தென் சீனக்கடல் பகுதியின் உரிமைக்காக நடந்த பல அதிகாரச் சண்டைகளை வரலாறு ஏற்கனவே கண்டிருக்கிறது.
தென் சீனக்கடல் பகுதியின் முக்கிய சக்திகளாக ஜப்பான், சீனா, தென்கொரியா,
சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளை சொல்லலாம்.
இவற்றில் சீனா மிகப் பெரும் சக்தியாக இந்த பகுதியில் ஆளுமை செலுத்தி
வருகிறது. தென் சீனக்கடல் பகுதி
தற்போது மிகவும் பதட்டமான மண்டலமாக மாறிவருகிறது. காரணம் அப்பகுதியில்
உள்ள பல்வேறு நாடுகள் தென் சீன கடல் பகுதி தனது நாட்டின் எல்லைக்குட்பட்டது என
உரிமை கொண்டாடுகின்றன. குறிப்பாக சீனா, ASEAN அமைப்பின் பெரும்பாலான நாடுகளுடன் தென் சீன கடல் பகுதி
தொடர்பான எல்லை பிரச்சினை கொண்டுள்ளது. சீனா தனது அண்டை நாடுகளுடன் (இந்தியா,
பூடான் தவிர) பெரும்பாலான எல்லை பிரச்சினைகளை தீர்த்துவிட்ட நிலையில், இப்பிரச்சினை
உலக அளவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென் சீனக்கடல் பகுதி திடீரென முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம்
அப்பகுதியில் உள்ள எண்ணை வளம்தான் காரணம். சீனாவின் கனிம வள மற்றும் சுரங்க
அமைச்சகம் (Ministry
of Geological Resources and Mining)
தென் சீனக்கடல் பகுதியில் 17.7 பில்லியன் டன் எண்ணை வளம் இருக்கலாம் என
கணக்கிட்டுள்ளது. குவைத்தின் எண்ணை வளம் 13 பில்லியன் டன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால்
இப்பகுதியில் 1.1 டன் எண்ணை வளம் உள்ளது மட்டுமே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சிலர் கூறுகின்றனர். தென் சீன கடல் பகுதி சீனாவால்
இரண்டாம் பெர்சியன் கடல் என அழைக்கப்படுகிறது. சீன அரசின் China Offshore Exploration Corp. அடுத்த இருபதாண்டுகளில் இப்பகுதிகளில் $30 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய
திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5
வருடங்களில், வருடத்திற்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு
உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
வியட்நாம் சீனாவுடன் நில எல்லைகளையும், கடல் எல்லைகளையும் பகிர்ந்துள்ள
நாடாகும். தென் சீன கடல் பகுதியில் எண்ணை
கிணறுகள் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே உரிமை பிரச்சினை இருந்து வருகிறது
இந்நிலையில் செப்டெம்பர் -2011-ல்
இந்தியாவின் ONGC (OIL
and Natural Gas Corporation of India)
நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் ONGC
Videsh Limited, தென் சீன கடல்
பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் (Block Number 128) எண்ணை கிணறு அமைப்பதற்கான மூன்று வருட ஒப்பந்தத்தை
வியட்நாம் அரசின் பெட்ரோவியட்நாம் (PetroVietnam) நிறுவனத்திடமிருந்து பெற்றது. இரு நாடுகளுக்கிடையே எரிபொருள் துறையில் வளர்ந்து
வரும் ஒத்துழைப்புக்கு பரிசளிக்கும்
வகையில் இந்த ஒப்பந்தத்தை வியட்நாம் இந்தியாவுக்கு அளித்தது. இப்பகுதியில் இந்தியா
எண்ணை கிணறு அமைப்பதற்கு சீனா தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு
அதிகாரி ஜியாங் யு இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
“தென் சீன கடல் பகுதி சீனாவின் ஒருங்கிணைந்த
பகுதியாகும். சீனாவின் நிலைப்பாடு வரலாற்று ஆதாரங்களையும், சர்வதேச
விதிகளையும் அடிப்படையாக கொண்டது.
சீனாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட தென் சீன கடல் பகுதியில் எந்த ஒரு நாடும் எண்ணை
கிணறு அமைப்பதை எதிர்க்கிறோம். இப்பிரச்சினையில் எந்த ஒரு அயல் நாடும் தலையிடாது
என்று நம்புகிறோம்.”
இதற்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் பதில் அளிக்கையில் சீனா
தன் கருத்தினை தெரிவித்துள்ளது எனவும், இருப்பினும் இந்தியா, வியட்நாம்
அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி தன்
மேல் நடவடிக்கையை தொடரும் எனவும், இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை சீன அரசிடம்
தெரிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். வியட்நாம், இந்திய நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும்
ராணுவ ஒத்துழைப்பும் சீனாவிற்கு கவலையை அளித்துள்ளது. தென் சீன கடல் பகுதியின்
ஏறத்தாழ முழுவதையுமே தனக்கு சொந்தமானது என சீனா கூறிவரும் நிலையில், இந்தியா
இப்பிராந்தியத்தில் தனது செயல்பாடு வர்த்தக நோக்கில் மட்டுமே என சீனாவிடம்
தெரிவித்துள்ளது.
வியாட்நாமிற்கான இந்திய தூதர்
ரஞ்சித் ரே, தென் சீன கடல்
எல்லைப்பிரச்சினை சர்வதேச விதிகளின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றும்,
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் 50% இப்பகுதி வழியாக நடைபெறுகிறது என்றும், இப்பகுதியின் கப்பல் போக்குவரத்து எல்லைப்பிரச்சினையால்
பாதிக்கப்படக்கூடாது என்றும்
தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இப்பிரச்சினை சர்வதேச விதிகளின்படி
தீர்க்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் சீனா இப்பிரச்சினை
சர்வதேச விதிகளின்படி தீர்க்கப்படவேண்டும் என்ற வாதத்தை எதிர்க்கிறது.
சம்பந்தப்பட்ட நாடுகளின் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளின் மூலம் இப்பிரச்சினை
தீர்க்கப்படவேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடாகும்.
ஜூலை 22,
2011, அன்று நட்பு பயணமாக
இந்தியாவின் INS Airavat உட்பட
நான்கு போர் கப்பல் வியாட்நாமிற்கு தென் சீன கடல் பகுதியில் சென்று
கொண்டிருந்தபோது, ரேடியோ செய்தி ஓன்று பெறப்பட்டது. சீன கடற்படை என்று தன்னை
கூறிக்கொண்ட அந்த தொடர்பாளர் இந்திய கப்பல்களை தென் சீனக்கடல் பகுதிக்கு
வரவேற்பதாக தெரிவித்தார். இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத இந்திய கடற்படை
அதிகாரி தெரிவிக்கையில் அந்த ரேடியோ செய்தியின் தொனி வரவேற்பதாக இருந்தாலும், தென்
சீன கடல் பகுதி சீனாவுக்குரியது என்ற கருத்தை வலியுறுத்துவதாக இருந்தது என்று
தெரிவித்தார். ஆனாலும் எந்த சீன போர் கப்பலோ, அல்லது போர் விமானமோ கண்ணில்
படவில்லை என்றும், இந்திய போர் கப்பல் திட்டமிட்டபடி தன் பயணத்தை தொடர்ந்தது
என்றும் இந்திய கடற்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்திய கடற்படை
மேலும் தெரிவிக்கையில் சர்வதேச கடல் பபகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை
இந்தியா ஆதரிக்கிறது என்றும், அதே சுதந்திரம் தென் சீன கடல் பகுதியிலும்
பின்பற்றப்படவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்தார். மேலும்
சர்வதேச கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கான அனைத்து நாடுகளின் உரிமைகள்
அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் தென் சீன கடல்
பகுதி சீனாவுக்கு சொந்தமானதல்ல என்றும், அது சர்வதேச எல்லைக்குட்பட்டது என்றும்
இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது சீன அரசின் எண்ணை நிறுவனமான China National Offshore Oil
Corporation (CNOOC) தென் சீன கடல்
பகுதியில் 9 இடங்களில் எண்ணை
கிணறு தோண்டுவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு டெண்டர் அழைப்பு விடுத்தததுள்ளது.
அறிவிக்கப்பட்ட 9 இடங்களும்
வியட்நாமின் எல்லைக்கு உட்பட்டவை என்று வியட்நாம்
எதிர்ப்பு தெரிவித்தததுள்ளது. சீனாவின் அறிவிப்பில் உள்ள குறிப்பிடத்தக்க விஷயம்
என்னவென்றால், சீனா அறிவித்த 9
இடங்களில் block number 128 – ம்
அடங்கும். இந்த பிளாக் இந்தியாவின் ONGC நிறுவனத்திற்கு எண்ணை கிணறு அமைக்க வியட்நாம் அரசால்
ஏற்கனவே ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட இடமாகும். இதன் மூலம் சீனா இந்தியாவுடன் நேரடியாக
மோத தயாராகிவிட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பிராந்தியத்தின் அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியா தென் சீன
கடல் பகுதியில் எண்ணை கிணறு அமைக்கும் பணியினை கைவிடவேண்டும் என்று சீன அரசு இந்தியாவை கேட்டுள்ளது. சீனாவின் எதிர்ப்புக்கு அடிபணியாத இந்தியா, கடந்த வருடம் அக்டோபர்
மாதத்தில் தென் சீன கடல் பகுதியில் அதிகப்படியான எண்ணை கிணறுகள் அமைக்கவும்,
விரிவுபடுத்தவும் வியாட்நாமுடன் ஒப்பந்தம்
செய்துகொண்டது. இதன் மூலம் தென் சீன கடல் பகுதி சீனாவுக்குரியது என்ற சீனாவின்
வாதத்தை இந்தியாவும், வியட்நாமும் நிராகரித்துள்ளன. மேலும் ஐ. நா விதிகளின்படி
குறிப்பிட்ட பகுதிகள் வியாட்நாமிற்கு சொந்தமானவை என இந்தியா அறிவித்தது. மேலும்
இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்கரையிலிருந்து தென் சீன
கடல் பகுதி வரை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம், எரிசக்தி, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு
முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இந்தியா கருதுகிறது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் நாளிதழ் 25-10-2011 அன்று “Don't take peaceful approach for granted” என்ற தலைப்பின் கீழ் கீழ்க்கண்டவாறு எழுதியது.
“If these countries
don't want to change their ways with China, they will need to prepare
for the sounds of cannons. We need to be ready for that, as it may be the only
way for the disputes in the sea to be resolved”
சீனாவின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாக
தெரிந்தே இந்தியா தென் சீன கடல் பகுதியில் துணிந்து தலையிடுகிறது. இதற்கு
அமெரிக்காவும் மறைமுகமாக ஆதரவளிக்கக் கூடும்.
இதன் மூலமாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை
ஏற்றுக்கொள்ள இந்தியாவும், சீனாவின் அண்டைனாடுகளும் மறுத்துள்ளன. இதன் காரணமாக சீனா தன அண்டை
நாடுகளுடன் ஒரு போரைக்கூட தொடங்கலாம். ஒருவேளை அப்போர் இந்தியாவிற்கு எதிரானதாக
கூட இருக்க முடியும். அதுவும் இந்தியாவுக்கு தெரியும். அதனால் இந்தியாவும் எதற்கும் தயாராகவே உள்ளது என்பதை அறிய
முடிகிறது.
Tweet | |||||
First time reading ur blog but something interesting way handled to express these.. Good continue..
பதிலளிநீக்குThank u for ur valuable comments
நீக்குநல்ல தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமாசிலா சார்! தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.
நீக்குஆழமான் ஆராய்ச்சிக் கட்டுரை போல உள்ளது. எதையும் தீர்க்கமாகச் சிந்தித்து விரிவாக எழுதும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள். பொதுவாக பதிவர்கள் தொடத் தயங்கும் விஷயங்களை அநாயசமாக கையாளுகிறீர்கள். வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் எழுதும் பதிவர்களுக்கு மத்தியில் அருமையான விஷயங்களை தொடர்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் விரல்கள் பிரபஞ்ச வீணையின் தந்திகளை மீட்டட்டும். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதுரை சார்!
நீக்குதங்களை போன்ற தரமான பதிவர்களது பாராட்டுக்களை பெறுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. நிறைய விஷயங்களை உண்மையாக தரவேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது. மிக்க நன்றி!