திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மம்தா பானர்ஜி - ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி!?

முஹமது பின் துக்ளக்  திரைப்படத்தில் ஒரு நடிகர் சோவிடம், ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் வித்தியாசம் என்ன? என்று கேட்பார். அதற்கு சோ, ஒரு நாட்டை  ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்தால் அது சர்வாதிகாரம். ஒரு நாட்டை மாநிலங்களாக  பல சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தால் அது ஜனநாயகம் என்று பதில் கூறுவார். இந்த வசனம் எந்த நாட்டுக்கு பொருந்துமோ இல்லையோ, இந்தியாவிற்கு அத்தனை கன கச்சிதமாக பொருந்துகிறது. வோட்டு கேட்டு வரும்போது கூழை கும்பிடும், கூன் வளைந்த முதுகுமாய் வரும் அரசியல்வாதிகள், பதவிகளையும், அதிகாரங்களையும் அடைந்தவுடன் சர்வாதிகாரி தோரனைக்கு மாறிவிடுகிறார்கள்.

சம்பவம் 1

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ர, மம்தாவை பற்றிய ஒரு கார்ட்டூனை மெயில் மூலம் 65 பேருக்கு  அனுப்பினார். . முன்னாள் ரயில்வேதுறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை எப்படி கட்சியைவிட்டு வெளியேற்றுவது என்று மம்தாவும், முகுல் ராயும் ஆலோசனை செய்வதாக அக் கார்ட்டூனின் கருத்து இருந்தது. கார்ட்டூனில் மம்தாவின் தலையில்லாத உருவம் வரையப்பட்டிருந்தது. கார்ட்டூனின்  தலைப்பாக "our CM has lost her head" என குறிப்பிடப்பட்டிருந்தது. விமர்சனம் என்பது மம்தாவுக்கு பிடிக்காத விஷயமாச்சே!. அம்பிகேஷ் கைது செய்யப்பட்டார். அதோடு மட்டுமில்லாமல் திரிணாமுல் கட்சி தொண்டர்களால் கொலை மிரட்டலுக்கு ஆளானார்.  15 க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். தான் ஒரு CPM  தொண்டர் என எழுதித்தரும்படி திரிணாமுல் தொண்டர்களால் மிரட்டப்பட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று காவல் துறையில்  புகார் செய்யுமளவுக்கு அம்பிகேஷ் திரிணாமுல் தொண்டர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளானார். மேலும்  அம்பிகேஷ்,  சென்குப்தா என்பவருடைய மெயில் id – யை பயன்படுத்தி கார்ட்டூனை அனைவருக்கும் அனுப்பியிருந்ததால் சென்குப்தாவும் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க CID போலீஸ்,   சமூக வலைத்தளங்களில் மம்தாவின் நன்மதிப்பை குறைக்கும் வகையில்  வேண்டுமென்றே எழுதப்பட்டு வரும்   கருத்துக்களை நீக்கும்படி facebook போன்ற வலைத்தளங்களுக்கு கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

சம்பவம் 2

மே 19 –ஆம் தேதியன்று ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அந்த விவாதத்தில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர், பார்க் ஸ்ட்ரீட்  பகுதியில் ஒரு ஆங்கிலோ இந்திய பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை சுட்டிகாட்டி, பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று கேட்டார். உடனே மம்தாவுக்கு கோபம பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அந்த மாணவனை பார்த்து நீ ஒரு மாவோயிஸ்ட் என்றார்.

சம்பவம் 3

கடந்த ஆகஸ்ட் 8-ஆம்  தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள பெல்பஹாரி என்னுமிடத்தில்  மம்தா பானர்ஜி கலந்து கொண்ட பொது கூட்டம் நடந்தது. பெல்பஹாரி ஒரு காலத்தில்  மாவோயிஸ்ட்கள் வலுவாக கால் ஊன்றியிருந்த ஒரு பகுதியாகும்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது நோவா கிராமத்தை சேர்ந்த சிலாதித்ய சௌத்திரி என்னும் விவசாயி, முதலமைச்சர் மம்தாவைப் பார்த்து, உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வறுமையால் விவசாயிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். வெறும் வெற்று பேச்சு உறுதிமொழிகள் மட்டும் போதாது. விவசாயிகளின் வறுமையை போக்க  அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.  என்று  கேள்வி கேட்டார். அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பி அந்த விவசாயிக்கு ஆதரவு தெரிவித்தனர்.  ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால்தானே சொல்வதற்கு. மம்தாவிற்கு கோபம்தான்  பொத்துக்கொண்டு வந்தது..  அந்த விவசாயி ஒரு  மாவோயிஸ்ட் என குற்றம் சாட்டினார். சௌத்திரியை ஒரு போடோக்ராப்கார் போட்டோ எடுக்க முயற்சித்த போது, மம்தா மைக்ரோ போனில் அவனை போட்டோ எடுக்காதீர்கள். அவன் ஜார்கண்டிளிருந்து வந்த மாவோயிஸ்ட். அவன் ஒரு தீய மனிதன்  என்று கத்தினார். அவன் ஒரு கிரிமினல் என்று வசைமாரி பொழிந்தார். அதோடு நிற்காமல் கேள்வி கேட்டவரை கைது செய்யும்படி காவல்துறைக்கு கட்டளையிட்டார்.
காவல்துறை  சிலாதித்ய சௌத்திரியை கைது செய்து  Additional Chief Judicial Magistrate சுபர்ணா தாஸ் முன்பு ஆஜர்படுத்தியது.  அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) கீழ்க்கண்ட குற்றப்பிரிவுகளின்  கீழ் வழக்குகள் தொடரப்பட்டது.

Sec. 332 (voluntarily causing hurt to deter public servant in discharge of duty),
Sec.333(voluntarily causing grievous hurt to deter public servant in   
discharging public duty),
Sec.353 (assault or criminal force to deter public servant from discharging duty),
Sec.447 (criminal trespass) and
 Sec.506 (criminal intimidation) of IPC.
ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் மக்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அதேபோல் பொதுவாழ்க்கைக்கு வந்தபின் எவருமே  விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். என்னை யாரும் விமர்சிக்க கூடாது என்று நடந்துகொள்வது மம்தாவின் சர்வாதிகார போக்கைத்தான் காட்டுகிறது. ஒரு  தலைவருக்கு முக்கிய தகுதியாக இருக்க வேண்டிய சகிப்புத்தன்மை சிறிது கூட இல்லாதவராக மம்தா இருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் ஏதும் இல்லாதவராக இருக்கிறார். ஒரு குடிமகனுடைய அடிப்படை உரிமைகளை கூட மதிக்காத அவர், அரசியல் சட்டத்தையே அவமதிப்பு செய்கிறார். மன்னராட்சி போன்று, தன்னை விமர்சிப்பவர்களை கைது செய்யும்படி காவல்துறையினருக்கு சட்ட விரோத ஆணைகளை பிறப்பிக்கிறார்.  
முன்னாள் சுப்ரீம கோர்ட் நீதிபதி மற்றும் Press Council of India தலைவர் மார்கண்டேய கட்ஜு மேற்கண்ட சம்பவங்கள் குறித்து கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 

அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் அரசின் சட்ட விரோத ஆணைகளை செயல்படுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம். நாஜி போர் குற்றம் தொடர்பான நூரம்பர்க் (Nuremburg) விசாரணையில், நாஜி போர் குற்றவாளிகள் தாங்களாக எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், தாங்கள் ஹிட்லரின் ஆணைகளை மட்டுமே  செயல்படுத்தினோம் என்றும், அதனால் தங்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்றும் வாதாடினார்கள். ஆனால் அவர்களுடைய வாதம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். நாஜி போர் குற்றவாளிகளுக்கு ஏற்பட்ட நிலை தமக்கு எற்பட வேண்டாம் என்று மேற்கு வங்க அதிகாரிகள் நினைத்தால், அவர்கள் நுரம்பர்க விசாரணை தீர்ப்பிலிருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டும்

இப்போது மறுபடியும் ஒரு தடவை முதல் பத்தியை படித்து பாருங்கள். நாம் எத்தகைய நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து: