திங்கள், 20 ஆகஸ்ட், 2012

புருஸ் லீயின் மரணம் - விடை காண முடியாத மர்மங்கள்!



1973. ஜூலை 20 அன்று  புரூஸ் லீ, 67,பீகான் ஹில் ரோடு, கௌலூன் டோங், ஹாங்காங் என்னும் முகவரியில் உள்ள குடியிருப்பில் இறந்துவிட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. புரூஸ் லீயின் மரணம் அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. உடற் தகுதியில் அவரை மிஞ்ச எவரும் கிடையாது.  எனவேதான் அவரது மரணம் நடந்த அடுத்த நிமிடமே பல வதந்திகள் உலவத்தொடங்கின. உண்மையில் புரூஸ் லீ மரணம் அடைந்த அன்று நடந்தது என்ன?

புரூஸ் லீயின் மனைவி லிண்டாவின் அறிக்கையின்படி, புரூஸ் லீ சம்பவம் நடந்த அன்று மதியம் 2 மணிக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரேமண்ட் சௌ என்பவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் Game of Death என்ற சினிமா தயாரிப்பது பற்றி ஆலோசித்தனர்.  இந்த ஆலோசனை மதியம் 4 மணிவரை நடந்தது. பின் இருவரும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த தைவான் நடிகை பெட்டி டிங்பே (Betty Tingpei) வீட்டிற்கு சென்றனர். அங்கு மூவரும் அத்திரைப்படத்தின் கதை பற்றி ஆலோசனை செய்தனர். மூவரும் அன்றிரவு ஒரு விருந்தில்  ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் George Lazenby - யை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். அவரை தனது படத்தில் நடிக்க வைக்க லீ திட்டமிட்டிருந்தார். பின் ரேமண்ட் சௌ மாலையில் நடைபெற இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அதன் பின் சிறிது நேரம் கழித்து தனக்கு தலை வ்லிப்பதாக புரூஸ் லீ கூறினார். டின்க்பே வழக்கமாக தான் பயன்படுத்தும்  ஈகுவாஜெசிக் (Equagesic) என்ற மாத்திரையை லீக்கு கொடுத்தார். அம்மாத்திரை அதிக சக்தி உடைய அஸ்பிரின் மருந்தாகும். அதன்பின் அவர் இரண்டு சாதாரண பானங்களைத் (soft drinks) தவிர எதையும் உண்ணவில்லை. 

இரவு 7:30 மணிக்கு லீ, டிங்பேயின் படுக்கையில் தூங்க சென்றார். அன்றிரவு ரேமண்ட் சௌ, டின்க்பேக்கு போன் செய்து, ஏன் நீங்கள் இருவரும் இன்னும் திட்டமிட்டபடி இரவு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டார். தூங்கி கொண்டிருக்கும் லீயை தன்னால் எழுப்ப முடியவில்லை என்ற டின்க்பே கூறினார். உடனே சௌவும் டிங்பேயின் வீட்டிற்கு வந்து லீயை எழுப்ப முயற்சித்தார். அதன்பின்  அவர்கள்  ஆம்புலன்சை அழைத்தனர்..  உடனடியாக குயின் எலிசபெத்  மருத்துவமனைக்கு லீ கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  
போஸ்ட்மார்டம் அறிக்கையின்படி அவர் ஒருவகை அலர்ஜியினால் வருகின்ற  cerebral edema  என்னும் மூளை வீக்கத்தினால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தலைவலிக்காக சாப்பிட்ட ஈகுவாஜெசிக் (Equagesic) என்ற மாத்திரையினால் இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறினர். மேலும் லீயின் வயிற்றில் மரிஜூவானா என்னும் போதை பொருள் உண்டதற்கான தடயம் இருந்தது. எனவே இந்த போதை பொருள் வேதி வினை மூலம் மூளை வீக்க அலர்ஜியை உண்டாக்கியிருக்கலாம் என சில மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் லீ உட்கொண்டிருந்த போதை பொருளின் அளவு மிக குறைவாக இருந்தது எனவும், அது லீ சம்பவம் நடந்த அன்று காபி அருந்தினார் என்ற விஷயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை விட முக்கியத்துவம் குறைந்தது என்று ஒரு மருத்துவர் கூறியதாக  கொரோனோர் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

R.D. டியர் (R.D. Teare) லண்டன் யுனிவர்சிட்டியில்  தடவியல் மருத்துவ துறையில் பேராசிரியராக பணிபுரிபவர்.  90,000 க்கும் மேலான போஸ்ட்மார்டம் செய்த அனுபவம் உள்ளவர்.  லீயின் மூளை வீக்க அலர்ஜிக்கு  மரிஜுவனா காரணமாக இருக்கும் என்ற வாதத்தை அவர் நிராகரித்தார். அவருடைய கருத்துப்படி cerebral edema என்னும் மூளை வீக்கத்திற்கான காரணம் ஈகுவாஜெசிக் (Equagesic) மாத்திரையில் உள்ள வேதிப்போருட்களான மெப்ரோபமட் (meprobamate) அல்லது அஸ்பிரின் (aspirin) அல்லது இரண்டுமே காரணமாக இருக்கலாம் என்பதாகும். விசாரணை அதிகாரிகளால் மேற்கண்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் எந்த விசாரணை அறிக்கைகளும், டாக்டர்களும், லீயின் மரணத்திற்கான காரணங்களை உறுதியிட்டு கூறமுடியவில்லை என்பதே உண்மை.
குயின் எலிசபெத் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர். R.R லைசெட் (Dr. R.R. Lycette), லீ உண்ட ஈகுவாஜெசிக் (Euagesic) என்ற மாத்திரையில் உள்ள ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்பொருட்கள் மூளை வீக்க அலர்ஜியை உண்டாக்கியிருக்கலாம் என்றும், அவர் தலையில் எந்த காயமும் இல்லாதபோதும் அவருடைய மூளையின் எடை 1,400 கிராமிலி ருந்து, 1,575 கிராமாக வீங்கியிருந்தது என்றும், இரத்த குழாய்களில்  எந்த வித அடைப்போ அல்லது வெடிப்போ காணப்படவில்லை என்பதால்  இரத்த கசிவினால் மரணம் என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
லீயின் மரணத்தில் மர்மம மறைந்திருக்கிறது என்ற செய்தி பரவுவதற்கு  லீ இறந்தவுடன் ரேமண்ட் சௌ அளித்த பேட்டிதான் முக்கிய காரணமாக இருந்தது. ரேமண்ட் சௌ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்று நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக விவரித்தார். அப்பொழுது லீயின் சொந்த வீட்டில் லீ இறந்ததாக சௌ தெரிவித்தார். ஆனால் புலனாய்வு பத்திரிகைகள் லீ, தைவான் நடிகை பெட்டி டின்க்பே வீட்டில் இறந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தன. சௌ எதை மறைக்க  பொய் சொன்னார் என்பது மிகப் பெரிய மர்மமாக இருந்தது.

எனவே  ரசிகர்கள் மத்தியில் புது, புது வதந்திகள் ஒவ்வொரு நாளும் வலம்வரத் தொடங்கின. லீ ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க மறுத்ததால் அவரை ஹாலிவுட் மாபியாக்கள் கொன்றுவிட்டதாக ஒரு சாரார் நம்புகின்றனர். லீ ஹாங்காங் தாதாக்களுக்கு பாதுகாப்பு தொகை (protection money ) என்னும் மாமூல் கொடுக்க மறுத்ததால் அவர் தாதாக்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம என்று சிலர் கருதினர். அக்காலத்தில் சீன நடிகர்கள் அவ்வாறு தாதாக்களுக்கு பணம் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது. சிலர் லீ தீய சக்தியால் சபிக்கப்பட்டவர் என்றனர். அவர் ஹாங்காங்கில் வாங்கிய வீடு தீய சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். சிலர் அவர் நடிகை பெட்டி டின்க்பேயுடன் உடலுறவு கொண்டபோது இறந்துவிட்டதாக கூறினர். மேலும் சிலர் லீ  தற்காப்பு கலையை வெளிநாட்டவர்களுக்கு கற்றுகொடுதததால் கோபமுற்ற சீன தற்காப்பு ஆசிரியர்கள் அவரை போட்டி சண்டைக்கு அழைத்து கொன்றுவிட்டதாக கூறினர். பெரும்பாலான சீனர்கள் லீயின் அதிகப்படியான் உடற்பயிற்சியே அவரை கொன்ற்விட்டதாக நம்புகின்றனர். சிலர் லீயின் மரணம் அவர் பிறக்கும்போதே எழுதப்பட்ட விதி என்கின்றனர். இன்னும் சிலரோ லீயின் மரணம் ஜோடிக்கப்பட்ட நாடகம் என்றும், சரியான தருணத்தில் மீண்டும்  வருவதற்காக அவர் காத்துகொண்டிருக்கிறார் என்றும் கருதுகின்றனர்.
சிகாகோவை சேர்ந்த Dr.பில்கின்ஸ் (Dr Filkins)    லீ மரணத்தின் அதிகாரபூர்வமான விளக்கங்களை ஏற்க மறுக்கிறார். அவர்  2006 – ஆம் ஆண்டு சீட்டில் நகரத்தில் நடந்த அமெரிக்கன் அகாடமி ஆப் சயின்சஸ் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது மருந்தின் எதிர்விளைவுகளால் லீக்கு மரணம் ஏற்பட்டிருந்தால் லீயின் கழுத்தும் வீங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வீங்கவில்லை. எனவே லீ  sudden unexpected death in epilepsy (SUDEP) என்ற திடீர் பாதிப்பினால் இறந்திருக்கக்கூடும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.  SUDEP என்ற மருத்துவ கொள்கை 1995 ஆம் ஆண்டில்தான் மருத்துவ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. SUDEP என்பது இதயத்தின்  அல்லது நுரையீரலின் செயல்பாட்டை நிறுத்தக்கூடிய திடீரென்று மூளையில் தோன்றும் ஒருவகை வலிப்பு என மருத்துவர்களால் வரையறுக்கப்படுகிறது. மூளையில் திடீரென அளவுக்கதிகமாக நடைபெறும் மின் செயல்பாடுகளால் இவ்வகை வலிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இதன் பாதிப்பால் ஆண்டுதோறும் இங்கிலாந்தில் 500 பேர் இறக்கின்றனர்.  SUDEP பாதிப்பினால் உலகம் முழுவதும் 50 மில்லியன்  மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில் 90% மக்கள் வளரும் நாடுகளில் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக 20  முதல் 40 வயதுவரை  உள்ள ஆண்களிடம் அதிகமாக காணப்படும் இவ்வகை பாதிப்பு தூக்கம் இல்லாததாலும், அதிக மன அழுத்தத்தாலும் உருவாகிறது. லீ அத்தருணத்தில் மிகுந்த உடல் மற்றும் மன  அழுத்தத்தால் பாதிக்கப்படிருந்ததாக டாக்டர் பில்கின்ஸ் தெரிவிக்கிறார்.

எவ்வாறாயினும் லீ மரணம் இயற்கையானது என்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவில்லை. அதற்கேற்ப அவருடைய மகன் பிரான்டன் லீயின் மரணமும் மர்மமான முறையில் இருந்தது. பிரண்டன் லீ அமெரிக்க திரைப்படங்களில் நடித்துவந்தார். அவரும் தற்காப்பு கலைகளில் சிறந்தவராக விளங்கினார். மார்ச், 31, 1993 அன்று 20th Century Fox  நிறுவனத்தின் தயாரிப்பான The Crow  திரைப்பட ஷூட்டிங்கில்  அவர் நடித்துக்கொண்டிருந்தபோது துரதிருஷ்டவசமாக துப்பாக்கி குண்டடிபட்டு இறந்துபோனார். ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் டம்மி குண்டுகளுக்கு பதிலாக உண்மையான குண்டுகள் லோட் செய்யப்பட்டிருந்தது. ஷூட்டிங்கில் அந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டபோது, உண்மையாகவே பிராண்டன் லீ பலியானார். அப்போது அவருடைய வயது 28. பிரான்டன் லீயின் மரணத்தின் பின்னாலும் சில வதந்திகள் உண்டு. அதிலொன்று பிரான்டன் லீ தனது தந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனை அறிந்த மாபியாக்கள் அவரை கொன்றுவிட்டனர் என்பதாகும்.

புருஸ் லீயின் மரணம் இயற்கையானது என்பதை தெளிவுபடுத்த  மருத்துவர்கள் பல விளக்கங்களை கூறினாலும், அவர்களால் அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்களை அளிக்க முடியவில்லை. அதுவே லீயின் மரணம் பற்றிய மர்மங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. அவருடைய மரணத்திற்கான உண்மையான காரணம் அவருடன் அன்று இருந்த நபர்களுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாகும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

11 கருத்துகள்:

  1. அறிவியல்/மருத்துவம் என்ன வளர்ந்து என்னத்துக்கு பிரயோஜனம், இப்படி ஒரு பிரபலம் எப்படி செத்தான்கிறதக் கூட இவனுங்களால சொல்ல முடியலையே? :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள்! நவீன மருத்துவத்தால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் நிறைய உள்ளன.

      நீக்கு
  2. nanri!thelivana arumaiana pathivu!ithuvarai etharkum nan karuthu sonathilai!anal bruce leeyin maranam patri therinthu kolvathu mukiam.athanai neengal thelivaga seitheergal!ithan en muthal pinnuttam!nanri.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்துரை எமக்கு மிகப்பெரும் ஊக்கத்தை தருகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  4. புருஸ்லீ யின் படங்கள் எவ்வளவு முறை பார்த்தாலும் திகட்டாது
    அதேப்போல அவரைப்பற்றிய செய்திகளும் .....

    பதிலளிநீக்கு
  5. உலகத்தில் உள்ள மனிதர்கள் எந்த நாடாக இருந்தாலும் சரி அன்று தொட்டு இன்று வரை திறமை உள்ளவர்களை அறிவு இல்லாமல் கொன்று கொலை செய்து விடுகின்றார்கள் இது உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுகுக்கும் பெரிய பாரிய இழப்பாக நான் கருதுகின்றேன் சொல்கின்றேன்

    பதிலளிநீக்கு