பதிலளிநீக்குகிஷோகர் சார்! கூகிள் பாலோவர் வசதியை என்னால் இணைக்க முடியவில்லை அல்லது எனக்கு தெரியவில்லை. விரைவில் இணைக்க முயற்சி செய்கிறேன். நான் உங்களது பிளாக்குகளை தொடர்ந்து படித்து வருகிறேன். என் நினைவில் பதிந்த ப்ளாக்கர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து தாங்கள் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு நன்றி.
நீக்கு