ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஈராக்கின் ISIS தீவிரவாத அமைப்பின் தாக்குதல் பட்டியலில் இந்தியா!



உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த தீவிரவாத அமைப்பாக 1990 களில் கருதப்பட்டது ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புதான். ஆனால் இன்று அதைவிட பல மடங்கு அபாயமானதாக கருதப்படும் அமைப்பு ஒன்று ஈராக்கின் உள்நாட்டுப் போரில் பெரும் வெற்றியை பெற்று வருகிறது. ஈராக் மற்றும் கிழக்கு சிரியாவில் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. உலகின் எந்த தீவிரவாத அமைப்பும் இவ்வளவு பெரிய வெற்றிகளை தனது காலத்தில் அடைந்ததில்லை.  அந்த அமைப்பின் பெயர் Islamic State of Iraq and al-Sham. சுருக்கமாக ISIS என்று அழைக்கப்படுகிறது. Al-Sham என்ற அரபுச் சொல்லுக்கு கிழக்கு கடற்கரை பகுதி அல்லது சிரியா அல்லது டமாஸ்கஸ் என்ற சூழ்நிலைக்கேற்ப பொருள் கொள்ளப்படும்.  2010  முதல் அபு துவா என்று அழைக்கப்படும் அபு பக்கர் அல் பாக்தாதி Abu Bakr al-Baghdadi என்பவரின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பின் நோக்கம் முடிந்தவரை ஷியா முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் கொல்வதுதான். இந்த அமைப்பானது ஈராக் மற்றும் சிரியா பகுதிக்கு மட்டும் மிரட்டலாக இல்லாமல் சன்னி தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக உள்ள சவூதி அரேபியா, ஜோர்டான், துருக்கி போன்ற அண்டை நாடுகளுக்கும் அச்சுறத்தலாக உள்ளது.


இந்த மிகப் பயங்கர தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தற்போது மேலும் விரிவடைந்து பாகிஸ்தான் வரை நீண்டுள்ளதாக வெளிவந்துள்ள் செய்திகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை என்று சொல்ல முடியாவிட்டாலும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான டெஹ்ரிக் இ கிலாபத் (Tehreek-i-Khilafat) டான் பத்திரிக்கைக்கு அளித்த செய்தியில் தனக்கு ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உண்டு என்பதை முதன் முதலாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ISIS அமைப்பு தனது இலக்கை அரபு நாடுகளுடன் நிறுத்திக் கொள்ளாது என்பதும், அது உலகம் முழுவதும் தனது இலக்கை செயல்படுத்த அந்தந்த பகுதிகளில் செயல்படும்  தீவிரவாதிகளுடனும், தீவிரவாத அமைப்புகளுடன் கைகோர்க்க ஆரம்பித்துள்ளன என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 1990 களில் அல் கொய்தா அமைப்பு எப்படி தனது அமைப்பிற்கு தீவிரவாதிகளையும், பணத்தையும் சேர்த்ததோ அதே வழியைத்தான் ISIS அமைப்பும் பின்பற்றுகிறது.


ஈராக்கின் ISIS ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த அமைப்பில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெரும் பங்கு வகித்து வந்தனர். பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான Lashkar-e-Jhangv (Lej) மற்றும் பலுசிஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் பெரும் எண்ணிகையிலான தீவிரவாதிகள் இந்த அமைப்பில்  பெரும் பங்கு வகித்தனர்,  Lej அமைப்புதான் 2013ல் Gazi Abdul Rasheed பயிற்சி முகாமை ஈராக் நகரத்தில் தொடங்கியது. இம்முகாமில் பயிற்சி பெற்றவர்கள்தான் பின்னாளில் Gazi Force என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கினர். பாகிஸ்தானின் தீவிரவாத மற்றும் மதவாத அமைப்புகள் என்றுமே தனித்து இயங்கி வந்ததில்லை. அவைகள் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளையே தங்களது முன்னுதாரணமாக வைத்து செயல்பட்டன. எனவே பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்கும் ISIS அமைப்புக்கும் இடையே கொள்கை ரீதியாகவும், தாக்குதல் ரீதியாகவும் தொடர்பு ஏற்படுவது இயற்கையானதுதான்.  இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லைதான்.

ஈராக்கில் போர் முடிந்ததும் இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் திரும்புவார்கள்.  பாகிஸ்தானில் மிகப்பெரும் தீவிரவாத தாக்குதல்கலை இவர்கள் நடத்துவார்கள். ஏற்கனவே ஷியா இனத்தவர் மீது மிகப் பெரும் இனப்படுகொலை நடத்திவரும் பாகிஸ்தான் சுன்னி பிரிவு தீவிரவாத அமைப்புகளான பாகிஸ்தான் தலிபான், லஷ்கர் இ தொய்பா மற்றும் Lej அமைப்பினர் மிகப் பெரிய தாக்குதலை பாகிஸ்தான் மற்றும் உலக ஷியா இனத்தவர் மீது நடத்துவார்கள். அவர்களின் தாக்குதல் ஷியா இனத்தவர் மீது மட்டுமே இருக்காது. அவர்களின் பொது எதிரியான இந்தியாவும் அவர்களின் இலக்கில் கண்டிப்பாக உண்டு. இவர்களை எதிர்கொள்ள இந்திய மக்களும் இந்திய அரசாங்கமும் தயாராக இருக்கிறார்களா? என்பதுதான் இப்போதைய மிகப் பெரிய கேள்வி, வந்த பின் காப்பதை விட வரும் முன் காப்பது நல்லது என்பது பழைய பழமொழி. ஆனால் இந்திய அரசாங்கம் எப்போதுமே கற்றுக்கொள்ளாத பழமொழி!
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக