மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு ஏற்கனவே பல ஊழல்களில் சிக்கிகொண்டுள்ள நிலையில் புதிதாக ஒரு சிக்கலை CAG-யின் தணிக்கை அறிக்கை உருவாக்கியுள்ளது. ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்காமல், screening committee-யின் முடிவுகள் மூலம் நியமன முறையில் வழங்குவது, டெல்லி விமான நிலைய வளர்ச்சி திட்டம், மற்றும் Reliance Power நிறுவனத்தின் Chitrangi project மின் திட்டத்திற்கு தேவையான நிலக்கரியை அதன் சசன் பவர் ப்ராஜெக்ட்டிலிருந்து பெற அனுமதி அளித்தல் போன்ற திட்டங்களில் மத்திய அரசின் முடிவுகளால் இந்திய அரசுக்கு சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG-யின் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ரூ. 3.06 லட்சம் கோடி லாபம் அடைந்துள்ளதாக CAG தெரிவித்துள்ளது.
தணிக்கை -1
ஜூலை 2004 –லிருந்து தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 142 நிலக்கரி சுரங்கங்கள் மூலம் அரசுக்கு ரூ. 10.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக முதலில் தனது வரைவு அறிக்கையில் தெரிவித்த CAG, இறுதி அறிக்கையில் ரூ. 1.85 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்கண்ட இழப்பு 2004-2009 கால கட்டத்தில் நடந்துள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 2006 முதல் 2009 வரை நிலக்கரி துறை அமைச்சராக மன்மோகன்சிங் பொறுப்பு வகித்துள்ளார் என்பதாகும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சிபாரிசு செய்த பின்னும் பிரதமர் அலுவலகம் வேண்டுமென்றே ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதை தாமதப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளது CAG. ஒளிவு மறைவு அற்ற, குறிக்கோள், போட்டி முறை எதுவும் இல்லாமல் நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்த்தமைக்கு screening committee அதிகாரிகளை குற்றம்சாட்டும் CAG, பிரதமர் மீது நேரடியாக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. TATA group, Reliance power, Jindal power and steel , Abhijit group, Bhushan group, Electrosteel, Adhunik group, S.R.Rungta group, sajjan jindal, Godavari Ispat, O.P.Jindal group, Jaiprakash Gaur, Goenka group, Essar Group, Adani, ArcelorMittal ஆகியவை நிலக்கரி ஒதுக்கீட்டினால் பெரும் பயனடைந்த நிறுவனங்களுள் சிலவாகும்.
நாட்டின் கருவூலத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா கோரியுள்ளது. நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் CAG – யின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் V. நாராயணசாமி CAG தனக்குரிய அதிகார எல்லையை மீறியுள்ளதாக கருத்து தெரிவித்தார். பெரும்பாலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் மாநில அரசாங்கங்களின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
ஒளிவுமறைவற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்கான விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஜூன் 2004 – ல் தொடங்கப்பட்டாலும், 7 வருடங்களாகியும் (பிப்ரவரி 2012 வரை) நடைமுறைக்கு வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜூன் 2004 முதல் மார்ச் 2011 வரை 194 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 –ஆம் தேதி சுப்ரீம் கோர்ட், முன்னாள் தொலைதொடர்பு துறை மந்திரி ஆ.ராசா சட்ட விரோதமாக வழங்கிய 122 எண்ணிக்கை 2G ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை இரத்து செய்தது மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் மதிப்புமிக்க சொத்துக்கள், இயற்கை வளங்கள் ஏல முறையில் மட்டுமே விற்கப்படவேண்டும் என அரசாங்கத்தை அறிவுறுத்தியது. அதே நாளில்தான் மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் வழங்குவதற்கான சட்டத்தை நாளிதழ்களில் (Mines and Minerals (Development and Regulation) (MMDR) Act) அறிவித்தது. இதன் மூலம் தற்போது அரசு எடுத்த முடிவு கூட சுப்ரீம் கோர்ட்டின் கிடுக்கிப்பிடியால்தான் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. அதாவது UPA அரசாங்கம் 2004 – ல் பதவியேற்று ஆறுமாதங்களில் தொடங்கிய நடவடிக்கை 2012 –ஆம் ஆண்டில்தான் முழுமை அடைந்திருக்கிறது.
ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்டத்திற்கு, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை நிலக்கரி துறை அமைச்சகம் கேட்டதின் பேரில், 2006 - ஆம் ஆண்டு மேற்கண்ட சட்டத்தை நிறைவேற்ற சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தனது சிபாரிசினை வழங்கியது. அப்படியானால் அதன்பின் ஏற்பட்ட 6 வருட தாமதத்திற்கு யார் காரணம்?. இதுவரை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாமல் நியமன முறையில் ஒதுக்கீடு செய்வதன் மூலம் தனியார் நிறுவனங்கள் பெரும் பயனடைந்ததாக CAG தெரிவித்துள்ளது.
இதுவரை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய Screening Committee யானது, நிலக்கரி சுரங்கங்களை குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நிறுவனங்களுக்கு கமிட்டி கூட்டத் தீர்மானம் மூலம் ஒதுக்கீடு செய்து வந்தது. அனைத்து நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், நிறுவனங்களை தேர்வு செய்யும் தன்னிச்சையான அதிகாரம் Screening Committee- யிடம் இருந்தது. ஆனாலும் நிலக்கரி சுரங்கங்களின் மதிப்பை நிர்ணயிப்பதற்கான, விண்ணப்பங்களின் ஒப்பீட்டு மதிப்பீட்டு முறை கைக்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கூட்ட தீர்மான கோப்புகளிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ காணப்படவில்லை என CAG தெரிவித்துள்ளது. ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான மதிப்பு எதனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை எனவும், நியமன ஒதுக்கீட்டில் ஒளிவு மறைவற்ற தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் CAG தெரிவித்துள்ளது.
தணிக்கை –2
அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக CAG-யால் சுட்டிக்காட்டப்பட்ட மற்றொரு திட்டம் டெல்லி விமான நிலைய விரிவாக்கத் திட்டமாகும். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு திட்டம் இதுவாகும். Airport Authority of India (AAI) மற்றும் தனியார் நிறுவனமான DIAL- ம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. DIAL. நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை GMR Infrastructure நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி DIAL நிறுவனம் விமான நிலையத்தின் 240 ஏக்கர் நிலத்தை 58 ஆண்டுகளுக்கு தன்னுடைய வியாபார பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்நிலத்தின் மதிப்பினை Rs 24,000 கோடி என Airport Economic Regulatory Authority நிர்ணயித்துள்ளது. மேற்கண்ட நிலத்தின் 58 வருட குத்தகை மூலம் லைசென்ஸ் கட்டணமாக கிடைக்கும் வருமானம் Rs 1,63,557 கோடி என DIAL நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இதில் DIAL –க்கு கிடைக்கும் பங்கு Rs 88,337 கோடி. ஆனால் இத்திட்டத்தில் DIAL நிறுவனத்தின் முதலீடு வெறும் Rs 2,450 கோடி மட்டுமே. மேலும் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் DIAL நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது என்றும் அரசிற்கு எதிரானதாக உள்ளது என்றும் CAG அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் டெல்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் விரிவாக்க கட்டணம் (Development Fee) வசூலிக்கும் உரிமையை DIAL நிறுவனத்திற்கு ஒப்பந்த விதிமுறைகளை மீறி Civil Aviation Ministry வழங்கியதற்கு CAG ஆட்சேபனை தெரிவித்துள்ளது. முதலில் செய்யப்பட ஒப்பந்தத்தில் விரிவாக்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான ஷரத்து இல்லை என்றும், அது பிந்தைய காலத்தில் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது என்வும் CAG தெரிவித்துள்ளது இது டெண்டர் விதிமுறைகளை மீறிய செயலாகும். இந்த முடிவால் DIAL நிறுவனம் Rs 3,415 கோடி லாபம் அடைந்துள்ளது எனவும், இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை நிர்ணயிக்கும்படியும் CAG தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பயணங்களுக்கு விரிவாக்க கட்டணம் Rs 220 முதல் Rs 520 வரையும், சர்வதேச பயணங்களுக்கு Rs 490 முதல் Rs 1,200 வரையும் வசூலிக்கப்படுகிறது.
தணிக்கை –3
மூன்றாவதாக CAG தெரிவித்த ஆட்சேபனை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள Reliance Power நிறுவனத்தின் சசன் அல்ட்ரா மெகா பவர் ப்ராஜெக்ட் மீதானது ஆகும்.
நிலக்கரி துறை அமைச்சகம் சசன் பவர் ப்ராஜெக்ட்டிற்கு முதலில் இரண்டு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியது. அவைகளில் இருந்து கிடைக்கும் நிலக்கரி சசன் பவர் ப்ராஜெக்ட்டிற்கு போதவில்லை என்று தெரிவித்த Reliance Power நிறுவனம் மூன்றாவதாக ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கும்படி அரசை கோரியது. அதன்படி நிலக்கரி துறை அமைச்சகம் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை Reliance Power நிறுவனத்திற்கு ஒதுக்கியது. அதன்பின் சிறிது காலம் கழித்து மேற்கண்ட மூன்று சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் அதிகப்படியான நிலக்கரியை, தன்னுடைய Chitrangi project மின் திட்டத்திற்கு பயன்படுத்த Reliance Power நிறுவனம் அனுமதி கோரியது. அரசு அக்கோரிக்கையை ஏற்றது. இதன் மூலம் அனில் அம்பானியின் Reliance Power நிறுவனம் Rs 29,033 கோடி லாபம் அடைந்தது எனவும் அரசிற்கு Rs 29,033 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் CAG தெரிவித்துள்ளது. எனவே Reliance Power நிறுவனத்திற்கு மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்க எடுக்கப்பட்ட முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று CAG கருத்து தெரிவித்துள்ளது. பிந்தைய காலத்தில் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, டெண்டர் விதிமுறைகளை மீறிய செயல் என்றும், அம்முடிவால் Reliance Power நிறுவனம் பெரும் லாபம் பெற்றுள்ளதாகவும் CAG தெரிவித்துள்ளது.
இதில் கவனிக்கப்படவேண்டிய செய்தி என்னவென்றால், முதலில் சசன் பவர் ப்ராஜெக்ட்டிற்கு நிலக்கரி போதவில்லை என்று கூறி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை அரசிடமிருந்து பெற்ற Reliance Power நிறுவனம், சிறிது காலம் கழித்து அதிகப்படியாக கிடைக்கும் நிலக்கரியை தன்னுடைய மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்த அரசிடம் அனுமதி கோரியதுதான். நிலக்கரி போதவில்லை என Reliance Power கூறியது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தாமல், இந்திய அரசு நிறுவனமான NTPC – யின் வசமிருந்த நிலக்கரி சுரங்கத்தை பறித்து தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது குறித்து CAG கேள்வி எழுப்பியுள்ளது.
சசன் ப்ராஜெக்ட் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை யுனிட் Rs 1.196 என்ற விலையில் அரசுக்கு விற்கும் Reliance Power நிறுவனம், சசன் பவர் ப்ராஜெக்ட்டின் அதிகப்படியான நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை (Chitrangi project) அரசுக்கு யுனிட் Rs 2.45-3.702 என்ற விலையில் விற்கிறது என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். நியாயமாக Reliance Power அவ்வாறு தயாரித்த மின்சாரத்தை சசன் ப்ப்ராஜெக்ட்டின் விலையான Rs 1.196 – க்கு வழங்கும்படி அரசு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் கூடுதல் விலைக்கு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக CAG அறிக்கை தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவால் அரசுக்கு Rs 29,033 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG தெரிவித்துள்ளது.
அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு (CAG கணக்கீட்டின் படி )
1) நிலக்கரி ஒதுக்கீடு மூலம் அரசுக்கு இழப்பு - Rs. 1,86,000 கோடி
2) டெல்லி விமான நிலைய திட்டத்தால் இழப்பு - Rs 88,337 கோடி
Development Fee வசூல் மூலம் இழப்பு - Rs 3,415 கோடி
3)Reliance Power நிறுவன ஒப்பந்தம் மூலம் இழப்பு - Rs. 29,033 கோடி -----------------
அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு - Rs. 3,06,785 கோடி
------------------
காங்கிரசின் நீண்ட கால பிரச்சாரமான “பிரதமர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்” என்ற வாதம் தற்போது வெளிவந்துள்ள ஊழல்கள் மூலம் மேலும் பலவீனமடைந்துள்ளது. ஏனென்றால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலக் கட்டத்தில் 2006 முதல் 2009 வரை நிலக்கரி துறை அமைச்சராக மன்மோகன்சிங் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸ் வழக்கம் போல் CAG தன் அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை CAG வெளிப்படுத்தியபோது, CAG – யின் கணக்கீடு தவறு என்று கூறியவரும், ஜீரோ லாஸ் தியரியை கண்டுபிடித்த அறிவாளியுமான கபில் சிபல், அதன் பின் தொலைத்தொடர்பு துறை அமைச்சராகி CAG நிர்ணயித்த விலைக்கே 2G ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகையை நிர்ணயித்து CAG – யின் அறிக்கையை உண்மை என உலகிற்கு நிரூபித்ததை நாம் அனைவரும் அறிவோம். எனவே CAG மீதான காங்கிரசின் குற்றச்சாட்டு இனி மக்களிடம் செல்லுபடியாகாது. தவறு செய்வது மட்டும்தான் குற்றம் என்பதில்லை. தவறுக்கு துணை போவதும் குற்றம்தான். பிரதமர் எனக்கு தெரியாது என்று சொல்வதோ, மெளனமாக இருப்பதோ, முந்தைய பிஜேபி அரசு செய்ததை செய்தேன் என்று விளக்கம் கூறுவதோ குற்றச்சாட்டுகளுக்கு பதிலாகாது. பிரதமர் அவர்களே! உங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான விளக்கத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நீங்கள் மிகப் பெரிய பொருளாதார மேதை என்று அப்பாவி ஏமாளி இந்தியக்குடிமகன் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறான்.
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக