2004 –ஆம்
ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க ஜனாதிபதி கலாம்
அழைப்பு விடுத்தார். சோனியா காந்திதான் அடுத்த பிரதமர் என்று அனைவரும் உறுதியாக
நம்பினார். சோனியாவும் தான்தான் அடுத்த பிரதமர் என்று நம்பினார். ஆனால் அவர் கலாமை
சந்தித்துவிட்டு வந்தபின் அனைத்தும் தலைகீழாக மாறியது. மன்மோகன் சிங் பிரதமராக
அறிவிக்கப்பட்டார். சோனியா காந்தி பிரதமர்
ஆவதை தடுத்தது எது?. அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் எடுத்த முடிவுதான்
சோனியாவின் பிரதமர் பதவி ஆசைக்கு தடையாக இருந்தது எனபது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் கலாம் அப்படி ஒரு முடிவெடுக்க எது காரணமாக இருந்தது?. சமீபத்தில் கூட ஒரு
பேட்டியில் சோனியா பிரதமர் ஆவதை தான் ஒருபோதும் தடுக்கவில்லை என்று கலாம்
கூறியிருந்தார். அப்படியானால் அன்று ஆட்சி அமைக்க சோனியாவை ஏன் கலாம்
அழைக்கவில்லை?. அந்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு கடிதமே, 2004-ல் கலாம் பிரதமர் பதவிக்கு சோனியாவை நிராகரித்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
அக்கடிதத்தின் விளைவாகவே ஆட்சி அமைக்க சோனியாவை கலாம் அழைக்கவில்லை என்ற உண்மை
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த சுபாஷ் அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 2004 – ல்
மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்திற்கும், மற்றவர்களுக்கும்
இடையே நடந்த கடிதப் போக்குவரத்து மற்றும் கோப்பு தொடர்பான தகவல்களை ஜனாதிபதி
அலுவலகத்தில் கேட்டார்.
இதற்கான பதிலை ஏப்ரல், 26, 2012 அன்று
ஜனாதிபதி அலுவலகம் அளித்தது. அதில் 2004 – ல் மன்மோகன் சிங் ஆட்சி அமைக்க
அழைக்கப்படுவதற்கு முன்பாக சுப்ரமண்யம் சுவாமி ஜனாதிபதி கலாமிற்கு ஒரு ரகசிய
கடிதம் எழுதியதாகவும், அக்கடிதத்தின் அடிப்படையிலேயே கலாம் யாரை ஆட்சி அமைக்க
அழைக்கலாம் என்ற முடிவை Article
75 – ன்படி எடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் சுவாமி எழுதிய கடிதத்தின் நகலை
மனுதாரர் அகர்வாலுக்கு வழங்கமுடியாது என்றும், அது தகவல் அறியும் சட்டம்
பிரிவு 8(1) (e) – க்கு எதிரானது என்றும் மேலும்
தெரிவித்தது. ஆயினும் தலைமை பொது தகவல்
மேலாளர் (chief public information officer) தனது பதிலில் அப்போதைய ஜனாதிபதி
கலாம், சுவாமி எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரதமர் பதவிக்கு சோனியாவை
நிராகரித்தார் என்று ஒத்துக்கொண்டது மிகப் பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரத்தில்
ஏற்படுத்தியுள்ளது.
அக்கடிதத்தில் அப்படி என்னதான் சுவாமி எழுதியிருந்தார்? RTI Act, section 11 – ன்படி சுவாமியின் ஒப்புதல் பெற்று
அக்கடிதத்தை ஜனாதிபதி அலுவலகம் வெளியிடமுடியும். ஆனால் ஜனாதிபதி அலுவலகம்
இதுதொடர்பாக சுவாமியின் கருத்தை
கேட்கவில்லை. ஆனாலும்
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அநேக பத்திரிக்கைகளில் பேட்டிகள்
வாயிலாக ஏற்கனவே சுவாமியால் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி
சுப்பிரமணிய சுவாமி தெரிவிக்கையில் UPA கூட்டணி
ஆட்சி அமைக்கும் முன் தான் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி Citizenship
Act விதிகளின்படி பிரதமராக பதவி
ஏற்க முடியாது என்றும், அவ்வாறு ஜனாதிபதி
ஆட்சி அமைக்க சோனியாவை அழைத்தால், அதனை தான் நீதிமன்றத்தில்
எதிர்க்கப்போவதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்ததாக அவர் உறுதிப்படுத்தினார். எனவே இதனை அடுத்தே சோனியாவை பிரதமராக ஏற்க கலாம் மறுத்துவிட்டார் என்பது நமக்கு புலனாகிறது. சுவாமியே கடிதத்தில் உள்ள தகவல்களை வெளியிட்டபின், ஜனாதிபதி அலுவலகம் இன்னும் அக்கடிதத்தை ரகசிய ஆவணம் என்று சொல்லிவருவது நல்லநகைச்சுவைதான்!
சுப்ரமண்யம் சுவாமியை அரசியல் கோமாளி என்று அவருடைய அரசியல் எதிரிகள்
விமர்சிப்பதுண்டு. ஆனால் சுவாமியின் அரசியல் நடவடிக்கைகள் இந்திய அரசியலில் மிகப்
பெரிய விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது. பிஜேபி அரசு கவிழ்ப்பு, 2G ஊழல் போன்றவை அவற்றுள் சில. இப்போது சோனியாவின் பிரதமர் பதவி ஆசை
கனவாகிப்போனதற்கும் சுவாமிதான் காரணம் எனபது அவரது சாதனையில் மற்றொரு மைல் கல்!
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக