புதன், 29 ஆகஸ்ட், 2012

முன்னிஸ்வரம் கோவில் திருவிழா- சிங்கள பேரினவாதிகளின் மிரட்டல்!



கொழும்பிலிருந்து சுமார் 70 km தொலைவில் இருக்கும்  சிலாவில்  (chilaw) உள்ள முன்னிஸ்வரம் ஸ்ரீ  பத்திர காளியம்மன் கோவில் திருவிழா செப்டம்பர்  1 ஆம் தேதி நடக்க உள்ளது. இக்கோவில் சிறுபான்மை இன தமிழ் மக்களுக்கு சொந்தமானதாகும். ஆண்டுதோறும் நடக்கும் இக்கோவிலின் திருவிழாவில் மிருகங்களை பலி கொடுக்கும் சம்பிரதாயம் உண்டு. இலங்கையின் சிங்கள இனவாதிகள் இக்கோவிலின் சம்பிரதாய பழக்கமான உயிர் பலி கொடுத்தல் நிகழ்ச்சியை  தடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த சிங்கள இனவாத கூட்டத்திற்கு புத்த சாமியார்களும், இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வாவும். தலைமை தாங்குகின்றனர். சென்ற வருடமும் மெர்வின் சில்வா இக்கோவிலின் திருவிழாவின் போது  கோவிலுக்குள் புகுந்து உயிர் பலி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மிருகங்களை திருடி கொண்டு போய்விட்டார். அதேபோல் இந்த வருடமும் தான் கோவிலுக்குள் புகுந்து மிருகங்களை திருடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கோவிலின் தலைமை பூசாரி உயிர் பலி கொடுக்கும் சடங்கு இந்த வருடமும் வழக்கம் போல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும்  கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு அளிக்கும்படி அதிபர் ராஜபக்சேவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சிலாவில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிகழ்வதாக தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள இனவாதிகளின் இந்த நடவடிக்கையை  சிறுபான்மை இன மக்களின் சமய நம்பிக்கைகளின் மீதான தாக்குதலாகவே கருதுகின்றனர். மிருகங்களை வதை செய்வதை தடை செய்கிறோம் என்ற பெயரில் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் சிறுமைப்படுத்தும் திட்டமிட்ட தாக்குதலாகவே இச்செயல் உள்ளது. ஜீவ காருண்ய விரும்பிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் இறுதிப்போரில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. இவர்களின் நோக்கம் மிருக வதையை தடை செய்வது அல்ல. தமிழர்களின் உறவுகளையும், உரிமைகளையும் குழி தோண்டி புதைத்த  சிங்கள பேரினவாதிகளின் தமிழின கலாச்சார அழிப்பு ஆசைதான் இதன் நோக்கமாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அந்த இனத்தின் கலாச்சாரத்தை அழிக்கவேண்டும் என்பதுதான் உலக நியதி. அந்த விதியை செயல் வடிவமாக்க துடிக்கும்   சிங்கள பேரினவாதிகளின் கலாச்சார அழிப்பு நடவடிக்கைதான் இது. இலங்கையின் வடக்கு பகுதிகளில், புத்த மதத்தினர் ஒருவர் கூட இல்லாத பகுதிகளில் கூட   ஏராளமான புத்தர் சிலைகளை நிறுவுவதின் நோக்கமும் இதுவே. 

தொடர்ந்து சிறுபான்மை தமிழின  மக்களின் உணர்வுகளோடு விளையாடும் சிங்கள பேரினவாதிகள் ஒன்றினை உறுதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் என்றுமே அவர்களாக ஆயுதப்  போராட்டத்தை தேர்வு செய்வதில்லை. ஆயுதங்கள் அவர்கள் கைகளில் உங்களைப் போன்றவர்களால் திணிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் அடுத்தக் கட்ட போராட்டத்தை தீர்மானிக்கப்போவது நீங்கள்தான்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக