வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

லால்பகதூர் சாஸ்திரியின் மரணம் - இந்தியாவின் மாபெரும் மர்மம் !



இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965 – ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின்  தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில்  சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் ஆகியோர்    ஜனவரி10, 1966 அன்று கையெழுத்திட்டனர். அதற்கு அடுத்த நாள் இந்திய பிரதமர் சாஸ்திரி தாஷ்கண்டில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சாஸ்திரியின் மரணத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதாக  பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. சாஸ்திரி அவர்களின் துணைவியார் லலிதா தன கணவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவே  சம்பவம் நடந்தது முதல் குற்றம்சாட்டி வருகிறார். சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்ற நயார் என்பவர் கூறுகையில் தாஷ்கண்டிலிருந்து திரும்பியவுடன்  தன் கணவரின் உடல் நீல நிறமாக இருந்ததாக கூறி லலிதா தன்னிடம் கோபப்பட்டதாகவும், அவர் உடலில் இருந்த குறிப்பிட்ட சில காயங்கள் குறித்து விசாரித்ததாகவும்   தெரிவிக்கிறார். மேலும் சாஸ்திரியின் உடல் ரஷ்யாவிலோ அல்லது இந்தியாவிலோ போஸ்ட்மார்டம் செய்யப்படவில்லை என்பதை லலிதா சுட்டிக்காட்டுகிறார்.

பத்திரிக்கையாளர் அனுஜ் தார் 2009 ல் தகவல் அறியும் உரிமை  சட்டம் மூலம் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கும் இடையே  மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே நடைபெற்ற  சாஸ்திரியின் மரணத்திற்கு பிந்தைய செய்தி பரிமாற்ற   ஆவணங்களை கேட்ட போது அது பற்றிய ஆவணங்களை தர  பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. சாஸ்திரியின் மரணம் குறித்து தங்களிடம் ஒரே ஒரு ஆவணம் மட்டுமே உண்டு என்றும், தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அயல்நாட்டு உறவு ஆகியவற்றை கருத்தினில் கொண்டு சாஸ்திரியின் மரணம் குறித்த ஆவணத்தை  வெளியிட இயலாது என்றும்  பிரதமர் அலுவலகம் தெரிவித்துவிட்டது. சாஸ்திரியின் குடும்பத்தினர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார் என்ற அரசின் வாதத்தை ஏற்க தயாராக உள்ளனர். ஆனால் அதே வேளையில் சாஸ்திரியின் மரணத்திற்கு பிந்தைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் இடைய நடந்த செய்தி பரிமாற்ற ஆவணங்களை  இந்திய அரசு வெளியிட வேண்டும் என விரும்புகின்றனர்.

சாஸ்திரி இந்திய நாட்டின் பிரதமர். அவரது மரணம் ஒரு வெளிநாட்டில் மர்மமான முறையில் நடந்துள்ளது. அத்தகைய மரணம்  குறித்து ஒரே ஒரு ஆவணம் மட்டுமே உள்ளது என அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை. வழக்கமாக இம்மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாட்டின் தூதர்  பல அறிக்கைகளை தனது நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அதே போல் ரஷியாவில் உள்ள இந்திய தூதர் T.N. கௌல் (T.N. Kaul )  நடந்த சம்பவம் குறித்து பல அறிக்கைகளை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். மேலும் தனது தனிப்பட்ட கருத்துக்களையும் அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதுதான் மரபும் கூட. ஆனால் அத்தகைய அறிக்கைகள் எதுவும் தன்னிடம் இல்லை என  அரசு தெரிவிக்கிறது.

ஜனவரி, 11, 1966 அன்று கடுமையான தொடர் இருமலால் சாஸ்திரி தூக்கத்திலிருந்து விழித்து கொண்டார். உடனடியாக  சாஸ்திரியுடன் ரஷியாவுக்கு சென்றிருந்த டாக்டர் R N சூக் (R N Chugh) உதவிக்கு வரவழைக்கப்பட்டார். சாஸ்திரியால் அப்போது பேச முடியவில்லை. அவர் அருகிலிருந்த ப்ளாஸ்க்கை (flask) நோக்கி கையை காட்டினார். ஒரு பணியாளர் அவருக்கு குடிக்க தண்ணீர் வழங்கினார். அதனை சிறிது குடித்ததும் சாஸ்திரி சுயநினைவினை இழந்தார். அதனை தொடர்ந்து அவரை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சாஸ்திரியின் மரணத்திற்கு பின் உடனடியாக சாஸ்திரிக்கு உணவு தயார் செய்த ரஷிய சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  ஐந்து மணி நேர விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார். விஷம் கொடுத்து  கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடக்கத்திலேயே எழுந்தாலும் பிரதமரின் உடல் பிரேதப் பரிசோதனை (post-mortem) இந்தியாவிலோ அல்லது ரஷ்யாவிலோ செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த சாஸ்திரியின் துணைவியார் இது குறித்து சந்தேகம் எழுப்பிய போதும் அதுகுறித்து விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
சாஸ்திரியின் ஆறு வாரிசுகளில் அனில் சாஸ்திரி மற்றும் சுனில் சாஸ்திரி ஆகிய இரு மகன்கள்  தற்போது உயிருடன் உள்ளனர். இருவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள். சிறிது நாளைக்கு முன்பு சுனில் பிஜேபி கட்சியில் சேர்ந்து விட்டார். சாஸ்திரியின் கடைசி மகள் திருமதி.சுமன் வழி பேரன் சித்தார்த்நாத் சிங் பிஜேபி கட்சியில் உறுப்பினராக உள்ளார். ஆனால் கட்சி பேதமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாஸ்திரி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவே நம்புகின்றனர். மேலும் அவரது மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும்  குற்றம் சாட்டுகின்றனர்.

தன் தாய் சுமன் கூறியதாக சித்தார்த்நாத் சிங்  கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார். சம்பவம் நடந்த அன்று சாஸ்திரியிடம் கடைசியாக போனில் பேசியது அவருடைய மகள் சுமன். அவருடைய  கணவர்  V.N. சிங்  State Trading Corporation ல் பணி செய்துவந்தார். சாஸ்திரி ரஷியாவில் இருந்தபோது சிங் பணி நிமித்தமாக கெய்ரோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ரஷியாவில் பணியை முடித்துவிட்டு அதன்பின் கெய்ரோவுக்கு சென்று சிங்குடன் இணைந்து அரசுப்பணி மேற்கொள்வதாக சாஸ்திரியின் பயணத்திட்டம் இருந்தது. சம்பவம் நடந்த அன்று சாஸ்திரி சுமனுக்கு போன் செய்து, சிங்  இந்திய செய்திதாள்கள்  அனைத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு கெய்ரோ வருகிறாரா? என்று உறுதிப்படுத்திகொண்டார். அவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் நான் ஒரு கோப்பை பால் அருந்திவிட்டு தூங்கப்போகிறேன் என்பதாகும். அதன் பின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சுமன் மீண்டும் பேச முயற்சி செய்தார். ஆனால் பதினைந்து நிமிடங்களுக்கு பின்னர் அவர் தந்தை இறந்துவிட்டதாக போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு ஜனதா கட்சி ஆட்சியின்போது சாஸ்திரியின் மரணம் குறித்த உண்மையை ஆராய நரேன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் விசாரணையை தொடங்கியது. ஆனால் எந்த ஒரு முடிவுக்கும் அதனால் வரமுடியவில்லை. அந்த விசாரணை கமிஷனின் எந்த ஒரு ஆவணங்களும் பாராளுமன்ற நூலகத்தில் காணப்படவில்லை. கமிஷன் விசாரணை நடத்தியதற்கான சிறு தடயம் கூட பாராளுமன்ற நூலகத்தில் காணப்படவில்லை.

எல்லாவற்றையும் விட மிகப் பெரும் மர்மமாக கீழ்க்கண்ட சம்பவத்தை கூறலாம். 1977 ஆம் ஆண்டு சாஸ்திரியின் மரணம் குறித்த விசாரணைக்கு பாராளுமன்ற குழு முன்பு ஆஜராகும்படி இரண்டு சாட்சிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஒருவரின் பெயர் R.N. சூக் (R.N. Chugh) . மருத்துவரான இவர் சாஸ்திரியுடன் ரஷியா சென்றவர். சாஸ்திரியின் மரணத்திற்கு பிந்தைய மருத்துவ விசாரணையை (medical investigation) ரஷிய மருத்துவர்களுடன் இணைந்து நடத்தியவர். மற்றொருவர் ராம்நாத். இவர் சாஸ்திரியின் தனிப்பட்ட வேலைக்காரர். சாஸ்திரியின் மரணம் நிகழ்ந்த அன்று அவருடன் இருந்தவர்.  R.N. சூக் பாராளுமன்ற விசாரணை குழு முன்பு ஆஜராக டெல்லி வந்துகொண்டிருந்தபோது ட்ரக் ஒன்று மோதி சாலை விபத்தில் இறந்து போனார். ராம்நாத் பாராளுமன்ற  குழு விசாரணைக்கு  சென்று கொண்டிருக்கும்போது  வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதி  தன்னுடைய கால்களை இழந்தார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய ஞாபக சக்தியையும் இழந்தார். அந்நிகழ்ச்சி பற்றி சாஸ்திரியின் குடும்பத்தினர் கூறும்போது ராம்நாத் விசாரணைக்கு செல்லும் முன் சாஸ்திரியின் விதவை துணைவியாரை பார்க்க வந்ததாகவும், அப்போது  ராம்நாத், தன்னுடைய மனதில் நீண்ட நாட்களாக பெரும் சுமையை சுமந்துகொண்டிருப்பதாகவும், அதனை இன்று இறக்கிவைக்கப் போவதாகவும்  சாஸ்திரியின் துணைவியாரிடம்  கூறியதாக தெரிவிக்கின்றனர்.

சாஸ்திரியின் மரணம் தொடர்பான சம்பவங்கள் ஏராளமான திருப்பங்களையும், மர்மங்களையும் உள்ளடக்கியது. அந்த மர்மங்களின் விடைகள் வெளிவரும்போது அது நம்ப முடியாததாகவும், அசாதாரணமானதாகவும் இருக்கலாம். அதுவரை சாஸ்திரியின் மரணம் இந்தியாவின் மிகப்பெரும் மர்மமாகவே  நீடிக்கும்.   
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. அப்பப்பா! இவ்வளவு மர்மங்களா சாஸ்திரியின் மரணத்தில்???
    இப்போது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாஸ்திரியின் மரணம் திகில் திரைப்படம் போல் திருப்பங்களையும், மர்மங்களையும் கொண்டது. தங்களின் கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
  2. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் இத்தனை மர்மங்களா? ஆச்சர்யமாக உள்ளதே? அவரது மருத்துவரான சூக்கின் மனதில் மட்டுமல்ல. நம்முடைய மனதிலும்தான் நிறைய சுமை ஏறிவிட்டது போல் உள்ளதே! ஒருவேளை பாகிஸ்தானியர்களின் சதிவேலையாக இருக்குமோ? நேர்முகப் போரின் தோல்வியால் இப்படி மறைமுகமாக பழிதீர்த்துக்கொண்டனரோ என்னவோ?!!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே இருந்தாலும் அந்த மர்மத்தை இந்திய, ரஷிய அரசுகள் தொடர்ந்து காப்பாற்றி வருவது ஏன் என்று தெரியவில்லை துரை சார்!

      நீக்கு